Sunday, December 9, 2012

யார் யாரை குறை கூறுவது..!


எல்லா இடங்களிலும் மரங்களை
வேரோடு புடிங்கி எடுத்து விட்டனர்
புதியதாய் முளைத்த
வானுயர்ந்த கட்டிடங்களின்
நிழலில் நின்று
ரமணனை ஏசிக்கொண்டிருந்தனர்
மழை பொய்த்துவிட்டதென்று..
இவர்களை யார் ஏசுவது..?

Friday, December 7, 2012

குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த தெருமுனை பிரச்சாரம்

“என்னடா..இப்படி கத்திகிட்டு…கொட்டு அடிச்சுகிட்டு போறீங்க” என்ற மூதாட்டியிடம் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ் கொடுத்து, “நாங்க நாடகம் போட போறோம்..பார்த்துட்டு போங்க பாட்டி”என்றாள் மாணவி ஐஸ்வர்யா.
“அட போங்கடா..உங்களுக்கு வேலையில்ல.. அபேட் மருந்துன்னு சொல்லுறாங்க…ஆனா கொசு அபேஸ் ஆகாம  கடிக்குது…” என தன் மன வேதனையை கொட்டினாள் மூதாட்டி.
“பாட்டி அதுக்கு தான் என்ன செய்யணும்ன்னு… நாடகம் , பாட்டு , ஆடல் எல்லாம் போட போறோம்… உங்க பக்கத்து வீட்டுலேயும் சொல்லி கூட்டிகிட்டு வாங்க..”என்றான் முருகவேல்.





  மதுரை சொளராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் சந்தில் மதுரை புதுவார்டு 72ல் தெருமுனைப் பிரச்சாரத்திற்கு நோட்டீஸ் விநியோகித்து ,  ஒவ்வொருவராக வீடுகளில் இருந்து பொது மக்களை அழைத்து , கூட்டம் கூடச் செய்தனர்.
“என்னப்பா ..இப்படி கும்பலா வந்திருக்கீங்க.. எங்க இருந்து வந்து இருக்கீங்க..”என காமராஜ்  கேட்க,
“நாங்களா.. டாக்டர் திருஞானம் துவக்கப் பள்ளியில் இருந்து வந்திருக்கோம்…இவங்க பெயர் காளீஸ்வரி…” என வரிசையாக அறிமுகம் படுத்தி கொண்டு , டெங்கு சார்பான வில்லுப்பாட்டினை பாட துவங்கினர்.



 மாணவர்கள் நாடகம் போடும் போது பொது மக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். கீழச் சந்தைப்போட்டை மாநகராட்சி முன் நடைப்பெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தை பார்த்த , பொது மக்களில் ஒருவர் தன் வீட்டில் வைத்திருந்த விலைஅதிகமான அயல் நாட்டு சாக்லேட்டை நாடக முடிவில் அனைவருக்கும் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
    மகிழ்ச்சியுடன் நகர முற்பட்ட போது, கூட்டத்தில் இருந்த அப்பகுதியை சேர்ந்த அஇஅதிமுக பகுதி செயலாளர் திரு பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு கை குலுக்கி வாழ்த்துக்கள்  தெரிவித்தார் .பின்பு அப்பகுதி கவுன்சிலர் திரு குமார் அவர்களுடன் தொலைப்பேசியில் அழைத்து , எங்களிடம் வாழ்த்து தெரிவிக்க கூறினார். 





பின்பு, மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டே , அபிராமி தியேட்டர் பின்புற உள்ள நீர் தொட்டிகள் உள்ள பகுதியில் ஒன்று கூடி , மீண்டும் தெருமுனை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியது. மாணவர்கள் கூட்ட மிகுதியை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்து , மிகவும் அருமையாக வில்லுப்பாட்டு பாடி அசத்தி, அனைவர் கைத்தட்டலையும் பெற்றனர்.  நாடகத்தின் முடிவில் “ஒழிக்க நினைத்தால் கொசுவை ஒழிக்கலாம்…” என பாடி அனைவர் பாராட்டினையும் பெற்றனர்.

   இன்று காலை நடைப்பெற்ற எஸ்.எம்.சி கூட்டத்தில் பங்கு பெற்ற ஆதிமூலம் 1 மாநகராட்சி பள்ளியின் தலைமைஆசிரியை திருமதி சுலேகா அவர்கள் மாணவர் அவர்கள் அனைவருக்கும் எதாவது உணவு கொடுத்து உதவுங்கள் என்று 100 கொடுத்தார், அத்துடன் மீதி தொகையையும் போட்டு மாணவர்களுக்கு இன்று 7-12-2012 பூரி வழங்கப்பட்டது. எஸ்.எம்.சி. குழுவில் இடம் பெற்றுள்ள திருவி.சுரேந்திரன் எ பாபு எங்களுடன் சேர்ந்து பங்கு கொண்டு செயல்படுவது மிகவும் உற்சாக ஊட்டுவதாகவும் , மாணவர்களுக்கு உணவளிக்க டோனர்களை பிடிக்கவும் உதவியாக உள்ளது.

  தெருமுனை பிரச்சாரத்தை காணும் மக்கள் மாணவர்களை பாராட்டி உற்சாக மூட்டுகின்றனர். இது பொது சேவை செய்ய தூண்டுதலாக அமைகிறது. ஒவ்வொருவரும் மாணவர்களை சமூக பணியில் ஈடுபட வைத்தால், பிற்காலத்திலாவது நல்ல சமூகத்தை அமைத்து விடலாம் என தோன்றுகிறது.


Thursday, December 6, 2012

டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள்


   மாலை மதுரையில் மழைபொழிய துவங்கியது. மாணவர்கள் மிகவும் உற்சாகமாக , “சார், இன்னைக்கு மழை நல்லா பெய்யட்டும், அப்ப தான் மழை விட்டவுடன் எல்லாரும்  வீட்டிலே இருப்பாங்க.. நம்ம நாடகம் போட்ட எல்லாரும் பார்ப்பாங்க… நம்ம செய்தி எல்லாருக்கும் போய் சேரும்”  என்றார்கள்.






