இன்று எங்கள் பள்ளியில் பயிலும் 90 மாணவர்களுடன் மதுரை திருமலைநாயக்கர் மகால் சென்றேன். ‘சுவர்சொல்லும் கதைகள் ’ என்ற சமூகவியல் பாடத்திற்கான செயல் திட்டத்தின் ஒருபகுதியாகும். உன் ஊரில் உள்ள கோட்டையை சுற்றி பார்த்து தகவல்கள் சேகரித்து வர செய்யும் செயல்திட்டம் இந்த மஹாலை சுற்றிப்பார்க்கும் நிகழ்வு.
வரலாற்று நிகழ்வுகளை அதன் போக்கில் அவர்கள் புரிந்து கொள்ள செய்வதன் மூலம் குழந்தைகள் வரலாற்றின் அவசியத்தை உணர்வார்கள் என்பதை கண்டு உணர முடிந்தது.
புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் எண்ணங்களோடு, வரலாற்றை ஆட்சியாளர்களின் சமரத்துடன் எழுதியதை தவிர்த்து நேரடியாக சொன்று காணும் போது ஏற்படும் புரிதலில் வலு அதிகமாக உள்ளதை உணர்கின்றேன்.
என்.சி.எப்.2005 களப்பயணம் மற்றும் உற்று நோக்குதல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உற்று நோக்கல் மற்றும் களப்பயணத்தின் அவசியத்தை உணர்ந்தேன்.
மாணவர்கள் ஏற்கனவே திருமலைநாயக்கர் குறித்த தகவலை இண்டர் நெட்டில் தேடி இருந்தனர். இருப்பினும், அவர்கள் அறியாத தகவல்கள் எதுவும் இருக்கலாம் என்ற அடிப்படையில் , மகால் தொல்லியல் அலுவலத்தில் , மஹால் குறித்து வரலாற்று நிகழ்வுகள் கூறுவதற்கு தொல்லியல் துறை சார்ந்த ஆட்களை வேண்டி மனு கொடுத்தேன்.
இங்கு காலி பணியிடங்கள் நிரப்ப படவில்லை. அதனால், மஹால் குறித்து கூறுவதற்கு இங்கு யாரும் இல்லை, நீங்கள் ப்ரைவேட் கைட் நியமிக்கலாம். வாசலில் கேளுங்கள் என்றார். எவ்வளவு கேட்பார் என்றேன். 250 என பதிலளித்தார். அவரை தேடினால் கிடைக்கவில்லை. அவர் ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று விட்டாராம். அவரும் வர மறுத்து விட்டார் என்ற விபரத்தை வாயிலில் டிக்கெட் பெறுபவர் சொன்னார்.
வாசலில் உள்ள அலுவலரிடம் கைட் பற்றி கேட்டவுடன் என்னை ஏற இறங்க பார்த்தார். பள்ளிகுழந்தைகள் சும்மா சுற்றி பார்ப்பதன் வாயிலாக என்ன நிகழ்ந்து விடப்போகிறது என்றேன்? சிரித்தார். பின் அவருக்கு போன் செய்தார். ஸ்கூல் என்றால் பணம் குறைத்து கொடுப்பார்கள் என்பதால் வர மறுக்கிறார் என்றனர். நான் கேட்டதை கொடுக்கின்றேன் என்றேன். கடைசிவரை அவர் வரவில்லை.
சுற்றுலா துறையும் தொல்லியல் துறையும் இப்படி இருந்தால் எப்படி? என்று மனதில் நினைத்தப்போது, என் அருகில் நின்று இருந்த திருக்கனி என்ற மாணவி, “ஏன் சார் , இவ்வளவு பெரிய மகால் பத்தி சொல்ல ஒருத்தர் கூடவா இல்லை? அப்புறம் எப்படி சார், மதுரையை பத்தி எல்லாருக்கும் தெரியும் ? வெளியூரில் இருந்து வருகின்ற மாணவர்கள் பாவம் சார்? ஏமாந்து தானே போவாங்க? ” என கேள்வி எழுப்பினாள்.
