Thursday, March 17, 2011

புதிர்

பொம்மைகளின் உலகம்
தனியானது
அவைகளிடம்
மிருக இயல்புகள் இல்லை
அதனாலே அவைகள்
குழந்தைகளால் விரும்பப்படுகின்றன.

முடுக்கிய விசையால்
துரத்தும் கரடி
உறுமாத புலி
கர்ஜனையற்ற சிங்கம்
கடிக்க தெரியாத
குரைக்கும் நாய்
வலைப்பின்ன தெரியாத
சிலந்தி
கொட்ட இயலா தேள்
விஷம் கக்கா பாம்பு
புகை கக்காமல்
ஒலித்து செல்லும் இரயில்
சிரிக்க மட்டுமே
தெரிந்த டோரா
புட்டி எடுத்தால்
அழும் குழந்தை
இன்னும் எராளம்....

பொம்மைகளுடனே
பொம்மையாய்
படுக்கையில்....

புரியாத புதிர் ...?

ஒவ்வொரு விடியலும்
பொம்மைகளின்
இயல்புகள் அகற்றி
மனித தன்மையை
உள் வாங்கிய மிருகமாய்..!




6 comments:

tamilbirdszz said...

சிறப்பு சிறப்பு

G.M Balasubramaniam said...

சரவணன் உங்களது இந்தக் கவிதை இயல்பாய் அழகாய் வந்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது. இது மாதிரி எழுதத்தான் பின்னூட்டங்களில்குறிப்பிட்டிருந்தேன். வாழ்த்துக்கள்.

Unknown said...

இயல்பான கவிதை அருமை நண்பரே

Anonymous said...

மிக அருமையான கவிதை.

ஹேமா said...

குழந்தையோடு குழந்தையாய் இருக்கும்வரை பொம்மையும் குழந்தைபோலத்தான்.அல்லது குழந்தையும் பொம்மைபோலத்தான்.வளர வளர குழந்தை பொம்மையை வெறுக்கிறது.
பொம்மையும்கூடத்தான் குழந்தையை வெறுத்துவிடுகிறது.சரவணன்...அருமையான புரிந்துணர்வு !

RAJA RAJA RAJAN said...

அருமை... அருமை...

Post a Comment