யார் குற்றவாளி ?
*
கல்வி குறித்து பேச சொன்னால் எவரும் உடனே சொல்லும் கூற்று இதுவாகத்தான் இருக்கும்: ஒரு பள்ளிக் கூடத்தை திறந்தால் நூறு சிறைச்சாலைகளை மூடலாம்.
இன்று அரசு 1 கிலோமீட்டர் தொலைவில் துவக்கப்பள்ளியும் 3 கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப்பள்ளியும், 5 கிலோ மீட்டருக்குள் உயர்நிலைப்பள்ளியு 8 கிலோ மீட்டரக்குள் மேல்நிலைப்பள்ளி அமைக்க உத்தரவிட்டு அதன் படி பள்ளிகளை திறந்து உள்ளது. செய்தி தாள்களைப் புரட்டினால் தவறு செய்பவர்கள் இளம் வயது உடையவர்களாக 19 வயதுக்குள் இருப்பதை காண்கின்றோம்.
எனக்கு விவரம் தெரிந்து ஒரு சிறைச்சாலை கூட இதுவரை மூடப்பட்டதாக கேள்விப்படவில்லை. சிறைச்சாலையை விரிவுபடுத்தி தான் உள்ளார்கள். புதிதாக இடித்து கட்டியுள்ளார்கள். பல காவல் நிலையங்கள் வசதி இல்லை என்பதால் புதிதாக கட்டப்பட்டு, அப்புதிய கட்டிடங்களில் நவீன வசதியுடன் இயங்குவதை காண்கின்றேன்.
மூன்று மாதங்களில் ஏதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு போலீஸ்காரர் ஒரு பையனை அரஸ்ட் செய்து உள்ளோம்,. அவன் உங்கள் பள்ளியில் படித்தான் என்று வந்துவிடுகின்றார்கள். நீதிபதியிடம் கொண்டு சென்று ரிமாண்ட் பண்ண வேண்டும். ஆகவே சர்டிபிக்கேட் ஜெராக்ஸ் கிடைக்குமா? ஏஜ் சர்டிப்பிக்கேட் தர முடியுமா? என புலம்புவதை காண்கின்றேன். பாவம் அவர்கள் நிலை.இரவு முழுவதும் கண்விழித்து விவரங்களை சேகரித்து, குற்றத்தை நிருபிக்க படும் பாடுகுறித்து எழுதினால் நாவலே எழுதிவிடலாம்.
அதுவும் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் இப்படி கிரைமில் ஈடுபடுவதை நினைக்கும் போது , பள்ளிக்கூடங்கள் மீது குறை சொல்வதா? அல்லது கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் சரியில்லை என்பதா? அல்லது பாடத்திட்டம் சரியில்லையா? அல்லது கல்வி முறையில் கோளாறு உள்ளதா ? தெரியவில்லை.
சில நேரங்களில் இது நமக்கு மட்டும் தான் நேர்கின்றதா? என யோசித்தும் உள்ளேன். ஒருமுறை எனது நண்பர் பள்ளியில் அமர்ந்து சரக வேளையில் ஈடுப்படும் போது அங்கும் இதேப்போல் ஒரு மாணவனை (பழைய ) ரிமாண்ட் செய்ய சர்டிபிக்கேட் கோரி வந்ததை கண்டேன்.
இளம் குற்றவாளிகள் குறித்தும் அவர்களின் குற்றம் குறித்தும் காவலர்களிடம் விசாரித்த போது சூழ்நிலையின் வற்புறுத்தலை கரணமாகவும் (வறுமை) ஏதோ ஒரு உந்துதலின் காரணமாகவும் குற்றங்களை புரிகின்றார்கள் என்கின்றார்கள். மேலை நாடுகளை ஒப்பீடும் போது இவர்கள் குற்றங்களை தொழிலாக செய்வதில்லை என்றும் கூறுகின்றார்கள். குற்றங்களை மிக நேர்த்தியாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சிக்குவதில்லை.
