இறுக்கமான சூழல் நிலவியது. என் இதயத்தை யாரோ அமுக்குவது போன்ற உணர்வு. என்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்க இயலவில்லை. காற்றாடி சுழலும் சத்தம் காதுகளில் கேட்டாலும் உடல் வியர்த்து கொட்டியது. என் அருகில் படுத்திருக்கும் என் மனைவி எந்தவித சலனமுமில்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். என்னால் அதற்குமேல் அந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. எழுந்திருக்க முயன்றேன்.அச்சமயம் பூனையின் கத்தல் என் காதுகளில் கேட்கத் தொடங்கியது. நீங்கள் பூனையின் சத்தங்களை கவனித்து இருப்பீர்களானால் , இந்த சத்தம் பூனை தன் இரையை தாக்கி பிடிப்பதற்கான சத்தம் என கேட்ட மாத்திரத்தில் சொல்லி விடுவீர்கள். மெல்லிய உறுமலுடன் , மெதுவாக காலடி எடுத்து வைத்து , தாக்க தயாராக இருக்கும் சூழல் என்பது மட்டும் புலப்பட்டது. என் காதுகளில் அருகில் கேட்ட அந்த உறுமல் ,என்னை எச்சரிக்கைப் படுத்தவே, என்னை தாக்க வருவதாக உணர்ந்த நான் சட்டென படுக்கையிலிருந்து எழுந்து ஓட முற்படுகையில் தான் , நான் ஒரு கரப்பான் பூச்சியாக மாறியிருப்பதை உணர்ந்தேன். அதுவும் இறக்கை பறக்கும் அளவுக்கு முளைத்த முதிர்ந்த கரப்பான் பூச்சி. என் உயிரை கையில் பிடித்து பறந்தேன். பாருங்கள் , நான் ஒரு மனிதன் என்ற உணர்வு இன்னும் நீங்காமல் பேசிக் கொண்டிருக்கிறேன்.
வேகமாகப் பறந்த நான், ஜன்னல் கதவின் திரைச்சீலையில் அமர்ந்தேன். பூனை என்னை விடுவதாயில்லை. அதுவும் தவ்வியது. அதன் கூரிய நகங்கள் என்னைப் பயமுறுத்தின. நகங்கள், தவ்வி என்னை பிடிக்க முற்படுகையில் நீளமாக நீண்டு அதன் கால் விரல்களில் இருந்து வெளிப்படுவதைப் பார்க்கும் போது என் அலறல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. ஆனால் ஒரு கரப்பான் பூச்சியின் கத்தல் யார் காதுகளிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. சாதாரணமாகவே என் கத்தலை அவள் பொருட்படுத்துவதில்லை. அதுவும் கரப்பான் பூச்சியாக இருக்கும் போதா கேட்க போகிறது. அவள் அசையாமல் ஆடாமல் ஒரு சடலத்தை ப் போன்றே படுத்திருந்தாள். என் மரண வேதனையை அவள் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு வினாடியும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இப்போதைக்கு இந்த பூனையிடமிருந்து தப்பிப்பது மட்டுமே என்னுள் ஓடியது. ஜன்னல் திரைச்சீலையில் ஒளிந்து , அதன் கண்களுக்கு தெரியாமல் , வரவேற்பு அறையை நோக்கிப் பறந்தேன். என் நிழல் அதன் கண்ணில் பட , ஒரே தாவாகத் தாவி என் கணுக்காலில் அதன் நகங்கள் முட்ட , பிடிக்கத் தவறியது. என் பின்னங்காலில் ஒரு கணுப் பகுதி அறுந்து விழுந்திருந்தது. அதன் வேதனை என்னை வாட்டி எடுத்தது. தாங்க முடியாத வேதனையில் , மிதியடியின் அடியில் ஓடி ஒளிந்தேன். என் கால்களில் எந்த இரத்தப் போக்கும் ஏற்பட வில்லை. ஆனால், என்னால் வலியைத் தாங்க முடியவில்லை. அலறலாம் என்றால் , பூனை தற்போது அந்த மிதியடியின் மேல் அமர்ந்து என்னைத் தேடிக் கொண்டிருந்தது.
