Friday, November 14, 2014

குழந்தைகளோடு இருப்பவன் பாக்கியவான்வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒற்றை சொல் அன்பு. குழந்தைகள் எத்தனை ப்ரியமானவர்கள்! அவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நான் கடவுளர்களுடன் கடவுளின் சன்னிதானத்தில் இருக்கின்றேன் என்பதை நினைக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன். பெருமைப்பட்டுக் கொள்கின்றேன். நான் பாக்கியவான் என்பதில் ஐயமில்லை.

நேற்றே ஒருவள் வந்தாள், “குழந்தைகள் தினம் எப்படி கொண்டாடுவீங்க ? என கேட்டாள். எப்போதும் போல் என்றேன். நாங்க எல்லாம் டீச்சர்ஸ் டே உங்களுக்கு பிடிச்சப்படி கொண்டாடினோமே? என்றனர்,அவளுடன் இணைந்து கொண்ட என் வகுப்பு மாணவர்கள்.
(ஏன் இப்படி சொல்கின்றனர் என்பது உணராமல் எப்போதும் போல் பதிலளிக்கின்றேன்)

ஓவியம் பாட்டு, டான்ஸ், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்கள் அன்று காலை பிரார்த்த்னைக் கூட்டத்தில் பேசுவார்கள் என்றேன். அப்புறம் ...என வித்தியாசமாய் ஒருவன் கேட்டான். பரிசு பொருள்கள் வழங்குவோம் என்றேன். அவர்கள் மூஞ்சி ஒருமாதிரி போனதை பார்த்து நானே இவ்வாறு கேட்டேன்.

சரி என்ன செய்ய வேண்டும் ?
“சார் எப்பவும் போல் போர் அடிக்க வேண்டாம். பிரார்த்தனை கூட்டம் வேண்டாம். நாங்க ஜாலியா காலையில் வந்து சந்தோசமா இருக்கோம். எங்களுக்கு தெரிஞ்சதை போர்ட்டில் வரைகின்றோம். எங்க பெயரெல்லாம் எழுதி போடுவோம். நீங்க ஒண்ணும் சொல்லக்கூடாது”
இது ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது. சரி என்றேன்.

“சார், கலர் டிரஸ் ”என்றான் ஒருவன். “ஓகே .எல்லோரிடமும் நாளை கலர் டிரஸ் நானே சொல்லிட்டு வருகின்றேன் ”என என் கட்டளைக்காக காத்திராமல் ஒருவன் ஓடினான்.

இன்று காலை வந்த போது எனக்கு முன்பாகவே கரும்பலகையில் ரோஜா வரைந்து குழந்தைகள் அழகாக எழுதி இருந்தனர். கீழ்மட்ட கரும்பலகையில் தங்கள் பெயர்களை (கையெழுத்து இடுவது போல் )வரிசையாக மயில் போன்ற பறவைகள் வரைந்து எழுதி இருந்தனர். காலை செய்திதாள் வாங்கி வந்திருந்தேன். செய்திகளை குறித்தேன்.ஒருவன் என்னைப் பார்த்தான். ரகசியமாக டேய் சார், ப்ரையர் வெளியில் (காமன் பிரையர் ) வைக்க போகின்றார் என கூறினான். அதற்குள் பெண் குழந்தைகள் சார் ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே.. என கை குலுக்கி, எனக்கு ஒரு கடலை உருண்டையை தந்தனர். மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டேன்.

“சார், எங்க முன்னாடி சாப்பிடுங்க ”என்றான் ஒருவன். “ சார் சாப்பிடலைன்னா நானே ஊட்டி விட்டுவேன் ”என்றான் மற்றொருவன். “அதென்ன சோறாடா.. ஊட்டி விட.. வாங்கி வாயில திணிச்சுடுவேன்னு சொல்லு “ என்றான் மற்றுமொருவன்.அவர்கள் பேசுவதை கேட்டு, அனைவரும் ஹா ..ஹா என சிரித்தனர்.

இருந்தாலும் அத்தனை கொண்டாட்டமான பேச்சுக்களுக்கும் நடுவில் , கடிகாரத்தை பார்த்து கொண்டனர். மணி ஒன்பது பத்து ஆகியது. நான் ப்ரேயர் அழைத்துவிடுவேன் என பயந்த படி இருந்த என் வகுப்பு குழந்தைகள் , “சார் நாங்க எல்லோருக்கும் சாக்லெட் வச்சு இருக்கோம். நாங்க எல்லா டீச்சருக்கும் மிட்டாய் கொடுத்துவிட்டு வருகின்றோம்” என்று சென்றனர். சிரித்தேன். சரி என்றேன்.

