Thursday, December 24, 2015

பள்ளிக்கூடம் தொடர்- கட்டுரை 1 (சீக்கிரம் போ ! சீக்கிரம் !)


1.   சீக்கிரம் போங்க…! சீக்கிரம் …!

“The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.”
                                      - Robert Frost

பள்ளிக்கூடம் குழந்தைக்கு பிடித்திருக்கின்றதோ,  இல்லையோ 5 வயது பூர்த்தியானால் பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டிய கட்டாயமாக்கப்பட்டு விட்டது ! சட்டப்படி 5 வயது தான்! ஆனால்,  2½ வயதிலேயே பெற்றோர்கள் விரும்பி பள்ளிக்கு அனுப்பி விடுகின்றார்கள்!

     கட்டுப்பாடுகள், விதிகள் நிரம்பி வழியும் பள்ளியில் நேரத்திற்கு இருப்பது அவசியம். பள்ளிக்கூடம் என்பது ஒரு வீடு போல் இருக்க வேண்டும் என்று காந்தி கூறுகின்றார். வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமே? பள்ளிக்கு ஏன் கால வரையறை? காலை 8.30 க்குள் இருக்க வேண்டும். தவறினால் தண்டனை! இல்லை என்றால் அபராத கட்டணம்! (மெட்ரிக் பள்ளிகளில்) அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும் அல்லது மண்டி போட வேண்டும். அட ! கட்டாய இலவச கல்வி சட்டம் இருக்கே! ஆம் ! காகிதங்களில்!  மாணவர்களுக்கே இந்த கட்டுப்பாடு என்றால் ஆசிரியர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை..!( இது மெட்ரிக் பள்ளிகளில் மட்டும்)குழந்தைகளின் கல்வி பருவம் என்பது கோபர்நிக்கஸ்சின் சூரிய கோட்பாடினை போன்று பள்ளியை மையமாக கொண்டு குழந்தைகளுக்காக, பெற்றோரும், உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும், அயலாரும் சுற்றிவர ஆரம்பிக்கும் கோட்பாடாகும் !  
நிலா, பூமியை முழுவதும் சுற்றிவர 29 1/2 நாள்கள் எடுத்து கொள்கின்றது.  பூமியின் சுழற்சியையும் நிலாவின் சுழற்சியையும் வைத்து நாள்கள், மாதங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் கணக்கிட்டார்கள். அது போல, குழந்தைகளை மாதம் தவறாமல், பருவம் தவறாமல் ஆசிரியர்கள் வழங்கும் ராங்க் கார்டு கண்டும்,  பரீட்சை தாள்களை கண்டும் பெற்றோர்கள் குழந்தைகளை மதிப்பிட (சிரமப்படுத்த) ஆரம்பிப்பார்கள்! ஆசிரியர்களுக்கு மதிப்பீடு என்றால் எதற்கு என்பதே தெரியாது! மதிப்பீடு மாணவனை சார்ந்த விசயம் என தவறான கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்! சமீபத்தில் நடந்த லிட்டில் டிரஸ்ட் நடத்திய கூட்டத்தில் கூட அதை காண முடிந்தது.  

10ம் வகுப்பு , +2ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் நிலமை மிகவும்  மோசமாக உள்ளது.  இம்மாணவர்களுக்கு பள்ளியில் மட்டும் கால அட்டவணை இல்லை. வீட்டிலும் படிக்க தனி கால அட்டவணை இருக்கும். எனக்கு தெரிந்து, பெற்றோர்கள்  இக்குழந்தைகளை தூங்வே விடுவதில்லை. எல்லா பொழுதுகளிலும் படி! படி! படி! என குரலை உயர்த்தி கொண்டே இருப்பதை காண்கின்றேன்.(பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமல்ல எல்லோரும் தான்!)யார் வீட்டிற்கு வந்தாலும் “என்ன பாப்பா .. இந்த வருசம் +2வா என்ன டாக்டர் ஆகிடுவீய்யா? ” என குழந்தையின் ஆம்பிசன் என்ன என்பதை அறியாமலே கேள்வி கேட்கின்றனர்.
பொழுது என்றவுடன் தான் தமிழர்கள் காலத்தினை இலக்கணத்திற்குள் வகைப்படுத்தியது நினைவுக்கு வருகின்றது.

