Saturday, February 15, 2014

காதலர்கள் படிக்க கூடாத சிறுகதை

கொலை வெறி - சிறுகதை.
-------------------------------------
பிப்ரவரி என்றாலே காதலர்களுக்கு கொண்டாட்டம். காதலிப்பவர்களை பார்பவர்களுக்கும் திருவிழா தான். பலருக்கு காதல் தோன்றினாலும் சமூக அந்தஸ்து கருதி, நல்ல பிள்ளை என்ற பெயர் வேண்டும் என்பதற்காக தம் காதலை மறைத்தே வைத்திருக்கின்றனர். வீட்டிலும் அப்படிபட்ட சூழலே நிலவுகிறது . இதில் தவறு ஒன்றுமில்லை. எல்லோரும் குடும்ப கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டவர்கள் தான். சிலர் விதிவிலக்கு. காதலிப்பவர்களை தவறானவர்கள் எனவும் சொல்லக்கூடாது. காதல் கவிதை எழுதினாலே கீழ்பாக்கமும் , இரத்தினா ஆஸ்பத்திரிக்கு போ என்று சொல்லும் சமூகத்தில் தான் வாழ்கின்றோம். முருகன் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் வாழ்பவன். முருகனைப் பொறுத்தவரை குடும்பக்கட்டுப்பாடு, நல்ல பிள்ளை, சமுக அந்தஸ்து என்ற சிக்கல் எல்லாம் இல்லை. அவனுக்கு இருக்கும் பிரச்சனை வேறு. காதலி கிடைப்பது தான் அவனின் ஒரே சிக்கல். அவனும் ஆள் மாற்றி ஆள் காதலிக்கவே முயற்சி செய்கின்றான். ஆனால் எதுவும் ஓர்க் அவுட் ஆனதில்லை. வரும் பிப்ரவரியிலாவது லவ் யு சொல்லி தன் காதலை ஏற்க செய்திட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். இதோ முருகன் வீட்டை விட்டு கிளம்பிவிட்டான். அவனை தொடர்வோம். 

பஸ் ஸ்டாப்பில் எப்போதும் போல கூட்டம் அதிகமாயிருந்தது. 

இந்த கூட்டத்தில் தானே தொடர்ந்து நான்கு வருடங்களாக முயற்சி செய்கிறோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. சுந்தரபாண்டி படம் போல,இவன் பார்க்கும் எல்லா பெண்களும் இவனுகு பின்னால் முன்னால் இருப்பவர்களுக்கு செட் ஆகி விடுகிறார்கள் . எப்படியும் ஒரு பெண்ணையாவது காதலித்து திருமணம் செய்திட வேண்டும் என்ற இலட்சயத்துடன் நடந்தான். அவன் அதிர்ஷ்டம், இன்று ஆரஞ்சு கலர் சுடிதார் அவனை பார்த்து சிரிப்பதை கண்டான். முன்னெச்சரிக்கையாக தன்னை தான் பார்த்து சிரிக்கிறாளா என முன்னும் பின்னும் செக் செய்து கொண்டான். 

அவள் அவனை இப்போது நெருங்கி வந்தாள். அவன் மனதில் இளையராஜாவில் ஆரம்பித்து ஏ ஆர் ரஹ்மான் வரை உள்ள இசையமைப்பாளர்கள் காதல் வயலின் வாசிக்க ஆரம்பித்தார்கள். அவள் அவன் சந்திப்பு எட்டு அடியில் முடிந்துவிடும். ஆனால் அவனுள் அதற்குள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள எண்ணூறு காதல் ஹிட் பாடல்களும் இசைக்கப்பட்டு விட்டது. இப்போது முருகன் முருகனாய் இல்லை. நாம் நாமாக இல்லாத தருணங்கள் அற்புதமானவை. யாருக்கு வாய்க்கும்! அது இப்போது முருகனுக்கு வாய்த்திருந்தது. காதலித்து பாருங்கள் . நீங்களும் உங்களை மறக்க கூடும் . இந்த மயக்க நிலை மட்டும் தான் தாய் , தந்தை, உற்றார், உறவினர் என எல்லோரையும் மறக்க செய்கிறது. இந்த மயக்கம் தான் எல்லாவற்றையும் உதறி தள்ளி ஓடச்செய்கிறது. காதலித்தவர்கள் அறிவார்கள். இது என்னுடைய வார்த்தை அல்ல. இது முருகன் எல்லோருக்கும் சொல்லும் வார்த்தை. காதல் வயப்படும் தருணம் உணர உங்களை பெண்கள் நெருங்கி வரும் போது உணரலாம் என்பான். 

நெருங்கி வந்தவள், ”நீங்கள் முருகன் தானே !” என்றாள். இப்போது அவனுக்கு அவன் பெயர் பிடித்திருந்தது. ஏன் பிடிக்கவில்லை? பல சமயங்களில் அவன் தன் பெயரை உச்சரிக்கும் போது இப்படி அலுத்துக்கொள்வதுண்டு. “எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஒரு பொண்ணு கூடா ஏறெடுத்து திரும்பி பார்க்க மாட்டேன்கிறாள். சாமி பெயராம். அந்த சாமி முருகனுக்கு கூட ரெண்டு பொண்ணுங்க ..இந்த சைடில் ஒண்ணு அந்த சைடில் ஒண்ணு ..நமக்கு பெயர் வைத்த ராசி ஒண்ணு கூட அமைய மாட்டீங்குது. இதுவரை ஓராயிரம் பொண்ணுகளுக்கு காதல் கடிதம் எழுதியிருக்கிறேன் . ஒண்ணும் செட் ஆக மாட்டீங்குதே...பெயரை பாரு முருகனாம் முருகன்...!”

இரவு வானத்தின் தெளிந்த நிலா...! 
மஞ்சள் வர்ணம் பூசி வருகிறது ! 
நெஞ்சம் கிள்ளி ,துள்ளி வருகிறது ! 
என் பெயர் உச்சரிக்கும் போது 
உன் பெயர் கேட்டு நச்சரிக்கிறது மனது!
என மனதினுள்ளே கவிதை சொல்ல ஆரம்பித்தான். அவள் நெருங்கி விட்டாள். மீண்டும் நீங்கள் தானே முருகன் ! என்றாள். ப்லோரசண்ட் சிரிப்பில் ஆமாம் என்றான். அவன் நெஞ்சுக்குள் அத்தனை பல்புகளும் பிரகாசமாய் எரிந்தன. திரிக்‌ஷா, நயன்தாரா, இலியானா என அத்தனை அழகு நட்சத்திரங்களையும் சேர்த்து செய்த கலவையாக தெரிந்தாள். 

நானே தான் முருகன் என்று திருவிளையாடல் நாகேஷ் போல் வேகவேகமாக பதில் சொன்னான். “அதில் என்ன சந்தேகம் !”என்றான். “நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கன்னா
? ” என்று இழுத்தாள். “நீங்க சொல்லாட்டா தான் தப்பா நினைப்பேன்” என்றான். 

அது வந்து... என இழுத்தவளை , பரவாயில்லை , சொல்ல வந்ததை டக்குன்னு சொல்லிடணும் என்று தூண்டினான். ”காதலுக்கு டைமிங்க் தேவையில்லை. டைம்மிங் காமடிக்கு தான் தேவை . ட்டைம்மிங்க் எதிர்பார்த்தால் காதல் காமடி ஆயிடும். டீ கிளாஸ் இந்த கையிலிருந்து அந்த கைக்கு மாத்திடும் நேரத்தில் காதல் சொல்லாட்டி மாறிடும் “ என்பான். சொல்லிட்டாளே என்ற கும்கி பாடலை யானை மீது ஏறி பாடுவதாக அவன் மனசு கனவு கண்டது. அவள் இன்னும் எதுவும் சொல்லவில்லை. கனவில் மிதக்கும் அவனை ஏற இறங்க பார்த்தாள். 

