”சிறந்த குணத்தை உருவாக்குகின்ற , மன வலிமையை வளர்க்கின்ற , அறிவை விரியச் செய்கின்ற , ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கிற கல்வியே தேவை.” –விவேகானந்தர்.
நான் கடந்த ஆறு நாட்களாக ஒரு சன்னியாசி தன்மையில் வாழ நேர்ந்தது என்று சொல்வதை விட உண்மையான சகோதரத்தை உணர முடிந்தது என்பதே உண்மை. பீடிகை யிடாமல் விசயத்திற்கு நேரடியாக வருகின்றேன்.
அமைதிக் கல்விக்கு பயிற்சி கட்டகம் அமைக்கும் பணிக்கு மதுரையில் இருந்து என்னை தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வருகை புரிந்த பல ஆசிரியர்களில் என்னை போன்று பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு , உளுந்தூர் பேட்டை இடைக்கல் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரிக்கு பயிற்சி கட்டகம் தயாரிக்க (5.9.2011 முதல் 9.9.2011 வரை )அனுப்பி வைக்கப்பட்டனர்.
நுழைந்த நாள் முதலாய் ஒருவித புதுமையை உணர்ந்தேன். வெள்ளை ஆடையுடுத்திய சகோதரிகள், காவியுடை அணிந்த சகோதரிகள், மஞ்சள் உடை, பின்னர் கலர் ஆடை அணிந்த சகோதரிகள் என பலரை பார்க்க முடிந்தது.
ஆடைகளின் நிறங்களில் அவர்கள் வேறுபட்டாலும் , குணங்களில் ஒன்று பட்டு , சேவையை முழுமனதாகக் கொண்டு , முழுமையான ஆன்மீகம் கலந்த உண்மையான விழுமியங்கள் வெளிப்படுத்தும் தன்மையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். வந்த நாள் முதலாய் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை உயர்வான நிலையில் வைத்து பூஜிக்க தொடங்கினர். வழியெங்கும் குருகுலத்தில் பயிலும் மாணவர்கள் முதல் பணி புரியும் அனைவரும் எங்களை ஒரு புன்னகையுடன் நேசித்தனர். விவேகனாந்தரின் சிந்தனைகளை விதைப்பவர்களாக எங்களை எண்ணினர். விழுமியங்களை சொல்ல வந்த எங்கள் அனைவர் கருத்தும் ஒத்துள்ள தன்மையையும், நாங்கள் அனைவரும், சமூகம் எதிர்கொண்டுள்ள பல தீய விசயங்களை போக்க ஆசிரியர்களிடம் மனமாற்றம் வேண்டும் என்பதிலும் , அதன் வாயிலாக மாணவர்கள் நற்பண்புகளை கொண்டவர்களாக மலரச் செய்து , அமைதியான சமூகம் பூக்கச் செய்யலாம் என்பதில் தன்னம்பிக்கை கொண்டவர்களாக செயல் பட்டதால் , அவர்களின் ஆசிரம செயல் பாடுகளை அறியச் செய்வதில் ஆர்வமாய் இருந்தனர். தினமும் மாலையில் ஆசிரம செயல் பாட்டை விளக்க கேம்பஸ் ரைட் ஏற்பாடு செய்தனர்.
”கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பதல்ல. மனதைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்”-விவேகானந்தர்.
எனக்கும் , என்னுடன் வந்துள்ள ஊட்டியை சேர்ந்த விஜய ராஜ் என்ற நண்பருக்கும் ஆசிரமத்தின் அமைதியையும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் , நாங்கள் உணவுக்கு வரும்போதும் போகும் போதும் (நாங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்து உணவருந்த அரை கிலோமீட்டர் செல்ல வேண்டும்) , வழியில் கே.வி.பி, மற்றும் குருகுல ஆஸ்டல் மாணவர்கள் என பலரும் ) ஜி ஜி நமஸ்தே, தன்னியவாத் என சொல்லும் போதும் அரசு பள்ளி மாணவர்களின் விழுமியங்கள் பற்றி நீண்ட விவாதம் நிகழ்த்தியுள்ளோம். ஆஸ்ரமத்தின் வளாகத்தை தூய்மை செய்வதில் இருந்து, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது , சாப்பாட்டு தட்டை கழுவி அடிக்கி வைப்பது என்று மாணவர்களின் செயல் பாட்டை அடுக்கி கொண்டே போகலாம். அரசு பள்ளிகளில் வகுப்பறையை கூட்டினாலே பிரச்சனை ஆரம்பித்து விடுகிறது.
