கடன் வாழ்க்கையில் வாங்க கூடாது இல்லைன்னா..?!
*
அந்த படிக்கட்டுகளை மிதித்து ஏறும் போது மனம் பதை பதைக்கின்றது. ;
எத்தனையோ முறை இந்த படிக்கட்டுகளில் ஏறி இருக்கின்றேன். பல ஆயிரம் ரூபாய் கட்டுகளை எண்ணி பையில் வைத்து கொண்டு எந்த வித பயமும் இன்றி என்னுடைய மோபட்டில் இந்த படிகளில் ஏறி இறங்கி வந்திருகின்றேன். இன்று ஏறுவதற்கு கால்கள் பின்னுகின்றன. தயக்கம் காட்டுகின்றன.
என்னை பார்த்தவுடன் சார் குட்மார்னிங் என்று அழைத்து உட்காருங்க சார் என ப்யூன் காட்டும் ஆர்வம் அப்போது என்னை பரவசப்படுத்தும். இப்போது அந்த ப்யூன் என்ன சொல்வானோ என்றப்படி பயந்து செத்து படிக்கட்டுகளில் ஏற வேண்டி இருகின்றது. பல லட்சங்களை சுமந்து ஏறிய போது எந்த பயமும் இல்லை. இன்று எந்த லட்சமும்...,அட போங்க எந்த பைசாவும் இல்லை இருந்தாலும் பயந்து சாக வேண்டி வருகின்றது.
முகத்தில் வியர்வை கொட்டியது. அப்படி ஒன்றும் வெயில் இல்லை. வெளியில் அப்போது தான் மழை பெய்து குளுமையாக இருந்தது. உள்ளுக்குள் அவ்வளவு நடமாட்டம் இல்லை. அந்த அறை குளிரூட்டப்பட்டு தான் இருந்தது. கர்சீப்பை எடுத்து துடைத்து கொண்டேன். தெரிந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா என துடைப்பது போல் பார்த்து கொண்டேன்.
தூரத்தில் ஒருவர் என்னை போலவே மிகவும் பயந்து அமர்ந்து இருப்பதாக உணர்ந்தேன். அப்படி நினைக்க ஒரு காரணம் இருக்கின்றது. அவரின் முகபாவனைகள் நான் செய்வது போல் இருப்பதாக உணர்கின்றேன். அப்படி அவர் இருந்தால் ஆறுதல் தான்! அவரிடம் என்ன சொல்வார்கள், அவரை எப்படி நடத்துவார்கள் என்பது தெரிந்துவிடும்!
நான் அமர்ந்திருக்கும் இந்த வங்கியின் மேனேஜர் அறையில் இதற்கு முன் கொடுத்த மரியாதையை நினைத்து பார்க்கின்றேன். அது பொற்காலம். அப்போது எனது தொழில் பிரகாசமாக இருந்தது. கிடைத்த லாபத்தை எல்லாம் இங்கு தான் சேமித்து வைத்தேன். என்னுடைய அனைத்து பரிவர்த்தனைகளையும் இந்த வங்கியின் மூலமே நடத்தினேன்.
நான் நினைத்த அளவு எனது தொழிற்சாலை பெரியதாக இல்லை என்றாலும், எனக்கு அதுவே பெரிய தொழிற்சாலையாகவும், போதிய வருமானம் கொடுப்பதாகவும் இருந்தது. என்னை சார்ந்து 20 பேர் எனது தொழிற்சாலையில் வேலை பார்த்தனர். யாருக்கும் எந்த குறையும் வைக்காமல் கூடுதல் கூலியுடன் நேர்மையான முறையில் தொழில் நடத்தினேன். எனக்கென்று ஒரு சேமிப்பும் , ஒரளவு வசதியுடன் குடும்பத்தை கடன் இல்லாமல் நடத்தி வந்தேன்.
இந்த வங்கியின் மேனேஜர் என்னை பார்க்க தொழிற்சாலைக்கு வருவதாக கூறினார். நான் அவரை வாங்க என அழைத்திருக்க கூடாது!