“மழை நேரமாக இருக்கு, நாளைக்கு நாம டெங்கு பிரச்சாரம் செய்வோம்..” என்றேன். “சார், நம்ம கடமை பிரச்சாரம் செய்வது தொடர்ந்து செய்வோம்..டெங்கு கொசுவை ஒழிப்போம் “என்று மிரட்டல் விட்டாள் ஐஸ்வர்யா.
அவளை பின் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் கோரஸ்ஸாக “ சார், கட்டாயம் போகணும் “என்று கத்திக் கொண்டே கிளம்பினார்கள்.  
“வாங்கடா…மேக்கப் போடுவோம்… ரெடியா இருப்போம் … மழைநின்றவுடன் நாடகம் போடுவோம்”என்றாள் சத்தியப்பிரியா. 




மழை தூறல் நின்றவுடன் அனைவரும் ஒருங்கிணைந்து நிர்மலா பள்ளி அருகில் உள்ள அழகர் நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் வழங்கி , மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தார்கள். பலர் மாடிகளில் நின்று மாணவர்கள் கூறும் கருத்தை கேட்க ஆரம்பித்தார்கள்.  
  வந்தனம் அய்யா வந்தனம் வந்த ஜனங்க குந்தனும் என்று பாட ஆரம்பிக்க ஆங்காங்கே இருந்த மக்கள் மாணவர்களை நோக்கி வந்து கூட ஆரம்பித்தனர். அனைவருக்கும் வணக்கம் சொல்லி டெங்கு பிரச்சாரத்தினை தொடங்கினார். 


 
                                             


காமராசர் நாடார் முன்னேற்ற பேரவை பகுதி செயலாளர் வி.மதியழகன் அவர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. எம்.மகாலெட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 





   இரா.பிரியதர்ஷினி, நா.அமிர்தவர்ஷினி, பா.சத்தியப்பிரியா, ப.ஐஸ்வர்யா, அ.ரேஸ்மா, பா. ரேஷ்மா, இரா.காமராஜ், மு.முகேஷ், செ.முருகவேல், நா.வல்லரசு, மு.சண்முகவேல், க.சமயமுத்து, ,ப.இராஜபாண்டி, மு.கார்த்திகேயன், க.சூர்யா, அ.அர்சத் அய்பு, பெ.வழிவிட்டான், ப. முகமதுஅலி, ப. பாலாஜி, லி.காளிஸ்வரி ஆகிய மாணவர்கள் இன்று 6-12-2012 மாலை 5.30 மணிக்கு நிர்மலா மகளிர் பள்ளி அருகில் டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 






தெருமுனை பிரச்சாரத்தின் முடிவில் மாணவர்களுக்கு மகாலெட்சுமி அவர்கள் டீ வழங்கினார். அவ்வழியாக சென்ற எம் பள்ளி ஆசிரியர் திருமதி. மா.ஓம்சக்தி ஆசிரியர் அவர்களின் கணவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு மிக்சர் பொட்டலம் இலவசமாக வழங்கினார். எம் பள்ளி எஸ்.எம்.சி குழுவில் இடம்பெற்றுள்ள கல்வியாளர் திரு. வி.சுரேந்திரன் (எ) பாபு எங்களுடன் இணைந்து தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபடுவது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


   
     தெருமுனைப் பிரச்சாரத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. துவக்கப் பள்ளி அளவில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள், இச்சிறிய வயதில் மக்கள் பணியில் ஈடுபடுவதை பாராட்டிச் செல்கின்றனர். மக்கள் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது, இப்பணியினை சிறப்பாக செய்ய தூண்டும் டானிக்காக உள்ளது. மதுரையில் உங்கள் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தை செயல் படுத்த என் செல் நம்பர் 9344124572 போன் போடலாம். உதவிகள் வரவேற்கப்படுகின்றன.
  

Wednesday, December 5, 2012

அஇஅதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு பிரச்சாரம்

    எங்கள் பள்ளியை சேர்ந்த இருபது மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பின்பு , மாலை 4.40லிருந்து தொடங்கி மாலை ஆறு முப்பது அல்லது இருட்டும் வரை தெருமுனைப் பிரச்சாரம் மூலம்  டெங்கு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கள் முதல் இச்செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 








    தினமும் மக்கள் கூடும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ்களை வழங்கி , நாடகம் நடத்தப்போகிறோம் வாருங்கள் என அழைத்து, ஆடல் , பாடல் மூலம் மக்களை ஒருங்கிணைத்து ,  நாடகம், வில்லுப்பாட்டு, ஆடல் , பாடல் மூலம் பொது மக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியை மேற்கொள்கின்றோம். இப்பணிக்கு பங்குப் பெறும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஆதரவு வெகுவாக கிடைத்துள்ளது. மாணவர்களும்  பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் மக்கள் பணியினை மேற்கொள்வது மகிழ்ச்சி தருகிறது என ஆர்வத்துடன் கூறுவது மதுரை முழுவதும் இப்பிரச்சாரத்தை கொண்டு செல்ல தூண்டுகிறது. 





     பள்ளி எஸ்.எம்.சி குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர் திரு. வி.சுரேந்திரன் (எ) பாபு தலைமையில் மதுரை 53வது வார்டில் இன்று 5-12-2012 டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  









     திரு. வி.சுரேந்திரன் பாபு அதிமுக 53வது வார்டு பிரதிநிதி என்பதால் மதுரை கிழக்கு மண்டல தலைவர் திரு ராஜபாண்டி அவர்களை அழைத்து தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்தார். 53 வது வார்டில் தாமரை நகர் சந்திப்பிலும், பங்கஜம் 1 வது தெரு முனையிலும், பங்கஜம் காலனி 2வது தெருவிலும், ஏ.ஏ. ரோடு பிள்ளையார் கோயில் அருகிலும் மாணவர்கள் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டனர். அதுசமயம்      மதுரை கிழக்கு மண்டல தலைவர் திரு ராஜபாண்டியன், திரு. வே.சுரேந்திரன் என்ற பாபு , மதுரை 53வது வார்டு அஇஅதிமுக பிரதிநிதி, திரு .பார்த்தசாரதி பாகச் செயலாலர் மற்றும் திரு. வள்ளி நாகலிங்கம் அஇஅதிமுக கழக பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டு , மாணவர்களுக்கு துணையாக இருந்து, தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக செயல்பட உறுதி செய்தனர். 










  முடிவில் மாணவர்களுக்கு அஇஅதிமுக 53வது வட்ட பிரதிநிதி மற்றும் எங்கள் பள்ளியில் எஸ்.எம்.சி குழு கல்வியாளர் திரு வி.சுரேந்திரன்(எ) பாபு அவர்கள் உணவு வழங்கினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றனர். 