அவன் கண்கள் பிரகாசமாகின. பிப்ரவரி பிப்ரவரி தான் என்று முணுமுணுத்தான். என்ன ? என்றாள் . பிப்ரவரி காதலர்களுக்கான மாதம் என்றான். அவள் நானும் அதை தான் சொல்லவந்தேன் என்றாள். “ எனக்கு அப்பவே தெரியும் ...நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னா ...” என தன் முடிகளை கோதிவிட்டு ஸ்டைலா கேட்டான். 
மாவீரன் படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் காஜல் அகர்வால் விரல்களை தொட்டுக்கொள்ளும் போது ஏற்படும் மின்னல் போன்ற உணர்வுகள் வேகமாக பயணித்த பேருந்தினால் ஏற்பட்ட காற்றில் ,அவள் துப்பட்ட அவனை உரசியபோது உணர்ந்தான். அவள் பேச தொடங்கினாள். ராம் சரண் தேஜா போல குதிரையில் துரத்தினான். அவம் கனவில் அவள் பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். 

”என்ன கனவா ? “என்றவளிடம், ”இல்லை ” என்றான். 
“ இருந்தாலும் நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள். “ இதில என்னங்க தப்பு இருக்கு? மனச ஏமாத்திடக்கூடாதுங்க...! ” என்றான். மனம் இப்போது எதையோ சாதித்தது போல உணர்வில் தலையை ஆட்டிக் கொண்டான். “நான் கடந்த நான்கு மாதமா வாட்ச் பண்ணுகிறேன்” என்றாள் . ”நான் உங்கள கடந்த எட்டு மாதமா பார்க்கிறேன்” என்றான். “தெரியும்”. இப்பவும் கேட்கிறேன் தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள். அட சொல்லுங்க...! என்றான். தமிழ் சினிமாவின் காதல் பாடல்களின் இசை அவன் மனதில் எப்போதையும் விட கூடுதலாக இசைக்க தொடங்கியது. 

”நானும் உங்கள மாதிரி தான் மனச ஏமாற்ற மாட்டேன்” என்றாள். அவன் இப்போது மௌனமாக இருந்தான். எல்லா இசையும் இப்போது பின்நவீன இசையாக நின்று போயிருந்தது. எல்லா ஓசைகளும் அவனுக்கு மட்டும் கேட்கவில்லை. இப்போது அவள் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தது. ”என்ன பேசாம நிக்கிறீங்க ”என்றாள். ”நீங்க பேசுங்க.. கேட்டுகிட்டே இருக்கணும்ன்னு தோணுச்சு” என்றான். அவள் அவனை பார்த்து சிரித்து கேட்டாள், “நீங்க எப்பவும் இப்படி தானே என்று!”. அவன் சிரித்தான். குதிரையில் துப்பட்டாவை சுழற்றி சென்றான். 

”அய்யோ பஸ் வந்திருச்சு...” கனவு கண்ட அவன் , ஆமாம் பஸ் போகுது என்றான். ”முருகன் நான் சொல்றது கேட்குதா..” ” கேட்குது, சொல்லுங்க “ என சுயநினைவு வந்தவனாக கூறினான். அப்போது அவள் அவனிடம் இருந்து நாலடி தள்ளி சென்று கொண்டிருந்தாள். ”பிளீஸ் சொல்லுங்க” என கெஞ்ச ஆரம்பித்தான். “ பிப்ரவரி 14 க்கு என் காதலை ப்ரப்போஸ் செய்யணும் .. அதனால் என் காதலனுக்கு கொடுக்கிற மாதிரி செம கவிதை ஒண்ணு எழுதி தர முடியுமா?” என்றாள் .
பேருந்தின் ஹாரன் ஒலி அவன் கேட்காமலே அவன் காதில் இரைந்தது. செவிடான உணர்வு. எல்லா இசை கலைஞர்களும் அவனை விட்டு பிரிந்து சென்று கொண்டிருந்தனர். 

வேகமாக பேருந்தில் ஏறியவள் , ”இன்னும் இரண்டு மூணு நாளில் கொடுத்துடுங்க முருகன் அண்ணா” என்றாள். 
அவன் காதுகளை பொத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தான். முடியவில்லை. அருகில் வந்த ஆட்டோவில் தனுஷ் குரல் கொடுக்க அனிரூத் இசைத்து கொண்டிருந்தார்,” ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டீ...!”

மதுரை சரவணன்.

வெற்றி பெறுவது எப்படி? அது காதலாக கூட இருக்கலாம்.

      14-2-2014 வெள்ளி அன்று மிகவும் ஆனந்தமாக மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் நீங்கள் எதிர்பார்க்கும் காதல் தான். ஆனால் பெண்ணின் மீது அல்ல. நான் விரும்பி பார்க்கும் ஆசிரியர் பணி மீதான காதல். என் வகுப்பறையில் நான் படிக்கும் தீரா நதி, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, காக்கை சிறகினிலே போன்ற இதழ்கள் இருக்கும். மாணவர்கள் காலை, உணவு இடைவேளை, மாலை என ஓய்வு நேரங்களில் படிப்பர். நான் புத்தகங்களை எடுத்து கையில் வைத்தாலே மகிழ்ச்சி கொள்வேன். என் வகுப்பறை முழுவதும் புத்தகங்களால் நிரப்ப ஆசை. என் இருக்கையின் அருகில் பெஞ்ச் ஒன்று இருக்கும். அதில் சிறுவர் வார இதழ்கள், மாத இதழ்கள், கவிதை, கட்டுரை, கதை, திருக்குறள், நன்னூல், நன்னெறி, சுய சரிதை என பல புத்தகங்கள் இருக்கும். என்னை பார்க்க வரும் அதிகாரி , குப்பையா வைத்திருக்கீறீர்கள் கொஞ்சம் நீட் செய்தால் என்ன ? என்பார். நான் சரி செய்கின்றேன் என உறுதி அளிப்பேன். ஆனால் மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க ஏதுவாக பரப்பியே வைத்திருப்பேன்.

       வகுப்பறையில் படிக்கும் பாடப்புத்தகங்கள் தகவலை மட்டும் தருபவை, நூலகம் சென்று விரும்பிய நூல்கள் படிக்க சொல்வேன். நூல் வாசிப்பு தான் நிரம்பிய அறிவு , ஆழ்ந்த புரிதலை தரும் என்பேன். வாசிப்பு மனிதனை முழுமையடைய செய்யும். வாசிப்பு மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புத்தகங்கள் நமக்கு எப்போதும் துணையிருக்கும் நண்பர்கள் என அடுக்குவேன். அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நூலகங்கள் குறித்து தகவல் தருவேன். சனி ஞாயிறு விடுமுறை, மாலை வீடு செல்லும் முன் நூலகம் செல்ல அறிவுறுத்துவேன். ஞாயிறு விடுமுறைக்கு பின் யார் நூலகம் சென்றது என்று கேட்பேன். பெண்களில் பலர் எங்க அப்பா கூட்டிகிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டார் என்பார்கள். மாணவர்களில் சிலர் நூலகம் எங்கிருக்கு தெரியவில்லை என்பார்கள். மீண்டும் அட்ரஸ் சொல்ல வேண்டும். சிலர் போகாமல் படித்தேன் என்பார்கள். எல்லா பதில்களுக்கும் குட் என்பேன். அடுத்தவாரம் நூலகம் சென்று படித்து வா என்பேன். இப்படி நாட்கள் நீளும்.

