வதங்தீகள் படுத்தும் பாடு!
பள்ளிக்கூடம் வெறும் சுவர்களால் உருவாக்கப்பட்ட வகுப்பறைகளாலானதன்று.
பள்ளிக்கூடங்கள் அம்மாவின் கருவறையைப் போன்றவை.
குழந்தைகளின் கல்வியோடு பாதுகாப்பையும் முக்கியமாக வழங்குபவை. குழந்தைகளின் உண்மையான கனவுகளுக்கான கதவை திறப்பவை.
ஐந்துவிரல்கள் ஒன்றாய் இருப்பதில்லை. அது போல் தான் ஆசிரியர்கள்
அனைவரும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒருவர் அன்பால் குழந்தைகளை கட்டி வைக்கலாம்.
ஒருவர் தன் பிரம்பை காட்டி குரங்குகளை கையால்வது போல் வித்தை காட்டலாம். ஒருவர் எதையும்
கண்டு கொள்ளாமல் ,குழந்தைகளின் போக்கில் விட்டுவிடலாம். ஒருவர் குழந்தைகள் விரும்புவதை
செய்து , குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால், அனைவரும் குழந்தைகளை படிக்க
வைக்க வேண்டும் என்றே இச்செயல்களை செய்கின்றனர் என்பது தான் உண்மை!
குழந்தைகளை பாத்ரூம் அனுப்பாத ஆசிரியர் குறித்து விசாரித்தப்படி
பள்ளி மைதானத்தில் இருந்தேன். நான்கைந்து பேர் வேகமாக வந்தனர். என்ன என்று விசாரித்தேன். அண்ணா நகர் பகுதியில் ஒரு பள்ளியிலும்
கல்லூரியிலும் வெடி குண்டு வெடித்து விட்டதாக எங்கள் பகுதியில் ஒருவர் கூறினர். மேலும்,
இது போன்று காமராசர் சாலையில் சில பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக டிவியில் கேட்டதாக
என் உறவினர் கூறினார். ஆகவே, எங்கள் குழந்தைகளை அழைத்து போக வந்தோம் என்றனர்.
இங்கு பாருங்கள் ! குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். எல்லா
குழந்தைகளும் படித்து கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கு கவலை வேண்டாம். இதெல்லாம் புரளிதான்.
இதே மாதிரி சில வருடங்கள் முன் எங்கள் பள்ளிக்கும் போன் வந்தது. விடுமுறை விட்டது தான்
மிச்சம். எல்லாம் புரளி. கவலை விடுங்கள். உங்கள் குழந்தைகளை அழைக்கின்றேன். பார்த்து
பேசி விட்டு செல்லுங்கள் என்றேன். அவர்கள் ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் அவர்களின்
குழந்தைகளை அழைத்தே சென்றனர்.
சிறிது நேரத்தில் ஈசலைப்போல் படையெடுத்து வந்தனர். முடிந்தவரை
குழந்தைகளை அழைத்து செல்வதை தடுத்து பார்த்தோம். ஆசிரியர்கள் அனைவரும் பெற்றோர்களிடம்
இது வெறும் புரளி என்று எடுத்துரைத்தனர். எந்த பிரயோஜனமும் இல்லை. படிப்பு போனா திரும்ப
படிச்சிடலாம். உயிர் போனா திரும்பி வருமா! என்றவாரே அழைத்து சென்றனர்.
இந்த மாதிரியான வதந்தி காலம் காலமாக மக்களிடம் உயிர் பயத்தை
கொடுத்துள்ளது. மேலும், மக்களிடம் எழும் இந்த பயம் எப்போதும் எதிர்மறையான விளைவையே
ஏற்படுத்தியுள்ளது 1665ம் ஆண்டில் லண்டன் மாநகரையே பிளேக் நோய் சூறையாடியது. பிளேக்
நோய் லண்டன் நகரெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்தது.