Monday, December 3, 2012

இலவச மடிக்கணிணி எதிர் நோக்கியுள்ள சவால்கள் ...



உலகமே தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வருகிறது.  எல்லாத் துறைகளிலும் கணிணி ஆக்கிரமித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை தேர்வு முறையில் கிரேடிங்க் சிஸ்டம் கொண்டு வந்து அனைவர் பாராட்டையும் பெற்றிருக்கும் இந்த முக்கிய தருணத்தில் இது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது அல்ல. எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியில் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற ரீதியில் அரசு அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக் கணிணி கொடுக்க முடிவெடுத்து வழங்கிக் கொண்டு இருப்பது வரவேற்க்கத் தக்கது. ஆனால், இதுவும் இலவச சைக்கிள் மாதிரி சந்தைக்கு வந்து விடக்கூடாது என கல்வி யாளர்கள் கவலைக் கொண்டுள்ளது முக்கியமானது.

     அனைவருக்கும் கல்வி திட்டம் மூலமாக , தமிழ் நாட்டில் மாவட்டம் தோறும் CALL சென்டர்கள் இயங்கி வருகின்றன. துவக்க கல்வி முதலே கணிணி வழி கல்வி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு கணிணி குறித்து அடிப்படை அறிவுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அசிம்பிரேம்ஜி பவுண்டேசன் மூலமாக கல்வி குறித்த சி.டிக்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அரசு துறைச் சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் கணிணி குறித்த அடிப்படை அறிவு கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
இனி கேரளா கல்வி துறையில் நடைபெறும் கணிணி சார்ந்த கல்வி முறையை நோக்குவோம். கேரளாவில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (மொத்தமுள்ள 5500 பள்ளிகளுக்கும்) கணிணி வழிக் கல்வி கொடுக்கப்படுகிறது.  பாடம் சார்ந்த மென்பொருட்கள் கொண்டு (உபண்டு சாப்டு வேரில் இயங்கக் கூடியவை) வாரத்தில் இரண்டு தியரி மற்றும் இரண்டு செய்முறை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அனிமேசன் ஆசிரியர்களால் கற்றுத்தரப்படுகிறது.
கேரள அரசு அனைத்து ஆசிரியர்களுக்கும்  (மொழிப்பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்கள் உட்பட) கணிணி பயிற்சி முறையாக கற்றுகொடுத்துள்ளது மட்டுமல்லாமல்,  பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு மூலமாக வழங்கப்பட்டுள்ள கணிணிகள் மூலமாக சிறந்த கல்வி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சுமார்ட் எசுகேசன் செயல் பட கேரள கல்வி துறை  அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு எல்.சி.டி புரஜெக்டர் வழங்கியுள்ளது .  பாடம் சார்ந்த சி.டிக்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்து குறைந்தது (அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) பத்து முதல் பதினைந்து கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு மின் இணைப்பு வசதி வழங்க( ஒரு பிளக் பாயிண்டு, ஒரு பேன், ஒரு டுயுப்லைட்) ரூபாய் ஆயிரத்து ஐநூறு கொடுக்கப்பட்டுள்ளது.  ஹர்ட் வேர் கிளினிக் மூலமாக பழுதடைந்த கணினிகள் சரி செய்யப்படுகின்றன. 

     கணினி சார்ந்த கல்வி பாடவேளையில் ஒரு பகுதி.  வாரத்தில் நான்கு வகுப்புகள் கணினிக் கல்விக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கென தேர்வுகளில் கட்டாயம் பாஸ் மார்க் எடுக்க வேண்டியுள்ளதாலும் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றனர். ஆசிரியர்களும் தங்கள் மாணவரகளுக்கு பாடம் சார்ந்த திறனை கணிணிக் கொண்டு கற்றுத் தருவதால், புரிதல் எளிமையாவதுடன் நல்ல தேர்ச்சி விகிதமும் பெறமுடிகிறது என்கின்றனர்.

    இன்னும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு எந்த வித அடிப்படை கணிணி அறிவும் இல்லாமல் இலவச மடிக் கணிணி வழங்குவது என்பது எதன் அடிப்படையில்….? என்பது கல்வியாளர்கள் கேள்வியாக உள்ளது.    உயர்ந்த நோக்கத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக் கணிணி அடிப்படை கணிணி அறிவு இல்லாமல் வழங்குவதால் அதன் பயன்பாடு அறியாமல் சந்தைப் பொருளாவது உறுதி என பயம் கொண்டுள்ளனர் ஆசிரியர்களும், கல்வியாளர்களும்.

இரவு= தியானம்



இரவென்றால்
இருட்டு அல்ல
சாத்தப்பட்ட கதவுகளுக்குள்
உறங்காத இரவு
விழித்திருக்கும் இருட்டு
தியானத்தின் அடையாளம்
இரவென்றால் இருட்டுத்தான்
உனக்கு எனக்கு
அவனுக்கு இவனுக்கு
தியானம் வித்தியாசப்படும்
*
இரவு வித்தியாசமானது தான்
எல்லோருக்கும்

Sunday, December 2, 2012

சார் , செக்ஸ்…ன்னா என்ன ?


சார் , செக்ஸ்…ன்னா  என்ன ?   