காந்தி மீயுசியம் சென்றால் அங்குள்ள நூலகம் அழைத்து செல்வேன். வாட்ச் மேன்,” சார் அங்க போக கூடாது .சத்தம் போடுவாங்க..மத்தவங்க படிப்பு கெட்டு போகும் ”என்பார். நான் இருந்தாலும் அழைத்து செல்வேன்.என் வகுப்பில் பலர் ஊரகப் பகுதியில் இருந்து வருவதால் , அப்பகுதி ஊரக நூலகங்கள் விபரம் தந்து , செல்ல வற்புறுத்துவேன். ஊரக நூலகங்கள் பல சமயங்கள் திறக்க வாய்ப்பு இல்லை. கட்டாயம் சனி, ஞாயிறுகளில் இயங்குவதை பார்த்திருக்கின்றேன். நான் குடியிருக்கும் பகுதியில் , தபால் தந்தி நகர் விரிவாகத்தில் செயிண்ட் மைக்கேல் பள்ளி வாட்டர் டேங்க் அருகில் நூலகம் இருக்கிறது. நான் படிக்க சென்ற போது , அங்கு லைப்ரேரியனாக உள்ள பெரியவர், ”சார் நீங்க படித்த வார இதழ் இருந்தா லைப்ரேரிக்கு தாங்க” என்றார். எப்படியாவது நூலகத்தில் மக்களை படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடுடைய நூலக அதிகாரிகள் இருக்க தான் செய்கின்றார்கள். ”புத்தகங்கள் வாசிப்பு என மாணவர்களிடம் ஆகாதது போகாதது சொல்லி பொழுது கழிப்பான். எப்ப பாரு ஒரு கதையை சொல்வான். புள்ளைக்கு தேவையில்லாத விசயத்தை சொல்வான் “ என்ற பெயர் தான் எனக்கு உண்டு. என்னிடம் படித்த மாணவர்கள் சாட்சி. 

ஐந்தாவது படிக்கும் மாணவன் நூலகம் செல்வானா? அதுவும் மெம்பர் ஆகி, புத்தகம் எடுத்து படிப்பானா? நூலகம் சென்று தான் படிக்கும் புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுப்பானா? நூலகத்திலிருந்து வர சாத்தியம் உண்டா? போன்ற கேள்விகளுக்கு, என் இரண்டு மாணவர்கள் சாட்சி. சுவர் சொல்லும் வரலாறு என்ற பாடம் எடுத்த போது , எப் ஏ பிராஜகெட் ஆக நான் செஞ்சிக்கோட்டை பற்றி தகவல்களை சேகரித்து வர சொன்னேன். தேவதர்ஷினி என்ற மாணவி, சார் நான் செல்போனில் இருந்து தகவல்களை கொண்டு வ்ந்துள்ளேன் என்றாள். ஆங்கிலத்தில் செல்போன் பயன்பாடு குறித்து விளக்கியதன் விளைவு. இரண்டு முழுத்தாள்களில் செய்தி கொண்டு வந்திருந்தாள். மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது கார்த்தி சார் நான் லைப்ரேரி போய் புக்கு எடுத்தேன் சார், கல் சொல்லும் கதை என்று இருந்தது. அதில் படித்தேன் . எல்லா கோயில்கள் பற்றி போட்டிருந்துச்சு என்றான். சபாஷ் என்றேன். காகிதத்தில் குறிப்புகள். ஆச்சரியம். என்னை நானே பாராட்டிகொண்டேன். வானில் பறந்தேன். சாதித்தவனாக உணர்ந்தேன். அருகில் இருந்த மணிப்பாண்டி கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்திருந்தான். சார் நானும் தேடினேன் . கிடைக்கவில்லை. அவன் வைத்துள்ள புத்தக தலைப்பு தன்னம்பிக்கை. சபாஷ். அனைவரையும் கைதட்ட சொன்னேன். கார்த்திக் நானும் வீட்டில் புத்தகம் எடுத்து வைத்துள்ளேன் என்றான். 30 கட்டணம் கட்டணும் என்று பிற மாணவர்களுக்கு லைப்ரேரி மெம்பர் ஆவது குறித்து சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது. 

இத்தனை நாள் புலம்பல் நிறைவேறிய சந்தோசம். உண்மையில் என் காதலுக்கு கிடைத்த வெற்றி. இப்போது ஆசிரிய பணியை இன்னும் கூடுதலாக காதலிக்கின்றேன். காதல் உண்மையாக இருப்பின் வெற்றி நிச்சயம் என்பதற்கு இதை தவிர வேறு உதாரணம் சொல்ல முடியாது. 

இந்த மாலைவேளையில் என் மாணவர்களில் எவனாவது ஒருவன் மதுரையில் இருக்கும் எதாவதொரு நூலகத்தில் எதாவது ஒரு மூலையில் அமைதியாய் படித்து கொண்டிருப்பான். குறிப்பெடுட்து கொண்டிருப்பான். இந்த நம்பிக்கை தான் என்னை வழி நடத்துகிறது.

Thursday, February 13, 2014

காதலிப்பவர்கள் தூக்கில் தொங்க வேண்டியதில்லை...!

காலை பிரார்த்தனை கூட்டம் முடிந்து, எப்போதும் போல் தன்னம்பிக்கை விதையை தூவ ஆரம்பித்தேன். 

பிரச்சனையில் இருந்து நழுவுதல் தவறு என்பது என் கான்சப்டாக இருந்தது. எஸ்கேபிசம் தவறு என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். வாசிக்க வரவில்லை, எழுத தெரியவில்லை என வாசிப்பதிலும் , எழுதுவதிலும் இருந்து நழுவுதல் என்பது நம்மை நாமே ஏமாற்றுவது, நாம் கொண்ட குறிக்கோள்(டாக்டர், இஞ்சினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ்) தோல்வியில் முடிய காரணமாகிவிடும் . சில சமயம் நம் குறிக்கோள் மீது வெறுப்பை ஏற்படுத்தி, கோபத்தை உண்டாக்கும். கோபம் பொல்லாதது என்றேன். என் வகுப்பில் பயிலும் கார்த்தி,” சார் ,எங்க வீட்டு பக்கம் இப்படி தான் சார் ஒரு அண்ணம் தோத்துவிடுவோம்... என்று தூக்கு போட்டு கொண்டார்” என்றான். எதுக்குடா என அருகில் இருந்த அய்யப்பன் கேட்டான்.

” அந்த அண்ணன் ஒரு பிள்ளைய காதலித்தாங்க. அவுங்க அம்மா , அவுங்க அண்ணன் பெண்ணை கட்டிக்க சொன்னாங்க. அவுங்களுக்கு பிடிக்கல. அதுக்காக அந்த அண்ணன் சண்டை போட்டிருக்காங்க. ஆனா அவுங்க அம்மா ஒத்துக்கல. கட்டின அண்ணன் பொண்ணத் தான் கட்டணும் இல்லை செத்து போன்னு சொல்லியிருக்கு. அவுங்க மாமாவும் தன் பெண்ணை கட்டிக்க சொல்லியிருக்கு. கட்டினாலும் கட்டி வச்சுடுவாங்கன்னு.. கடைசியில அந்த அண்ணன் நேத்து தூக்கு மாட்டிகிடுச்சு...” என முடித்தான் கதையை.

