Tuesday, March 22, 2016

யாரை பிடிச்சா காரியம் நடக்கும்? !




இன்று மாலை அமைதியாக அம்மா வீட்டில் அமர்ந்திருந்தேன். வாசலில் யாரோ நிற்பது போல் நிழலாடியது. யாரே வருகின்றார்கள் என நினைத்து எழுந்து வாசல் கதவை  திறந்தேன். இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள். என் மொட்டை தலையை பார்த்ததும், கொஞ்சம் அதிர்ந்து , மெதுவாக பேச துவங்கினார்கள். “சார், ஸ்கூலில் சேர்ப்பது போல் குழந்தை இருக்கின்றதா?” என ஆரம்பித்தார்கள். “ம் “ என்றேன். மதுரையில் சமீபத்தில் தொடங்கிய மெட்ரிக் பள்ளியில் இருந்து வந்திருந்தனர்.

“சார்.. எங்க பள்ளியில் சேருவதற்கு ஒரு லட்சம் டெபாசிட் கட்டணும். அதற்கு நாங்க ஸ்கூல் அருகிலேயே ஒரு கிரவுண்டு இடம் பதிந்து தருகின்றோம். நீங்க விரும்பினா இரண்டாவது வருடம் படிக்கும் போது அங்க வீடு கட்ட நாங்களே லோன் வாங்கி தருகின்றோம். பீஸ் கட்டுற மாதிரி எங்க ஆபீஸ்லேயே நீங்க லோன் அமண்ட கட்டிக்கலாம். உங்க பையனோட கனவோட உங்க கனவும் நிறைவேறி விடும். பள்ளிக்கூடமும் வீடும் ஒண்ணா இருந்தா.. பிள்ளைகள் படிப்புக்கு பல மைல் தூரம் செல்ல வேண்டியது இல்லை” என என் வாயை அடைத்தனர்.

இன்னும் என் வாசலில் நிழல் ஆடிக் கொண்டு தான் இருக்கின்றது. அம்மா இறந்த துக்கத்தில் மன பிரமை எதுவும் பிடித்து விட்டதா? என யோசிக்க தொடங்கினேன்.

என் பள்ளி தோழன் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் வின்செண்ட் கதவை திறந்து உள்ளே வந்தான். “என்னடா… ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இன்று தான் ஆசிரியர்கள் கூறினார்கள் “ என துக்கம் விசாரித்தான். கவலைப்படாதே..! உனக்கு நண்பன் நான் இருக்கின்றேன் என்று ஆறுதல் கூறினான். மாமா , அக்கா எங்கே என விசாரித்தான். ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் வந்து ஆஸ்பத்திரியில் பார்த்திருப்பேனே என்றான். ஏண்டா அப்பலோ கிப்பலோன்னு நல்ல மருத்துவ மனையா சேர்த்திருக்கலாம் என்றான். அம்மா போக வேண்டும் என்று விதி. அம்மா இல்லாமல் தவிக்கவேண்டும் என்பது கர்ம பலன் என கூறினேன். மனச தேத்திக்க என கூறி கதவை சாத்தி சென்றான்.

அப்போலோவை பற்றி மனம் பயணித்தது. கிரேக்கர்கள் உடல் நலத்துக்கும் மருத்துவ கலைக்கும் தலைவனாக அப்போலோ எனும் கடவுளை வணங்கி வந்தார்கள். கிரேக்க புராணங்களில் அப்போலோவின் மருத்துவத் திறன்கள் குறித்து கொட்டி கிடக்கின்றன.