காலத்திற்குப் பெயரிட்டு அதனை இலக்கணத்துள் வகைப்படுத்திய ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது தமிழினமாகத்தான் இருக்க முடியும். சமுதாயத்தில் வேறு யாரும் செய்யாத வகைப்பாடுகளைத் தமிழரே செய்தனர். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த மக்களினம் தமிழினமே ஆகும் என்பதை நாம் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளலாம். காலத்தைப் பொழுது என்று பெயரிட்டு நமது மூதாதையர் வழங்கினர். . ஒரு நாள் என்பது ‘சிறு பொழுது’ ஆகும். வைகறை, விடியல், நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்று ஆறு கூறாக ஒரு நாளைப் பகுத்துரைத்தனர். ஓராண்டைப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டு, கார் காலம், கூதிர்(குளிர்) காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என்று ஆண்டினை ஆறு வகைக் காலமாகப் பகுத்துரைத்தனர். இக்காலத்தை முதற்பொருளில் அடக்கி விளக்குவார் தொல்காப்பியர்.

ஆரம்ப காலத்தில் ஒரு கண்டிப்பான ஆசிரியராக இருந்திருக்கின்றேன்! கையில் பிரம்பு குச்சியை பிடிப்பதை பெருமையாக கொண்ட காலம் அது!  காலை பிரார்த்தனை கூட்டத்திற்கு மாணவர்கள் சரியாக வந்து விட வேண்டும். ஆனால், வெகுசில மாணவர்கள்  நேரம் தவறியே வருகை புரிவார்கள்.  தலைமை ஆசிரியர் அப்படி காலதமதமாக வருகைபுரியும்  அனைவரையும் கேட்டிற்கு வெளியே நிறுத்த செய்வார். தாமதமாக வரும் மாணவர்களை வெளியில் நிறுத்தி, வகுப்பறைக்கு
உள்ளே செல்லாமல் பார்த்து கொள்வது என் பணி! என்ன பெருமைடா சரவணா உனக்கு! ( இப்ப மைண்டு வாய் கொடுத்து என்ன பயன்!)

பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் தலைமையாசிரியை வருகை தருவார்! தாமதமாக வருகை புரிந்த எல்லா மாணவர்களையும் மண்டியிட பணிவார். அம்மாணவர்களை நான் கவனிக்க வேண்டும். மண்டியிடாமல் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது! அதன்பின் ரவுண்ட்ஸ் சென்றுவிடுவார். எல்லா வகுப்பறைகளையும் பார்வையிட்ட பின் வருகை புரிந்து பிரம்பு கொண்டு தாமதமாக வந்த அனைவரயும் கை நீட்ட சொல்லி விளாசுவார்! அவருக்கு கை வலித்தால்,  “இரண்டு சாத்து போட்டு அனுப்புங்க, சார்”  என்று என்னிடம் பிரம்பை கொடுத்து விட்டு சென்றுவிடுவார். அப்புறம் என்ன  கடமையை செய்ய வேண்டியது தான்!

தாமதமாக பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் அவசர அவசரமாக, “சார், என்னால தான் சார் லேட்..கொஞ்சம் கிளாசுக்கு போகட்டும். நாளைக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவான்” என கெஞ்சுவார்கள். வேறுவழியின்றி, பெற்றோருடன் வருகை புரியும் மாணவர்களை வகுப்பறைக்கு உள்ளே செல்ல அனுமதிப்பதுண்டு. பெற்றோருடன் வருபவர்கள் தண்டனையில் இருந்து விலக்கு பெற்றவர்கள்! ஆனால், தலைமையாசிரியர் தொடர்ந்து வருகை தரும் அவர்களையும் விட்டு வைப்பதில்லை.   “இப்படி அடிச்சா தான் நாளைக்கு நம்ம பிள்ளை அடிவாங்க கூடாதுன்னு அக்கறை வரும் ” என்று கூறி கொண்டே அவர்கள் முன் குழந்தைகளை அடிப்பார். புலம்பியப்படி பெற்றோர் சென்றுவிடுவர். அது தான் அதிக பட்ச எதிர்ப்பாக இருக்கும் அன்று! (இது நடந்தது 1994 வாக்கில். இன்று அப்படி முடியுமா? பையனே போலீஸ் ஸ்டேசன் போயிடுவேன்னு மிரட்டுறான்! பாவம் ஆசிரியர்கள் நிலை!)