அருகில் இருந்த அய்யப்பன், “ ஏண்டா , அவுங்க மாமா பொண்ணு நல்லா இருக்காதா? “ என கேட்டான்.
”போடா ... அந்த அக்கா சிவப்பா அழகா சினிமா ஸ்டார் மாதிரி சூப்பரா இருப்பாங்க...”
”உனக்கு எப்படிடா தெரியும்...”
“ அவுங்க எங்க சொந்தக்காரங்க.. அந்த அண்ணனோட அம்மா எனக்கு ஆயா முறை வேண்டும்”
”இதுக்கெல்லாமாடா தூக்குல தொங்குவாங்க...”அருகில் இருந்த மணிகண்டன்.
”ஏன் சார் ...அந்த அக்காவ கட்டிக்க முடியாதுன்னு நினைச்சு தானே ...மாமா பொண்ணுக்கு கட்டிவச்சுடுவாங்களோன்னு நினைச்சு ..பிரச்சனையில் இருந்து தப்பிக்க தானே தூக்கில் தொங்கிட்டாங்க...”
”சூப்பர்டா... எப்படி பாடத்தோட பொருத்துறான்...இவன் பெரிய வாத்தியார வருவாண்டா...”
“ அவன் போலீஸ் அதுவும் ஐபிஎஸ்” என்றான் சஞ்சை.
நல்லது நாம் இப்போது தமிழ் பாடம் படிப்போம் என்றேன்.

தன்னம்பிக்கை தாத்தா கதை சொல்கிறேன் என்றான் தங்க மணி. மூணு வரியில் சொல்ல வேண்டும் என்றேன். பக்கத்து ஊருக்கு போகணும்ன்னா மலையை சுற்றி தான் போகணும். தூரத்தை குறைக்க மலையை குடைந்து வழி அமைக்க வேண்டும். தாத்தா அனைவரையும் அழைத்தார். யாரும் வரவில்லை. இது ஆகாத வேலை என்று சென்றுவிட்டனர். ஆனால் தாத்தா காலையில் கடப்பாரை கம்பியுடன் மலையை வெட்ட ஆரம்பித்தார். அனைவரும் அவரை பார்த்து சிரித்தனர். நான் இறந்தாலும், எனக்கு பின் என் மகன் இந்த மலையை உடைப்பான். அதன் பின் என் பேரன் இந்த மலையை உடைப்பான் என்றார். அனைவரும் அவரின் தன்னம்பிக்கையை வியந்து மலையை குடைய ஆரம்பித்தனர். வழி கிடைத்தது. சூப்பர் என்று பாராட்டினேன்.

இப்படி மெதுவாக கற்றல் பணி நடைப்பெற்றது. இடைவேளை வந்தது.

மணி கார்த்திக்கை பார்த்து , அந்த அண்ணன் உங்க அடுத்த வீடா ? என கேட்டான். ஏன் கேட்கிற ?என்றேன். ”இல்லை சார் பேய்யா வந்து சுத்துவாரு அதான் சொல்ல வந்தேன் .“
” அடுத்த தெரு. அந்த காம்பவுண்டுல ஹவுஸ் ஓனர் பையனும் கத்தி வச்சு குத்தி கொன்னுபுட்டாங்க.”
பாத்தீங்களா சார்.. அந்த ஆவி தான் தூக்கில தொங்க வச்சுருக்கும்”
“ ஆமா..சார்... இப்ப அந்த காம்பவுண்டுல எல்லோரும் காலி பண்ணிட்டாங்க. எங்க ஆயாவும் ஹவுஸ் ஓனரும் தான் இருக்காங்க...” என்றான்.

எனக்கு உயிர்மையில் இந்த மாதம் படித்த சாருவின் பேய் கதை நினைவில் வந்தது. “கீழே குருதி தோய்ந்து கிடக்கும் நாக்கையும், கண்களையும் எடுத்துத் தின்று பசியாறுவான். மனித உடம்பில் அவனுக்குப் பிடித்தமானது மூளை. சடங்கு முடிவதற்குள் கபாலமும் உடைபட்டுத்தான் இருக்கும். அதிலிருந்து மூளையை எடுத்து உண்பான்.” ( இந்தவார உயிர்மை ’இல்லாதவர்களின் நிழல்கள்” சாரு நிவேதிதா)
அதற்குள் வரிசையாக அவரவர் வீட்டுப்பகுதியில் நடந்த பேய்கதைகளை சொல்ல ஆரம்பித்தனர். நானும் பேய்கதைகள் எழுதும் அளவுக்கு திகில் நிரம்பிய கதைகள் பல வெளிவந்தன. கணக்கு பாடம் படிப்போம் என்றேன். சார் ஆங்கிலம் என்றான் ஒருவன். சரி ஆங்கிலம் படிப்போம் என்று மெல்ல ஆங்கிலத்தில் உரையாட தொடங்கினோம்.

மதியம் சாப்பாட்டு நேரம் . வட்டமாக அமர்ந்து மாணவர்களுடன் உணவு அருந்துவது வழக்கம். அப்போது மீண்டும் அழகேஸ்வரி என்ற அழகி ... காதல் தோல்வியில் முடிந்த தூக்கு கதைகளை சொல்ல ஆரம்பித்தாள். வரிசையாக ஏரியா வாரியாக காதல் தோல்வியால் முடிந்த தூக்கு கதைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். என் ஆசிரிய தோழன் செல்வக்குமார் , மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட நண்பன் ஒருவனுக்கு எம்ப்ளாய்மெண்டில் சிறப்பு பதிவு செய்ய தேவையான அரசாணையை கேட்டான். கொடுக்கிறேன் என்றேன்.

காதல் பற்றி பேசுவது தவறு. காதல் புரிவது தவறு. சாதி என்ன என்று தெரிந்து காதல் கொள் . காதலித்து திருமணம் முடிப்பவன் அனாதை. அவனுக்கு எந்த உறவும் இருக்காது. காதலித்தால் சாவு தான் மிச்சம் என்பது போன்ற பயமுறுத்தல்கள் இருக்கத்தான் செய்யும்.

சாதி, மதம் மாறி திருமணம் முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் சலுகைகள் வழங்கினாலும், காதல் என்பது கனவு பிரதேசத்தின் கனியாகவும். எழுத்தில் மட்டுமே வாழும் விசயமாகவும் உள்ளது. வருத்தத்துக்குரியது. காதலை வளர்க்க வேண்டாம். காதலர்களை வெறுக்காமலாவது இருக்க பழகுங்கள். அடுத்த தலைமுறையாவது சரியாகட்டும்.

மோடி அலைவீசும் இந்த நேரத்தில், பார்க் பீச் பொது இடங்களில் கூடும் காதலர்களை பாசிச மதவாத பழமைவாதியினர் என்ன செய்யவிருக்கிறார்கள் என்று பார்ப்போம். ஓட்டுக்களை குறி வைத்து இருக்கும் இவர்கள் மாறியிருக்கிறார்களா ? நாளை வரை காத்திருப்போம்.

நான் காதலிக்கும் வனப்பேச்சி...!

காதல் வயப்பட்டவனாய் கனிந்த காதலை மனதிலேந்தி , கையில் ரோஜா செடி , அவள் வீட்டு வாசலில், அவள் எழுந்து கோலமிடும் முன்பே பதியமிட திட்டமிட்டு செல்கின்றேன். அவள் எனக்கு முன்பே வாசல் தெளித்து , ஒரு வனத்தை உருவாக்கி இருந்தாள். அதில் அவளும் நானும் காதல் புரிவதாக செய்தியை மறைத்து வைத்திருந்தாள். யாரும் அறியாத சமயத்தில் ரோஜா செடியுடன் வனம் புகுந்தேன். தேடினேன். வழியில் , வனபேச்சியிடம் அவள் இருப்பிடம் கேட்டேன். அவள் ஒற்றை புன்னகையுடன் மறைந்தாள். என்ன நினைத்தாலோ தெரியவில்லை , என் கையில் இருந்த ரோஜா செடியை பறித்துக் கொண்டாள். மலர்ந்து இருந்த ஐந்து ரோஜாக்களை எடுத்து கொண்டு, செடியை தூக்கி எறிந்தாள். ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட , அது வீழ்கின்ற இடமேல்லாம் , தங்கமென மின்ன , இருபுறமும் பசுமையின் ஊடே அவளின் வாசனை வந்தது. எல்லோருக்கும் ஒரு வாசனை உண்டு. அவள் வாசனை என்னை வழிநடத்த ,அவளை தேடி விரைகின்றேன். காற்றின் ஈரப்பதம் மிகுதியால் குளிர்ச்சி அதிகமாய் இருந்தது. அடர்ந்த காட்டினுள் தேடுதல் தீவிரமானது. வாசனையும் தீவிரமாகவே அவள் வெகு அருகில் இருப்பதாக உணர்ந்தேன். அப் போது, எதிரில் வனபேச்சி மீண்டும் தோன்றினாள். உற்று கவனிக்கிறேன். இப்போது என்னை பின்னால் இருந்து யாரோ கட்டிப் பிடிக்கின்றனர். எதிரில் இருந்த வனபேச்சியை காணவில்லை. கரங்கள் தொட்ட வேளையில் உணர்கின்றேன் , அந்த மென்மை என்னவளுடையது தான். இன்னும் ஐந்து நிமிட நடையில் காதல் மரம் வந்துவிடும் என்று காதில் கிசுகிசுத்தாள். உற்று கவனித்தேன். அதில் கனிகள் பறித்து புசிப்போம்.அதன் ருசியில் நீ என்னை கண்டுபிடி. அதுவரை திரும்பி பார்க்காமல் என்னை அழைத்து செல் என்ற போது. குரலில் வித்தியாசம் அறிந்து, நீ என்னவள் அல்ல , முடியாது என்றேன். வாழ்வில் அவளை தவிர வேறு யாரையும் நான் சுமப்பதில்லை, இதை அவள் அறிவாள். சந்தேகிக்காத காதலிகள் உண்டோ! வானம் அதிரும் படியாக சிரிப்பொலி கேட்டது. ஏன் என்னை பயமுறுத்துகிறாய்? என்றேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது சிவப்பு கலர் மீது கொண்ட மோகத்தால், உடன் பயிலும் அம்முவை உன் மனதில் சுமந்தாய். இரண்டாம் வகுப்பில் நீ விரும்பி சுவைக்கும் முறுக்கு நொறுக்க கொடுத்தால் (தினமும்) ஊர்மிளாவை சுமந்தாய். ஐந்தாம் வகுப்பில் உனக்கு வீட்டுப்பாடம் எழுதி கொடுத்ததால் கண்ணம்மாவை சுமந்தாய். ஏழாம் வகுப்பில் நீளமுடியில் மயங்கி நிவிதாவை சுமந்தாய். இருவருடம் முன்பு கூட கருப்பு தான் உண்மையான நிறம் என சொல்லி கண்ணகியை சுமந்தாய் . இப்படி உண்மையை அடுக்கிக் கொண்டே போனது அந்த குரல். போதும் நிறுத்து என்று எரிச்சல் கொண்டேன். அவையெல்லாம் அறியாமல் சுமந்தவைகள். இப்போது அவள் இன்றி நான் இல்லை. அவளைத்தவிர வேறு யாரையும் நான் சுமப்பதில்லை. இறங்கு என்றேன். முதுகில் இருந்து இறங்க வில்லை. இப்போது முன்பு போல் பாரம் உணரமுடியவில்லை. அவள் இறங்கி இருக்க கூடும். இப்படி இருந்தும் இல்லாமலும் இருப்பது தான் காதல் உணர்வா! மெல்ல நடக்கின்றேன்.அவளின் வாசனை தீவிரமாக வருகிறது. இப்போது என் உதடுகளை யாரோ வருடுவது போல உணர்கின்றேன். யாரோ எனக்கு முத்தம் கொடுக்கிறார்கள். இந்த உணர்வு நிஜம். நீங்கள் முத்தம் கொடுத்ததுண்டா? இல்லையெனில் இப்போதே உங்கள் காதலியை தேடி சென்று இதழ்களை சுவையுங்கள். முத்தம் உங்களில் உள்ள(ம்) உணர்வுகளை அப்படியே உடலின் எல்லா பாகங்களுக்கும் கடத்தும் ஹை வேல்ட் டிரான்ஸ்பாரம் ஆகும். ஒவ்வொரு முத்தமும் உங்களை அவளின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க செய்யும். நான் முத்தம் கொடுத்த அந்த நாளை நினைத்துப் பார்க்கின்றேன். அது ஒரு மழைப் பொழுது. தூறல் நின்ற சமயம் ஆகும். அவள் கரங்கள் பற்றி யாருமற்ற வீதியில் நடக்கின்றேன். ஏதோ உந்துதலில், தீடீரென்று வீதிகளை சுற்றி பார்க்கின்றேன். யாரும் இல்லை என்பதை உணர்கின்றேன். அவளின் தலையை பிடித்து, அவள் உதட்டை என் உதட்டால் கவ்வி, என் சுவாசத்தை அவளுள் செலுத்தினேன். அப்போது அவள் பதறிப் போனாள். அதன் பின் முத்தம் அற்ற நாட்களே இல்லை. அவள் அடைந்த அதே பதற்றம் இப்போது எனக்கு ஏற்படுகிறது. என் எச்சில் உறிஞ்ப்படுகிறது. ;உதட்டில் உணர்வுகள் ,சுவையாகத்தான் பரிமாறப்படுகின்றன. சபலம் தட்டுகிறது. இருப்பினும் அது அவள் இல்லையென்றால் என்ன செய்வது? என் தலையை அழுந்த பிடித்து ....விவரிக்க முடியாத உணர்வில் ஒரு முத்தம். அவளை, என் அவளை முற்றிலும் மறந்தேன். முத்தம் முத்தம் ஆனந்தம். அதே மயக்க நிலையில் இருந்து இன்னும் மீளவிலை. நான் என்ற நினைவை அற்று, தான் என்ற அகந்தை மறைந்து , ஏதோ ஒரு தியான நிலையில் இருக்கின்றேன். எங்கிருந்தோ ஆலம் விழுது போன்ற நீண்ட காதல் மரத்தின் கரங்கள் என்னை சுற்றி தன்னுள் இழுத்துக்கொண்டு போகிறது. தூரத்தில் வனப்பேச்சி ஒரு புள்ளியாய் தெரிகின்றாள். காதல் மரம் தன் கரங்களால் என்னை பற்றி தூக்கி செல்கிறது. மரம் இரண்டாக பிரிகிறது. கதவு போல திறந்து . இப்போது வன பேச்சி என்னை நோக்கி வருகிறாள். மிக அருகில். உற்று நோக்குகின்றேன். அது என்னவள். மிக அழகாய். அவள் வாசம் அந்த மரம் முழுவதும் நிரம்பியுள்ளதாய் உணர்கின்றேன். கனிகளை தருகின்றாள். புசிக்கின்றேன். அவள் இதழ்கள் தான் கனியாக மாறியிருக்கின்றன . சுவைத்த போது உணர்ந்தேன். காதல் மரத்தின் உள்ளே அவளும் நானும் நுழைகின்றோம். தன் கரங்களால் என்னை தழுவிக் கொண்டு , தன் நாவினால் காதல் சுவையூட்டிக் கொண்டு, இதழ்களின் வழியாக காதல் மொழி பேசிக்கொண்டு செல்கின்றோம். நான் கொண்டு வந்த ரோஜா செடி .... வழியெங்கும் பூத்து குலுங்குகிறது. வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்து வாசனை பரப்புகின்றன. இப்போது அந்த வனத்தில் நானும் அவளும் மட்டும். ஆதாம் ஏவாள் காலம் . உடைகள் இல்லா நிர்வாண காலம். அவளை நானும், என்னை அவளும் ரசிக்கின்றோம். இன்னும் தூங்கலையா ...? இது என் வனப்பேச்சி கட்டிலிருந்து அதட்டுகிறாள். காதல் கனவில் இருந்து வெளிவருகின்றேன். ஏனென்றால் அவள் எப்போது வேண்டுமானாலும் இரத்த காட்டேரியாக மாறும் சாத்தியம் உண்டு.

