Monday, February 13, 2012

மாணவனை தண்டிக்க கோரும் அதிகாரம் –ஆசிரியரின் இயலாமையே!


    புலியின் வேட்டைக்கு இணையான ஒரு சம்பவம். புலி தன் எதிரியின் குரல் வளையை மட்டுமே குறி வைத்து தாக்கும் . அதே போன்று சற்றும் எதிர் நோக்காத நேரத்தில் தாக்குதல் , அதில் நிலைக் குலைந்து உயிரை போக்கிக் கொண்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின் இறப்பு என்னை மட்டுமல்ல , இந்தியாவையே உலுக்கி உள்ளது.

    செய்தி தாள்களில் பக்கங்களை நிரப்பும் செய்தியாக இது மறைந்து விடக்கூடாது. இதன் பின்னியை கல்வித் துறை ஆழமாக ஆராய வேண்டும். பல மாற்றங்களை கொண்டு வரும் தமிழக அரசு , மாணவர்களின் மன அழுத்தத்தின் பின்னனியை முழுமையாக ஆராய்ந்து கடுமையான சட்டங்களை கையாள வேண்டும்.

    உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பான மாணவர் தண்டனை சட்டம் ரத்து முற்றிலும் அமலுக்கு வராமல் இருப்பதற்கு யார் காரணம்? ஒரு கொலையை வைத்து ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் அதிகாரம் வேண்டும் என கேட்பது ஆசிரியர்கள் அற்பணிப்பு அற்று  நிலையையே குறிப்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.

     திரைப்படங்கள் வன்முறையை புகுத்துகின்றன, டி.வி. சீரியல்கள் தவறான பாதைக்கு மாணவனை அழைத்துச் செல்கின்றன என்பதையும் காரணமாக கூறும் நல் ஆசிரியர்களே தயவு செய்து அவர்களை நல் வழிப்படுத்த , இவை தவறு என உணர்த்த தவறியதேன். இது யார் கடமை?
“பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்: ஆனால் அவன் நன்றாக படிக்க வேண்டும்.” அன்று மட்டுமல்ல, இன்றும் இப்படி தான் சொல்கிறார்கள் பெற்றோர்கள். என் பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவர்களை அடித்து வருகிறார். நானும் பல சர்க்குலர்களை அள்ளி வீசி எச்சரிக்கை விடுத்துள்ளேன். நிர்வாகத்திலும் புகார் அளித்து , உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளேன். பெற்றோரை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க எழுதி தருமாறு கேட்டால் அவர்கள் சொல்வது இது தான், “காயம் படாமல் அடிக்கட்டும் , அடிச்சால் தானே நல்ல படிப்பான், அடிக்கட்டும்; ஆனால் காலுக்கு கீழே மட்டும் அடியுங்கள் என அவரை கண்டிக்க சொல்வதுடன் வேறு எதுவும் செய்வதில்லை.” சிலர் எழுதி தந்தாலும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதில்லை. இது தான் நிலமை. மாணவர்களை நாம் தொடாமல் இருக்கிறோமா என சுய ஆய்வுக்கு உட்பட்டு இக்கோரிக்கையை வைப்பது நல்லது. அல்லது சட்டப்படி தண்டிக்கும் உரிமையை கேட்பதாகவே அர்த்தப் படுத்தப்படும்.

      மாணவர்களை தொடுவதால், தண்டிப்பதால் நல்வழிப் படுத்த முடியும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

      இன்று மதிப்பெண்களை குறிவைத்து இயங்கும் கல்வி நிறுவனங்கள் பெருகி விட்டன. மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆசிரியர்களும் வகுப்பறையில் செயல்பட தொடங்கி விட்டனர். இயந்திரத்தனமான  திணிப்பு , மாணவனுக்கு மன உளைச்சலை தருவதுடன், அவன் ஆசிரியரிடம் இருந்து தனிமைப் பட்டு விடுகிறான். 

      ஆசிரியரும் மாணவனுடைய மன நிலையை எப்போதும் புறக்கணிப்பவராகவே செயல்பட்டு வருகிறார். ஆசிரியர் மாணவர் உறவு பூஜ்ஜிய நிலையில் அனைத்து பள்ளிகளும் செயல் படுகின்றன என கூறுவது கசப்பாக இருந்தாலும் அது தான் நிஜம்.