அருகிலிருந்த ஐஸ்வர்யா , “சார், நான் சொல்றேன். இது திருமலை நாயக்கர் மன்னரால் 1936ல் கட்டப்பட்ட அரண்மனை. முகலாயர் கால கட்டிட கலையை சேர்ந்தது. இராணி மங்கமாள் காலத்தில் வெள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. பத்து தூண் வரை இந்த மகால் இருந்திருக்கு. இப்ப நாம பார்க்கிறது திருமலைநாயக்கர் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதி ” என கூறினாள். சக ஆசிரியர்கள் சிரிக்க, நாங்கள் பயணித்தோம்.
தூண்களை மாணவர்கள் கட்டி பிடித்தார்கள். வியந்தார்கள். 257 தூண்கள் உள்ளன. இப்போது உள்ள பகுதி சொர்க்க விலாசம் என ஒரு மாணவன் தகவல் பலகையில் தகவலை கொண்டு கூற ஆரம்பித்தான்.
முகலாய கட்டிடக்கலை என்றால் என்ன? என்றான் சதீஸ். அருகில் இருந்த சம்மிகபூர், “ அது ஒண்ணுமில்லைடா , ( தூண் மேல் உள்ள பகுதியை காட்டி ) இந்த மாதிரி ஆர்ச் வச்சு கட்டினா அது முகலாய கலை. எங்க சொந்தக்கார பாய் தெற்குவாசல் பகுதியில் குடியிருக்கிறார். அவர் வீடு பழையது. அதுவும் இப்படி தான் இருக்கும் , அவர் சொன்னார் ” என்றான்.
வசந்த் வேகமாக ஓடி வந்து , “சார் , கி.பி 1623 லிருந்து 1659 வரை மதுரையை தலைநகராக கொண்டு திருமலை நாயக்கர் ஆட்சி செய்தார் . அவர் 1636ல் இதை கட்டினார். இந்த மகால் திருமலைநாயக்கர் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதி. இவர் தம்பி முத்தைய நாயக்கர் இதுக்கு பின்னாடி இருந்த பகுதியில் இருந்திருக்கார் ” என்று தன் குறிப்பின் மூலமாக கூறினான். சபாஷ் என்றேன்.
அனைவரும் அதன் பிரமாண்டத்தை பார்த்து வியந்தார்கள். இந்த அரண்மனை சுண்ணாம்பினால் கட்டப்பட்டது என்ற போது வாய் பிளந்தார்கள்.
அருங்காட்சியகம் சென்றோம். சிலைகள் சிற்பங்கள் , தமிழ் எழுத்து முறை கண்டு வியந்தனர். சுற்றிப்பார்த்து அப்படியே அமர்ந்தோம். அனைவரும் கொண்டு வந்திருந்த சினாக்ஸ் பிரித்து சாப்பிட்டார்கள். மாணவியர்கள் சார் நாங்கள் ஆடலாமா? என்றனர். சரி என்றேன்
”ஸ்ரீரங்கநாயகனுக்கு தங்கையம்மா, நீ தானம்மா..
மாமதுரையில் மீனாச்சியம்மா..காஞ்சியில் காமச்சியம்மா..
நீ சிரித்தால் முத்துக்களும் முல்லைகளும் சிரிக்குமம்மா..”
என்று பாடல் பாடியப்படி ஆடத்தொடங்கினர். அனைவரும் அமைதியாக கண்டு களித்தோம்.
பணியில் இருந்த ஒரு பெண்மணிவேகமாக ஓடி வந்து , “சார், எங்க சார்..( இணை இயக்குநர்- நாக கணேசன் ) வந்துட்டார், அவர் அங்க குழந்தைகளுக்கு மகால் பத்தி கூறுகின்றார் என்றவுடன் மாணவர்களை அழைத்து சென்றேன். மாணவர்கள் கூறிய தகவல்களை கூறியதோடு, இது புணர் அமைக்கப்பட்டதால் உருவானது என்றும், தென் இந்தியாவில் எஞ்சிய பழமை வாய்ந்த அரண்மனை என்றும், இராமநாதபுரத்தில் இருக்கும் இராமவிலாசம் இது போன்றது என்றாலும் அதை அரண்மனை என்று கூறமுடியாது என்றும், பத்து தூண் பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தற்சமயம் இருக்கின்றது. அது திருமலை நாயக்கர் தம்பி முத்தைய நாயக்கர் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சியபகுதி ஆகும் என்றும், இராணிமங்கம்மாள் காலத்தில் இக்கோட்டை சிறைபிடிக்கப்பட்டது என்றும், காந்திமீயூசியம் அரண்மனை என்றாலும், அது பணியாட்கள் அல்லது போர்வீரர்கள் தங்கி இருந்த பகுதி என்றும் கூறினார். இராணி மங்கம்மாள் வாழ்ந்த கோட்டையின் பகுதியில்(பெரியார் நிலையம் அருகில் ) மேற்கு மண்டலம் இயங்குகிறது என்றும் கூறினார்.
