Monday, December 28, 2015

பள்ளிக்கூடம் தொடர்..கட்டுரை 2ன் தொடர்ச்சி.

பேருந்தை துரத்தும் குழந்தைகள் !


முதல் வருடத்தில் அனுப்பானடி, மேல அனுப்பானடி, பால்பண்ணை, அண்ணாநகர்,  வண்டியூர் வரை பள்ளிப்பேருந்து அனுப்பப்பட்டது. அடுத்த வருடத்தில் ஆற்றங்கரையில் இருந்து சென்றவர்கள் களஞ்சியம் பகுதிக்கு குடி போய் உள்ளார்கள் என்றவுடன் வண்டி கல்மேடு சென்றது. அதன் பின் எல்.கே.பி நகர் சத்யா நகர் குடியிருப்பு வரை சென்றது. சத்யாநகர் செல்லும் போது அதன் ஆரம்ப பகுதியில் குடியிருப்பவர்கள் நரிக்குறவர்கள் ஆவர்கள். நரிகுறவர் குடியிருப்பு பகுதியில் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தார்கள்.  அக்குழந்தைகள்  மூக்கு ஒழுகியும், அழுக்குபடிந்த தலையுடன் , வித்தியாசமான உடைகள் அணிந்தும் இருந்தார்கள்.  பள்ளியின் பேருந்தை வேடிக்கை பார்த்த வண்ணம் இருப்பார்கள். இவர்களையும் சேர்க்கலாமே என என்னை போன்ற இளவட்டங்கள் கூறுவோம். 




 எங்கள் பள்ளியில் பணிபுரியும் சீதா ஆசிரியர், “போதும்ப்பா….நீங்க பிள்ளைகளை சேர்க்கிற லட்சணத்தில் இது வேறவா..! உங்களால் அதெல்லாம் முடியாது. இது மாதிரி குழந்தைகளை தான் 1965 வாக்கில் நாங்கள் எஸ்.எம்.பி காலணியில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து,  குளிப்பாட்டி, புது ட்ரஸ் கொடுத்து படிக்க வைத்தோம். இப்ப எல்லாம் யார் செய்கிறாங்க..” என ஆதங்க படுவார். அப்போது எங்கள் பள்ளி வாகனத்தில் ஏறி பள்ளிக்கு வருவதற்கு குழந்தைகளிடம் எந்த கட்டணமும் வாங்குவதில்லை. ஏனெனில் இந்த மாணவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு புலம்பெயர்ந்ததாலும் எங்கள் உறவின்முறை சார்ந்த அரிசி ஆலைகளில் வேலைப்பார்த்ததாலும்,  குழந்தைகள் படிப்பு கெடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவும் நிர்வாகத்தினர் பணம் செலவழித்தார்கள்.

நரிக்குறவக் குழந்தைகள் எங்கள் பள்ளி வாகனம் வரும் போது பின்னால் துரத்தி வருவார்கள். ஏனெனில், அடுத்தடுத்து 50 அல்லது 100 மீட்டர் தொலைவுகளில் நிறுத்தங்களில் மாணவர்களை ஏற்றி கொள்வோம். பிற குழந்தைகள் ஏறுவதை ஏக்கத்துடன் வேடிக்கைப் பார்ப்பார்கள். ”சாமி.. ப்ரீய்யா தானே.. எங்க குழந்தைகளும் படிக்கலாமா? ”என்று அதன் தலைவர் சௌந்திரப்பாண்டியன் கேட்பார்.  ”படிக்கலாம். ஆனா குளிச்சு நீட்டா வரணும்” என்பார் அப்போதைய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர். (1998ல் எங்கள் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது)




ஆனால் தலைவர் வழியில் மக்கள் இல்லை. ஆம்! தலைவர் சரியாக இருந்தால் அவரை பின்பற்றுபவர்கள் சரியாக இல்லை. மக்கள் சரியாக இருக்க நினைத்தால் அவர்களை வழி நடத்தும் தலைவர்கள் சரியாக இருப்பதில்லை! அந்த நரிக்குறவ ஜனங்கள் தலைவரின் குரலுக்கு செவிமடிப்பதில்லை. அதையும் மீறி குழந்தைகளை சேர்க்க சென்றால்,  “சார்..அவருக்கு வேலையில்லை உங்களுக்குமா …என்னமோ கலெக்ட்ராக்க போறமாதிரி பேசுவார்…அடுத்தவாரம் வந்திட்டா திருவிழா வந்திடும்..( கார்த்திகை தாண்டி ஐப்ப , முருகன் சீசன்) நாங்க ஊருக்கு பாசி விக்க கிளம்பிடும் சாமி.. குழந்தைகளை யார் பார்ப்பா? ஹாஸ்டல் வச்சிருக்கீய்யா?”  என்பார்கள். ஆனால் குழந்தைகள் வேனில் போக வேண்டும் என்பதற்காக ஆசையில் நான் வர்றேன் என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் குளிக்காமல் இருப்பார்கள் என்பதால் சேர்ப்பதற்கு எந்த பள்ளியும் சேர்ப்பதற்கு தாயாராயில்லை.

எஸ்.எஸ்.ஏ திட்டம் வந்தவுடன் நரிக்குறவர் குழந்தைகளுக்காக உண்டு உறைவிடப்பள்ளி ஏற்படுத்தப்பட்டது. என்.ஜி.ஓ உதவியுடன் அக்குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்துக்கள் கற்றுதர ஏற்பாடு செய்யப்பட்டன. அத்திட்டப்படி, இக்குழந்தைகள் ஓராண்டு அல்லது இராண்டுக்கு பின் மெயின் ஸ்ட்ரீமில் அதாவது சாதாரண பள்ளியில் பிற மாணவர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் . ஆனால், திட்டமாக தான் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு சிலரே இந்த உண்டு உறைவிடப்பள்ளியில் இருந்து எல்லோரையும் போல் தினமும் பள்ளிக்கு சென்றனர். ஒரு சிலரே அருகிலுள்ள இளமனூர் துவக்கப்பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் எப்போதும் அந்த உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்தனர்.




நான் தலைமையாசிரியரான பின்பு மீண்டும் நரிக்குறவர் சங்க தலைவர் சௌந்திரப்பாண்டியன் வந்தார். 2006 ஜீன் மாதம் பள்ளியின் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும், நரிக்குறவர் குழந்தைகளையும் ஏன் படிக்க வைக்க முயற்சிக்க கூடாது என்ற எண்ணத்துடன் எம் பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களுடன் கலந்து விவாதித்து,  முடிவெடுத்து, நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அக்குழந்தைகளை சேர்க்க முன் வந்தோம்.  “காலை மூச்சி கழுவி அனுப்பி விடுங்கள். நாங்கள் அங்கு குளிக்க வைத்து கொள்கின்றோம்” என்றவாறு சேர்த்தோம். எங்கள் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களின் வயதுக்கு தகுந்த வகுப்பில் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் படி பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு சேர்க்கை திட்டத்தின் படி சேர்க்கப்பட்டனர்.

அக்குழந்தைகளின் பெயர்கள் எனக்கு சிரிப்பை வரவழைத்தன. அட்மிசன் போடும் ஆசிரியர் வேகமாக ஓடி வந்து, “ சார்.. எல்லா குழந்தைகளும் சினிமா நடிகர்களின் பெயர்களை கூறுகின்றார்கள். தயவு செய்து நாளை பார்ம் பூர்த்தி செய்து கொள்வோம்” என்றார். அவர்களின் பெயர்கள் நக்மா, நதியா, குஷ்பு, அமலா, பிரபு, கார்த்திக், எம்.ஜி.ஆர்., அசோகன் என்று இருந்தன. அவர்களில் பீமன் வளர்ந்தவன் அவனை அழைத்து இவை தானே பெயர் என்றேன்.  “சார் , எங்க தாய்மார்கள் எல்லாம் இப்படி தான் பெயர் வைப்பாங்க “ என்றான்.