மிதியடியிலிருந்து பூனைக்குத் தெரியாமல் எங்காவது ஓடிவிடலாம் என்று தலையை வெளியில் தெரியாதது போல நீட்டிப் பார்த்தேன். ஹாலில் சோபாவில் என் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் பால் ராஜ் , அதே இளைமையுடன் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் என் கல்லூரி சைக்காலஜி புரபசர் சாம் ஜார்ஜ் ,அவரின் வலது பக்கத்தில் என் எதிர்வீட்டு ராமநாதன் , அவனுக்கு வலது பக்கத்தில் தனியாக மடக்கு நாற்காலியில் என்னுடன் பணிபுரியும் சேதுராமன். அவருக்கு அருகில் வெள்ளை அங்கி உடுத்திய முகம் அடையாளம் தெரியாத ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தத் தோன்றியது. அவர்கள் எப்படி என் வீட்டில் அதுவும் இந்த நடுராத்திரியில் ? எப்படி உள்ளே வந்தார்கள் ? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பூனையில் வால் மிதியடியின் அடியில் நுழைந்து என்னை தடவியது. பயந்து அலறி ”என்னை காப்பாற்றுங்கள் பால்ராஜ் சார்..” என அவரின் காலடியின் அருகில் சோபாவின் இடுக்கில் ஒளிந்தேன். வேகமாக ஓடிவந்த பூனையை சாம் ஜார்ஜ் , “ச்சீ, போ..பேசி கிட்டு இருக்கோமில்ல ”என விரட்டினார். அது அவருக்கு பயந்து வாசல் அருகில் ஓடியது. அப்பாடா என பெருமூச்சு விட்டு கால் வேதனையில் துடித்தேன். அப்போது தான் பார்த்தேன் . பூனையில் வாயில் என் இறக்கையின் ஒரு பகுதி இருந்தது. ஒடிந்த ஒரு இறக்கையுடன் பறக்க முற்பட்டேன். முடியவில்லை. நான் பறக்க மீண்டும் முயற்சிக்கையில் , பால் ராஜ் என்னைப் பார்த்து விட்டார். “இந்த கரப்பான் பூச்சியைப் பிடிக்கத் தான் , உங்க பூனை வேகமா ஓடி வந்திருக்கு... பாவம் சார்”.” அப்பவே, அந்த பூனை பிடிச்சிருக்கும்ன்னு நினைச்சேன்... தப்பிச்சிடுச்சு... இப்ப அந்த கரப்பான் பூச்சியை வெளியே இழுத்துப் போடுங்க.. பூனை எப்படி பிடிக்கும்னு பார்ப்போம்”என வெள்ளை அங்கி உடுத்தியவர் பேச எனக்குக் கோபம் வந்து அவரை நோக்கி கடிக்க ஓடினேன். நான் வெளியில் வந்ததது தான் தாமதம் ,அதன் கால்களால் அழுத்திப் பிடித்து , அதன் கூரிய நகங்களால் என்னை அழுத்தி கொல்ல முயன்றது. அதன் நகங்கள் என் தடித்த தோலில் செல்ல முடியவில்லை. எனவே , அது என்னை விடுவித்தது. பின் ஓட ஆரம்பித்தேன். மீண்டும் அது தன் காலால் அழுத்தி பிடித்தது. இம் முறை அது தன் கூரிய நகங்களால் என் வயிற்றுப் பகுதியில் குத்தியது. லேசாக அது கீறலை ஏற்படுத்தியது. அது எனக்குத் தாங்க முடியாத வேதனையைத் தரவே , உருள ஆரம்பித்தேன். அது மீண்டும் என்னை பிடிக்க முயல... சேதுராமன் பூனையை விரட்டி அறையில் அடைத்தார். என்னை தன் கரங்களால் என் மீசையைப் பற்றி தூக்கி வெளியில் எறிந்தார்.என் மீசையின் ஒன்று பிய்ந்து வெளியில் விழுந்தேன்.
நான் இதற்கு முன் பார்த்திராத ஒரு இடமாக இருந்தது. சுற்றிலும் மரங்கள் நிறைந்து இருந்தன. அடர்ந்த , உயர்ந்த பசுமையான மரங்களை நான் இதுவரை பார்த்ததேயில்லை. என்னை சுற்றி வெள்ளையானைகள் நின்று கொண்டு இருந்தன. நான் இப்போது சற்று கனத்து இருப்பதாகப் பட்டது. எழுந்திருக்க முற்பட்டேன். எழுந்திருக்க முடியவில்லை. திடீரென அங்கிருந்த ஒரு யானை பிளிர ஆரம்பிக்கவே அதன் அலறலை என்னால் தாங்க முடியவில்லை. என் காதுகள் மிகவும் நீண்டிருந்தது. கைகள் இல்லாதது போல உணர்வு. எழுத்திருந்த போது நான்கு கால்கள் இருப்பதாய் உணர்ந்தேன். கால்களில் எந்த சேதமும் இல்லை. ஆனால், பூனை கடித்த வேதனையை உணர்ந்தேன்.தத்தித் தத்தி நடக்க ஆரம்பிக்க ,ஒரு சிறிய ஓடையை அடைந்தேன். தாகம் அதிகரிக்கவே ஓடையில் குனிந்த போதுதான் நான் இந்திய யானையாக மாறியிருப்பதை உணர்ந்தேன்.