கடந்த வாரம் எங்கள் பள்ளியில் டெங்கு விழுப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் டெங்கு ஊர்வலத்திற்கு தயாராக இருந்தனர். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி வருகைக்காக காத்திருந்தனர் மாணவர்கள்.  புதிதாக வழங்கப்பட்ட டெங்கு உறுதி மொழியினை மாணவ தலைவி உரக்க படிக்க ,அனைத்து மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.  கல்வி அதிகாரி வந்த பின் மாணவர்களிடம் டெங்கு பரவக் காரணம் என்ன என்று கேட்க, மாணவர்கள் கொசு என்றனர். கல்வி அதிகாரி கொசுவினால் பரவும் நோய்களான டெங்கு, சிக்கன் குன்யா, மலேரியா, யானைக்கால் வியாதி, மூளைக்காய்ச்சல் பற்றி விளக்கம் அளித்து , கொசு பரவாமல் தடுப்பது குறித்து பேசினார். மாணவர்கள் அதிகாரி கேட்ட கேளிவிகளுக்கு பதில் சொல்லி மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊர்வலம் கிளம்பியது. “ஒழிப்போம் ஒழிப்போம் டெங்குவை ஒழிப்போம்!, அழிப்போம் அழிப்போம் ஏடிஸ் கொசுவை அழிப்போம்! தடுப்போம் தடுப்போம் ஏடிஸ் கொசுப்புழு பரவுவதை தடுப்போம்! தெளிப்போம் தெளிப்போம் அபேட் மருந்தினை தெளிப்போம்! என மக்கள் வசிக்கும் பகுதியிலும் , காமராசர் சாலையிலும் மாணவர்கள் ஊர்வலம் சென்று வந்தனர்.  மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. வகுப்பறைக்கு சென்றனர். பாடம் நடத்தப்பட்டது . மதிய உணவு அனைவரும் உணவு அருந்த  சென்றனர்.
என் வகுப்பில் சில மாணவ மாணவர் சிரித்துக் கொண்டே எதோ குசு குசு என்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்து,
 “ என்ன ஒரே சிரிப்பு ?”என்றேன். உடனே துடுக்கான மாணவி பிரியா, “ சார், செக்ஸ் ன்னா என்ன? “ என்றாள். நான் உனக்கு ஏன் இந்த சந்தேகம் இப்போது ? என்றேன். “ நான் சொன்னேன்லா.. சார் சொல்ல மாட்டார்ன்னு ..” என்று அருகில் இருந்த மாணவி சொல்ல.. “நான் பதில் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி தீடீரென்று ஏன் இந்த சந்தேகம் என்று சொல்லணும்”. “சார் நீங்க சொல்லுங்க ..அப்புறம் நாங்க சொல்றோம்..”. “ செக்ஸ் என்பது  பாலினம் அது ஆண் \ பெண் என இருபாலரையும் குறிக்கும் சொல் ”என்று சமாளித்தேன்.
உடனே பிரியா “ அது தான் எங்களுக்கே தெரியும் … நாங்க அத பத்தி கேட்கல…” “அப்புறம் வேறு எத பத்தி..?” என இழுத்தேன்.
சார் நான் விளக்கமா சொல்றேன்.  எஇஓ சார் … சொல்லும் போது ..இது ஒருத்தர் கிட்ட இருந்து பரவாது அப்படின்னு சொன்னார்..அப்ப நம்ம வாயடி பையன் முகேஸ்… செக்ஸ் வியாதி தான் பரவுன்னு சொன்னான்.. அது மட்டுமில்ல செக்ஸ் வச்சுகிட்டா தான் பரவும் என்கிறான்..” என்றாள். நான் அவனிடமே கேட்க வேண்டியது தானே? என சொல்லி முகேஷை அழைக்க சொன்னேன். அதற்குள் முதல் ராங்க் எடுக்கும் மாணவி , “வாடி …நாம நம்ம டீச்சருகிட்ட கேட்போம்..சாரு மழுப்புராரு ..”என ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை நாடி சென்றனர்.
     மீண்டும் ஓடி வந்தனர். சார் இவ்வளவு தானா… இதுக்கு ஏன் சார் பயப்படுறீங்க என்றார்களே பார்ப்போம். நான் பிரியாவை அழைத்து என்ன பதில் சொன்னார் என்றேன். நீங்க சொன்னது போல ஆண் பெண்ணுண்ணு சொன்னாங்க .. நாங்க செக்ஸ் வியாதி என்ன? அது எப்படி வரும்? ன்னு கேட்டோம் என்றாள். அது சரி டீச்சர் என்ன பதில் சொன்னாங்க… என கேட்க, “ சார் .. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் எந்த வியாதியும் வராது.. ஒரு ஆணு பல பெண்களை கட்டிகிட்டாலும், ஒரு பெண்ணு பல ஆண்களை கல்யாணம் பண்ணிகிட்டாலும் இந்த வியாதி வருமாம் சார்…” . “எங்களுக்கு புரிஞ்சு போச்சே..” என அனைவரும் ஒருமித்த குரலில் பதில் அளித்தனர்.
   துவக்க பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு நியாயமானது என்பதை உணர்ந்தேன். துவக்கப்பள்ளி அளவிலே செக்ஸ் கல்வி அவசியம் என்பதையும் இச்செயல் உணர்த்துகிறது. பல இடங்களில் குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வராமல் பார்த்துக் கொள்ள , குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி அவசியம். குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அடுத்த ஆணின் கை படும் போது அதை தட்டி விடும் உணர்வையாவது வளர்க்க வேண்டும்.
பள்ளி அளவிலே குழந்தைகளை பாதுகாக்க கட்டாய இலவச கல்வி சட்டம் உறுதியளிக்கிறது. தமிழக அரசு பாலியல் புகார்களுக்கு உள்ளாகும் ஆசிரியர்களின் சான்றிதழை கேன்சல் செய்யும் உத்தரவையும் பிறப்பித்து இருப்பது வரவேற்க தக்கது. 

Monday, October 15, 2012

தடுப்பதற்கில்லை….!



பனையோலை வேய்ந்த
கூரை வீடு எரிச்சலூட்டுகிறது
நாலாபக்கமும் உயர்ந்த கட்டிடங்களில்
செயற்க்கை செடிகளை அழகுக்காகவும்
பறவைகளின் ஒலிகளை
அழைப்பு மணியோசையாகவும்
வைத்திருப்பவர்களுக்கு
அறியாமலா
உயர்ந்து வளர்ந்த
பல மரங்களை சரிந்திருப்பார்கள்
பூத்துக்குலுங்கிய மஞ்சணத்தி மரங்களை
மாய்ந்திருப்பார்கள்
குருவிகள் இல்லை
கூவும் குயில்கள் இல்லை
காடையும் காணவில்லை
அட மனிதர்கள்கூட
எப்போதாவது தான் புலப்படுகிறார்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தரும் நிழலில்
அமர்ந்துக் கொண்டிருக்கிறேன்
டிரங் பெட்டியிலிருந்து எடுத்த
பழைய புத்தகத்தின் பக்கங்களில்
பொதிந்திருந்த
மயிலிறகை அதிசியமாகப் பார்க்கிறாள்
எந்தப் பறவையின் இறகையும்
பார்த்திராத என் பேத்தி
உயிர் வலிக்க கேட்கிறேன்
விலைப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்
கூரை வீட்டையும்
என் மகனிடம்...!




Thursday, October 4, 2012

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு



   மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் பொருட்டும் மன அழுத்தம் , மன உளைச்சல் மற்றும் தேர்வு பற்றிய பயம் ஆகியவைகளை போக்கும் விதமாக, தமிழக அரசு , இலவசக் கட்டாயக் கல்வியை அமுல்படுத்தி, இந்தியாவிலேயே முதல் முறையாக ,பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாக , ஆர்.டி.ஈ. சட்டம் 2009 இயற்றப்பட்டு,அது தொடர்பாக பல அரசு ஆணைகளைத் தொடர்ந்து பிறப்பித்து,   முப்பருவ முறையையும் , முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையையும் அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகவும், முழுமையான மாணவர் வருகை சதவீதம் அமையும் விதமும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.


    சி.சி.இ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்பது , கல்வி மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவன் காட்டும் ஈடுபாடு , ஆர்வம் , முயற்சி , ஒழுங்கு முறை , செயல் திறன் , ஆளுமை வளர்ச்சி என உடல், மனம் , சமுகம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடலாகும்.


    மதிப்பிடல் கற்போரை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுதலாகும். மேலும் மதிப்பீடு என்பது , கற்போரின் நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் அளந்தரிதல் ஆகும்.
   

    தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடானது, கல்விசார்(Scholastic Asssessment) மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகள்(co-scholastic Assessment) வாயிலாக மதிப்பிடுதலாகும்.


    கல்விசார் செயல்பாடுகள் என்பது கற்போரின் அறிதல், புரிதல், பகுத்தாய்தல் மற்றும் பாடப் பொருளைப்பயன்படுத்தும் நிலைகளுக்கு ஏற்ப (அதாவது கருத்தை செயல்படுத்தும் விதமாக)பல்வேறு மதிப்பீட்டு உத்திகளையும் , நுட்பங்களையும் கொண்டு கலைத்திட்டத்திலுள்ள கல்விசார் பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறன்களைப் பருவம் முழுவதும், பாடப் பொருளைச் சிறு சிறு பகுதிகளாகக் கற்பித்துக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர்களின் அடைவுத் திறன்கள் வளரறி மற்றும் தொகுத்தறி  மதிப்பீடுகள் வாயிலாக மதிப்பீடுச்  செய்யப் படுதல் ஆகும். இதனால்,  மாணவர்களிடையே உள்ள தேர்வு அச்சமும் , மன அழுத்தமும் குறைகிறது. இதில் உடற்கல்வியும் மதிப்பீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    வாழ்க்கைத்திறன் ( உ.ம்., மதித்தல் மரியாதை தருதல், சூழலுக்கேற்பவும் நேர்மறையாகவும் முடிவெடுத்தல்,சுய முடிவெடுத்தல் தெரிவித்தல், தீச்செயல், தீய நோக்குடன் தொடுதலை எதிர்த்தல், ஒத்த வயதுடையோருடன் உறுதியாகவும் இணக்கத்துடனும் இருத்தல் , போன்ற பண்புகள்) , மனப்பான்மைகளும் மதிப்புகளும் ( தேசிய மற்றும் மாநில அரசு சார்பான சின்னங்களுக்கு மரியாதை செலுத்துதல், பாராட்டத்தக்க பண்புடைமை (அதாவது சொல்லிலும், செயலிலும் அனைவருக்கும் மதிப்பளித்தல், நண்பருக்கு உதவும் பண்பு, கோப நிலையிலும் பண்பு நிலை மாறாமல் இருத்தல்) , பள்ளி மற்றும் சமுகத்திலுள்ள பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் மதிப்புகள்),நன்னலம் மற்றும் யோகா/ ஒருங்கிணைந்த உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள் ( வாழ்க்கை கல்வி மற்றும் கலைக் கல்வி) ஆகியவற்றை ஆசிரியர் குழந்தைகளை வகுப்பறையிலும் , பள்ளியிலும் , பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் உற்று நோக்கி , குறிப்பிட்டுள்ள வாழ்க்கைத் திறன்களில் அவர்களுடைய நடத்தைக் கூறுகளைத் தெரிந்துக் கொண்டு ஐந்து குறியீட்டுத் தரநிலை அளவுகளில் மதிப்பீடு செய்து , தரநிலையைப் பதிவு செய்ய வேண்டும். இது கல்வி இணைச்செயல்பாடுகளை மதிப்பிடலாகும்.      


       இதனால் மாணவன் தேவையான அளவில் பாடங்களில் கற்றலடைவைப் பெறுவதுடன் ,ஆர்வமாக கற்கும் நிலை உருவாக்கி, தாம் கற்றவற்றை தானாக பகுப்பாய்வு செய்யவும் , அதனை வெவ்வேறு சூழலில் பயன்படுத்தும் திறன் பெற்றவனாகவும் , தானாகவும் , பிறருடன் ஒருங்கிணைந்தும், இசைந்தும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்யப் பழகிக் கொள்வான்.   சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல் திட்டங்களில் பங்கேற்கவும், சிக்கல்களை அறிந்து , தீர்வு காணும் ஆற்றலைப் பெற்றவனாக உருவாக்கப்படுவான்.


       இத்தனை சிறப்பு மிக்க இந்த மதிப்பீடு முறை வெற்றி பெற பெற்றோர்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் செயல் திட்டங்களுக்கு உதவியாக இருந்து, குழந்தைகளே உருவாக்க உதவிட வேண்டும். ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்களுக்கு செயல் திட்டங்களை உருவாக்கி, ஆனந்தமான கற்றல் சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். பெற்றோர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், அரசு கல்வித் துறை என  அனைவரும் ஒருங்கிணைந்து செயல் பட்டால், தமிழக மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. 

Thursday, September 6, 2012

மதுபானம்






                                             

பியரை குடிக்கும் போது
ஹாட் பற்றி யோசிக்க கூடாது.
எந்த மது வகையும் மற்றொரு
மது வகையுடன் சேர்த்து சாப்பிட முடியாது
ஓட்காவுடன் ரம் சேருமா…?
ரமாவுடன் இருக்கும் போது
உமாவை பற்றி யோசிக்கலாமா!  
பெண்களும் மதுபானமும் ஒன்றுதான்…!



Tuesday, August 28, 2012

கிரிக்கெட்


எத்தனை பந்துக்கள் வீசுனாலும்
அத்தனையும் விக்கெட்டுக்களாய்
வீசப்படும் அனைத்து பந்துகளும்
சிக்ஸர்களாய்
எப்படி சாத்தியமாகும்..?
என்
இரண்டு வயது குட்டிப் பிள்ளையிடம்
விளையாண்டு பாருங்கள்…!

Tuesday, August 21, 2012

அட்டகத்தி



காலை எட்டுமணி .6A பஸ். முனிச்சாலை டு அமெரிக்கன் கல்லூரி. தவறாமல் ஆஜராவதற்கு பல காரணங்கள். நண்பர்கள் . விடலை குசும்புகள். பெண்களை திரும்பி வைக்க வேண்டும் என்பதற்காக காட்டும் குசும்புகள். எபி. முத்து மறக்க முடியாத நண்பர்கள். எபி எப்போதும் பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து ஏறுவான். அதுவும் புத்தகத்தை தனக்கு புடித்த ஜன்னல் ஓரப் பெண்ணிடம் (சாரி …நல்ல பிகரிடம் ) தான் கொடுப்பான். அவன் எப்போதும் சூப்பர் பிகர்களை ஜாரி எப்படிடா இருக்கு என்பான். அவன் அப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது , “என்னோட உம் கொட்டிகிட்டு இரு…” என சொல்லிக் கொண்டு .. அப்பெண்ணின் அருகில் சென்று… ”டேய் இன்னைக்கு டிரஸ் நல்லா இருக்கு, அப்புறம் சாய்ங்காலம் முணறை(3.30) மணி பஸ் தானே.” அவள் சிரித்தால், “டேய் என்ன அப்படி பார்க்காதடா  வெட்கமா இருக்கு…” என லூட்டி அடித்து கரக்ட் செய்து விடுவான். அப்புறம் கடலை தான்.

முத்து (குண்டுக்கு) ஏற்ற ஜோடியாக லேடி டோக் கல்லூரியில் படிக்கும் அதே சைஸ் குண்டை முத்தண்ணே உன் சைட் வந்திடுச்சு… அங்க பாருங்களேன் உங்களைப் பார்த்து சிரிக்குது.. அப்புறம் படத்துக்கு கூட்டிக் கிட்டு போக வேண்டியது தானே என்று காஞ்சனாவை காதலித்ததும், காஞ்சனா இவனின் அதிமீறிய சேட்டைக்கு பயந்து இரண்டு படத்துடன் கழட்டி விட்டவுடன், வேறு ஒரு பெண்ணை பார்த்ததும் , அவள் பின்னே சுத்தி அலைந்து , அவள் ஏரியா வந்தவுடன், அவள் அவனை, “அண்ணே ஏன் அண்ணே வீடு வரை வர்றீங்க… யாரும் பார்த்த தப்பா நினைக்க போறாங்க… நீங்க செய்யுற சேட்டை பிடிக்கும்” என டபாய்க்க … எபியின் சித்து விளையாட்டு அடுத்த பெண்ணைத் தேடி செல்லும். “ மாப்பிள்ளை எப்படியாவது லவ் பண்ணி தாண்ட… மேரேஜ் பண்ணுவேன்.. நமக்குன்னு ஒருத்தி சிக்காமப் போயிடுவா…” என்பான். 

இவனின் விளையாட்டின் ஊடே பேருந்தில் கூட்ட நெருசலில் கர்ச்சிப் வைத்து கையை மறைத்து பெண்ணின் மார்பு, பின்பகுதிகளை தடவும் மூத்த கல்லூரி மாணவர்களையும், பல பெரிசுகளையும் பார்த்து இருக்கிறேன். ஒரு சமயம் எபி இது போல செயலில் ஈடுப்பட்டு , தன் அக்காவிடம் மாட்டிக் கொண்டான். அன்றிலிருந்து அவன் பஸ்சை மறந்து டிவிஎஸ் வண்டியில் சுற்ற ஆரம்பித்தான். பின் அவ்வண்டியில் பல பெண்கள் பயணித்து , அடுத்த வீட்டு பெண்ணை ஒருநாள் ஏற்றிச் செல்லும் போது மாட்டிக் கொண்டு, மீண்டும் பஸ்… பின்பு அவளும் எபியின் உறவுக்காரப் பையனை திருமணம் செய்ய விசாரித்த போது, “டேய்..அவள் என் அண்ணணுக்கு ரூட் விடத்தாண்ட என்னுடன் பழகியிருக்கா.. கடைசியில் என்ன கவுத்திட்டாட மாப்பிள்ளை” என்ற போது சிரிப்பை அடக்க முடியவில்லை.  கடைசியில் அவன் முத்துவுக்கு பார்த்த குண்டு பெண் போல ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக அறிந்தேன்.

அட போங்க … அட்டக்கத்தி பட விமர்சனம் எழுத வந்து, என் கல்லூரி
வாழ்வில் பேருந்தில் பயணம் செய்த போது நடந்த சம்பவத்தை எழுதிட்டேன்.
என் கதையில் எபி எப்படியோ அப்படித்தான் படத்தின் கதாநாயகன் தினாவும்.
பள்ளி வயதில் நந்திதா, கல்லூரி பருவ நந்திதா , கல்லூரி நிறுத்தும் போது
காதலுக்காக உருகும் நந்திதா என எதார்த்த நடிப்பில் நம்கல்லூரிக்காதலியை,அயல்வீட்டில் குடியிருக்கும் அத்தைப் பெண்னை  நினைவுப்படுத்த தவறவில்லை. அதனால் நந்திதாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு அதிகம் .




தினாவுக்கு பள்ளி வயது நந்திதாவுடன் ஏற்பட்ட காதல், அதன் பின் துண்டிப்பு, அதன் தொடர்ச்சியாக கல்லூரியில் சந்திப்பு, நந்திதாவே வழிய வந்து தினா தினா என உருகும் காதல் , கனிந்ததா … இல்லையா? என்பது தான் கதை..

தினா அருமையான நடிப்பு ,நம்மை ஈர்க்கிறது. தினாவின் அப்பா கனகட்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியுள்ளார். அவர் அம்மாவாக நடித்தவர் , தன் கணவர் போதையில் சாப்பிடாமல் இருக்கும் போது உணவு ஊட்டும் காட்சியில்  (மதுரையின் சேரிகளும் இப்படித்தான் உள்ளன) வட சென்னையின் நடுத்தர குடும்பங்களின் அன்றாடக் காட்சியை வெளிப்படுத்தி நம்மிடம் பாராட்டுப்பெறுகிறார் .


பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு வட சென்னையை மட்டும் அல்ல.. பேருந்து காட்சிகளை மிக துல்லியமாக ஒளிப்பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பலம் . “ஆசை ஒரு புல்வெளி” , “ஆடிப் போனா ஆவணி…” பாடல்கள் படத்திற்கு ஹிட் கொடுத்துள்ளது பிளஸ். படத்தின் காட்சி அமைப்பு பேருந்தை மையமாக வைத்து இருந்தாலும் , கதையை போர் அடிக்காமல் நகர்த்தி சென்றவிதம் அருமை என்பதால் டைரக்டர் நம்மை கவர்ந்து இழுக்கிறார்.

அட்டகத்தி கல்லூரி வாழ்வை மையமாக வைத்து எடுத்தாலும், வெகுஜனப்படங்களின் வரிசையில் வெற்றி கத்தி . அட்டக்கத்தி கழுத்தை பதம் பார்க்காது என்பதால் தைரியமாக படம்பார்க்கச் செல்லலாம்.

Sunday, July 29, 2012

புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ


         300 ஆண்டுகளாக கிளார்க்குகளை உருவாக்கிய கல்விமுறையில் மாற்றம் எதிர்பார்த்த கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையால் மாற்றம் நிகழும் என்பது மறுக்கப்படாத உண்மை.

    மாணவனின் முழுமையான திறனை இம்மதிப்பீட்டு முறையால் வெளிக் கொணரலாம்  2009 கட்டாய இலவச கல்விச் சட்டம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் முழுமையான திறன் வெளிப்படும் வகையில் மதிப்பீடு அமைய அனைத்து ஆசிரியர்களும் மாணவனை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து பல சுற்றறிக்கைகள் மற்றும் ஜி.ஓ.க்கள் வெளியிடுவது வரவேற்க்கத்தக்கது.

     நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம் . இயல்பது கறவேல் என சொல்லி கொடுத்தார். இன்றும் அப்படித்தான். ஆனால் அதற்கான அர்த்தம் கேட்டால், அதற்கான உரையை எடுத்து படித்து , அதன் பின் அர்த்தம் சொல்லுவார்கள். நானும் அதை புரியாமலே மனப்பாடம் செய்து கற்று வந்து, அதன் பின் அதனை அனுபவ ரீதியில் அர்த்தம் பெற்றுள்ளேன். அதாவது புரியாமல் அதனை மனப்பாடம் செய்து விடுவது. அர்த்தம் பற்றி பயம் கொள்வது இல்லை. வருத்தப்படுவதில்லை. ஏனெனில் அதனை அடிப்பிறலாமல் எழுதினால் மதிப்பெண். ஆனால், பள்ளிப்படிப்பை முடித்தப்பின் தான் அதற்கான முழுமையான அர்த்தத்தைப் பெற்று , கற்றதன் பயனை அனுபவிக்க முடிந்தது.

      ஆனால், இந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் புரிந்து செயல் படுதல் மட்டுமே சாத்தியம். அனுபவ ரீதியாக ஒரு உண்மையை தெரிந்த பின் அல்லது ஒரு கருத்தினை கற்றுத்தரும்போது அதன் உண்மை தன்மை உணரும் படி கற்றுத்தந்தால் மட்டுமே அவனை முழுமையாக மதிப்பிட முடியும். அனுபவ ரீதியாக தெரிந்த பின் கற்றல் மனதில் அழுத்தமான கருத்து  உருவாகிவிடும். 300 ஆண்டுகளாக மனப்பாடம் செய்து தேர்வில் புரிதல் இன்றி கக்கும் முறை அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.

     0 முதல் 100 வரை 101 முறையில் மாணவர்களை மதிப்பெண் சார்ந்து தரம் பிரித்த முறை மாற்றப்பட்டு, 9 வகையான ஸ்கேல் கொண்டு நாம் மாணவனை வரிசைப் படுத்தப் போகிறோம். இதனால் மதிப்பெண் ரீதியில் மாணவனுக்கு அழுத்தம் இல்லை. பெற்றோர்கள் 100 க்கு 100 என்ற மன அழுத்தத்தை மாணவனிடம் ஏற்படுத்தும் சாத்தியம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் 2 ஸ்கேல் முறை மட்டுமே உள்ளதையும் அறிய வேண்டும்.     

      நமக்கல் மாவட்டதில் நடைப்பெறும் பள்ளிப் பண்ணைகளின் மவுசு இனி குறையும். மனப்பாடம் செய்து அதன் மூலம் இஞ்னியரிங்க் மற்றும் மருத்துவம் செல்லும் நிலை முற்றிலும் மாற்றப்படும். புரிதல், நன்கு அறிதல், தெரிந்த கருத்தினை பயமின்றி எடுத்துரைத்தல், எடுத்துரைப்பது மட்டுமின்றி அக்கருத்தினை நடைமுறைப்படுத்த தெரிந்திருத்தல் போன்ற பண்புகளை பெற்றவனாக மாணவன் இருக்க வாய்ப்பு இப்புதிய மதிப்பீட்டு முறையால் சாத்தியம். அதற்கு முன்பு அப்படி அல்ல.

       பள்ளிப்பண்ணைகளால் ஒரு +1 மாணவனை இருதய அறுவை சிகிச்சை எப்படி செய்ய வேண்டும் என்பதை எந்த வித திக்கு திணறல் இன்றி பிழையும் இன்றி மனப்பாடம் செய்து அதனை எழுத சொல்லிக் கொடுக்க முடியும். இருதய அறுவை சிகிச்சைக்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் எப்படி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மனப்பாடம் செய்த ஒருவனிடம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? யாரும் முன் வருவீர்களா? முடியாது . இனி இப்படிப்பட்ட மொட்ட மனப்பாடம் சாத்தியம் இல்லை.

     அரசு நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை அமுல் படுத்த ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மனம் வைத்தால் தான் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். பெற்றோர்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து , அனைத்து பள்ளிகளிலும் இந்த புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ நடைபெற முயற்சி எடுப்பதுடன் அதனை 100 சதவீதம் வெற்றியடைய செய்ய வேண்டும்.    

