Thursday, August 28, 2014

இதைப்படிக்கும் மதுரைக்கார அண்ணண் கோபித்து கொள்ளக்கூடாது !

தி கோல்டன் அவர்
-------------------------------
குழந்தைகள் பிரியமானவர்கள். குழந்தைகளின் உலகம் நாம் அறிய முடியாத புதுமை. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். அத்தனைக்குழந்தையும் அற்புதம்.

குழந்தைகளுக்கு யாரை பிடிக்கும் யாரை பிடிக்காது என்பதற்கான காரணங்களை சொல்ல முடியாது. திடீரென்று நேற்று நட்புடன் இருந்த ஒரு குழந்தை , இன்று எதிரியாகிவிட முடியும். எதிரியாகி இருந்த ஒரு குழந்தை நட்பாகி விட முடியும். எதற்கு சண்டை போடுகிறார்கள் , எதற்கு சேர்ந்து கொள்கின்றார்கள் என்பதெல்லாம் ஒரு மேஜிக்.

இந்த மேஜிக்கை வயது வந்த நாம் செய்ய முடியாது. இயலாது.நம்மை சுற்றி நாம் கட்டமைத்துள்ள வட்டம் அதற்கு இடம் கொடுக்காது.

இருபதுக்கும் மேற்பட்ட வருடங்கள் குழந்தைகளுடன் நட்பு கொண்டு வாழ்ந்து வருகின்றேன். ஒவ்வொரு வருடமும் புதுபுது முகங்கள். முதல் முறையாக என்னை பார்க்கும் குழந்தைகள் கொஞ்சம் அச்சம் கொள்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு அவர்கள் முதன்முறையாக அந்நியர்களை சந்திக்கும் போது ஏற்படும் பய உணர்வு காரணமாகும்.

கொஞ்சம் பழக பழக அவர்கள் அதிகம் நேசிக்கும் அற்புதமான உறவாக மாறிவிடுகின்றேன்.

இது மிகை இல்லை. அவர்களின் தந்தை, தாய்க்கு இணையாக நேசிக்கின்றனர். சகோதரனாக, சகோதரியாக, என அவர்கள் நேசிக்கும் ஒருவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதை உணரும் தருணம் . ஆசிரியர் என்பதிலுள்ள அற்புதத்தை, இந்த மேஜிக்கை உணருகின்றேன். இந்த மேஜிக் ஆசிரியர்களுக்கு மட்டுமே சாத்தியம்.அந்த வகையில் நான் புண்ணியம் செய்தவன். கடவுள் இப்பிறவியை கொடுத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கின்றேன்.

இன்று ஓடி வந்து அண்ணே ரைட் போடுங்க என்றாள் திருக்கனி. ( மதுரையின் பாசக்கார தம்பிகள் கோபித்துக்கொள்ள வேண்டாம்)

அருகில் இருந்த கார்த்திகா , “ யேய், சாரை போய் அண்ணே என்கிறாய்” என கடிந்தாள். நான் அப்படித்தான் சொல்வேன் என்றாள் திருக்கனி. “அவரு உனக்கு என்ன அண்ணணா..?” ( மதுரையிலுள்ள அண்ணன் கோபித்துக்கொள்ள வேண்டாம்)
“ஆமாம் போ.. எனக்கு சார் அண்ணன் தான். எனக்கு அண்ணன் என்றால் பிடிக்கும் . ரெம்ப பிடிக்கும். அண்ணணை பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா..? ( மதுரையில் அண்ணணை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா! )
இந்த உரையாடலை கவனிக்காதது போல இருந்த என்னிடம் திருக்கனி, “சார், நீங்க எனக்கு அண்ணன் தானே..?” என கேட்டாள்.
“இதில் என்ன சந்தேகம்..நான் உன் அண்ணன் தான் “ என்றேன்.
“சார், நீங்க எங்களுக்கு அப்பா மாதிரி” என்றாள் கார்த்திகா.
அருகில் இருந்த வாயாடன் மோகன்ராஜ், “ ஏ அவரு தாத்தா.. “ என்றான்.
“ ஆமாண்ட மோகன் ...சார்க்கு முடி நரச்சு போச்சு...தாத்தா தான் ” என மூச்சு வாங்காமல் வேகமாக வந்த சொன்னான் சதீஸ்.
“ஏய் சார்..நமக்கு அம்மா மாதிரி இப்படி எல்லாம் பேசக்கூடாது..எல்லாரும் மன்னிப்பு கேளுங்க..” என்றாள் அபிநயா.
சிரித்துக்கொண்டே..”எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள்.. இப்போது நாம் ஆங்கிலம்’ தி கோல்டன் ஹவர்’ வாசிப்பு பயிற்சி மேற்கொள்வோம் “ என்றேன்.

சிரிப்பு வந்தது. சென்றவருடம் படித்த மாணவி ப்ரியா பள்ளி விட்டு செல்லும் போது சொல்லியது நினைவுக்கு வந்தது. “ சார் , நாங்க உங்க கிளாசுக்கு வரும் போது பயந்தோம் தெரியுமா.. அப்புறம் போகப்போக பயமே இல்லாம போச்சு...கிளாசு ரெம்ப ஜாலியா இருந்துச்சு.. எல்லார் கிட்டையும் சொல்லி வச்சிருக்கோம்...உங்க கிட்ட தான் படிக்கணும்ன்னு .. ஏன்னா நீங்க ஒரு டம்மி பீஸ் சார்..” என்றாள்.

மதுரை சரவணன்.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... கடைசி வரி சூப்பர் சரவணன்...
எம்புட்டு நல்ல புள்ளங்களா இருந்திருக்காக...

வலிப்போக்கன் said...

ஏன்னா நீங்க ஒரு டம்மி பீஸ் சார்..

Post a Comment