Tuesday, October 20, 2015

குழந்தைகளிடம் இதயத்தை ஒப்படையுங்கள் - விருது உங்களை தேடி வரும்...!

       
           அன்பு நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நேற்று (19-10-2015) மாலை தினமலர் அலுவலகத்தில் லட்சிய ஆசிரியர் விருதினை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் இருந்து பெற்றேன். என்னுடைய ஆசிரியர் பணிக்கு கிடைத்த ஊக்கமாகவும், அங்கீகாரமாகவும் இவ்விருது அமைய பெற்றமைக்கு பெருமை படுகின்றேன். அதனை வழங்கி கவுரவித்த தினமலர் நாளிதழுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். 
உண்மையான போதகராக இருக்க வேண்டுமானால் குழந்தைகளிடம் நம்முடைய இதயத்தை ஒப்படைத்து விட வேண்டும் என்பதை முழுமையாக உணர்கின்றேன். குழந்தைகளுக்கு அவர்களை பெற்ற அம்மாவை போல் அன்புக்குரியவனாக இருப்பதில் பெருமிதம் கொள்கின்றேன். இவை வார்த்தைகள் அல்ல. உண்மைகள். இந்த விருது அதற்கான அங்கீகாரமாகவே கருதுகின்றேன். 


குழந்தைகளை அவர்களின் போக்கில் அழைத்து செல்கின்றேன் என்ற உண்மையை உணர்ந்த தருணங்களாக இதனை கொள்கின்றேன். குழந்தைகளுக்கான பேச்சுக்களை வகுப்பறையில் உருவாக்கியவன் என்பதால் வகுப்பறைகளை எப்போதும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான  தயாரிப்பு களமாக பயன்படுத்தாமல், அவர்களின் சுயம் வெளிப்படும் விதத்தில் உருவாக்கி தருவதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றேன்.  


குழந்தைகளை எல்லாவித பயங்களில் இருந்து காப்பவனாக இருக்கின்றேன். குழந்தைகளின் மென்மையான இதயங்களை பயம் தாக்குவதில் இருந்து காப்பவனாக இருப்பதில் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றேன். ஆகவே, இவ்விருதினை அவர்களுடன் பகிர்வதிலும் அவர்கள் இன்றி இவ்விருதுக்கான மரியாதை சாத்தியமில்லை என்பதால் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வதில் பெருமை படுகின்றேன். 

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றேன். அதனால் அவர்கள் எனது ஆரோக்கியத்தின் மீது கவலை கொள்கின்றனர். இம்மாதிரியான சமயங்களில் எனக்கு தாயாக மாறி விடுவதை காண்கின்றேன். மிகவும் பெருமையான தருணங்களை ஏற்படுத்தி கொடுத்த என் வாழ்நாளில் வந்து சென்ற அத்தனை குழந்தைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றியினையும் இவ்விருதினால் கிடைத்த பெருமையையும் அக்குழந்தைகளுக்கே சமர்பிக்கின்றேன். 



எனக்கு ஆசிரியர் பணியினை வழங்கி , தலைமையாசிராக பதவி உயர்வளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்துவரும் எனது பள்ளி நிர்வாகத்திற்கும் , பள்ளி தாளாளர் திரு ஏ.வி.எஸ்.என் . சண்முகநாதன் அவர்களுக்கும் ,உறவின் முறை நிர்வாகத்திற்கும் என்றும் நன்றி கடன் பட்டவன்.  என்னுடன் பணியாற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும், என் பள்ளி பெற்றோர்களுக்கும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொள்கின்றேன். 




இவ்விருதினை என்னை போன்ற ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் வழங்கி கவுரவிக்கும் தினமலர் நாளிதழுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். இவ்வுறவு என்றும் இவ்வாசிரியர்களின் பணியினை மேன்மை படுத்தும் என்பதால் என்றும் நன்றி கடன் உரியவனாக இருப்பேன். 

3 comments:

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சரவணன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Post a Comment