ஆஸ்பத்திரியில் இருந்த போது பலரின் குரலாக இதுவே இருந்தது. “ என்னப்பா.. இப்ப வைத்தியம் பார்க்கிறாங்க.. எல்லாத்துக்கும் ஒரு டெஸ்ட். அதுக்கு மேலே.. ஸ்கேன் ..ஸ்கேனுன்னு எடுத்து தள்ளி, ரிப்போர்ட்டுக்கு வெயிட் பண்ணி, பண்ணியில்ல வைத்தியம் பார்க்கிறாங்க..? அப்ப எல்லாம் நாடி பிடிச்சா போதும். இதுதான் வியாதி. இது தான் மருந்து. இந்த வியாதிக்கு இதை  உணவா எடுத்துக்கணும். இந்த உணவை தவிர்க்கணும்ன்னு டக்கு டக்குன்னு சொல்லிபுடுவாங்க… இப்ப எல்லாம் வைத்தியம் காச பிடுங்கிற வேலையா இருக்கு!”    

நோய்களை நலமாக்கும் ஒரு சிறந்த மருத்துவராக மட்டும் இல்லாமல், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றவராக மருத்துவர் இருந்தால் எப்படி இருக்கும்! கிரேக்க புராணங்களில் அப்படி ஒரு மருத்துவர் இருந்தார்.  அவர் அப்போலோவின் மாணவனான, ஏஸ்கிலிபியாஸ் ஆவார். இறப்பவர்களை உயிர்ப்பித்ததால், சிக்கல் உருவானது! கிரேக்கர்களின் தலைமைக் கடவுளான சீயஸ், ஏஸ்கிலிபியாசின் மருத்துவ பணியில் குறுக்கிட வேண்டியதாயிற்று. ஆகவே, வான் இடியை வரவழைத்து ஏஸ்கிலிபியாசை கொன்றதாக, வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. கொல்லப்பட்ட பின்பும் ஏஸ்கிலிபியாசின் புகழ் அழியவில்லை. அவரது பெயரால், கிரேக்க நாடெங்கும் ‘ மருத்துவ கோவில்கள்’ நூற்றுக்கனக்கில் தோன்ற ஆரம்பித்தன.

இத்தகைய கோவில்களுக்கு நோயாளிகள் சென்று, உடலையும், மனத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு அருகேயுள்ள திறந்த வெளிகளில் படுத்து உறங்குவார்கள். இரவில் ஏஸ்கிலிபியாஸ் கனவின் மூலமாகவோ, நேரடியாகவோ வந்து நோயாளிகளைத் தொட்டு, நலமாக்குவதாக கிரேக்க மக்களிடையே நம்பிக்கை நிலவி வந்தது. பல பண்டைய மருத்துவக் கோவில்களின் இடிந்த பகுதிகளை கிரேக்க நாட்டில் இன்றும் பார்க்கலாம்.

பொதுவாக மருத்துவர்களை மக்கள் அனைவரும் கடவுளாகத்தான் பார்க்கின்றார்கள். கையை கூட தொட்டு பார்க்காமல் வைத்தியம் பார்க்கும் மேல்மட்ட வைத்திய முறையை நினைக்கும் போது கொஞ்சம் கவலையை வரவழைக்க தான் செய்கின்றது. ஃபேன் காற்றில் மாணவர் சேர்க்கை நோட்டீஸ் பறந்தது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது கொஞ்சம் பீதியை தான் கொடுக்கும் போல் தெரிகின்றது. யாரை என்ன செய்வது என்று தெரியவில்லை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்கவே நினைக்கின்றார்கள். என் நண்பர் காமராஜ் அவர்களின் குழந்தையை சேர்க்க நண்பர்கள் குயவர் பாளையம் ரோட்டில் முதல் நாள் இரவு ஒன்பது மணியில் இருந்தே காத்திருந்தது மனதில் வந்து சென்றது. இன்றும் மார்ச் கடைசியில் அந்த பக்கம் ரோட்டில் மக்கள் படுத்திருப்பதை காணலாம். நல்ல பள்ளி என்பதற்கு பெற்றோர்கள் எதை அளவு கோலாக வைத்துள்ளார்கள்? பணமா? மதிப்பெண்ணா? குழந்தைகளின் ஒழுக்கம் சார்ந்த செயலா? குழந்தைகளின் முழு திறன் வெளிப்படுத்த முன்னெடுக்கும் பள்ளியா? இவை புரியாத புதிரே!