Thursday, July 5, 2012

தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள்


    சமூகம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாடங்களைப் பார்க்கும் போது குலை நடுங்குகிறது. சமூகம் மட்டுமே அதனை சுற்றி நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. வீட்டில் ஆரம்பிக்கும் எந்த பழக்கமும் சமூகத்தை தாக்கும் அல்லது சமூகத்தை வடிவமைக்கும் என்ற அடிப்படை நியதி இன்றைய நவீன காலத்தில் மாறு பட்டு சமூகங்கள் மட்டுமே நம் குடும்பங்களின் அமைப்பை அல்லது குடும்பத்திலுள்ள அங்கத்தினரின் குணங்களை வடிவமைக்கின்றன.

   குறிப்பாக நம் குழந்தைகள் பள்ளிகளில் கற்றுக் கொள்வதைவிட தம்மை சுற்றி நடக்கும் விசயங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் அதிகம்.

   வெட்ட வெளிக்கு குழந்தைகளை அழைத்து , நிலவையும் நட்சத்திரங்களையும் காட்டி உணவூட்டும் பழக்கம் அரிதாகி , டி.வி. நாடகங்களை போட்டுக் காட்டி , உணவை திணிக்கும் பழக்க வழக்கம் பெருகிவிட்டது. அப்பு செல்லம் ,செல்லம், செல்லம், செல்லமே அடுத்து  தொடங்கும்  குழந்தைகளின்  உறக்கம் இன்னும் விரிவடைந்து சிரிப்புலோகம் நிகழ்ச்சியையும் தாண்டினாலும் ஆச்சரியப்படலாம். குழந்தைகள் உறக்கம் குறைந்து, மனவளர்ச்சியின் அளவும் குறைந்து வளர்ந்து வருகிறார்கள். அதனால் எதையும் பார்த்தவுடன் அதன் தாக்கத்தை அறியாமல் அதை கடைப்பிடிப்பதில் குழந்தைகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.


    பள்ளி தொடங்கி ஒரு மாதமாகிய நிலையில், நேற்று ஒன்றாம் வகுப்பு 'அ' பிரிவு ஆசிரியர் என்னை வந்து பார்த்து சொன்ன விசயம் அதிர்ச்சி அடைய வைத்தது. சமூகம் எவ்வளவு பெரிய தாக்கத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தியுள்ளது !

     சிறு குழந்தைகள் வண்டி ஓட்டுவதை வேடிக்கை பார்த்ததும், தானும் அதேப் போல வண்டி ஓட்டி விளையாட முயல்வது வழக்கம்.  பேருந்து ஓட்டுவது போல கையை சுழற்றி ஆட்டிக் கொண்டு விளையாடுவதும் , கையை திருகி கொண்டு இரு சக்கர வண்டி ஓட்டுவது போல் விளையாடுவதும் இயற்கை. அந்த ஆசிரியரின்  வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒருவன் மதிய உணவு இடைவேளை மற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளான். இதுவல்ல விசயம். அவன் கையில் கைக் குட்டையை சுற்றிக் கொண்டு வட்டையை சுழற்றுவது போல பாவனை செய்து பேருந்தை பாம் பாம் பீ பீ என சத்தம் கொடுத்து  இயக்கி உள்ளான். பேருந்து இயங்கத் தொடங்கிய சிறிது நேரம் கழிந்த பின் கை குட்டையை காதில் வைத்து , “ ஹாலோ, நான் தான் ரவி பேசுறேன்.. அனுப்பானடியில இருக்கேன்.. இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவேன்.. சாவு கிராக்கி வண்டியில மோதுர மாதிரி வற்ரான் பாரு..”( கையை வட்டையை பிடித்து சுழற்றுவது போல பிடித்து கொண்டு , இப்போது கைக் குட்டை காதிற்கும் தோள்பட்டைக்கும் நடுவில் கழுத்து  சாய்த்து கைக்குட்டை கீழே விழாமல் இருக்க ) பேருந்தை இயக்குகிறான் என்று சொன்னார்கள். சமூகத்தில் செல் போன்  ஓட்டிக் கொண்டு வண்டி ஓட்டுவது பெருகி , அது நவீன காலத்தின் கலாச்சாரமாக மாறி , அப்பழக்க வழக்கம் ஆபத்தை உணராமல் குழந்தைகளுக்கும் தொற்றி வருவதைக் கண்டு ஆசிரியர் வருந்தம் தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் கவிழ்ந்த பேருந்துக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்பட்ட செய்தியை எனக்கு நினைவூட்டியது. ஆசிரியரின் உரை எனக்கு கன்னத்தில் அறைந்தது போலவும் இருந்தது. நானே பல சமயங்களில் வண்டியை நிறுத்தாமல் செல் போன் பேசிய நிகழ்வுகள் வந்து சென்றன. தருமி அய்யா அவர்கள் செல்போன் பேசிய பெண்ணுக்கு அறிவுரைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது.

      சமூக நிகழ்வுகள் நம் சந்ததிக்கு விட்டுச் செல்லும் எச்சங்கள் பயனுள்ளதாக அமைய நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சமீபத்திய சர்வே படி இரண்டு லட்சத்து எண்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஹெல்மட் அணியாமல் தமிழகத்தில் வண்டி ஓட்டுவதாக கூறுகிறது. வாகன்ங்கள் ஓட்டும் போது செல் போன் பேசுவோர் எண்ணிக்கை அதையும் தாண்டும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
செல் போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுவது, ஹெல்மட் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவது, சாலையில் வண்டியை கவனிக்காமல் செல் போன் பேசிக் கொண்டே சாலையை கடப்பது, டீக்கடையில் குடிக்கும் நெகிழிக் கோப்பையை ரோட்டில் தூக்கி எறிவது, நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் சிறுநீர் கழிப்பது , எச்சில் துப்புவது, பலர் முன்னிலையில் மூக்கை நோண்டுவது என  இன்னும் தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள் , அல்லது கலாச்சரமாகப் பின்பற்றப் படும் தவறுகள், தவறுகள்  என உணரா தவறுகள் தினம் தினம் குழந்தைகள் மனதில் படியும் போது அவை தன்னையறியாமல், அதன் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், அவற்றை நவீன காலத்தின் நாகரீக பழக்க வழக்கங்களில் ஒன்றாக பின்பற்றுவது வருத்தம் அளிக்கிறது.

    இவை தொடருமானல்,  குழந்தைகள் எதிர்காலம் இன்னும் மோசமானதாகவும்,  குற்றங்கள் நிரம்பியதாகவும் இருக்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.