Monday, September 12, 2011

ஆச்சரியப்படுத்தும் ஆசிரமம்..!


”தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது. நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தல் மிகவும் கஷ்டமாகும்”.- தம்ம பதம்.

ஆசிரமத்தில் இருந்த போது தினமும் காலை ஆறு மணிக்கு ஆசிரியப் பயிற்றுநர் சந்துருவுடன் நான்கு வழிச் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டேன். சீறிப்பாயும் புலியைப் போல கார்கள் லாரிகளை முந்திக் கொண்டு கடந்தன. சேலம் பிரிவு வரை சென்று திரும்புவோம். அப்போது நாய்கள் சர்வ சாதாரணமாக சாலையைக்  கடக்கும் அழகைப் பார்த்து ரசிக்க முடிந்தது. எந்த வித பய உணர்வும் இன்றி , வாகனங்களின் ஓசையில் , வாகனங்களின் வேகத்தை அறிந்து அதற்கு தகுந்த மாதிரி விளையாடிக் கொண்டதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் , அன்பே சிவம் படத்தில் நாயினால் ஏற்படும் விபத்து நினைவுக்கு வந்து வாட்டியது. தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த தெரு நாயை ஓட ஓட விரட்டி அடித்த வயலுக்கு காவல் காத்திருக்கும் நாய்கள் , எல்லைத் தாண்டாமல் குரைத்து துரத்தியது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
    
முந்தி செல்வது
நான்கு வழிச் சாலையில்
இயற்கை…
முந்துதல்
அடுத்தவரை புண்படுத்தாமல்
என்பது பாடம்

அதிகாலை இயற்கை காற்றை சுவாசிப்பது என்பது ஒரு வித கலை. ஆனால், அங்குள்ள மாணவர்கள் எழுந்ததும் , குளித்து முடித்து விட்டு , தெய்வ வழிப்பாடு முடிந்து, வளாகத் தூய்மை மேற்கொள்ளும் காட்சி , என்னை வியப்படைய செய்கிறது. ஏழு மணிக்கு எங்கள் அறையை தேடி டீ வந்தது. அதைக் கொண்டு வந்த வாட்ச் மேன் , குளித்து முடித்து , நெற்றியில் விபூதி பூசி ஆச்சாரமாய் இருப்பது என்னை ஒருமுறை சுய பரிசோதனை செய்ய  வைக்கிறது.  
நான்காம் , ஐந்தாம் நாளில் சாரதா கல்வியில் கல்லூரியின் விழுமியங்கள் கற்றுத்தரும் பேராசிரியர் டாக்டர். சீதாராம் அவர்களின் காலை ஏழு மணி  சுவாசப்பயிற்சி எங்களுக்கு  புத்துயிர் ஊட்டியது. சீதாராம்  அவர்கள் ஒரு நடமாடும் நூலகம் . விழுமியங்கள் குறித்து மிகவும் சுவரசியமாக சொல்கிறார். விழுமியங்களுக்கு தகுந்த கதைகள் அடுக்கு அடுக்காக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. நகைச்சுவை உணர்வு நிரம்ப பெற்றவர். அவர் இருக்கும் இடம் மிகவும் மகிழ்ச்சி கரமாக இருக்கும் என்பது அவர் எங்களில் ஒருவராக  இருந்து , மிகவும் மகிழ்ச்சியுடன் , சரியான வழிக்காட்டலுடன், என்ன தான் டிவியேட் பண்ணி விட்டாலும், எங்களை ஒருங்கிணைத்து , ஒத்த கருத்துக்களுடன் செயல் பட செய்ததில் இருந்து அறிய முடியும்.  நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதை உணர்ந்தோம். யாருக்கும் கிட்டாத ஒரு பயிற்சி இலவசமாக கிட்டியது. பி குட் டூ குட் என்பதன் பயனை உடனடியாக அனுபவித்தேன். என்னை மறந்து , ஒரு யோகியின் மனநிலையில் எந்த பந்தம் இன்றி , கொடுக்கப்பட்ட வேலை குறித்தும், இந்த ஆசிரமத்தின் செயல் பாடுகளை அறிந்து கொள்வதிலும் அதிகம் செலவிட்டோம்.   

நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பின் புறம் இருந்த முதியோர் இல்லங்களுக்கு சென்றோம். அந்த மாலை என் மனதை உலுக்கியது. வயதானோர் , தம் குழந்தைகளால் கை விட பட்டோர், யாரும் இல்லாத ஆதரவு அற்ற பாட்டிகள் ஒரு கும்பலாக ,ஒரே குடும்பமாக அமர்ந்து இருந்தனர். தயாக் கட்டைகள் உருட்டிக் கொண்டும், சொட்டாங்கற்கள் விளையாடிக் கொண்டும், கதைகள் பேசிக் கொண்டும், வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டும், வியாதியஸ்தர்கள் டாக்டரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தனர். பிறந்த இடத்தில் இருந்து விரட்டப்பட்டாலும் , ஒன்று கூடிய இந்த ஆசிரமத்தில் , சாரதாவை தன் சொந்த அன்னையாக ஏற்று மகிழ்வுடன் இருந்தனர்.

எங்களை பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சி பொங்க ஓடி வந்தனர். எங்களுடன் வந்த அம்மாவின் கைகளை தொட்டு கொஞ்சி, அன்போடு அமர வற்புறுத்தினர். எங்களுடன் வந்த அந்த அன்னை , நான் உங்கள் குழந்தை, சும்மா ஓவராக பண்ணாதீங்க.. நீங்க அமர்ந்து பேசுங்கள் என்று அன்போடு கண்டித்தார். நீங்க இல்லைன்னா என்ற டயலாக்குக்கு, எல்லாம் சாரதா செயல் என அடக்கத்துடன் பதில் தந்தார். அவர்களுடன் தரையில் அமர்ந்தார். (வராண்டாவில் விளையாடி கொண்டிருந்ததால்)  நாங்களும் அவர்களுடன் அமர்ந்தோம். தம்பி விஜய் சொட்டாங்கல் விளையாடும் போது பாடும் பாடலை பாட சொன்னார். அழகாக பாடினார்.(உடம்புக்கு சரியில்லை என்றாலும் பேரன் கேட்டுக் கொண்ட்தால்). பொக்கிஷம்.. ஆசிரியர்கள் தங்கள் கை தொலைப்பேசியில் அதை பதிவு செய்தனர். வீடியோவை அவர்களுக்கு பிளே செய்தும் காட்டினர்.  சுந்தர் தன் இனிய குரலில் பாடல் பாடி பாட்டிகளை குசிப்படுத்தினார். அருகில் இருந்த பாட்டி விநாயகர் குறிந்து , முருகன் குறித்து பல பாடல்களை கால் மணி நேரமாக தொடர்ந்து பாடி அசத்தினார். (நாங்களே நிறுத்த சொன்னதால்) . அருகில் உயிர் மூச்சு மூக்குக்கும் , நுரையீரலுக்கும் நடுவில் ஊசலாடிய பாட்டி, தலையாட்டிக் கொண்டு எங்களையே உற்று பார்த்தவர் (சுமார் எண்பது இருக்கும்), எங்களை அழைத்து பாடி காட்டினார். யாரும் கொடுத்து வைக்காதது. எங்களை தன் இரக்கமுள்ள பார்வையால் ஆசிர்வதித்தவராய், ராமன் குறித்த பாடலை பாடி அசத்தினார்.
  அந்த நேரம் டாக்டர் காரில் வரவே, மருத்துவ சோதனைக்கு வசதியாக அங்கிருந்து விடைப்பெற்றோம். அங்கு நிலவும் சூழல் குடும்பங்களில் கூட கிடைக்காது. உறங்கும் அறை கட்டில் வசதியுடன்., மருத்துவர் அறை, பூஜை அறை, உணவருந்தும் அறை, நோயளிகள் தங்க தனியான விசாலமான படுக்கை அறை, டி.வி பார்க்க தனி அறை என சகல வசதிகளுடன் ஒர் அன்னையின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். விடைபெறும் போது அவர்களின் முகத்தில் ஒருவித கவலை கோடு விரவி யிருந்தது அறிய முடிந்தது. எங்களில் அவர்களின்  குழந்தைகள் , பேரன் பேத்திகளை கண்டதாகவே அறிய வருகின்றேன். கட்டணம் இன்றி, அவர்களுக்கு  சாப்பாட்டிலிருந்து, மருத்துவம் என அனைத்திலும் இலவசமாய் நடத்தப்படும் ஆசிரமத்தின் அதிசயத்தைக் கண்டு அசந்தேன்.  

“வையத்தை நீர்க் குமிழியாகவும் , கானல் நீராகவும் காண்பவனை எமதர்மன் கண்டுகொள்ள முடியாது” என்பதாலோ என்னவோ அங்குள்ள அனைவரும் நல்ல மனநலத்துடன், உடல் நலத்துடன் , தேக ஆரோக்கியம் பெற்று  ,அதிக பட்ச வயதிலும்  மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.  அத் தருணத்தில் என் தாய் என் கண்ணில் தெரிந்தாள். அவள் வளர்ந்து என்னை ஆளாக்கிய விதம் நினைத்து பெறுமைப் பட்டேன். ஆனால், என் முன்னாள் வெள்ளையாடை அணிந்து , எந்த வித சலனமுமின்றி, எதையும் பற்றி கவலை யற்றவராக ,எங்களை வழி நடத்திக் கொண்டிருந்தார் , சாரதா கண்டெடுத்த  அன்னை நிஷ்காம்ய ப்ராணா மாஜி. .    

”நீ எங்கெல்லாம் இந்த கால சக்தியின் சிறந்த , உயர்ந்த , வெளிப்பாடுகளைக் காண்கிறாயோ, அங்கு கடவுள் தன்னை மிக அதிகமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.”
”எப்பொழுதெல்லாம் ஒழுக்கம் குறைந்து தீமை மேலோங்குகிறதோ, அவர், கடவுள் மனித குலத்திற்கு உதவுவதற்காக அவதாரம் எடுக்கிறார்”
இந்த பகவத் கீதையின் சாரத்தை அங்கு உள்ள அம்பாளிடமும் , மாஜிக்களிடமும் கண்டேன். அதை சொர்க்க பூமியாகவே உணர்ந்தேன். எங்களை  தவிர தீய குணம் படைத்தவர்கள் ( வாட்ச் மேன் முதல் கொண்டு) ( தீயவர்கள் என்பது எதையும் சந்தேகத்துடன் இது சாத்தியமா? இவர்கள் எப்படி இப்படி ஒரு அமைதிக்கான விழுமியங்களை அனைவர் மனதிலும் விதைக்க முடிந்தது ?என்ற ஐய்யப்பாட்டு உலவுதல். ஐயமே தீயவனுக்கானது என கருதுகின்றேன்) யாரையும் நாங்கள் கணவில்லை. நேரம் கிடைக்குமானல் உளுந்தூர் பேட்டை அருகில் திருச்சி நோக்கி செல்லும் போது உள்ள இடைக்கல் என்ற இடத்திலுள்ள சொர்க்க பூமியாம் இராமகிருஷ்ணா மடத்தை  பார்வையிடுங்கள்.

    சொர்க்கத்தின் கதவுகள் இன்னும் திறக்கப்படும்… 

9 comments:

Philosophy Prabhakaran said...

எந்த ஊர்ல சார் இருக்கீங்க... தினமும் பின்னிரவில் பதிவு போடுறீங்க...

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு ஆசிரியரே....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

திறக்கட்டும் ...

Gopinath.T Karur said...

Sir,
You forgot to post about the "Rain Center" in saradha ashram
Gopinath.T
Karur

சத்ரியன் said...

சொர்க்கத்தின் வாசற்படியை காட்டியதற்கு நன்றிகள் பல சரவணன் சார்.

shanmugavel said...

ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.பகிர்வுக்கு நன்றி அய்யா ! தொடருங்கள்.

ஆமினா said...

//வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டும், வியாதியஸ்தர்கள் டாக்டரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தனர்//
தனிமையின் வெறுமை :-(

ananthu said...

அருமையான பதிவு...தொடரவும்...

Anonymous said...

மிக நல்ல பதிவு. ரசித்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

Post a Comment