   மாதத் தேர்வு, அதன் முன் வகுப்பு தேர்வு, அப்புறம் யூனிட் தேர்வு, அதன் தொடர்ச்சியாய்  ரிவிசன் டெஸ்ட் என அனைத்தும் திணித்தல். தேர்வில்  தவறும் போது கடுமையான சொற்களால் சாடும் ஆசிரியர்கள் மீது தானாகவே வெறுப்பும் , பகையும் கொள்வது உளவியல் ரீதியாக மறுக்க முடியாத உண்மை. இதுவே மாணவன்  மோசமான பாதையை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது.

     அவன் மன ரீதியாக ஒண்றியுள்ள ஒரே தளம் சினிமா. அவன் தேடும் அத்தனை மகிழ்ச்சியும் கொட்டிக் கிடக்கிறது. அவனுக்கு கிடைக்காத சுதந்திரம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதால் , கதாநாயகனாகவே உருமாறுகிறான். சண்டைகளும் , வன்முறைகளும் நிரம்பி வழியும் சினிமாவில் , மன உளைச்சல், மன அழுத்தத்திற்கு உள்ளான அவன் ,எதிரியை தாக்கும் போதேல்லாம் தானே தாக்குவதாக கற்பனை செய்கிறான். அதுவே அவனின் சொந்த வாழ்வில் தொடரும் போது நிஜமாக்கிப் பார்ப்பது இயற்கையே. மாணவன் செயலுக்கு நான் நியாயம் கற்பிக்க வில்லை. எங்கு தவறு தொடங்குகிறது? தயவு செய்து உற்று நோக்குங்கள்; Sorry,   ஆராயுங்கள்.

    ஏற்கனவே என் பதிவில் சாரதா மடத்தைப் பற்றி குறிப்பிடும் போது , அங்கு மாணவர்களுக்கு சினிமா பகிரப்படுகிறது. சினிமா முடிந்தவுடன் காட்சிக்கு காட்சியாக  நல்லவை கொட்டவை என ஆசிரியர்கள் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அலசி ஆராயகிறார்கள். பெற்றோர்களாவது தாம் பார்த்த திரைப் படத்தை தன் குழந்தையிடம் இது தவறு , இது நன்று என ஆராய்கிறார்களா? இல்லை . சினிமாவை வாழ்க்கைக்கு உதவும் தளமாகவே பயன்படுத்தும் உளுந்தூர் பேட்டை சாரதா ஆசிரமம் எங்கே? நம் பள்ளிகள் எங்கே?

    சாரதா ஆசிரம மாணவர்கள் டி.வியில் பாய்ஸ் படம் போடுவதை கேபிள் வயரை அறுத்து தடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளேன்.படிக்கும் வயதில் காதலிக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுடன் , வீட்டை விட்டு வெளியேறுவதை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அம்மாணவன் கருதியதால் தடுத்துள்ளான்.
  
    எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தை தான் . அவன் வளர்ப்பில் தான் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றப்படுகின்றான். நம்முடன் பன்னிரண்டு மணி நேரங்களுக்கு மேலாக மாணவர்கள் இருக்கிறார்கள். ( காலை எட்டு மணிக்கு வரும்(சில பள்ளிகளில் ஏழு மணிக்கு ) மாணவன் மாலை ஸ்பெசல் கிளாஸ் முடிந்து வீடு செல்லும் நேரம் இரவு மணி எழு முதல்  எட்டு . அதற்கு பிறகு டியூசன் வேறு   ). தயவு செய்து ஆசிரியர்கள் நம் மீதுள்ள குறைகளை களையவும், எதிர் காலத்தில் இது போன்று எந்த உமா மகேஸ்வரியையும் கொலை செய்யப்படாமல் இருக்கவும் , நாம்  தீவிர அக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

     தமிழக அரசு பாரபட்சம் இன்றி மாணவர்கள்  மன உளைச்சல், மன அழுத்தம் தரும் கல்வி முறையை தடுக்கவும் , மாற்று முறையினை தேர்ந்தெடுக்கவும் ஆராய்ச்சி குழு அமைத்து நம் மாணவர்களை நல்வழிப் படுத்த வேண்டும். சுதந்திரமான கற்றல் சூழல், உண்மையான திறமைக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் கல்வி முறை கொண்டு வர வேண்டும். 
     
     மனப்பாடம் எடுத்து வாந்தி எடுக்கும் கல்வி முறை மாற தேர்வு முறையினை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். உயர் கல்வி பயில வேறுவிதமான நுழைவு முறையினை ஏற்படுத்தி தரவேண்டும்.
  

6 comments:

Jeyamaran said...