தண்டனையில் இருந்து தப்பிக்க சில மாணவர்கள் தந்திரம் செய்வது உண்டு! கொஞ்சம் சுதாரித்த 6,7,8ம் வகுப்பு மாணவர்கள், கேட் வெளியில் நின்று கொண்டு யாராவது தெரிந்தவர்கள் வரும்வரை காத்திருப்பார்கள்.  “அங்கிள், நானும் உங்களுடன் தான் வந்தேன்னு சொல்லுங்க அங்கிள்” என காக்கா பிடித்து வந்துவிடுவார்கள். அந்த பெற்றோர்களும்  “ சார்! இந்த பையனும் எங்க கூடத்தான் சைக்கிள்ள வந்தான் “ என்று தப்பிக்க வைப்பதும் உண்டு. பாவம் பசங்கன்னு நினைக்க தோணும். ஆனாலும் , பருவத்தே பயிர் செய்ய வேண்டுமே! கால காலத்தில் விதை விதைத்து பயிரிட்டு, அறுவடை செய்ய வேண்டுமே!  அது தான் விவசாயத்திற்கு நல்லது. வாழ்க்கையின் எதிர்காலம் பள்ளியில் தானே நிர்ணயிக்கப்படுகின்றது! சரியான நேரத்திற்கு வர வேண்டுமே!   
எறும்புகள் கூட, மழைக்காலத்தை  மனத்திற்கொண்டு, கோடை காலத்தில் உணவுகளைச் சேமிக்கின்றன. பல நிலைகளில் உயிர்வாழ்வன, காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப, செயல்பட்டுப் பயன்பெறுகின்றன. இதனையே 

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தால் செயின் (குறள் 484) என்று கூறுகின்றார் திருவள்ளுவர்.              
                                                                                                                                                                                                                                                                                                                   
தான் செய்யவேண்டிய வினையைத் தகுந்த காலம் அறிந்து செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் என்பது இதன் பொருள் ஆகும். 

மாணவர்களை நேரத்திற்கு வர செய்ய வேண்டும். அதற்கு பள்ளிகள் பிடித்த மாதிரி அல்லவா! இருக்க வேண்டும். எவரும் அது பற்றி சிந்திப்பதில்லை. அது சரி பள்ளியை விடுங்கள் மாணவனுக்கு பிடித்த மாதிரி ஆசிரியர்களில் ஒருவர் கூட இருப்பதில்லை என்பது தான் வருத்தம். தப்பி தவறி ஒருவர் இருந்தாலும், அவரும் நிர்வாகத்திற்கு அல்லது தலைமைக்கு கட்டுப்பட்டு ,மாணவர்களை சாடுபவர்களாகவே இருக்கின்றார்கள்! காலம் தவறினால் என்னவாகிவிடும் என்று கேட்டால் எல்லோரும் கூறுவது இந்த நெப்போலியன் கதையை தான்!

உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவர விரும்பினான் மாவீரன் நெப்போலியன். ஆனால் அவன் உருசியாமீது படையெடுத்தபொழுது, காலத்தைக் கருத்தில் கொள்ளவில்லை, முழுமையான குளிர்காலத்தில் படையெடுத்துச் சென்றான். குளிரின் துன்பம் தாங்கிக்கொள்ள இயலாமல் பல படை வீரர்கள் இறந்தனர். நெப்போலியனால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. உருசிய நாட்டைக் கைப்பற்ற இயலவில்லை. நெப்போலியன் காலம் கருதிச் செயல்பட்டிருப்பானேயானால் உருசிய நாட்டை எளிதில் கைப்பற்றி மேலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். எனவே, காலம் என்பது, மிகவும் இன்றியமையாதது; ஒருவனது வெற்றியும் தோல்வியும், அவன் காலம் கருதிச் செயல்படுவதைப் பொறுத்து அமையும் என்பது வள்ளுவரில் தொடங்கி அனைவரும் கூறும் கருத்தாகும். இன்றைய நடைமுறை வாழ்க்கையிலும், பிறவற்றிலும், காலம் அறிந்து செயல்படுவோரின் வெற்றியையும், காலம்கருதாது செயல்படுவோரின் தோல்வியையும், நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

பள்ளிகளில் ‘காலம் தவறாமை’ என்பதை தவறான வழிகாட்டுதலில் புரிய வைப்பதாக உணர்கின்றேன். 