சுற்றியிருந்த யானைகள் என்னைத் தடுத்தன. இருப்பினும் ஓடையில் கால் பதிக்க எத்தனித்த போது என் காலை கூரிய பற்கள் கவ்வுவது போல உணர்ந்து வெடுக்கென தூக்க , முதலை தாக்க முயன்றது.அருகில் இருந்த யானை முதலையைத் தாக்கவே நான் வேகமாக ஓடினேன். என்னை பின் தொடர்ந்து அந்த வெள்ளையானைகளும் ஓடிவந்தன. நாங்கள் ஓட ஓட ஒருமுதலை இரு முதலையாக மாறியது. பின் இரண்டு நான்காக, நான்கு எட்டாக,எட்டு பதினாறாக, பதினாறு முப்பத்திரண்டு , அறுபத்தி நான்கு என முதலைகள் பெருகி துரத்தத் தொடங்கின.என்னுடன் ஓடிவந்த வெள்ளை யானைகள் பறக்கத் தொடங்கின. குறிப்பிட்ட பகுதி வந்த போது முதலைகள் நின்று விட்டன. மூச்சு முட்ட , கண் மண் தெரியாமல் ஓடினேன். முதலைகள் நின்று விட்டது தெரியாமல் நான் ஓடுவதைப் பார்த்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை ”அங்கிட்டு போகாதிங்க ..” என்றது. அதன் குரல் என் இளைய மகனின் குரல் போன்று ஒலித்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு பெரிய குழிக்குள் விழுந்தேன். “இனி அவனை யாராலும் காப்பாற்ற முடியாது” என கூட்டத்தில் வயதான யானை கூறியது என் காதுகளில் ஒலித்தது.
குழியில் விழுந்த நான் நேராக ஒரு மெத்தையின் மீது விழுந்தேன். விழுந்த மாத்திரத்தில் என் மீது ஒரு போர்வை விழுந்தது. நான் இப்போது மிகவும் சிறிய உருவமாக மாறி யிருந்தேன். என் எதிரில் உள்ள பெரிய கண்ணாடி நான் ஒரு எலியாக மாறி இருப்பதை உணர்த்தியது. அது என் அறை அல்ல. என் அருகில் என் மனைவி இல்லை. அனால் தெரிந்த பெண்ணின் முகமாக இருந்தது. கூர்ந்து கவனித்தேன். அது நான் இளம் வயதில் காதலித்த லதா .அவள் அருகில் அவளது கணவன். லதாவை இவ்வளவு அருகில் நான் பார்த்ததே யில்லை. அவள் இன்றும் அழகாகத் தான் இருந்தாள். அவள் புன்னகையுடன் என்னைப் பார்த்து சிரிப்பதாக உணர்ந்தேன். தீடீரென மீண்டும் அதே பூனையின் உறுமல் ..... என் இதயம் அடைத்தது. மூச்சு முட்டியது. சாவு பயம் என்னை தொத்தியது. அது என்னைத் தாக்கத் தயாராக இருந்தது.
இதிலிருந்து என்னை காப்பாற்ற பின்வரும் சாத்தியக் கூறுகள்தான் உள்ளன.
1.இந்தக் கதையை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் யாராவது ஒருவர் 23 காமராசர் சாலை, மதுரை என்ற என் முகவரிக்கு வந்து காலிங் பெல் அழுத்தி , என் மனைவி கதவு திறக்கும் போது விபரத்தைக் கூறி, என்னை கனவிலிருந்து விடுவிக்க, என் தலையில் ஒரு பக்கெட் நீர் ஊற்றி உசுப்பி விடச் செய்யலாம்.
2. பூனைகளிடம் இருந்து எலிகள் எப்படி தப்பிக்கின்றன என்ற புத்தகத்தை பத்து முறைப் படித்து கரைத்துக் குடித்த ஸ்ரீதருக்கு 8745632167 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு என்னை காப்பாற்றலாம்.
3.இந்த கதையை வாசிக்கும் யாருக்காவது கனவுக்குள் புகும் திறன் இருப்பின் , என் கனவுக்குள் புகுந்து தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்.
6 comments:
யப்பா..முடியல...நல்ல ஒரு டாக்டர் ஐ பாருங்க....
அவருதான் உங்களை காப்பாத்தனும்
இபுபடி ஒரு கனவா? இல்லை!இது ஒரு கதையா?
நம்பமுடியவில்லை.
சா இராமாநுசம்
கதை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.
தஙகளுக்கு ஏற்ட்டுள்ள ஏதோ ஒரு தொல்லைதான் கனவவுக்குக் காரணம். அது பணத்தொல்லையாககூட இருக்கலாம். நம்மால் பிரச்சினைய எதிர் கொள்ள முடியும் என்று நம்புங்கள் நம்பிக்கை நிதானமூட்டும். நிதானம் சிந்திக்கச் சொல்லும். சிந்தனை தீர்வினக் காட்டும். மற்றவர் நம்மைக் கவனிக்கவேண்டும் என்ற சுய பச்சாதாப உணர்வு வேண்டாம். யாராவத்உ உஙளை ஏமார்ற்றி இருந்தால் சொல்லுங்கள் தீர்த்து வக்க முடியும். எனது சரவணன் தூக்கமின்றியும் இருக்கக் கூடாது. கண்கலஙகவும் கூடாது, எந்தச்சாமியாராலும் உதவவும் முடியாது.
அன்பின் சரவணன் - கதை நன்று - நல்லாவே போய்ட்டிருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment