Thursday, August 28, 2014

கல்விக்கூடங்களில் வசூல் செய்யும் விநாயகர். ஆச்சரியம் . படிக்க தவறாதீர்கள் !

விநாயகரிடம் ஒரு வேண்டுகோள்
--------------------------------------------------------------
மகளிடம் நாளை விநாயகர் சதுர்த்தி என்றேன். அப்பா விநாயகர் சதுர்த்தி என்றதும் நீ தான் நினைவுக்கு வருகிறாய் என்றாள் மது. சிரித்தேன். வாக்கிங் கீக்கிங் போகாமல் உடலை பராமரிக்காமல் இருக்கும், எல்லா அப்பன்களும் அவர்களின் குழந்தைகளுக்கு விநாயகரைப் போலவே தெரிவார்கள் என்பது தான் உண்மை.

கொஞ்சம் கண்ணாடி முன் சென்று என்னை பார்த்துக் கொண்டேன். துதிக்கை மட்டும் இருந்தால் போதும் அப்படியே விநாயகரை போன்று தெரிவேன். அய்யோ நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. துதிக்கை இருந்தால் என்னை தூக்கிகொண்டு போய் விநாயகராகவே வழிப்பட்டு விடுவார்கள் ! அதனால் எனக்கு அதில் பிரச்சனை எதுவும் இல்லை.

ஆனால் அதன் பின் கரைக்க வேண்டும் என முடிவெடுத்தால் என்ன செய்வது ? நினைத்தாலே செத்து விடுவேன் என்று நினைக்கின்றேன். வைகை வறண்டு இருந்தாலும் பரவாயில்லை ! இவர்கள் விநாயகரை கரைக்கும் இடம் சாக்கடை கழிவுகளும், தோல் கழிவுகளும், தொழிற்சாலை சாயங்களும், நிரம்பி தேங்கி அல்லவா இருக்கிறது. சாக்கடையாக காட்சியளிக்கும் வைகையை நினைக்கும் போது மட்டும் தான் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

இந்த விநாயக சதுர்த்தியில் இருந்தாவது வாக்கிங் கீக்கிங் போய் ஒரு தனுஷ் மாதிரி ஆகலைன்னாலும் , இசை அமைப்பாளர் அனிருத் மாதிரியாவது ஆகிவிடுவது என சபதம் எடுத்து விட்டேன்.

இந்த காமடி ஒருபுறம் இருக்கட்டும். கொஞ்சம் சீரியஸ் பதிவுக்கு வருவோம்.

என் மகளுக்கு நான் நினைவுக்கு வருவது போல், எனக்கு விநாயக சதுர்த்தி என்றதும் , எப்போதும் நினைவுக்கு வருபவர் ,நம் காமராஜர் அய்யா அவர்கள் தான். அதற்கு காரணமும் உண்டு.

அன்றே பள்ளிகளில் சமத்துவம் போதிக்க எல்லோரிடமும் கால் அணா வசூல் செய்து விநாயகர் சதுர்த்தியை பள்ளியில் கொண்டாடினார்கள் என்பதற்காக அல்ல.

அப்போது காமராசர் துவக்கப்பள்ளியில் படித்து கொண்டிருக்கின்றார். ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் காசு வசூல் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார். விநாயகரை வழிப்பட்ட பின், பிரசாதம் வழங்குகிறார். அப்போது மாணவர்கள் முண்டி அடித்து சுண்டல் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் காமராஜர் வரிசையில் கடைசி வரை நின்று ,சிறிதளவே பெற்றுக் கொள்கிறார். வாங்கிய சுண்டலை பாட்டியிடம் கொடுத்தப் போது , பாட்டி காமராசரிடம், எல்லோரும் வரிசையில் நிற்காமல் முண்டி அடித்து வாங்கி அதிகமான சுண்டல் பெற்றுள்ளதைப் போல், நீயும் வாங்கி இருக்கலாமே, இப்படி விவரம் இல்லாமல் இருக்கிறாய் என திட்டுகிறார். அதற்கு காமராசர், “எல்லோரிடமும் சமமாக பணம் பெற தெரிந்த ஆசிரியர் அல்லவா, எல்லோரையும் வரிசையில் முறைப்படுத்தி,அனைவருக்கும் சுண்டல் சம அளவு கிடைக்கும் படி செய்திருக்க வேண்டும். நீ ஆசிரியரை திட்டுவதற்கு பதில் என்னை திட்டுகின்றாய் ” என்று கூறினார்.
உண்மையும் அதுவே. ஆசிரியர் செய்த தவறுக்கு சிறுவன் காமராசரை கடிந்து கொண்டது தவறு தான். இதில் கவனிக்க வேண்டியது, அந்த சிறுவயது காமராசர் வரிசையைல் நின்று தன் முறை வரும் வரை காத்திருந்து கிடைத்ததை பெற்றுக்கொண்டான் என்பதை தான்.