அக்குழந்தைகளை சேர்த்த ஒரு வாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து போன் பேசுகின்றோம் என்று பிஆர்டி ஒருவர் பேசினார்.  “சார் அந்த மாணவர்களுக்கு என்று உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகின்றது. நீங்கள் எப்படி அவர்களை உங்கள் பள்ளியில் சேர்க்கலாம்?” . “அவர்களுக்கு உண்டு உறைவிடப்பள்ளி எத்தனை வருடங்களுக்கு ? என்று கேட்டேன்.  “அதுவந்து சார்…அங்க படிக்கிற குழந்தைகளை நீங்க அள்ளிக்கிட்டு போறதா.. என்.ஜீ.ஓ கம்ப்ளெயிண்ட் அதான்..?” “சார்..அந்த அம்மாவை பேச சொல்லுங்க.. அந்த குழந்தைகளை நரிக்குறவர் சங்க தலைவர் சௌந்திர பாண்டியன் தான் சேர்த்துள்ளார். முடிந்தால் அவரிடம் பேச சொல்லுங்க என்று போனை கட் செய்தேன். பின்பு நேரில் அந்த என்.ஜி.ஓ வந்தார். எல்லா குழந்தைகளும் 3,4,5ம் வகுப்புகளில் பயில்வதை உறுதி செய்து, சேர்க்கை படிவத்தில் அவர்களின் பெற்றோரே கையெழுத்தும், ரேகையையும் வைத்திருப்பதை சரிசெய்துவிட்டு சென்றார். இன்று நானும் அந்த பி.ஆர்.டியும் நல்ல நண்பர்கள். அவரே திட்டம் திட்டமாக தான் செயல்படுகின்றது. கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும் கல்விமுன்னேற்றம் தேவை குறித்து உங்களை மாதிரி வெகுசிலரே யோசிக்கின்றனர் என்றும் கூறி சென்றார்.

நரிக்குறவர்கள் மராட்டிய வம்சத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் சிவாஜி படையில் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள். முகலாயர்களுடனான சண்டையில் தோற்றவுடன், முகலாயர்களின் அடிமையாக்கப்பட்டனர். அதன்பின் முகலாயகர்களிடம் இருந்து தப்பி, நகர வாழ்வை மறந்து,  காடுகளில் பதுங்கி வாழ்ந்தவர்கள். இவர்கள் காட்டில் நரிகளை வேட்டையாடி விரும்பி உண்டதால் இவர்களுக்கு நரிகுறவர்கள் என்று பெயர் வந்தது என்ற வரலாறும் உண்டு. இவர்கள் பேசும் மொழி வாக்ரிபோலி ஆகும். இதற்கு எழுத்துவடிவம் இல்லை. இவர்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை கொண்டவர்கள். ஆனால் , தமிழ்நாடு அரசு இவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் கொடுத்தேன். அதற்குள் அவர்களின் தலைவர், “சார் , மனு கொண்டு வந்திருக்கேன். எங்களை மலைசாதி வகுப்பில் சேர்க்க வேண்டும். கையெழுத்து போடுங்கள் என்றார். மேலும் எங்க குழந்தைகள் இங்க படிக்கின்றார்கள் என்று சான்று வேண்டும்” என்று கேட்டார். இது நடந்த போது வருடம் 2009 ஆகும். மனுவினால் எதுவும் நிகழுமா? அதுவும் பட்டியல் மாற்ற முடியுமா? எனா எனக்குள் எண்ணம் ஓடிய போதும் வாய் தானாக கேட்க தொடங்கியது, “ஏங்க..எப்படி இது சாத்தியம்?”.  “சார்.. மனு போட்டுள்ளோம். எம்.ஜி.ஆர் மட்டும் இருந்திருந்தால் நாங்க எப்பவோ முன்னேறி இருப்போம். ” என்று கூறியப்படி படிவங்களில் என் முத்திரையுடன் கையொப்பம் போட்டார்.  “சார்.. தரலைன்னா எங்களுக்கு கொடுத்த ரேசன் கார்டை ஒப்படைக்க போறோம்” என்றார். (எல்லாம் சினிமா பார்த்து வளர்ந்த உலகம்)
 . 
அதன் பின் 2013ல் செய்தி தாளில் வந்த செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது. அரசியலைப்பு சட்டத் திருத்த மசோதாவில் நரிகுறவர் ஜாதியை சேர்க்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆக்ஸ்ட் 27 , 2013ல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய செய்தி வந்தது. நரிக்குறவர் அல்லது குருவிக்காரன் என அழைக்கப்படும் இவர்களை நாடோடி பழங்குடி பட்டியலில் சேர்த்து, ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு அரசியலைப்புச் சட்டப் பிரிவு 342 (1), 342 (2)ன் கீழ் அனைத்து உத்திரவாதங்களை வழங்குவது அவசர தேவையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் 36 ஜாதிகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.