இன்றும் அதே போல் எஸ்.ஐ. ஒருவர், ஒரு மாணவனின் சர்டிபிகேட் தேடி வந்தார். அவரிடம் ஏன் இப்படி நடக்கின்றது? என கேட்டேன். அவரும் குடும்ப வறுமை, குடும்பத்தின் வளர்ப்பு முறை என்று கூறினார். தாய் சரி இல்லை, தந்தை சிறுவயதிலேயே ஓடிவிட்டான். இன்னும் இரண்டு குழந்தைகள். வறுமையே இவர்களை செயின் அறுக்க செய்கின்றது. மிரட்டி பணம் பறிக்க செய்கின்றது என கூறினார்.
கற்கை நன்றே ; பிச்சை புகினும் கற்கை நன்றே என்று தானே படித்துள்ளோம். இங்கு வாழ்வதற்கு ஒருவேளை சாப்பிட பிச்சை கேட்டால் விரட்டி விடப்படுகின்றார்கள். அரை வேளை பசிக்கு கூட வழியில்லை என்கின்ற போது பணம் தராதவனிடம் பிடிங்கி தானே வாழ வேண்டியுள்ளது! என்று அவர் கூறிய போது யோசிக்க தொடங்கி விட்டேன்.
குற்றம் செய்யும் மாணவனை மட்டும் எடுத்து கொண்டு நாம் சிந்திப்போம். ஏன், ஒரு பள்ளிக்கூடம் அவனை நல்வழிப்படுத்த தவறி விட்டது அல்லது நல்வழிப்படுத்தவில்லை? ஏன், ஒரு ஆசிரியர் கூட அவன் வாழ்வில் ஒளி ஏற்றி நல்வழியில் நடக்க வழி வகை செய்யவில்லை? நல்ல முறையில் போதிக்க வில்லை? ஏன் இந்த கல்விமுறை மாணவர்களை குற்றவாளி ஆக்கி வேடிக்கை பார்க்கின்றது? இப்படி பல ஏன் ? களுக்கு விடை தெரியவில்லை.
எது குற்றம் என்பது தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆம். அதுவும் குற்றம் என்று உணராமல்!
ஒரு மரத்தை வெட்டுவது கூட குற்றம் தான் . உணவுக்காக ஆடு மாடு கோழியை அடித்து உண்கின்றோம்.
எது குற்றம் என்பது அறியாமலே , நாம் குற்றம் புரிந்து கொண்டு இருக்கின்றோம். மரம் வெட்டுதல் , மிருகங்கள், பறவைகளை கொல்லுதல் ஆகியவையுன் உயிர் கொலைகள் என்ற வகையில் இவற்றிற்கு தண்டனை தந்தால், நாமும் குற்றவாளிகள் தான். ரிமாண்ட் செய்யப்பட வேண்டியவர்கள் தான்..!
எது குற்றம் என்பது அறியாமலே , நாம் குற்றம் புரிந்து கொண்டு இருக்கின்றோம். மரம் வெட்டுதல் , மிருகங்கள், பறவைகளை கொல்லுதல் ஆகியவையுன் உயிர் கொலைகள் என்ற வகையில் இவற்றிற்கு தண்டனை தந்தால், நாமும் குற்றவாளிகள் தான். ரிமாண்ட் செய்யப்பட வேண்டியவர்கள் தான்..!
நாம் நம் மாணவர்களுக்கு நன்னெறியை போதிக்க தவறி விட்டோம். சமீபத்தில் 10 வருடங்களாக நாம் நம் குழந்தைகளிடம் நன்மை தீமை குறித்து பேச வில்லை.படிப்பு... படிப்பு...படிப்பு.. அதன் மூலம் அதிக மதிப்பெண் என்று நம் குழந்தைகளுக்கு ஒருவித அழுத்தத்தை கொடுத்து விட்டோம். குழந்தைகளை படி படி என அடி அடி என அடித்து துவைத்து அவர்களின் மகிழ்ச்சியை , சந்தோசத்தை மண்ணுக்குள் போட்டு புதைத்துவிட்டோம்.