இந்த அரண்மனையை எத்தனை பேர் கூட்டிகின்றனர் என ஒருவன் கேள்வி கேட்க , ஒரே ஒரு வயதான பெண் மணி மட்டுமே பணியில் உள்ளார் என்றார். சார் எப்படி இருந்த அரண்மனை இன்னைக்கு அதை பெருக்கி சுத்தம் பண்ண கூட யாரும் இல்லை. திருமலை நாயக்கருக்கு தெரிஞ்சா ரெம்ப வருத்தப்பட போறார் என நக்கல் அடித்தாள் அபிநயா.
சார் கோட்டையை யார் பாராமரிக்கிறாங்கன்னு கேள்வி கேட்டீங்க தானே? என்ற மோகன் தாஸ், தொல்லியல் துறை என்றான்.
வசந்த் , “சார், சமண மலை போனோமே போன வருசம்.. அதையும் தொல்லியல் துறை தானே பாதுகாக்குது! என ஆச்சரியப்பட்டான்.
எப்போதும் போல் திருக்கனி எளிமையாக சிந்திக்கும் விதமாக ஒரு கேள்வி எழுப்பினாள், “சார், அப்ப ,மலையை தோண்டாம இருக்க இவுங்க நடவடிக்கை எடுக்கலாம்லே ? எங்க சித்தி ஊரு பக்கம், அதான் சார், திருவாதவூர் பக்கம் தொல்லியல் போர்டை தாண்டியே வெடி வச்சு தகர்த்தி இருக்காங்க.. அதை எல்லாம் இவுங்க பாத்திருக்கலாம் தானே .. தடுத்திருக்கலாம் தானே ? ”
இப்படி எத்தனையோ துறை கண்காணித்திருக்கலாம்? தடுத்திருக்கலாம் ! என்றேன்.
நான் ஐ.ஏ.எஸ் ஆகி இதை எல்லாம் கேட்கிறேன் என்றாள். அருகில் இருந்த வைத்தீஸ்வரி, அப்ப உனக்கு சங்கு தாண்டி என்றாள். நான் அப்பாவியாக ஏன் சங்கு அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்றேன்.
”சார்.. பொங்களூரில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை தூக்கில தொங்க போட்டு கொன்னுட்டாங், உங்களுக்கு தெரியாதா ? “ என்றாள்.
“என்னை எல்லாம் கொல்ல முடியாது. அவிங்களை விட்டு வச்சா தானே என்னை கொல்லுவாய்ங்க.. புடிச்சு உள்ளே போட்டுவேன்” என்றாள். சிரித்தேன். சிந்திக்க ஆரம்பித்தேன்.
கனவு மெய்பட வேண்டும். கல்வி முறையில் மாற்றம் என்பது ஆசிரியர் கையிலே உள்ளது என்பதை மறுக்க முடியாது. மாணவர்களுடன் இந்த அரண்மனையில் நான் வாழ்ந்த அரைநாள் வரலாற்றை .மறக்கமுடியாது. அண்ணாந்து பார்க்கின்றேன், அந்த அரண்மனையினுள் நுழையும் வெளிச்சம் பிரகாசமாகின்றது. அரண்மனை இன்னும் பிரகாசமாகின்றது. மனது முழுவதும் அந்த ஒளியை நிரப்பி கொண்டு இன்னும் உற்சாகமாய் வகுப்பறைக்கு நுழைகின்றேன்.
மதுரை சரவணன்.