இப்போது என் பள்ளியில் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் வருகை தரலாம். அவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது. தண்டனை வழங்க கூடாது. ஆனால், தாமதமாக வருவதற்கான காரணத்தை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். காலத்தின் அவசியத்தை உணர செய்ய வேண்டும்.
என் வகுப்பில் படிக்கும் பிரேமலதா இராஜாங்கூர் பகுதியில் இருந்து வருகின்றார். அந்த ஊருக்கு வருகை தரும் 8.15 பேருந்து வருகை புரிய தவறினால் அடுத்த பேருந்து 9 மணிக்கு தான் ! 9 மணி பஸ்ஸை பிடித்தால் 10 மணிக்கு தான் பள்ளிக்கு வர முடியும்! நான் திட்டுவேன் என்றோ அல்லது லேட்டா செல்வது தவறு என நினைத்து சில சமயங்கள் அவள் பள்ளிக்கு வருவதில்லை. விவரம் அறிந்த உடனே , அக்குழந்தையை அழைத்து, “லேட்டானாலும் வந்துவிடு. லீவு போட்டு இருந்துவிடாதே என்று கூறிவிட்டேன்!“ இப்போது தினமும் பள்ளிக்கு வருகின்றார். மேலும் 7.30 பேருந்தை பிடித்து குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றார்.  

குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் விசயத்தில் கால தாமதத்தை கணக்கில் கொண்டு தண்டிப்பதில் உடன் பாடு இல்லாமைக்கு வேறு ஒரு காரணம் உண்டு. அது ஒரு சம்பவம்!

குழந்தைகள் நேரத்திற்கு பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பதை நாம் தண்டனைகள் மூலம் கொண்டு வருவதை விட , காலம் தவறாமை என்பது வாழ்வில் முக்கியமான ஒன்று என்பதை உணர்த்துவதன் மூலம் கொண்டு வேண்டும். அது குழந்தை பருவத்தில் இருந்து கொண்டுவந்தால் தான் வளர்ந்த பின்பும் காலம் தவறமை தொடரும். பல மாணவர்கள் காலம் தவறி பள்ளிக்கு வருவதற்கு அவர்களின் பெற்றோர்களே காரணம்!
அப்போது எனக்கு திருமணம் ஆயிருக்க வில்லை. ஸ்கூட்டி வாங்கி இருந்த சமயம். காலை மீனாம்பாள்புரம் சென்று +2 வகுப்புக்கு டியூசன் எடுத்து விட்டு, பள்ளிக்கு  பயணிப்பேன். நரிமேடு, ஓசிபிஎம் பள்ளி, காந்திமியூசியம், கலெக்டர் ஆபிஸ், அரவிந்த் ஆஸ்பத்ரி, குருவி காரன் சாலை வழியாக பள்ளிக்கு வருவேன். தினமும் 8.25 மணிக்கு பள்ளிக்கு கிளம்புவேன்.
8.30 மணி வாக்கில் தினமும்  நரி மேடு ரோட்டில் ஒரு குடும்பம் பைக்கில் செல்வதை காண்பேன்.  பைக்கின் முன்னால் 2ம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை,. வண்டி ஓட்டி கொண்டிருக்கும் (40 வயது)  அவருக்கு பின்னால் 5வகுப்பு படிக்கும் பெண் குழந்தை , அதற்கு பின்னால் அவரது மனைவி(30) அமர்ந்திருப்பார். பைகள் சைடில் தொங்கி கொண்டு இருக்கும். அது போக மீதி பொதிகளை அந்த பெண்மணி சுமந்து வருவார்.  லேடி டோக் கல்லூரியில் இருந்து நரிமேடு வரை தான் அவர்கள் என்னுடன் பயணிப்பார்கள். அதற்குள் அந்த பெண்மணி’ “சீக்கிரமா ! போங்க.. லேட் ஆகிடுச்சு. வேகமா போங்க..! அந்த லாரி காரனை முந்துங்க ! உருட்டிகிட்டு இருக்கான். “
 “டாடி! பயமா இருக்கு..!”
“வாயை மூடு.! “ பின்னால் இருந்து குரல் ஒலிக்கும்!
“சீக்கிரமா! முந்துங்க..! இவுங்களை விட்டுட்டு நான் ஸ்கூலுக்கு போறதுக்குள்ள பெரும்பாடா இருக்கு…! டெய்லி லேட்!  என்னை எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க..!”
அவர் வண்டியை முடுக்குவார். கொஞ்சம் பயமாக இருக்கும். நான் ஒதுங்கி வழி கொடுத்து செல்வதுண்டு.
வாரத்தில் இரண்டு முறை அவர்களை பார்த்துவிடுவேன். எப்போதும் பின்னால் இருந்து அந்த பெண்மணி,  “சீக்கிரம் போங்க..சீக்கிரம்” என விரட்டி கொண்டே இருப்பார்.