ப்ரேயர் இருக்கிறதா ? தேசியக்கொடி கம்பத்தில் கட்டி வைக்கவா ?என கேட்க வந்த ஆசிரியர் குழந்தைகள் எனக்கு மிட்டாய் கொடுப்பதை பார்த்து, “சார் தான் உங்களுக்கு வாழ்த்து சொல்லி கை கொடுக்க வேண்டும் நீங்க வித்தியாசமா உங்க சாருக்கு கை கொடுத்து மிட்டாய் கொடுக்குறீங்க..?” என்றார்.

“மிஸ் அவரும் சின்ன பிள்ளை தான் மிஸ்.. பச்ச பாப்பா அவர்கிட்ட எல்லாம் நாம மிட்டாய் கேட்க கூடாது..” என்றாள் துடுக்கான மாணவி.

“சாரை இப்படி எல்லாம் பேசக்கூடாது. வாய் உங்களுக்கு ஜாஸ்தி. சார் உங்க பசங்கள கண்டிச்சு வைங்க.. உங்க குழந்தைகளுக்கு ரெம்ப தைரியம். இதே மாதிரி தான் எல்லா டீச்சர் கிட்டையும் பேசுதுங்க.. உங்களுக்கும் பயப்படுறதில்லை. அதனால எங்களையும் எதிர்த்து பேசுதுங்க “ என்றார்.

“நாங்க ஏன் பயப்படணும் ? தப்பு செஞ்சா தான் பயப்படணும். “ என்றான் என் வகுப்பு புத்திசாலி மாணவன்.

“அதானே, தப்பு செய்கின்றவன் தான் பயப்படணும்” என்றேன்.

அந்த ஆசிரியர் எரிச்சலுடன் “ நல்ல பிள்ளைங்க.. நல்ல ஹைச்சம்.. ” என காது பட ஏசி விட்டு சென்றார்.

“நல்லவிசயம் யாருக்கு தான் பிடிக்கும் “ என்றேன் நான்.

“சார் ரெம்ப பீல் பண்ணி உடம்ப கெடுத்துகிடாதீங்க ” என்றான் சுமாராக படிக்கும் மாணவன். எல்லோரும் சிரித்தனர்.

பின்பு ஓடி சென்று தங்கள் இஷ்டம் போல் எல்லா ஆசிரியர்களுடனும் கை குலுக்கி, மகிழ்ந்து தாங்கள் அணிந்து வந்திருந்த உடைகளை பிறருடன் காட்டி மகிழ்ந்து கொண்டனர்.

மணி 9. 40 ஆகி விட்டது. அனைவரும் நான் அழைக்காமலே வந்தமர்ந்து, பாரதிதாசனின் பெண்கல்வி குறித்த பாடலான “தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்று சொன்னால் உன் அன்னை” என்று கோரஸாக பாடத் தொடங்கினர்.

எப்போதும் போல் பழைய மாணவர்கள் எங்களை (ஆசிரியர்களை ) பார்க்க வந்தனர். என்னிடம் ஆசிர் வாதம் பெற்று சென்றனர். “சார் எப்பவும் இப்படி தான் பிள்ளைகள் இஷ்டம் போல் ஜாலியா இருக்க விடுவார். டெயிலி விளையாடுகின்றது போலத்தான் தெரியும், ஆனா நிறைய சொல்லி கொடுத்திருக்கார்ன்னு வெளியே போன பின்னாடி தான் புரியுது.. சார் நம்ம பிள்ளைகள் தான் எங்க போனாலும் பஸ்ட். எந்த கேள்விக்கும் பயப்படாம பதில் சொல்லுதுங்க.. நாங்க உங்க பெயரைத்தான் சொல்லுறோம் “ என்றார்கள்.

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களில் ஒருவர் தன் வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் , தன் வகுப்புக்கு வாழ்த்து சொல்ல வந்த அனைத்து குழந்தைகளுக்கும் சாக்லெட் வாங்கி கொடுத்தார். மதியம் அவர்கள் வகுப்பு முன் இருந்த எல்லா குழந்தைகளுக்கும் சாக்லெட் வழங்கினார்.