சேரிப்பகுதிகளிலும், மர வீடுகளிலும், தூய்மையற்ற சூழ்நிலையில் வாழும் மக்களிடையே இந்நோய்
முதலில் பரவியது. குடும்பம் குடும்பமாக தெருத் தெருவாக மக்கள் மடிய ஆரம்பித்தனர். அரசனும்,
அரவையைச் சேர்ந்தவர்களும் சாலிஸ்பரி நகரத்துக்கு தப்பி ஓடினார்கள். நோய் அங்கும் பரவியது.
பின் அரசனும், அங்கிருண்டவர்களும் ஆக்ஸ்ஃபோர்டுக்கு ஓடினார்கள். தப்ப முடியாத ஏழை எளியவர்கள்
பரிதாபமாக இறந்தனர். அப்போது தவறான வதந்தி ஒன்று பரவியது.
பிளேக் நோய்க்கு காரணம் நாய்கள் தான். நாய்கள் தான் பிளேக் நோயைப்
பரப்புவதாக யாரோ கூற, இந்த வதந்தி நகரெங்கும் பரவ தொடங்கியது. இதை நம்பி மக்கள் ஏரளமான
நாய்களைக் கொல்ல ஆரம்பித்தனர். ஆனால், உண்மையிலேயே இந்த நோயைப் பரப்பி வந்த எலிகளைப்
பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று.! லண்டன் நகரின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் இந்நோய்க்கு பலியாகி இருந்தனர்.
ஐந்து மாதங்களுக்குள் இந்நோய் முற்றிலும் நீங்கி விட்டது. அதற்கு பின் இன்று வரையில்
லண்டனில் பிளேக் நோய் தலை காட்டவில்லை என்பது ஆச்சரியமே!
மக்கள் புரளிக்கு, வதந்திக்கு மதிப்பு கொடுத்து உடனடியாக உயிர்
பயத்தில் நடவடிக்கை மேற்கொண்டாலும், இம்மாதிரியான வதந்திகளை ஏற்படுத்துவது யார்? தீவிரவாதிகளா?
நிச்சயமாக இல்லை. இந்தியா மாதிரியான நாடுகளில் தீவிரவாதம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்திய
சக்திகள் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வெடிக்க செய்து திசை திருப்பலாம். ஆனால், பள்ளிகளில்
குண்டு வைக்கும் அளவுக்கு தீவிரவாதம் உருவாகவில்லை என்றே கருதுகின்றேன்.
பரீட்சையை நிறுத்துவதற்கும், பள்ளி விடுமுறை விட செய்வதற்கும்
மாணவர்களால் செய்யப்படும் வதந்தியே ,இம்மாதிரியான வெடி குண்டு புரளிகள் உள்ளன . ஏன்
மாணவன் இம்மாதிரியான புரளிகளை , வதந்திகளை பரப்ப வேண்டும். நம் கல்வி முறையில் அல்லது
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பிடிக்காத செயல் அல்லது மாணவர்கள் ஏற்று கொள்ள இயலா
செயல் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. வெடி குண்டு புரளிகளை ஏற்படுத்தும் மாணவர்களை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அல்லது
யார் இப்படி போன் செய்யும் அளவுக்கு மாணவரை உருவாக்குவது ? கல்வி முறையா? ஆசிரியரா?
மதுரை சரவணன்.
2 comments:
அருமையான பதிவு.நம்ம ஊர்காரர்.நொடிப்பொழுதில் வதந்திகள் பரவுவதற்கு ஏற்ற தொழில்நுட்பம் உள்ள காலத்திற்கேற்ற பதிவு.
பள்ளிகளைப் பற்றிய பல வதந்திகளைப் பரப்புகின்றவர்கள், படிப்பில் நாட்டமில்லாத சில மாணவர்களே! இவர்களின் தந்தையர், சிரமப்படாமல் பணம் சேர்க்கும் கலையில் வல்லவர்களாக இருப்பதும் கண்கூடு.
Post a Comment