Thursday, February 6, 2014

இந்த கெட்டவார்த்தைகளை படிக்க வேண்டாம்.

கெட்ட வார்த்தை என்ற நல்ல வார்த்தை 
-------------------------------------------------------
தவிர்க்கமுடியாத, மிகவும் சிரமத்திற்குள்ளாகும் தருணங்களில், எப்போதாவது படித்த ஏதாவது ஒரு விசயத்தை அசைப்போட்டு சிரித்துக் கொள்வதுண்டு. அப்படி தான் இன்று காலை வகுப்பறையில் நுழைந்த பையன் , ”சார், இவன் கெட்ட வார்த்தை பேசுறான் சார்...” என்றான். உடனே இசையின் வரிகள் நினைவுக்கு வந்தது. “நான் கெட்ட வார்த்தைகள் அர்த்தமற்றுப் புழங்கும் நிலத்திலிருந்து வருகிறேன். அங்கே சும்மாணாச்சிக்கும் கோபப்படுவது, நிஜமாகவே சினம் கொள்வது, மண்ணள்ளித் தூற்றுவது என எல்லாவற்றிற்கும் கெட்ட வார்த்தைகள் தான். அங்கே போலியாக நடிப்பது , காதலாகிக் கசிவது, நெஞ்சைப் பிளந்து காடுவது என எல்லாவற்றிற்கும் கெட்டவார்த்தைகள் தான்” -இசை. (அதனினும் இனிது அறிவினர் சேர்தல், பக் 16 )

விசாரித்தேன். இனிமேல் இப்படி சொல்லாதே என அனுப்பிவைத்தேன். நான் திட்டவில்லை என வாதிட்டான். இசை சொல்வது போல் நெஞ்சை பிளந்து காட்ட உபயோகித்தது தான் அந்த வார்த்தை என்பது புரிகிறது. அதன்படி அது நல்ல வார்த்தையாகவே தோன்றியது. புகார் தெரிவித்த இவனின் கையெழுத்தைப் பார்த்து,
”கோத்தா ..என்னாமா எழுதுறாண்டா.. எழுத்துன்னா இப்படிதாண்டா இருக்கணும்..” என்று சொல்லியிருக்கிறான். ஒரு இலக்கியவாதியாக, அவன் இவனை பாராட்டி தான் பேசியுள்ளான் என்பது உண்மையானாலும், ஆசிரியராய் என் நிலை மாறாமல், ’தவறான வார்த்தைகளை , தீய வார்த்தைகளை உபயோகிக்க கூடாது’ என்று காறாராக சொல்லி அனுப்பினேன். அவன் வாய் முணு முணுத்தது. சிரித்தேன். அவன் முறைத்தப்படி, முணுமுணுத்தே சென்றான். நிச்சயம் இந்த முறை அவன் சொல்லும் வார்த்தை நல்ல வார்த்தை அல்ல என்பது மட்டும் புரிந்தது. இப்படி தான் நாம் நல்லது செய்ய நினைத்து அது நமக்கே கெட்டதாக முடியும். கணக்கு தப்புவது இயற்கையே.

கணக்கு என்றவுடன் எளிய முறையில் கணக்குகள் கற்று தருவது நினைவுக்கு வருகிறது. இன்று கற்றுக்கொடுத்தது. ஒன்றாம் ஸ்தானம் ஐந்தில் முடியும் ஒரே எண்களை பெருக்கும் எளியமுறையை கற்று தந்தேன். 25 x 25 போன்று ஐந்தில் முடியும் எண்களை பெருக்க கிடைக்கும் விடையின் கடைசி இரண்டு இலக்கங்கள் 25 ஆகும். எனவே 25 போட்டு கொள்ளவும் . 5 ( ஒன்றாம் ஸ்தானம்) தவிர்த்து உள்ள பிற எண்களை பார்க்கவும். இந்த கணக்கில் 2. ஆகவே ( 2 )அதனுடன் 1 யை கூட்டவும். கூட்டி வரும் தொகையை அந்த கூட்டிய எண்ணுடன் பெருக்கி 25க்கு முன்னால் போடவும் .விடை கிடைத்துவிடும் . 3 X 2 = 6: 25க்கு முன்னால் போட 625 என கிடைக்கும் என்றேன். 135 X 135 எனில் கடைசி இலக்கம் 25. ஒன்றாம் ஸ்தானம் தவிர்த்து உள்ள எண் 13 . ஆகவே 13 வுடன் 1 ஐ கூட்ட 14. பின் 13ஐ 14 வுடன் பெருக்க 182. விடை 18225. சரியா இல்லையா என்பதை உங்கள் கால்குலேட்டர் மூளைக்கொண்டு சரிபார்க்கவும்.

இப்போதும் வகுப்பின் பின்புறம் இருந்து , நல்ல பதத்தில் ஒருவன்,” .......,ரெம்ப ஈஸியா இருக்கிதுல்ல” என்றான். அவன் பாராட்ட தான் செய்தான் என்பது உண்மையாக இருந்தாலும், நகர வாழ்வில் கெட்ட வார்த்தைகள் அர்த்தமில்லாமல் , மிக நல்லவார்த்தைகளாக புழங்குவதை பார்க்கும் போது மனது வெம்புகிறது. மாணவனை அழைத்தேன். யார் இது மாதிரி பேச கற்றுக் கொடுப்பது என்றேன். ”சார் ,இதையெல்லாம் போய் கெட்ட வார்த்தை..ன்னா மத்த வார்த்தைகளை யெல்லாம் என்ன சொல்றது. எங்க வீட்டுபக்கம் இதவிட செமயா திட்டுவாணுங்க. சாரி சார் இனி வகுப்பில் பேசலா ”என்றான்.
எங்கப்பா டீ நல்ல இருந்துச்சுன்னா...எங்கம்மாவ பார்த்து “தாயோலிமவ ..இன்னைக்கு டீ சூப்பாரா போட்டுடிருக்கான்னு சொல்லுவாறு...”. “கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று அப்பாவிடம் சொல்லவேண்டும் தம்பி” என்றேன். ”அப்பா உன்னை திட்டுதுண்ணு சொன்னா, எங்கம்மா சொல்லுது... அப்பா திட்டலைடா நான் போட்ட டீ நல்லாஇருக்குன்னு சொல்லுது ன்னு அம்மா சொல்றாங்க சார்...” என்கிறான்.