விஜய் என்னைப் போன்று இலக்கிய தாக்கமும் , ஆர்வமும் கொண்டதால் , இருவரும் ஒத்த மனநிலையில் காணப்பட்டோம். எனக்கு முமுமையான ஆன்மிகம் ஒழுக்க நெறியை வளர்க்கும் என்பதில் ஐயம் உண்டு. விஜய் என்னிடம் பலமுறை சார் , நீங்கள் சொல்வது போல முழுமையான மதச்சாயம் , வேறு விதத்தில் திசை திரும்பி மத தீவிர வாதத்தை வளர்கவும் வாய்ப்பு உண்டு என்று இரவுகளில் (வந்த இரண்டு நாட்களில்) புலம்பியதும் உண்டு.
ஆனால் எங்கள் சிந்தனைகள் தவறு , இது மதத்தை போதிக்கும் நிறுவனம் அல்ல . முறையான ஆன்மிகத்தின் வழியில் மட்டுமே சமூகத்தில் அமைதியை விதைக்க முடியும் என்றும், வாழ்வியல் விழுமியங்களை உணர்வு பூர்வமாக கொடுக்க முடியும் என்பதை பல தருணங்களில் அங்குள்ள அனைத்து மாணவர்கள் எங்களுக்கு நிரூபித்து காட்டி, என்னுள், மன்னிக்கவும் எங்களுக்குள் குருகுலத் தன்மையை மலரச் செய்தனர். எங்கள் இருவருக்கும் ஊருக்குச் செல்லும் போது நாமும் குருகுல மாணவர்களாக இல்லையே என்று ஏக்கம் உருவானது.
“எழுங்கள் , விழியுங்கள் , தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பது போன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.” – கடோபநிஷதம்.
இங்குள்ள மாணவர்கள் உண்மையான குருவை கண்டவர்கள். கொடுத்து வைத்தவர்கள். மூன்றாவது நாள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பார்வையில் நடைபெறும் கே.வி.பி. அதாவது இதுவரை பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டு பிடித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை , வாய்ப்புகளை ஏற்படுத்தி , தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நடைபெறும் உண்டு உறைவிடப் பள்ளி. ஆசிரமத்தின் நேரடி பார்வையில் அவர்களின் குருகுலத் தன்மை மாறாமல் நடைபெறும் பள்ளி. மாலையில் பார்வையிட சென்றோம். மாணவர்களே உருவாக்கிய காகித பூக்களால் எங்களை வரவேற்றார்கள் . செருப்புகள் நேர்த்தியாக அழகாய் பார்பவர்களை கவரும் விதத்தில் பாங்குடன் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தது. ( இதை இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றேன் என்றால் , அந்நிகழ்வுக்கு அடுத்து ஆசிரமத்தில் எல்லா இடங்களிலும் , எல்லா சூழ்நிலையிலும் , செருப்புகளை நோக்கும் போது அவை வரிசையாகவே அடுக்கப்பட்டு இருந்தது. இவை எம் வருகைக்காக உருவாக்கப்பட்டவை யல்ல. இதில் வெட்கப்படும் விசயம் என்ன வென்றால் நாங்கள் மட்டுமே கோவிலின் வெளியில் செருப்பை எறிந்து செல்வது போல முறையற்று வீசி சென்றோம்.)
