Thursday, October 22, 2015

புத்தகங்களை கண்டு குழந்தைகள் ஓடுவதேன்? அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

வாசிக்க வைப்போம் புத்தகங்களை நேசிக்க செய்வோம்!
*
A man may as well expect to grow stronger by always eating as wiser by always reading - Jeremy collier
குழந்தைக்ளின் வாழ்வில் பள்ளிப்பருவம் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. ஒவ்வொரு குழந்தைகளும் எதார்த்தமான கருத்துக்களுடன் அவர்களுக்கே உரிய மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர். குழந்தைகள் பிரகாசமாக காட்சி அளிக்கின்றனர். அந்த பிரகாசத்தினை மங்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

குழந்தைகளின் சகஜமான அனுபவத்தையும், மகிழ்ச்சி மிக்க புலனறிவையும், உலகைக் கண்டு கொள்வதையும் அப்படியே பதுகாத்து வர வேண்டுமென்றும், கல்வி கற்றல் என்பது குழந்தைகளுக்கு உத்வேகமூட்டுகிற, கவர்ச்சி மிக்க உழைப்பாக இருக்க வேண்டுமென்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மையிலேயே விரும்ப வேண்டும் என்கின்றார் ஆசிரியர் வசிலி சுகம்லீன்ஸ்கி. (சோவியத் யூனியன் போதனா முறை விஞ்ஞானப் பேரவையின் உறுப்பினர்).
குழந்தைகளிடம் மொழியின் வளர்ச்சியை காண வேண்டுமானால், குழந்தைகளை புத்தகங்கள் வாசிக்க பழக்க வேண்டும். வாசிப்பு என்பது சுவாசிப்பை போன்று இயற்கையாக நிகழ வேண்டும். சாத்தியமா? எப்படி குழந்தைகள் புத்தகங்களை எடுத்த எடுப்பில் வாசிக்க வைக்க முடியும்! அவர்களுக்கு வார்த்தைகள் தெரிய வேண்டாமா?
7 வயது நிரம்பிய குழந்தை 3000-3500 வார்த்தைகளை அவற்றின்
உணர்ச்சி வித்தியாசங்களுடன் புரிந்து கொள்கின்றனர் என்கின்றனர் கல்வியாளர்கள். தாய்மொழி அறிவு கொண்டு புத்தகங்கள் மீது நேசத்தை உருவாக்கலாம். தாய்மொழி கல்வி புத்தக வாசிப்பை மேம்படுத்தும். வாசிப்பதற்கான தளத்தை உருவாக்கி தர வேண்டும்.

