Friday, October 9, 2015

குழந்தைகளை நேசிப்பது எப்படி? ( சத்தியமா இது காதல் மேட்டர் இல்லை)

டம்மி பீஸ்...!

குழந்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். குழந்தைகள் உண்மையானவர்கள். குழந்தைகளின் முகத்தில் கள்ளத்தனம் இருப்பதில்லை. குழந்தைகளுடன் அஇருந்து பாருங்கள். நீங்கள் சொர்க்கம் என்று ஒன்றை நம்புவீர்கள் என்றால் , அதனை நேரில் காண்பீர்கள்.

குழந்தைகளை நான்கு சுவற்றிற்குள் அடைத்து வைத்துள்ளோம். அதிலும் அவர்கள் விரும்புவதை நாம் செய்ய அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு வண்ணமிகு புத்தகங்களை விட , சிறிய கற்களின் மீதும் , நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் சாக்பீஸ் துண்டுகளின் மீதும், காந்த துண்டுகள் மீதும், சிறிய சதுரக்கட்டைகள் மீதும், கோலிக் குண்டுகள் மீதும் , ஏன் வகுப்பறையில் வீசப்படும் காகிதங்கள் மீதும் அலாதியான ப்ரியங்களுடன் அதனை கொண்டு விளையாடுவதில் ஈடுப்பாட்டுடன் இருப்பதை காண்கின்றேன்.

விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளிடம் வண்ணப்புத்தகங்களையும், சிறிய கற்களையும் வைத்துவிட்டு வேடிக்கை பாருங்கள். குழந்தைஅகள் கற்களை கையில் எடுத்து தூக்கி எறிந்து விளையாடுவதை காணலாம். புத்தகங்களை விட, தெளிவாக கூறினால், வழிந்து திணிக்கப்படும் கருத்துக்களை விட தானாக முனைந்து கற்று கொள்ளவே ஆசைப்படுகின்றார்கள்.


உங்கள் குழந்தைகளை பார்க் அழைத்து செல்லுங்கள். வேண்டாம் . வளர்ந்த உங்களுக்கு வேலைப்பளூ அதிகமாக இருக்க கூடும், பார்க் வேண்டாம். வீட்டிற்கு முன்னால் தெருவில் விளையாட அனுமதியுங்கள். வானில் ஒலியெழுப்பி பறந்து செல்லு பறவைகளை கண்டு ஆனந்தமடைவதை காணலாம். செடிகளின் மீது பறந்து திரியும் வண்ணத்து பூச்சிகளை கண்டு குதுகலம் அடைவதை பார்ப்பீர்கள். மண்ணில் ஊர்ந்து செல்லும் பெயர் தெரியாத பூச்சிக்கு பின்னால் செல்வதை காணலாம்.

இவை எல்லாம் விளையாட்டு அல்ல. குழந்தைகள் புதியதாக ஒன்றை கற்று கொள்கின்றார்கள் அல்லது புதியதான ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்கள் .அவர்களின் கனவு உலகம் அலாதியானது. அதில் நாம் பயணிப்பதற்கு பேருந்து பயணத்தில் நடத்துனர் கொடுக்கும் பயணச்சீட்டை பத்திரப்படுத்துவதற்கு பதிலாக அதனை வைத்து விளையாட தெரிந்திருக்க வேண்டும்.

அட பைக் ஸ்டார் செய்வதில் கூட தினமும் நாம் புதுமையை காண வேண்டும். குழந்தைகளை புரிந்து கொள்ள இதுவும் ஒரு பயிற்சி தான்.

ஒவ்வொரு முறையும் பைக்கில் குழந்தைகள் ஏறும் போதும் வேறு வேறு விதமாக ஏறுவதை காண்பீர்கள். ஆம் குழந்தைகளை நாம் கவனிக்க வேண்டும். எப்போது நீங்கள் குழந்தைகளை கவனிக்கின்றீர்களோ , அப்போது நீங்கள் பேச தொடங்கும் முன்பே அவர்கள் பேச தொடங்குவதை காணலாம்.

குழந்தைகள் நம்மை கண்டு பயப்பட கூடாது. நம் செயல்கள் பயமுறுத்துவதாக இருக்க கூடாது. ஒரு முறை என்னிடம் படித்த முன்னால் மாணவி அவளது தம்பி என்னுடைய வகுப்பில் தான் பயில வேண்டும் என்று விரும்பி கேட்டு கொண்டாள். ஆனால், அவளது தம்பி என் குண்டு உருவத்தை கண்டு பயந்து பயமா இருக்கு என்று கூறி உள்ளான்.

அந்த மாணவி அவனது தம்பியை என்னிடம் அழைத்து வந்தாள். “சார், என் தம்பி உங்களை பார்த்து பயப்படுகின்றான். நீங்க பார்க்க தான் அப்படி , பழகினால் ஒரு டம்மி பீஸ் தானே .. சொன்னால் நம்ப மாட்டேன்கின்றான்.. நீங்க ஒரு டம்மி பீஸ் தானே “ என கேட்டாள்.
” டம்மி பீஸ்னாலும், உனக்கு மம்மி மாதிரியான பீஸ் ” என்றேன். அவளது தம்பி சிரித்தான். ஏண்டா பயப்படுகின்றாய் என அருகில் அமரச் செய்து அவனிடம் உனக்கு பிடிச்சதை படி , நீ விரும்பினா இங்க இரு.. பிடிக்கலை வகுப்பை விட்டு வெளியே போய் ரிலாக்ஸ் ஆகிட்டு வா.. என்றேன்

