இன்று மாலை ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவனைச் செல்ல ஒருமணி நேரம் முன் அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஆசிரியர் அவரின் மாணவர்களை நானே (தலைமை ஆசிரியரான நானே) பார்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டார். நானும் ஆவலோடு சரி என்று சம்மதித்தேன். சுயநலமும் உண்டு.
என்னால் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைக்கூட நல்ல மாதிரி வைத்துக்கொண்டு கற்பித்தல் பணியினைச் செய்ய முடியும் என அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற சுயநலமே!
ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடம் மூளையும் உடல் உறுப்புகளும் நடத்திக் கொண்டிருந்தேன். எஸ் ஏ எல் எம் முறையில் கற்பித்தல் நடந்தது. மாணவர்கள் தாங்களாகவே பாடத்தினை வாசித்து முடித்து அதில் இருந்து சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டனர். அவர்களுக்கு அதற்குரிய அர்த்தம் கூறப்பட்டது.
மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருந்தனர். அவர்களுக்கு அப்பாடத்திற்கான கருத்து வரைப்படம் கொடுக்கப்பட்டு பாடத்தினை குறித்த கருத்துக்கள் புரியும் வண்ணம் குழுவில் உரையாடி குறிப்பேட்டில் வரைந்து கொண்டனர். பின்னர் என் உதவியுடன் கருத்துக்களை தொகுக்க ஆரம்பித்து இருந்தனர். எல்லாக்குழுக்களுக்கும் சென்று பணி நடைப்பெறுகிறதா என மானிட்டர் செய்து, அவர்களுக்கு தேவையான உதவி புரிந்தேன்.
மாணவர்களுடன் இணைந்து செயல்படும் போது இளமை தானாகவே திரும்பி விடுகின்றது. பயமின்றி நம்மிடம் பேசும் அவர்களை பார்க்கும் போது பொறாமை கொள்ளச்செய்கிறது. இருக்க தானே செய்யும்.
மாணவர்கள் என்னை விட அதிக வேகத்துடன் மிக உயர்நிலையில் சிந்திக்கும் போது, டப்பாக்களில் திணிப்பது போல நம் மூளையில் தெரிந்த விசயங்களை திணித்து, அந்த விசயங்களைக்கூட தொடர்பு படுத்தி பார்க்க விடாமல், அப்படியே வாந்தி எடுக்க செய்யும், நம்மை சிந்திக்க, பேச வாய்ப்பு தராத ஆசிரியர் மையக் கல்வி முறை குறித்து வெறுப்பு வருவதால், குழந்தை மையக்கல்வி முறையில் பயிலும் இவர்கள் மீது பொறாமையும் தானாகவே வந்து சேர்கிறது.
அந்த மாதிரியான பொறாமையான நேரத்தில் தான் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வந்து சேர்ந்தனர். மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்திருக்கும் என்னைப்பார்த்ததும் அதில் ஒரு மாணவி அண்ணே என்றாள். அதற்குள் அதில் ஒருவன் யேய் சார்ன்னு சொல்லு என்றான். என் மாணவர்கள் இவர் தான் பெரிய சார்.. ஆனா டம்மி சார் என்றார்கள்.அவர்கள் சிரித்தார்கள். என் மாணவிகளில் ஒருத்தி டம்மி இல்லைடா.. நம்ம மம்மி சார் டா... நம்ம மம்மி மாதிரி நல்லா பார்த்துக்குவார் என்றாள்.
ஜாலியா பேசுவதை பார்த்து ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அச்சம் போக்கி என்னை அவர்களுக்குள் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். அதோப்பார் ரோடு.. என சைகையோடு பாடினேன். நிலா நிலா வா என சைகையோடு பாடினேன் செய்தேன். அவர்கள் ஜாலியாகி போனார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்களை குழுவில் தொகுத்தல் செய்து முடிக்க சொல்லி ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் இணைந்தேன்.
என்ன விளையாடலாமா என கேட்டேன். அனைவரும் மகிழ்ச்சியாக ஜாலி என்றனர். என்ன விளையாடலாம் என்றேன். ஒரு மாணவன் தன் பையிலிருந்து பிளாஸ்டிக் பந்தை எடுத்து காட்டினான். சூப்பர் நாம் பந்து போட்டு விளையாடலாம் அப்படியே படிக்கலாம் என்றேன்.
உங்களுக்கு அஆஇஈ தெரியுமா என்றேன். எல்லோரும் விளையாட்டு என்றவுடனே ஒத்துக் கொண்டனர். கீழ்மட்டக் கரும்பலகையில் ஐந்தாம் வகுப்பு மாணவனை பெரிதாக இடம் தள்ளி அ ஆ இ ஈ உ ஊ என எழுதச் செய்து அதற்கு கீழே மற்ற உயிரெழுத்துக்களை எழுதச் செய்தேன். இப்போது மாணவர்களை சற்று தூரமாக வட்ட வடிவில் அமரச் செய்தேன். கரும்பலகை அருகில் இருந்து நான் மாணவர்களுக்கு பந்தை பிடிக்க சொல்லி வீசினேன். பின் அவர்களை பந்தை என்னை நோக்கி வீச சொல்லினேன். ஒவ்வொருவராக வீசினார்கள் பந்தைபிடித்தும் தவறச் செய்தும் மகிழ்ந்தோம்.