*/ மனப்பாடம் எடுத்து வாந்தி எடுக்கும் கல்வி முறை மாற தேர்வு முறையினை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். உயர் கல்வி பயில வேறுவிதமான நுழைவு முறையினை ஏற்படுத்தி தரவேண்டும்.*/

Intha mathiriyana muraikkagathaan nanum kathirukkiren sir. kalvi enbathu arivai valarppatharkku enra nilai maari ippothu mathippen eduppatharkku enru agivittathu...........

Starjan (ஸ்டார்ஜன்) said...

வருத்தமான சம்பவம்.. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒளியாய் இருப்பவர்கள்.. இருள் சூழ ஆரம்பிக்கும்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது. ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது அவரது சுயலாபத்திற்கோ மற்றதுக்கு கிடையாது. அது மாணவர்ரின் நலனுக்காக‌தான் என்பது ஏன் புரியவில்லை மாணவர்களுக்கு?..

Starjan (ஸ்டார்ஜன்) said...

மாணவர்கள் ஆசிரியர்களை எதிரியாக நினைக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?

அமைதி அப்பா said...

ஆசிரியர், மாணவன், பெற்றோர், சமூகம் மற்றும் அரசின் வழிக்காட்டுதல் அனைத்தும் உடனடி தேவை என்பதை கட்டுரை நன்றாக விளக்குகிறது.

Sankar Gurusamy said...

அற்புதமான அலசல்... இந்த ஆசிரியை கொலையுண்ட விவகாரத்தில் இவ்வளவு தெளிவான அலசல் நான் முதல்முறை படிக்கிறேன்.

நம் கல்விமுறையில் தவறு என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. எப்படிப்பட்ட கல்வியிலும் கற்பவர்களுக்கும் கற்பிப்பவர்களுக்குமான உறவு என்பது மிக முக்கியம். அந்த காலத்தில் ஆசிரியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள்போல இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்க அனுமதிக்கப்பட்டிருகிறார்கள். ஆனால் இன்றைய பள்ளி நிர்வாகங்கள் இப்படிப்பட்ட நிலையை அனுமதிக்குமா?? ரிசல்ட் காட்ட ஆசிரியர்களை நிர்பந்திக்கும் நிர்வாகங்கள்தான் இதில் முதல் குற்றவாளி.

மாணவர்களின் கற்றல் வேகம் எப்படிப்பட்டது என அனுமானித்து சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் எங்கே இன்று இருக்கின்றன? அள்ளித்தெளித்த கோலம் போல வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்து கற்க முடியாத மாணவர்களின் பெற்றோரை கற்பிக்க நிர்பந்திக்கும் பள்ளி நிர்வாகங்கள்தான் இங்கு பெரும்பான்மை. இப்போதைய கல்வி முறையில் சிலபஸ் குறைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நிலை தெளிவாக உணர்த்துகிறது.

மாணவர்களின், பெற்றோரின் மன அழுத்தத்துக்கு இன்னொரு காரணம் பள்ளிகள் தங்கள் கற்பிக்கும் கடமையை பெற்றோருடன் பெருவாரியாக பகிர்ந்துகொள்ள நினைப்பதே. பெற்றோர் தம் குழந்தைகளுடன் செலவிட நினைக்கும் அந்த குறைந்த நேரத்திலும் பாடம் சொல்லிக் கொடுக்க நிர்ப்பந்திக்கும்போது குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படாமல் இருந்தால் அதுதான் ஆச்சரியம்.

இன்று விளையாட்டு என்பது இயல்பான நிலையில் இருந்து அபூர்வமான ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி ஆகிவிட்டது. இதுவும் ஒரு இலக்கை நோக்கி செலுத்தப்படும் இன்னொரு மன அழுத்தம் தரும் நிகழ்வாக ஆனதால் பெரும்பாலான குழந்தைகள் விளையாடுவதையும் புறக்கணிக்கும் பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள்..

மொத்தத்தில், கல்வி, பள்ளிகளின் முழுநேர கடமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாணவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான நேரங்களை செலவிட முடிந்தாலே இந்த பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்றே நான் நினைக்கிறேன். இதில் அரசாங்கம் சிலபஸை ஓரளவுக்கு குறைத்து அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தினால் இன்னும் நல்லது.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

இ.வெள்ளத்துரை said...

ஒரு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் அன்பாலும் உளவியல் ரீதியாகவும் மட்டுமே நல்வழிப்படுத்தலாம் என்பதுவும் மிகத் தவறான கருத்தாகும்...

Post a Comment