இந்த செயலை புரிந்த அனைவரும் குற்றவாளிகள் தான். இதில் பள்ளிக்கூடம், ஆசிரியர், கல்விமுறை,0 பெற்றோர் ,கல்வியாளர் என வித்தியாசம் கிடையாது. நாம் நம் கல்வி முறையில் குற்றவாளிகள் உருவாக்குவதல் பங்கு வகித்துள்ளோம் என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
ஒருவனை அடக்கி வைப்பதால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது. ஒருவனின் மகிழ்ச்சியை பறிக்கும் முயற்சிக்கு கிடைத்த பரிசு தான், இன்று அவர்கள் குற்றவாளிகளாக உருவாகி உள்ளார்கள்.
எங்கு மகிழ்ச்சி இருக்கின்றதோ எங்கு சந்தோசம் இருக்கின்றதோ அங்கு நல்லவை நடக்கும். அற்புதங்கள் நிகழும். எங்கு சந்தோசம் குறைகின்றதோ அங்கு பிரச்சனைகள் உருவாகத்தொடங்கி விடும்.
நாம் சந்தோசம் இல்லாத போது மோசமானவர்களாக மாறி விடுகின்றோம். மோசமானவர்களாக நடக்கின்றோம்.
நாம் சந்தோசம் இல்லாத போது மோசமானவர்களாக மாறி விடுகின்றோம். மோசமானவர்களாக நடக்கின்றோம்.
இனியாவது இத்தவறுகள் நடக்க கூடாது என்று நினைத்தால், நம் குழந்தைகளை மகிழ்ச்சியானவர்களாக, சந்தோசம் நிரம்பியவர்களாக உருவாக்குவோம். வளர்ப்போம். எப்போதும் படி படி படி என்று மன அழுத்தத்தை உருவக்காமல். விளையாட்டாய் அவர்களுக்கு பிடித்த வண்ணம் பிடித்த நிறங்களில் கற்றலை தருவோம். இறுக்கி பிழியாமல், சுதந்திரமான கற்றல் சூழலை உருவாக்குவோம். சந்தோசத்தை கொடுக்ககூடிய கல்வியை தருவோம். பள்ளிப்பாடங்களுடன் நன்னெறிக்கல்வியை வழங்கி மகிழ்வோம். நம் குழந்தைகளுக்கான உண்மையான சந்தோசம் விளையாட்டு முறை கல்வியில் தான் உள்ளது. குழந்தை மையக்கல்வி முறையில் மட்டுமே கற்பித்தலை செய்வோம். வகுப்பறையில் குழந்தைகளுக்கு சுதந்திரத்தையும் மகிழ்ச்சியினையும் வழங்குவோம்.
மதுரை சரவணன்.
2 comments:
சிறப்பான கருத்துக்கள் கொண்ட கட்டுரை.சமூக அக்கறையும் மாணவர்கள் மீதான பரிவும் வெளிப்படுகிறது.
நீதிபோதனைகள் மூலம்மட்டும் மனங்களை மாற்றி விட முடியும் என்றால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கே முன்பே வள்ளுவனின் கற்பித்த நல்லொழுக்கத்தினால் இன்று அனைவரும் ஒழுக்கமுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும். மொழிப் பாடங்கள் நல்லொழுக்கத்தை பின்பற்றுவதை வலியுறுத்தும் வகையில்தான் அமைந்திருக்கின்றன . திருடு சிகரட் பிடி மது அருந்து என்று எந்தப்பள்ளியிலும் கற்றுத் தரப்படுவதில்லை . மாணவர்கள் நெருங்கிப் பழகும் பெற்றோர்,சமூக உறுப்பினர்கள் நண்பர்கள், ஆசிரியர்கள் இவர்களின் நடத்தை சார்ந்தே மாணவனின் ஒழுக்கமும் அமைந்திருக்கிறது. வறுமையும் இன்னொரு முக்கியக் காரணம்.சட்டம் தண்டனை மூலம் நல்லொழுக்கத்தை கற்பித்து விட முடியும் என்றால் அதுவும் இயலாததாகவே இருக்கிறது. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்றை கண்டறிய வேண்டும் நீங்கள் சொல்வது போல எது குற்றம் என்று தெரியாமலேயே ஏதோ ஒரு குற்றத்தை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். எனப்தும் உண்மை
புதுக்கோட்டையில் சந்திப்போம்
அவசியம்
Post a Comment