என் குழந்தைகளிடம் “என்ன உங்க சார் கொடுத்தார் ?” என அந்த ஆசிரியர் கேட்டு உள்ளார். ”அட போங்க டீச்சர், நேத்து நம்ம மோகன் சார் கிட்ட , நாங்க டீச்சர் டேயை கொண்டாடினோமே , நீங்க என்ன சார் செய்ய போறீங்கன்னு கேட்டான்”

“அதுக்கு அவரு நான் வேணும்ன்னா ஒரு டான்ஸ் ஆடி காட்டுறேன்னு சொல்லி ஆடிக்காட்டுறாரு மிஸ்..” “செம ஜாலி மிஸ்” கோரசாக.
“டான்ஸ்.. தான் ஆடி காட்டினாரா.. ஒண்ணும் தரலீய்யா..” என உசுப்பு ஏத்தி கேட்டுள்ளார்.
“ அதெல்லாம் தானா வரணும் மிஸ்.. உங்க கிளாசில் இருந்திருந்தா ..இந்நேரம் சாக்லெட் கிடைச்சிருக்கும்..” என ஒரு மாணவி ஏக்கத்துடன் கூறி மீண்டும் ஒரு சாக்லெட் பெற்று உள்ளனர்.

” ஆமா உங்க சார், இன்னைக்கு ப்ரேயாரே வைக்கல.. இதுல உங்களுக்கு
பெரிசா வாங்கி கொடுத்திட போறார்...” என அவர் அவர்களிடம் வேண்டுமென்றே வாயை கிளற..
“மிஸ் நாங்க தான் ஜாலியா இருப்போம். இன்னைக்கு ப்ரேயர் வேண்டாம் என சொன்னோம்.” என கத்தியுள்ளனர்.

“ ஆனா மிஸ் ..வகுப்பில ப்ரேயர் வச்சுட்டார் மிஸ்...நாங்க தலைவாரிப்பூச்சூடி ன்னு பாட்டு படிச்சா.. அப்புறம் படிப்போம் வகுப்பு ப்ரேயர் நில்லுன்னுட்டு .. ஆரம்பிச்சுட்டார்“ என்றனர்.

”நீங்க தான் காரணமா.. அதான் நேத்தே எல்லா ஆசிரியர்களும் வகுப்பில் ப்ரேயர் வைச்சு குழந்தைகள் தினத்தை வகுப்பறையில் குழந்தைகள் இஷ்டப்படி நடத்த வேண்டும் என சொல்லிவிட்டாரா “ என
சஸ்பென்ஸ் உடைத்த அதிர்ச்சியில் ஆசிரியர் ஆச்சரியப்பட்டுள்ளார்.

காலையில எல்லா பிள்ளைகள் வகுப்புக்கும் சென்று கை குலுக்கி , ஆடி பாடி ஓடி விளையாண்டதே ரெம்ப சந்தோசம் டீச்சர் என்று விடைப்பெற்றவாரே மதிய வாய்ப்பாடு, சொல்லுவதை எழுதுதல், போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கினர்.

மதியம் ஒன்றாம் வகுப்பு ஆசிரியருடன் நடந்த நிகழ்வை மாலை இடைவேளையில் சொல்லிவிட்டு சிரித்தனர்.
அதில் ஒருவன் “சார் எல்லோரும் மூக்கில விரலை வைக்கிற மாதிரி பொருள் வாங்கி கொடுங்க “ என்றான்.

“ குழந்தைகள் எப்போதும் தங்கள் விருப்பங்களை கூட, பெரியவர்கள் ஆச்சரியப்படும் விதமாக வேண்டுவார்கள் . ஆண்டவனின் சன்னிதானத்தில் ஒலிக்கப்படும் அத்தனையும் வேதங்களே/மந்திரங்களே எனில் குழந்தைகளின் மொழிகள் அத்தனையும் வேதங்களே/ மந்திரங்களே! ”

என் வகுப்பு குழந்தைகளுக்கு திங்கள் அன்று ஏதாவது வாங்கி செல்ல வேண்டும். என்ன தருவது யோசிக்க தொடங்கிவிட்டேன்.

இனி எழுதுவதை தொடர முடியாது.

மதுரை சரவணன்.

5 comments:

புலிகேசி said...

supperb

மகேந்திரன் said...

நிதர்சனம் நண்பரே...
கொஞ்சுமொழி பேசும் கள்ளம்கபடமற்ற
குழந்தைகளோடு எப்போதும் இருக்கக்
கிடைத்தவர்கள் பாக்கியவான்களே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறப்பான கொண்டாட்டம்.உண்மையான ஆசிரியரின் வகுப்பு இப்படித்தான் இருக்கும்.. மதுரையில் தங்களை சந்தித்தேன். என்றாலும் பேசி அறிமுகப் படுத்திக்கொள்ள முடியவில்லை

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தை மனம் இருந்து விட்டால் என்றும் சந்தோசம் தான்...!

”தளிர் சுரேஷ்” said...

கொடுத்து வைத்த குழந்தைகள்! கொடுத்து வைத்த ஆசிரியர்! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

Post a Comment