குட்டி கதை சொல்லுங்க என்றனர். ஒரு வீட்டுல ஒரு கிளி வளர்த்தாங்க. அந்த கிளி நல்லா பேசும். ஆனா கெட்ட கெட்ட வார்த்தையா பேசும். கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று சொல்லி பார்த்த , அதன் உரிமையாளர், ஒரு முனிவரிடம் அழைத்து போய் காட்டினார். கிளியின் கெட்டவார்த்தைகளை கேட்ட , அந்த முனிவர் சாபமிட்டார். இனி நீ கெட்ட வார்த்தைகளை பேசினால், உன் தலையிலிருந்து ஒவ்வொரு முடியாக தானாக உதிர்ந்து விடும் என்று சாபமிட்டார். அன்றிலிருந்து அந்த கிளி கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை என்றேன். உடனே ஒருவன் சார் அது பெம்பள கிளிதானே சார்...அதான் முடி உதிரது பத்தி கவலை வருது என்றான். அடுத்தவன் ,சார், இனி நீங்களும் சாபம் போடுங்க சார்..அப்பதான் கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்கள்” என்றான். தம்பி கதை முடியல.. என்றேன். சார் போதும் என்றான். டேய் கெட்ட வார்த்தை பேசினா சார் முனிவர் மாதிரி சபித்துவிடுவார் என்று கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். வகுப்பறையில் நானும் கதையை அத்துடன் முடித்து விட்டேன்.

மீதிக் கதையை உங்களிடம் சொல்லி தானே ஆக வேண்டும். சில ஆண்டுகள் கழித்து , கிளியின் உரிமையாளரை பார்க்க முனிவர் வந்தார். இப்போது அவரின் தலையில் முடிகள் இல்லை. முடிகள் கொட்டிப் போயிருந்தன. இதைப் பார்த்த கிளி
சிரித்தது. முனிவர் கிளியிடம் ,”நீ எதையாவது நினைத்து சிரிக்கிறாயா? “ என்றார். அதற்கு கிளி, “ இல்லை, இல்லை, நான் உங்கள் தலை ஏன் மொட்டையானது என்று நினைத்தேன் . சிரித்தேன் . அவ்வளவு தான் ”என்றது.

இப்போது நீங்கள் எதை நினைத்து சிரித்தாலும் பரவாயில்லை. நல்லவார்த்தைகளாய் புழங்கும் நிஜமான கெட்ட வார்த்தைகளை குழந்தைகளில் வாழ்க்கையில் இருந்து பிரிக்க வேண்டும். இதன் விபரீதத்தை உணர்ந்து நாம் அர்த்தமின்றி பயன்படுத்தும் கெட்டவார்த்தைகள் தவிர்ப்போம். அல்லது குழந்தைகள் முன் பேசாது இருப்போம்.

- மதுரை சரவணன்.

Monday, February 3, 2014

ஏடிஎம் செண்டரில் பணம் எடுக்க வரிசையில் நிற்கும் பெண்கள், கவனிக்கப்படவேண்டியவர்கள்...!

      என் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் எனது வாசகி , எனது சமீபத்திய கட்டுரைகளை படித்து , என்னிடம் ,”உங்கள் எழுத்து சமீபத்தில் நீங்கள் கொண்டாட விரும்பியவரின் எழுத்துக்களைப் போல் இருக்கிறது” என்கிறாள். அவளை அன்பிரண்ட் செய்வது என முடிவெடுத்து விட்டேன். செய்தும் விட்டேன். நான் யாரையும் போலச் செய்பவன் அல்ல என்பதை இதை விட எப்படி உணர்த்த முடியும். செய்தது சரிதானே என்று எப்போதும் நான் நியாயாம் கேட்பதில்லை. என் மனதிற்கு பிடித்ததை என்றும் செய்பவன். என்னுடன் இருப்பவர்களுக்கும் அதே சுதந்திரத்தை வழங்கியும் உள்ளேன்.
என் மாணவர்களிடமும் அவர்களுக்கு பிடித்ததை , விரும்பியதை செய்ய சொல்கின்றேன். யாருடைய வற்புறுத்தலுக்கும் உடன்படாதீர்கள். எவரின் திணிப்புக்கும் அடிமையாகி விடாதீர்கள் என்கின்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். அதுவே நீங்கள் எதுவாக விரும்புகிறீர்களோ அதுவாக உயர்வத்துவதற்கு வழியை உருவாக்கும்.
நான் அவர்களுக்கு போதிப்பதெல்லாம் ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள் என்பதை தான்.

      நான் கற்று கொடுப்பதெல்லாம் அவர்களிடம் உள்ள நம்பிக்கையை வெளிகொணர்வதற்கான வழிமுறைகளை மட்டுமே. அடிக்கடி தலைவாரிக்கொள்ளும் மாணவனை அருகில் இருந்த ஆசிரியர் கண்டித்தார். படிக்கிற வயசுல கண்ணாடி பார்க்கிறான் பாரு, படிக்கிற வேளையை பாரு என்று திட்டி அனுப்பினார். நான் அம்மாணவனை அழைத்து, அவர் திட்டியதற்கு வருந்தாதே, நீ தலைவரிக்கொள், மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னிடத்தில் அற்புதமான கலைஞன் ஒழிந்துள்ளான். அவன் வெளிப்பட நீ முயற்சி செய்ய வேண்டும் . அதற்கு நீ நன்கு படித்தவனாகவும் இருக்க வேண்டும். படிப்போடு சேர்ந்த திறன் மட்டுமே உன்னை மிகப்பெரிய இடத்திற்கு இட்டு செல்லும் என்றேன். அவுங்க திட்டினதுக்கு நான் வருந்துகின்றேன். நீ எப்போதும் போல் தலைவாரிக்கொள் ஆனால் பள்ளியில் வகுப்பறையில் அடிக்கடி சீவிக்கொள்வதை தவிர்க்கவும் என்றேன். அவன் சிரித்தப்படி சரி என்று சென்றான். சென்றவன் என் பைக் கண்ணாடியை பார்த்து ஒரு கர்வத்துடன் தன்னம்பிக்கை கொண்டவனாய் , தன்னை தானே ரசித்தப்படி நடந்து சென்றான். இப்போது அவன் நன்றாக படிக்கிறான் என்பது தனி கதை. சிலர் பல நேரங்களில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர்.

     இன்று மாலை ஏடிஎம் செண்டரில் பணம் எடுக்க காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு வயதான பெண்மணிகள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு இளைஞன் நின்றிருந்தான். அதற்கும் முன்பாக ஆண் பெண் என மாறி மாறி ஏழு பேர் நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் சென்று பணம் எடுத்துவர குறைந்தது பத்து நிமிடம் ஆக்கினார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. எல்லோரும் ஏதோ இன்று தான் பணம் எடுப்பவர்கள் போல திணறிக்கொண்டு இருந்தார்கள். அதில் பலபேர் மினிபேலண்ஸ் பார்த்து , அதன் பின் பணம் எடுத்தார்கள். இந்த எரிச்சலை நான் வெளிப்படையாகவே அங்க என்ன பாடமா நடத்துறாங்க...என்ன சொல்லுதுன்னு பார்த்து பட்டனை தட்டுவதற்கு இத்தனை நேரமா? என்று கத்தவும் செய்தேன். பத்தாயிரம் ரூபாய் எடுக்க முக்கால்மணி நேரம் ஆகிவிட்டது.

     நான் கையில் வைத்திருந்த ஏடிஎம்கார்டை பார்த்த என் முன் நின்றிருந்த வயதான பெண்மணி , இந்தியன் வங்கி கார்டா..வச்சுருக்கிங்க தம்பி... இழுத்து இப்படி சொன்னாள். எப்பவும் ஸ்டேட்பேங்க் ஏடிஎம் செண்டரில் தான் பணம் எடுக்க முடியுது. இந்தியன் வங்கி ஏடிஎம் சுத்த மோசம். எப்ப பாரு பணம் இருக்காது, இல்ல மிஷின் ரிப்பேர் , இல்லை கார்டு போட்ட மாட்டீக்குது . இது போன்ற அடுக்கடுக்காக புகார்களை கொட்டி தள்ளினார். எனக்கு விபரம் தெரிந்து நாராயணபுரம் இந்தியன் வங்கி ஏடிஎம் இப்படி தான் எப்போது சென்றாலும் இயங்காமல் உள்ளது. பின்பு பிற வங்கி ஏடிஎம்களில் தான் பணம் எடுக்க வேண்டியிருக்கிறது.