அப்போது அது புரட்டாசி மாசம் ஆகும். 4ம் வகுப்பு படிக்கும் அமலா வேகமாக ஓடி வந்தாள். என் வகுப்பில் படிக்கும் பீமா வை பார்த்து, “ இவன் நேத்து மாட்டு இரத்தத்தை பச்சையா குடிச்சான் சார்” என்றார். ”சார்.. நாங்க எருது வெட்டி , அதன் இரத்தத்தை பச்சையா குடிச்சு , காளிக்கு கொடுப்போம். பொம்பள பிள்ளைக அங்க வரக்கூடாது, சார்.”
“சார்.. வாயை கழுவாம அப்படியே வாய் முழுசும் இரத்தம் வடிஞ்சு வந்தான், சார்”
நரிக்குறவர்கள் வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்டவர்கள். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து கடைசி வெள்ளிக்கிழமை தங்கள் பெட்டியில் வைத்திருக்கும் தெய்வத்தை எடுத்து மஞ்சள், குங்குமம் பூசி , வணங்கி ,  அரிசி மாவு, தேங்காய் படையலாய் வைத்து வெல்லத்துடன் பிணைந்து சாப்பிட்டு, இரவு முழுவதும் பாட்டு பாடி நடனம் ஆடுவார்கள். அப்போது ஆண்களும் பெண்களும் சாராயம் குடித்து தன்னை மறந்து ஆடுவது வழக்கம். ஆட்ட முடிவில் தெய்வத்திற்கு மாட்டை பலிக்கொடுப்பார்கள். மாட்டின் தலையை வெட்டியவுடன் அதில் இருந்து பீய்ச்சி வரும் இரத்தத்தை ஆண்கள் , வளர்ந்த சிறுவர்கள் பச்சையாக குடித்து நேர்த்தி கடன் செலுத்தி கொள்வார்கள். இந்த பலி கொடுக்கும் நிகழ்வில் பெண்களுக்கு இடம் இல்லை. ஆனால், பலி கொடுத்த மாட்டின் கறியை சமைத்து சாப்பிட அனுமதி உண்டு.

”சார்..என் பையில் இருந்த 1000 ரூபாயை காணவில்லை.” ஓடி வந்தார் 4ம் வகுப்பு ஆசிரியர்.      
நீங்கள் நினைப்பது சரிதான் எல்லோர் பார்வையும் கோணலாகவே இருந்தது. ஆனால் நான் தெளிவுடன் இருந்தேன். அதற்கு காரணங்கள் உண்டு. தினமும் இந்த குழந்தைகள் பள்ளி கேண்டினில் 500 ரூபாய் தாள்களை அல்லது 100 ரூபாய் தாள்களை கொடுத்து வேண்டிய திண்பண்டங்களை வாங்குவது வழக்கம். கொடுத்தவுடன் அங்குள்ள பொறுப்பாளர் வந்து ”சார், இந்த வகுப்பில் படிக்கும்.. இந்த பையன் ரூபாய் 500 கொடுத்துள்ளான். நான் வேண்டிய பண்டங்களை கொடுத்துவிட்டேன். ஆனால், சில்லறை கொடுக்க வில்லை. விசாரிங்க..யார் காசாவது இருக்க போகுது..”



“இருக்காதும்மா.. அந்த பசங்க.. திருடுற பசங்க இல்லை. உண்மையை பேசுறாங்க.. சூது தெரியாத பசங்க..உங்களுக்கு தான் வித்தியாசமா தெரியுது..” என்பேன்.
அவ்வாறு நிகழும் சிறிது நேரத்தில் அந்த பையனுடைய தந்தை மேல் ஆடை அணியாமல் தோலில் டப்பாவை போட்டு கொண்டு என் அறைக்கு முன்பு நிற்பார்.  “சார் …வேலைக்கு போகணும்.. என் மகன் பிரபு..காசை எடுத்துட்டு வந்துட்டான்.“ “எவ்வளவு? “ “முழுசா..500 ரூபா சாமி..” “ஏங்க 500 கேண்டீனில் கொடுத்தவுடன் திருடிட்டு …வந்துட்டான்னு நினைச்சுட்டாங்க..”
”சாமிய்யோ..எங்க சாதி ஜனம் திருடாது சாமி.... ஊசி பாசி வித்து உழைச்சு திங்கிற ஜாதி…இப்ப ஊர் திருவிழா நேரமில்லை..கையில் காசு பொளங்கும் ..அதான் கேட்காம எடுத்து வந்துட்டான்..மன்னிச்சிடுங்க..சாமி.. அவன் வாங்கின பொருளுக்கு காச நான் தர்றேன்..” என்றார்.
எப்போதும் நரிக்குறவர் குழந்தைகள் தவறு செய்யாதவர்கள் அல்லது செய்ய தெரியாதவர்கள் என்பது குறித்தே என் நினைவலைகள் இருந்தன.  இதுமாதிரியான நிகழ்வுகளை அவர்கள் இன்னும் பழகவில்லை. அல்லது கற்று கொள்ளவில்லை.

ஆசிரியர் குற்றம் சுமத்திய பையனை தனியாக அழைத்து பேசினேன். அவன் விசயத்தை கூறிவிட்டான். மேலும் அவன் பேரம் பேசப்பட்டதையும் ஒத்து கொண்டான். ஆம. நீ காட்டி கொடுக்காவிட்டால் உனக்கு 100 ரூபாய் தருகின்றேன் என்று அப்பணத்தை எடுத்த பையன் கூறியுள்ளான். இவன் மறுத்துள்ளதுடன் கட்டாயம் பெரிய சார் கிட்ட சொல்லுவேன் என்றும் கூறியுள்ளான். அனைவரும் திட்டமிட்டு இவன் மீது பலி சுமத்தி உள்ளனர்.
“சார்.. இந்த நரிக்குறவப் பசங்க எடுக்க மாட்டாங்கன்னு தெரியும்.. இருந்தாலும் மத்த பசங்களோட சேர்ந்து கெட்டு போயிட்டாங்களோன்னு நினைச்சுட்டேன்..”



இயற்கையோடு இணைந்து வாழும் இவர்கள் இயற்கைக்கு முரணாக செயல்படுவதில்லை. இவர்களிடம் உள்ள இயற்கை சார்ந்த பலவிசயங்களை நாம் கற்று கொள்ள வேண்டும். இந்த குழந்தைகள் சில பூச்சிகளை பார்த்து இன்று மழை வரும் என்று கணித்துவிடுவார்கள். இக்குழந்தைகள் செடி, கொடிகள், மரங்கள் மீது பற்று உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நரிக்குறவர்கள் குழந்தைகளுக்கு முறையான கல்வியை கொடுத்து , அவர்கள் கொண்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை நாம் காத்து கொண்டால், இயற்கையாக பல நோய்களை நாம் குணப்படுத்தி கொள்ள முடியும். ஆங்காங்கு உள்ள ஆசிரியர்கள் உண்மையான கல்வியை தர நினைப்பவர்கள் இக்குழந்தைகளை திரட்டி பெற்றோர்கள் உதவியுடன் கல்வி கொடுத்தால் நலமே! அதில் உண்டாகும் நடைமுறை சிக்கலை அரசு முன்னெடுத்து களைய வேண்டும். நடமாடும் வகுப்பறைகள் இவர்கள் கல்வி தொடர உதவும். எங்கோ பணிபுரியும் அரசு ஊழியர் எலக்சன் நேரத்தில், தகுந்த சான்றை பெற்று வாக்களிக்க முடியும் என்றால், இக்குழந்தைகள் பெற்றோருடன் ஊர் திருவிழாவிற்கு இடம்பெயரும் போது ஏன் ஒரு மொபைல் வகுப்பறையை உருவாக்க கூடாது?!

2013, டிசம்பரில் 19ல் நரிக்குறவர் ஜாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிஷோர்சந்திர தேவ் அறிமுகம் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவில் பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தில் இருந்து “நரிக்குறவர்” சாதியும் சத்தீஸ்கரில் ”தனுஹர், தனுவார்” ஆகிய இரு சாதிகளும் சேர்க்க வலியுறுத்தப்பட்டது.



இப்போது சக்கிமங்கலம் சத்யாநகர் பகுதிக்கு மதுரையில் இருந்து எல்லா பள்ளிகளின் பேருந்துகளும் செல்கின்றன. ஆனால், இந்த இனத்தின் குழந்தைகள் இன்னும் பள்ளி பேருந்துகளை வேடிக்கை பார்த்தப்படியே உள்ளார்கள். அவர்களின் பெற்றோர்களும் இந்த குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முன் வர வேண்டும்! 

மதுரை சரவணன்.

தொடரும்.. பள்ளிக்கூடம்( அடுத்த கட்டுரையில் வித்தியாசமன பிரச்சனை குறித்து பேசுவோம்!) 

2 comments:

S.P.SENTHIL KUMAR said...

தங்களின் அனுபவங்களை சுவையாக கூறியிருக்கிறீர்கள்!
தொடர்கிறேன்.
த ம 1

சீனுவாசன்.கு said...

அருமை

Post a Comment