வெளியே போனால் அடிப்பீங்க என்றான். ”சாரா.. அட போடா நீ அடிச்சா தான் உண்டு. அவர் அடிக்கிற மாதிரி கூட பாவ(னை)ல்லா செய்ய லாயிக்கு இல்ல்லை..சார் கிட்ட பேசிகிட்டே இருந்தா போதும் ஐந்தாம் வகுப்பு போறதே தெரியாது.. அவ்வளவு ஜாலி.. பாரு ..நம்ம ஐஸ்வர்யா தம்பி கூட இங்க தான் படிக்கிறான்..” என்றாள்.
“ஆமாக்கா.. எங்க அக்கா கூட சார்கிட்ட தான் படிக்கணும்..சூப்பரா ஜாலியா இருக்கும்ன்னாங்க..உண்மையிலே சந்தோசமா இருக்கேன் “

அதற்குள் கையொப்பம் இட வந்த மூத்த ஆசிரியை ..”நல்லா சந்தோசமா இருக்காங்க..இந்த இவ போடாத ஆட்டமா.. அவன் தம்பி வேற உங்க கிளாசா..? நீங்க இருந்தா ஆட்டம் போட மாட்டேங்கிறாங்க.. ஆனா நீங்க மீட்டீங் கிட்டிங்ன்னு வெளியே போயிட்டீங்க ..எங்கனால உங்க பிள்ளைகளை சமாளிக்க முடியலை..கொஞ்சம் கூட பயம் இல்லை..” என்றார்.

”ஏன் டீச்சர் இப்படி சொல்றீங்க..? நல்ல பசங்க..உங்களுக்கு அவர்களை கையாள தெரியவில்லை? “ என்றேன்.
“ என்னம்மா வாய் பேசுறாங்க தெரியுமா? எல்லாம் வானரமா மாறிடுறாங்க..”

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. என்ன நீங்க எது சொன்னாலும் அதுக்கு எதுக்கு கேள்வி கேட்டு இருப்பாங்க..? உங்களுக்கு பசங்க கிட்ட கேள்வி கேட்டே பழக்கமாகிடுச்சா.. உங்களிடம் குழந்தைகள் கேள்வி கேட்பது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்? “

“வேன் பீஸ் முன்னாடியே கட்டிடாணும் என்றால், ஏன் டீச்சர் இது என்ன train னா.. முன்னாடியே டிக்கெட் எடுத்து ஏறுவதற்கு ? என்று கேட்கின்றான். “
நான் அந்த ஆசிரியரிடம் என்ன சொல்லியிருப்பேன்? கொஞ்சம் யோசியுங்கள்.

“கேள்வி கேட்பதே மாணவனுக்கு இலக்கணம்” என்று அப்துல்கலாம் கூறியுள்ளார். ஆனால் நாம் கேள்விகள் குழந்தைகள் கேட்பதை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நமக்கு அதற்கான பதில் பெரும்பாலும் தெரிவதில்லை. அல்லது குழந்தைகள் கேட்கும் கேள்வி உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதாக அமைந்து விடுகின்றது.

குழந்தைகள் சிறியவர்கள். எடை குறைந்தவர்கள். அவர்கள் கண்களுக்கு நாம் எப்படித் தென்படுவோம் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள் நாம் பெரிசு. அவர்கள் பொடிசு. அவர்களுடன் பேசுவதற்கு ஒரே வழி தான்: அவர்கள் அளவுக்கு மண்டியிட்டு கீழே இறங்கி வருவது மட்டுமே!
(உங்களுக்கு கீழே இறங்கி வருவது என்றால் எப்படி ? என்று கூறுவீர்களானால் , தமிழக சட்டசபை வளாகத்தில் நின்று கவனியுங்கள் )

குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துள்ளேன். ஆகவே, அவர்களுக்கு விளையாட்டு முறையில் அவர்கள் விரும்பிய வண்ணம் கற்று தருகின்றேன். அதுசரி அந்த ஆசிரியரிடம் என்ன கூறினேன் ? என்று கேப்டது புரிகின்றது.

பேருந்து பயணத்தின் போது பயணச்சீட்டை பத்திரப்படுத்துவதை விட அதை வைத்து விளையாண்டு பாருங்கள். அப்புறம் நீங்கள் கேட்கும் கேள்வியின் மீதுள்ள நியாயம் புரிந்துவிடும். எளிதாக பதிலளித்தும் விடுவீர்கள் என்றேன்.


வாருங்கள் ! குழந்தைகளின் சட்டைப்பைகளில் என்ன கிடக்கின்றது என்பதை அறிவோம்.

”சின்னப்பிள்ளை மாதிரி கால்சட்டையில் முருக்கை திண்ணுட்டு மிச்சம் வச்சிருக்கீங்க.. அதென்ன சாக்லெட் காகிதத்தை பையில் வச்சு கிட்டு.. துவைக்கிற எனக்கு தானே..தெரியும் “ என மனைவியின் குரல் கேட்கின்றது.
பை நாளை சந்திக்கலாம்.
”அய்யோ ..சட்டைபையில் உள்ள கடலை மிட்டாய்க்கு என்ன சொல்வாளோ? என்ன சொன்ன காதில விழலை..அதுவா.”
மதுரை சரவணன்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

மிகச் சிறப்பாக எழுதி இருக்கீங்க சரவணன். குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு கற்றுக் கொடுக்கும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை..

Post a Comment