( கரும்பலகை வரை அவர்களால் பந்தை வீசத் தெரிகிறாதா என்பதற்கும் வீசுவதற்குமான பயிற்சி தான் இது )
( கரும்பலகை வரை அவர்களால் பந்தை வீசத் தெரிகிறாதா என்பதற்கும் வீசுவதற்குமான பயிற்சி தான் இது )
இப்போது மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து கொண்டேன். பின் பந்தை கரும்பலகையில் எழுதி இருக்கும் எழுத்தை நோக்கி வீசினேன். அது உ என்ற எழுத்தின் மீது படவே உ என்று கத்தினேன். அவர்களும் என்னுடன் சேர்ந்து உ என கத்தினர். பின் பந்தை அ மீது வீசினேன். அ என்று அவர்களாகவே கத்தினர். என் அருகிலிருந்த மாணவனிடம் பந்தை கொடுத்து வீச சொன்னேன். அவன் வீசிய பந்து ஓ வில் விழ ஓ என்றேன். அனைவரும் ஓ என கத்தினார்கள். அடுத்தவன் என எல்லோரும் நான்கந்து முறை எழுத்தை நோக்கி வீசி எறிந்து உயிரெழுத்துக்களை அறிந்து கொண்டோம்.
அதன்பின் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் ஒரு குழு எல்லாம் முடித்து விட்டாயிற்று என்று வந்தனர். அவர்களையும் சேர்த்து கொண்டேன்.
இப்போது ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் உயிரெழுத்தில் ஒன்றை கூற ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அந்த குறிப்பிட்ட எழுத்தின் மீது பந்தை வீச வேண்டும். சரியாக வீசியவர்களுக்கு ஒரு பாயிண்ட் கொடுக்கப்படும் . அதிக பாயிண்ட் எடுத்தவர் வின்னர்.
ஐந்தாம் வகுப்பு மாணவன் ஓ என்றான் நான் வேண்டுமென்றே தவறாக வீசினேன். அனைவரும் சார் அவுட்டு என்று கத்தினர். அடுத்து...குமரேசன் என்ற மாணவன். அவனுக்கு ஆ என்றனர். அவன் சரியாக வீசி ஒரு பாயிண்ட் எடுத்தான். அடுத்து ப்ரியா அவளும் சரியாக வீசினாள். அதற்கு அடுத்து மணிகண்டன் அவன் பந்தை எழுத்தையும் தாண்டி வீசினான் அனைவரும் அவுட் அவுட் என்றனர். மிக மகிழ்ச்சியாக விளையாட்டாக உயிரெழுத்துக்களை கற்று கொண்டிருந்தனர். அதற்கடுத்து கவிதா .. அவள் ஏ என்றதற்கு ஊ வில் வீசினாள். ரஞ்சித் ஏ ன்னு சொன்னா ஊ வில வீசுது என்றான்.கடைசியில் கவிதா ஆறு பாயிண்ட் எடுத்து வின்னர் ஆனாள்.
அனைவரும் வேர்க்க விறுவிறுக்க விளையாடிய பின் வரிசையாக போய் எழுத்துக்களை வாசிக்க சொன்னேன். வேக வேகமாக வாசித்து காட்டினர். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அதிசயமாக பார்த்தனர். அனைவரும் எல்லா உயிரெழுத்துக்களை சொல்வதை பார்த்தவுடன் அதிசயமாக பார்த்து என்ன சார் மேஜிக் இது என்றனர். எங்க அக்கா டெய்லி சொல்லி தர்றா சொல்ல மாட்டான் இன்னைக்கு எல்லாம் சொல்றான் என்றனர்.
ஓகே நாம் செய்தி தாள்ல இந்த எழுத்துக்கள் இருக்கான்னு பார்ப்போம் என அனைவருக்கும் ஒரு செய்தி தாள் கொடுத்தேன். அவர்களுடன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை இணைத்தேன். 5ம் வகுப்பு மாணவர்கள் யாரும் எழுத்துக்களை கூறக்கூடாது. கொடுக்கப்பட்ட செய்தி தாளில் பெரிய எழுத்துக்கள் அதாவது தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ள உயிர் எழுத்துக்களை சொல்லி வட்டமிடச் செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சரியாக செய்கின்றனரா என பார்க்க மட்டும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எல்லா மாணவர்களும் மிகச்சரியாக உயிர் எழுத்துக்களை கூறி வட்டமிட்டனர். அதனை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பீடு செய்தனர்.
மணி ஒலித்தது. பேருந்து வந்தது. அனைவரும் மிக மகிழ்ச்சியாக சென்றனர். நாளைக்கு வர்றோம் என்றனர். செல்லும் போது தேங்யூ என்றனர்.
சகமாணவர்களுடன் கற்றுக்கொள்ளும் போது ஒரு புரிதலும் அச்சம் நீங்கி மகிழ்ச்சியாக கற்றல் அமைவதை காண்கின்றேன். ஆசிரியர் சக தோழனாக, மாணவர்களுக்கு உதவி புரிவராக, மாணவர்களை மதிப்பவராக , எளிமையான கற்றல் உபகரணங்களை கொண்டு விளையாட்டாய் கற்றலை வெளிப்படுத்தும் போது கல்வி இனிமையாகிறது. முழுமை பெறுகிறது.
ஆனால் இன்னும் ஆசிரியர்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் முதலாளிகளாகவே இருக்க முயற்சிப்பதும், செயல்வழிக்கற்றலை புறக்கணிப்பதும் மாணவர்களுக்கும் , வாங்கும் சம்பளத்திற்கும் செய்யும் கொடுமையாகவும் துரோகமாகவும் பார்க்க தோன்றுகிறது!
மதுரை சரவணன்.
No comments:
Post a Comment