ஆம் அந்த காத்திருக்கும் பண்பு தான் காமராசரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்கியது. அவரின் பெருந்தன்மை தான் அவரை இந்தியாவிற்கே பிரதமரை உருவாக்கும் தகுதியை உருவாக்கியுள்ளது. வரிசையில் நின்று பொறுமையாக இருந்த பண்பு தான் அவரை பாட்டியிடம் தைரியமாக பேச செய்தது. சிறுவயதில் நாம் கொண்டிருக்கும் பண்புகள் தான் நம்மை உயர்த்தும்.

எல்லா தலைவர்களின் இளம் வயது சம்பவங்களை உற்று நோக்கினால் அவர்களிடம் இருக்கும் தலைமைப்பண்பு காண முடியும். நாம் கவனிக்க வேண்டியது சிறுவயதில் வளர்த்தெடுக்க வேண்டிய தலைமைப்பண்பை குறித்தே. ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் சிறிய சிறிய சம்பவங்களிலும் வெளிப்படும் தலைமைப்பண்புகளை அப்படியே அடிமனதில் பதிய வைத்தால் மட்டும் போதுமானது , அவை அவனை நல்ல குடிமகனாக மாற்றிவிடும். ஆசிரியரின் தலையாக கடமையும் அதுவே என கருதுகின்றேன்.(அப்ப மதிப்பெண் எடுக்க திணித்து வாந்தியெடுக்க செய்வது தலையாயக் கடமை இல்லையா என கேள்வி எழுப்பக்கூடாது )

இன்று சொசைட்டி சென்றேன். என்ன சங்கர் சார்( ஓ.ஏ.) நம்ம சொசைட்டியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில்லையா..? என்றேன். “தலைவரே, நாம் சரஸ்வதி பூஜை தான் கொண்டாடுவோம்” என்றார். ஆயுத பூஜைன்னு சொல்லுங்க என்றார் கிளார்க் ஜோதி. அட தலைவர் ஹெச்.எம். என்பதால் அப்படி சொன்னேன் என்றார் சங்கர். அருகில் இருந்த ஜோதி தலைவரே பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வில்லையா? என கேள்வி எழுப்பினார். இல்லை , பள்ளியில் இருக்கும் விநாயகருக்கு எங்கள் பள்ளியின் உறவின் முறையில் இருந்து சிறப்பாக நாளை பூஜை செய்து கொண்டாடுவார்கள். ஊர் மக்களும் அப்பூஜையில் கலந்து கொள்வார்கள். பள்ளியில் வேறு சில சமயவிழாக்கள் கொண்டாடுவது உண்டு என்றேன்.

“என்ன தலைவரே , பள்ளி பள்ளிக்கு விநாயகர் கோவில் ஒண்ணு வச்சுகிறாங்க.. பிள்ளைகளிடம் ஐந்து ரூபாய் கொண்டு வா.. என கட்டாய வசூல் நடக்குது. காலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட காசு கொடுத்தா தான் நான் பள்ளிக்கூடம் போவேண்ணு அடம் பிடிக்குதுக. இரண்டாயிரம் மூவாயிரம் பிள்ளைகள் படிக்கிற பள்ளியில் காசா இருக்காது. விநாயகர் நேரில் வந்து பிள்ளைகள் தான் காசு தரணும்ன்னு சொல்லி வாங்க சொல்றார். நிர்வாகவே இருநூறு ரூபாய் செலவு செய்து கும்பிடக்கூடாதா..? அதை பிள்ளைகள் இடம் வசூல் செய்து தான் கொண்டாட வேண்டுமா! . எது எதுலா தான் காசு சம்பாதிக்கணும் என்று விதி விலக்கு இல்லை. கல்வி என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளையை என்ன செய்வது ? யாருகிட்ட சொல்றது ? ( என் கிட்ட சொல்லிட்ட நான் எழுதிடுவேன். அது தான் எனக்கு தெரியும் என மனதினுள்ளே நினைத்துக்கொண்டேன்.) பெரி சுண்டால் கூட தர மாட்டானுங்க..” என பொரிந்து தள்ளினார். நான் சும்மா இருக்காமல் அதான் காசு கொடுத்த வயிற்று எரிச்சலில் பொரிந்து தள்ளுறீங்களே அதை விடவா பொரி வேண்டும் என்றேன்.

காமராசர் கொண்டுவந்த இலவச கல்வி , மதிய உணவு திட்டம் என எல்லாம் புதிய பரிமாணம் எடுத்து வரும் நிலையில் இந்த காசு வாங்கும் பழக்கம் மட்டும் இன்னும் விட வில்லையே. முதலாளிக்கு தான் தெரியும் காசை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று. இன்று அநேகப் பள்ளிக்கூடங்கள் முதலாளிகளிடம் தான் இருக்கின்றன. பொதுப்பள்ளிகள் சாத்தியம் என்று உருவாகுமோ விநாயகா பாவம் இந்த ஏழைகளை காப்பாற்று.
மதுரை சரவணன்.

2 comments:

G.M Balasubramaniam said...

இப்போது பள்ளியிலும் பிள்ளையார் சதுர்த்தி பொது வழிபாடா....?பார்க்க என் பதிவு.

மாதவன் said...

நல் வதிவு . விரைவில் நடைபயிற்சியை ஆரம்பிக்கவும் ..

Post a Comment