வகுப்பறைகள் குப்பைகள் அற்று கோவிலாக காட்சியளித்தது. படுக்கையறைகள் அதைவிட நேர்த்தியாக ( நாங்கள் தங்கிய அறையை பார்த்திருந்தால் , எங்களை இக் குழந்தைகளிடம் பாடம் பயில சொல்லியிருப்பீர்கள்). எங்களுடன் வந்திருந்த ஆசிரியர் சுந்தர் குருகுல மாணவர் என்பதால், அவர் தன் இனிமையான குரலில் பல பாடல்களை பாடி அசத்தினார். நாங்கள் அவரின் பாடலில் சோர்வின்றி நீண்ட நேரம் பணிபுரிந்தோம். அவரின் நண்பர் ராஜா ( அதே ஊர் காரர்) அக் குழந்தைகளிடம் ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் எதுவாக உருவாக விரும்புகிறீர்கள்? பல குழந்தைகள் ஐ.ஏ.எஸ்., என்பதற்கும் , ஐ.பி.எஸ்., க்கும் கை தூக்கினார்கள். அவர் கேள்வி கேட்கும் போது நல்ல ஆசிரியர்களாக யார் உருவாக போகிறார்கள்? என கேட்டார். அதற்கும் சில குழந்தைகள் கை தூக்கினர். இப்படி பல பணிகளை கேட்கும் போது பல மாணவர்கள் இரண்டுக்கு மேற்பட்ட பணிகளுக்கு கை தூக்கினர். பின்னர் அவர் , இது வரை எதற்கும் கை தூக்காத மாணவிகள் உண்டா? என்றார். ஒரு மாணவி மட்டும் கை தூக்கினாள். ஏன்? நீ எதுவாகவும் உருவாக முடிவெடுக்க வில்லையா? என்று கேட்டார். அதற்கு அம்மாணவி தந்த பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதுவே சாரதா ஆஸ்ரமத்தின் பணிக்கு ஒரு சாட்சியாகவும் இருக்கும் என நினைக்கிறேன். நானும் , என் நண்பன் விஜயும் அந்த இடத்தில் தான் அசந்து போனோம். மாறி போனோம். ஆன்மிகம் மட்டுமே உலகில் நல்ல எண்ணத்தை விதைக்க முடியும் என நம்பிப்போனோம். தேவர் சொன்னாமாதிரி ஆன்மீகமும் தேசமும் இரண்டு கண்கள் என்பதை உணர்ந்தோம். ஆன்மீகத்தை முறையாக இளமையில் விதைத்தால் இத்தேசத்தில் எதையும் சாதிக்கலாம். வலிமையான ஊழல் அற்ற பாரதம் விரைவில் உருவாகும் என்பதற்கு இதுவே சாட்சி.
இதோ அம்மாணவியின் பதில்:
“ஜி, நான் என்ன வேணாலும் ஆகிறதுல பிரச்சனையில்ல, எந்த வேலை வேண்டுமாலும் செய்யுறதுல பிரச்சனையில்லை, ஆனா வாழ்வில் நான் ஒரு நல்ல ஒழுக்கமுள்ளவளாக வாழ வேண்டும் , அது தான் முக்கியம் “
”இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒர் ஆசிரியருடனே பிறந்துள்ளான். நீ அவருடைய அறிவுரைகளை உண்மையான உறுதியுடன் பின்பற்றினால், இந்த வாழ்விலேயேகூட (இப்பிறவியிலேயே) உன்னிடமுள்ள வரம்பற்ற முழுமையை உன்னால் உணர்ந்துகொள்ள இயலும்” என்ற சுவாமி ஜியின் வரிகளின் அர்த்தத்தின் உண்மையை அங்கு பயிலும் அனைவரிடத்திலும் கண்டேன். வாழ்வில் நாற்பதாவது அகவையில் ஒரு ஆசிரியராக அந்த ஆஸ்ரமத்தினை கண்டுள்ளேன். நிச்சயம் ஒரு வெறி கொண்டு என் மாணவர்களும் இதே தன்மையுடன் உண்மையான விழுமியங்கள் பெற்றவராக திகழச் செய்வேன் என்ற உறுதியுடன் அந்த ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினேன். இருந்தாலும் ஏகலைவனாக மானசீகமாக கற்ற பாடத்தினை , திக்கிட்டும் எல்லா திசைகளிலும் பரப்புவதே என் பணியாக இனி இருக்கும் . நான் அங்கிருந்து வெளியேறி விட்டாலும், அவர்கள் முழுமையாக என் மனதில் நிறைந்து நிரந்தரமாக தங்கி விட்டனர் என்பது தான் உண்மை.
…..தொடரும் அதிசயங்கள்.