     பெண்கள் பணத்தை எடுத்து , எண்ணி அங்கேயே தனித்தனியாக பிரித்து தங்களுக்கு வசதியுள்ள எல்லா இடங்களிலும் பதுக்கி வைத்து செல்வதை கண்டேன். பாவம் பெண்கள் , தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பதுக்கிதான் தன் பெற்றோர்களுக்கு உதவ வேண்டியுள்ளது என்ற நிலையை பார்க்கும் போது மனம் கணக்க தான் செய்கின்றது. கைநிறைய சம்பளம் வாங்கினாலும் தன் சகோதர சகோதரிகள், பெற்றோர்களுக்கு கொடுத்து உதவி செய்திட முடியாத கையாளாகத தனத்தை நினைத்து வெந்து புலம்பும் சகோதரிகளை பார்க்கும் போது ஆண்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அதைவிட கொடுமை தங்களின் ஏடிஎம் கார்டை கணவனிடம் கொடுத்து , எப்போதும் அவர்களின் கைகளை எதிர்பார்த்திருக்கும் நிலமை. எனக்கு தெரிந்து ஒரு ஆசிரியர் தன் கணவனிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு, குடிகாரனாகிய அவனிடம் அடிஉதை வாங்கி வருவதுடன், வீட்டு வாடகை கூட காட்ட முடியாமல் , தன் சக பணியாளர்களிடம் கடன் வாங்கி குடித்தனம் நடத்துவதை காண்கின்றேன். இந்த நிலமை மாற பெண்ணீயம் பேசினால் போதுமா என்பது தான் என் கேள்வியாக எப்போதும் இருக்கிறது. பெண்களுக்கு எப்போதும் தங்கள் மீது நம்பிக்கை பிறக்கிறதோ அன்று தான் இப்பிரச்சனை தீரும். ஆகவே நான் வகுப்பறையில் அறிவை விட , நம்பிக்கையை விதைக்கின்றேன். மாணவிகளிடம் தன்னம்பிக்கை விதைகளை தூவுகின்றேன்.

     நேரம் முக்கியமானது. நேரத்தை நாம் ஏடிஎம் செண்டர்களில் வரிசையில் நின்று தொலைக்கின்றோம். இது போன்ற சமூக சிந்தனைகள் உதிப்பதற்கு காரணமாக , சில வீணடிக்கும் நேரங்கள் அமைத்து விடுகின்றன. வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் , நாம் அறிந்து கொள்ள பாடங்கள் நிரம்பியுள்ளன. நாம் கவனித்தால் அது நமக்கு கிட்டும். ஒவ்வொரு நிமிடமும் தகவலோடு பயணிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு சில புரிதல்களை தருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஒரு அனுபவத்தை தருகின்றன. இவை நம் தகுதியை மேம்படுத்துகின்றன.

     எனக்கு முன் நின்ற வயதான பெண்மணிக்கு கார்டை கொண்டு பணம் எடுக்க தெரியவில்லை. அதற்காக அவர் வருந்தவில்லை. தம்பி எனக்கு உதவுங்கள் என்று அழைத்தார். உதவினேன். அவர் சொன்னார். எங்கப்பா பணம் எடுக்க விடுறாங்க...செக்புக்கில கையெழுத்து வாங்கி அவுங்களே எடுத்துக்கிறாங்க...எதோ என் தேவைக்கு ஆயிரம் இரண்டாயிரம் என எடுத்து கொள்கின்றேன் என புலம்பினார். வயோதிகம் என்பது இம்மாதிரியான வேதனை குரல்களில் ஒலிக்கும் போது மனம் கஷ்டப்படுவது இயற்கையே. என் தாய் என் கண்முன் தோன்றினார். அவரும் பாவம் கால்கடுக்க வங்கிக்கு சென்று பணம் எடுத்துவருவதை நினைத்து வருந்துகின்றேன். என் தாய் ஏடிஎம் என்றால் அலர்ஜி என்பார் . இதுவரை கார்டு வாங்கியதில்லை. ஒருசமயம் வங்கியே வலுக்கட்டாயமாக திணித்தது. அவர் அதை இன்று வரை கையில் தொட்டதில்லை. இப்போது புரிகிறது சக பணியாளர்களின் எச்சரிக்கை உணர்வாக கூட இருக்ககூடும். நாங்கள் அப்படி அல்ல என்று சொன்னாலும் , அந்த தாய்க்கு தான் தெரியும் , அவரின் பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும் என்பது. அதுவும் ஒருவகை நம்பிக்கை தான்.

     இதற்கிடையில் தமிழ்வாசி என்னை அழைத்து சாரு நம் சந்திப்பை தரக்குறைவாக சுட்டிக்காட்டியுள்ளார் என்றார். //மதுரையில் ஒருசில நண்பர்கள் gatecrash செய்து வந்து என்னோடு போட்டோ எடுத்துக் கொண்டு போனார்கள். அதுவா கொண்டாட்டம்? // என்ற சாருவின் வரிகளை மெயில் செய்தார். சாருவின் வாசகனாக நாம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது நமது உரிமை. அதை அவர் குறை கூறவில்லை. அவரை நீங்கள் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளனாக பத்ரிக்கை பத்திகளை படித்து , தேடி சென்று வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டது ஒரு வரபிரசாதம். அதற்கு உதவியாக இருந்தேன் என்பதில் பெருமிதம். சாரு எதிர்பார்க்கும் கொண்டாட்டம் என்பது வாசகர் வட்டத்திலுள்ள என் போன்றோர்களுக்கு மட்டுமே புரிகிறவிசயம். புத்தகம் வாங்குவதும் , பிரதியில் கையொப்பம் வாங்குவதும் கொண்டாட்டம் தான், தமிழ்வாசியை போன்ற ஆரம்பகட்ட வாசகனுக்கு என்பதும் சாருவுக்கு தெரியும். அவரிடம் பேசிய சில நொடிகளில் புயலிலே ஒரு தோணி யை செவ்விலக்கியங்கள் என்றும், அதை படிக்க சொன்னார். அதுபோன்று ஒரு நாவலை தான் எழுதப்போவதாக சொன்னார். விஜயகாந்த் நிலமை, மதுரையின் அரசியல் , தான் பஜாகாவுக்கு செல்லாமல் இருப்பது, மோடியை ஆதரிப்பது போன்ற பலவிசயங்களை கொட்டி தள்ளினார்.அதிமுக பாராட்டினாலும் , அதில் தன்னை இணைத்து கொள்வதில் தனக்கு உள்ள பிரச்சனை என சாரு உரையாடியதை என் நண்பர் தமிழ்வாசி உணர்வான் என்று நினைக்கின்றேன். ஆகவே சாரு கூற்றில் எந்த தவறும் இல்லை. நான் என் வருகையை முன்கூட்டியே பதியவில்லை என்பதால் நானும் உங்களுடன் வெளியேறினேன். தமிழ்வாசி பிரகாஷ் , சாருவை படியுங்கள். அவரை புரிந்து கொள்ளுங்கள். பின் நாம் ஒருதருணத்தில் கொண்டாடுவோம். இதுவும் ஒருவகை தன்னம்பிக்கை தான்.


மதுரை சரவணன்.