நடைமுறையில் நான் செயல்படுத்தும் வாசிப்பு முறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
1. வாசிக்க வைத்தல் என்பது ஒரு போதனை அல்ல என்பதை மனதில் விதைத்து கொள்ளுங்கள். அது பழக்கப்படுத்துவதால் வருவது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
2. எடுத்த எடுப்பிலே குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்த்துவிடுங்கள்.
3. வாசிப்பை கட்டாயப்படுத்த மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொள்ளுங்கள்.கட்டாயப்படுத்தும் எண்ணம் குழந்தைகளை புத்தகங்களை கண்டால் ஓட வைத்துவிடும்.
4. முதலில் குழந்தைகளுக்கு கதைகளை வாய்மொழியாக கூற ஆரம்புயுங்கள். ஒவ்வொரு முறையும் கதைகள் வாயிலாக பாட கருத்துக்களை கூற முயலுங்கள். கதைகூறி முடித்தவுடன் நான் இக்கதையை இந்த புத்தகத்தில் இருந்து வாசித்து உங்களுக்கு கூறினேன் என்பதை அவசியம் தெரிவியுங்கள்.
5. கதைகள் உங்கள் வகுப்பறையின் ஒரு அங்கமாக இருக்கட்டும். உங்கள் வகுப்பறையில்,புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். எளிய படக்கதைகள். சிறிய புத்தகங்கள் என இருக்கட்டும். அதனை எடுப்பதற்கு அதனை தொட்டு உணர்வதற்கு படங்களை பார்ப்பதற்கு என அனுமதியுங்கள். ஆனால் வாசிக்க சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.
6. புத்தகங்களை படம் பார்க்க எடுக்கும் சிலர் படிக்க ஆரம்பிப்பார்கள். அப்போது நான் சொன்ன கதை இந்த புத்தகத்தில் தான் இருக்கின்றது என கூறுங்கள். நிச்சயம் குழந்தைகள் வாசிக்க தொடங்குவார்கள். பிரிதொரு நாளில் சார் அன்னைக்கு நீங்க சொன்ன கதை இந்த புத்தகத்தில் தானே இருந்து கூறினீர்கள் என்று சொல்வார்கள்.
7. ஒரே ஒரு குழந்தையை வாசிக்க செய்துவிட்டால். அதாவது புத்தகத்தை கையில் எடுத்து நுகர செய்தால் போதும். அது எல்லா குழந்தைகளுக்கும் வைரசாக பரவி விடும். புத்தகத்தை வாசிக்க தொடங்கும் குழந்தையை கதை கூற சொல்லுங்கள். பாராட்டுங்கள்.
8. வகுப்பறையில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி புத்தக வாசிப்புக்கு அனுமதியுங்கள். வாசித்த விசயத்தை நண்பர்களுடன் பகிர செய்யுங்கள்.
9. புத்தகங்கள் வாசிக்க தொடங்கியவுடன் குழந்தைகள் வார மாத நாளிதழ்களை வகுப்பறையில் வாங்கி போடுங்கள். நீங்கள் படிக்கும் வார மாத பத்திரிக்கைகளை குழந்தைகள் வாசிக்க அனுமதியுங்கள்.
10. பொது நூலகத்தின் பயன்பாட்டை கற்று தாருங்கள். புத்தகங்கள் தேர்ந்தெடுப்பதை கற்று தாருங்கள் பொது நூலகத்தில் உறுப்பினராக்குங்கள். வாரம் ஒரு முறை நூலகத்திற்கு அழைத்து செல்லுங்கள். அவர்கள் தினமும் சென்று புத்தகம் எடுக்க கற்று கொள்வார்கள்.


 தொடர் விடுமுறை வருவதால் லைப்ரேரி சென்று புத்தகங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில் அழைத்து சென்றேன். அரை மணி நேரம் நூலகத்தில் பல்வேறு நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள்,சிறுவர் புத்தகங்கள் படித்தார்கள். தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேடி தேடு எடுத்தார்கள். அதுவும் பெண் குழந்தைகள் தேர்வு வித்தியாசமாக இருந்தது. விடுமுறைக்கு பின் நிறைய கதைகளை பகிர்வார்கள் . காத்திருக்கின்றேன். அவர்களுக்கு கதைகள் கூற நிறைய படிக்க வேண்டும்.



இப்படி தான் நிறைவு செய்ய நினைக்கின்றேன்.
“It is well to read everything of something and something of everything" - Brougham.
மதுரை சரவணன்.

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

புத்தகங்கள் படிப்பது நல்ல விஷயம் தான். அதுவும் சிறு வயதிலேயே இப்பழக்கம் வந்துவிட்டால் சிறப்பு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல ஆலோசனைகள்.ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள்.

Nagendra Bharathi said...

அருமை

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரை... வாழ்த்துக்கள் சரவணன் சார்.

Yarlpavanan said...

நல்வழி காட்டல்
சிந்திக்க வைக்கிறியள்
சிந்திக்க வைக்கும் பதிவு
http://www.ypvnpubs.com/

ஸ்ரீமலையப்பன் said...

இந்த முயற்சியை நானும் செய்துபார்க்கிறேன் அய்யா... என்னுடைய வலைப்பூ ethilumpudhumai.blogspot.in

Post a Comment