என் நண்பரை பார்த்து கேட்டேன்,  “உன் பிள்ளையை உன் பள்ளியில் சேர்ப்பாயா?” ”சேர்ப்பேனே …ஏன் கேட்கின்றாய் ?” என கேட்டார்.  “உண்மையாகவா ! மன சாட்சியுடன் சொல்லு..”  என்றேன்.  “ உண்மையான்னா.. என் மகன என் பள்ளியில் ஒன்றாவது, அப்புறம் நான்காவது, ஐந்தாவது மட்டுமே சேர்ப்பேன்” என்றான்.  சிரித்தேன்.  உண்மை. அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிலமை இதுதான். ஒரு சில ஆசிரியர்களை வைத்தே பள்ளிகள் இயங்குகின்றன. இந்த உண்மை கசக்க தான் செய்யும். எந்த பள்ளியிலோ மாணவர்கள் படித்தால் சரிதான்.

20 – 03-2016 இரவு நீயா நானா வில் இளங்கோ கல்லாணையின் பேச்சு அற்புதமாக இருந்தது. கேட்கவில்லை என்றால் யூ டியூப்பில் ஆவது பார்த்து அவரின் சீற்றத்தை உள்வாங்கி கொள்ளுங்கள். பத்ரி சொல்வது போல் இங்கு பள்ளிக்கல்வி அளவிலாவது அரசே பள்ளிகளை எடுத்து நடத்த வேண்டும். தனியார் கைகளில் பள்ளிகல்வி இருப்பது தான் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம்.
பொது கல்வி முறை ஏற்படுத்த முடியுமா? தெரியவில்லை. ஆனால், பரவலாக பொது கல்வி குறித்த பேச்சை எடுத்து செல்வதன் வாயிலாக பெரும் போராட்டம் ஏற்படுத்தி, கல்வி அரசு மட்டுமே நடத்திட வேண்டும். அதையும் இலவசமாக தந்திட வேண்டும். கட்டாய இலவச கல்வி சட்டமே சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகள் கடந்தே நமக்கு கிடைத்துள்ளது. பொது கல்வி குறித்து நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் தான்?

இரவு வீட்டிற்கு சென்றேன். என் மனைவி காத்திருந்தாள். ”என்னங்க.. கல்வி புரட்சி அது இதுன்னு பேசி பொழுதை ஒப்பேத்திட்டீங்களே..! அரசு பள்ளியில் தான் சேர்க்கணும். அப்படி இப்படி சொல்லி. செண்ட்ரல் ஸ்கூலில் அப்பளிகேசன் போட்டீங்களே? ரிசல்ட் 18 தேதி போட்டுட்டான் பார்த்தீங்களா? “ விழி பிதுங்கி நின்றேன். “பேச்சு தான் வாய் கிழிய இருக்கு. உங்க பிள்ளையை சேர்க்க வழி பாருங்க.. சத்யா நம்பர் வரலைய்யாம்..யாரையாவது சிபாரிசு பிடிச்சு.. சேர்க்கிற வழிய பாருங்க.. இல்லை எங்க இஷ்டத்துக்கு ஒரு பள்ளியில் சேர்த்திடுவோம்..!”
“அட நாம் இப்ப அட்மிசனுக்கு யாரை பிடிக்கிறது? அட யப்பா சாமிகளா? செண்ட்ரல் ஸ்கூலில் சேர்க்க யாரை பிடிக்கணும் சொல்லுங்கப்பா?”


மதுரை சரவணன்.    

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

பள்ளிகள் - குறிப்பாக தனியார் பள்ளிகள் - பணம் சம்பாதிப்பதற்காகவே தொடங்கப் படுவது வேதனை.

Post a Comment