1994 முதல் இன்று வரை நான் காலை பைக்கில் பயணிக்கின்றேன். 90 % சதவீதம் வண்டியில் செல்பவர்கள் வண்டியை விரட்டியப்படியே அலுவலகம் செல்கின்றனர். அதுவும் குடும்பத்துடன் செல்பவர்கள் அதி வேகத்திலேயே செல்கின்றனர். அரசு பஸ்கள் பயணிகளை திணித்து கொண்டு செல்கின்றன. பலசமயங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பிதுங்கி வழிந்தபடி செல்வதை காண்கின்றேன். கல்லூரி மாணவர்கள் பைக்கில் சக மாணவனை அழைத்து கொண்டு சீறி பாய்ந்து செல்வதை காண்கின்றேன். ஆட்டோக்கள் குழந்தைகளை அள்ளிப் போட்டு கொண்டு செல்கின்றன. எல்லோருக்கும் அவசரம். பள்ளி வாகனங்களும் அதிவேகத்திலே செல்கின்றன.

அப்போது உடல்நலனில் அக்கறை கொண்டு ஒரு வருடம் காலை ஜிம்முக்கு சென்றதால் மீனாம்பாள்புரம் செல்லவில்லை. சரியாக இரண்டு வருடம் கழித்து ஒருநாள் மீண்டும் அவர்களை பார்த்தேன். அப்போதும் அந்த அம்மா சீக்கிரம் என விரட்டி கொண்டு தான் சென்றார்.  எனக்கு சிரிப்பு வந்தது. காலம் காலமாக இவர்கள் லேட்டாகவே வருகை புரிகின்றனர். எந்த விதத்திலும் தங்களை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை. ஒருவிசயம் மட்டும் மாறி இருந்தது. முன்பை விட அப்பெண்மணியின் குரல் கொஞ்சம் சத்தமாகவே இருந்தது. அதில் அதட்டல் தொணி இருந்தது!  

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவர்களைப் பார்த்தேன். நேரில் அல்ல. காலை செய்திதாளில் புகைப்படத்தில்! அவர்கள் அனைவர் புகைப்படமும் ஒரு அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் ! அந்த அம்மையாரை தவிர அனைவரும் அந்த ஸ்பாட்டிலேயே இறந்திருந்தனர். அவர் பிழைத்து கொண்டார் என்றே நினைக்கின்றேன்.

இப்போது கூட அந்த இடத்தை கடக்கும் போது அவர்கள் நினைவுக்கு வந்து செல்கின்றார்கள். அவர்களை நினைத்துவிட்டால், பைக் தானாக வேகம் குறைத்து , மிகவும் மெதுவாக செல்லும். நினைவுகள் காலத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என தனக்குதானே கட்டளை இட்டு கொள்ளும். நிஜத்தில் என்னால் காலத்தினை என் கைகளுக்குள் வைத்து கொள்ள முடிவதில்லை!  5 நிமிடம் தாமதம். 10 நிமிடம் தாமதம் ஆகி கொண்டே இருக்கின்றது!
இன்று காலை 8.10க்குதான் வீட்டை விட்டு கிளம்ப வேண்டியதாகி விட்டது. என் மனைவி வேலைபார்க்கும் பள்ளிக்கு 8.30க்குள் இருக்க வேண்டும். என் மகனை அவன் படிக்கும் லிசாட்லியர் பள்ளியில் இறக்கி விடும் போது மணி 8.20. என் மனைவி பணிபுரியும் பள்ளி தெப்பகுளம் அருகில் உள்ளது. பத்து நிமிடத்திற்குள் இறக்கி விட வேண்டும். பின்னால் இருந்து என் மனைவி விரட்டுகின்றாள், “சீக்கிரம் போங்க …! சீக்கிரம் போங்க..!”

                                                               பள்ளிக்கூடம் தொடரும்..   
மதுரை சரவணன்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

பதிவின் நீளம் கருதி இரண்டாக்கி இருக்கலாமே...?
படிப்பவர்கள் நீண்ட பதிவென்றால் யோசிப்பார்கள்தானேன்...

பள்ளிக்கூடம் ரொம்ப அருமை...
தொடருங்கள்.
முகநூலில் சொல்லியிருந்தது போல் இதை புத்தகமாக்குங்கள்.

Post a Comment