ஆம்! நான் உள்ளே நுழைந்தாலே , சார் என ப்யூன் முதல் எல்லோரும் அழைப்பார்கள். கிளார்க் டீ குடித்தால் கூட ஓடி வந்து சார் டீ குடிங்க என்பார். மேனேஜர் அவரது அறையில் இருந்து எழுந்து வந்து எனது பெயர் சொல்லி அழைத்து உள்ளே வாருங்கள் என மரியாதையுடன் பேசி, எனது வேலையை உடனே முடித்து தருவார். இன்றும் எனது பெயரை உச்சரிக்கின்றார் ஆனால், வித்தியாசம் இருக்கின்றது.
அன்று வந்த வங்கியின் மேலாளர் தொழிற்சாலையை சுத்தி பார்த்தார். சொந்த இடமா? என்றார். இல்லை என்றேன். ஒத்திக்கு இருக்கின்றேன் என்றேன். வேறு சொத்து இருக்கின்றதா என கேட்டார். பத்து செண்டு சிட்டியில் இருக்கு என்றேன். உற்பத்தி அதிகரிக்கலாமே? என்றார். அதிகரிக்க வேண்டும் அதற்கு புதிய மிஷினரி வாங்க வேண்டும். கொஞ்சம் சேத்து வைக்கணும் . அதன் பின் தான் தொடங்கணும் . எப்படியும் இரண்டு வருடம் ஆகிடும் என ரெம்ப ஏமாளியாக கூறினேன். உடனே எந்த வித சலனமும் இல்லாமல், நீங்க ஏன் புதிசா மிஷின் இப்பவே வாங்க கூடாது? நீங்க ஓகேன்னு சொன்னா நீங்க எதிர்பார்க்கின்ற பணத்தை லோனா த்ர்றேன் என்றார். அவர் வலை விரிக்கின்றது புரியாமல், மிகவும் சந்தோசமாக சார் நிஜமாவா சொல்றீங்க ! நீங்க என் தெய்வம் என்றேன். தெய்வம் நின்னு கொல்லும் என்று சொல்வாங்க.. இப்ப என்னை மூணுமணிநேரமா நிக்க வைச்சு கொல்லுறான் ! அந்த மேனேஜர்.
சார் என்ற அந்த புயூன் இதோ வந்துவிட்டான்! அவன் எனக்கு இப்போது அளிக்கும் மரியாதையை பாருங்கள். என்னப்பா சேகர் ! ஏதாவது பணம் கொண்டு வந்தீய்யா..! மேனேஜர் வர்ற நேரம் கொஞ்சம் ஓரமா நில்லு.. இல்லைன்னா என்னை ஏன் உட்கார வச்சன்னு கேட்பார். வாங்கின கடனை கட்டுறதுக்கு துப்பில்ல.. உட்கார சீட் கோட்குதான்னு கேட்பார்..எதையாவது அடகு வச்சு கட்டிருப்பா..சேகர் நீ வை வாங்கிறத பார்த்தா எனக்கே கஷ்டமா இருக்கு. சரி சரி.. நான் பேசினா கூட அதுக்கும் சேர்த்து உன்னை தான் திட்டுவார்.. “
என்னிடம் இருந்த 10 செண்ட் இடத்தை அடகு வச்சு தானே பணம் தந்தீர்கள். இனி தருவதற்கோ இல்லை விற்பதற்கோ எப்படி முடியும். அந்த பத்து செண்டு இடம் வித்தா இப்ப 60 லட்சம் போகும். ஆனா , பேங்க் கடன்ல்ல அடகு வச்சிருக்குன்னு சொன்னா.. 40க்கும் குறைவா கேட்குறாங்க.. அதை வித்தாவது கட்டலாம்ன்னு நினைச்சா... நீங்க தான் ஏலம் விடுவேன்னு சொல்லுறீங்க.. ஏலம் விட்டு அதை விட குறைச்சு போச்சுன்னா.. மீதி பணத்துக்கு நான் என் கழுத்தை வித்தாலும் அடைக்க முடியாது. நானா பேங்குல லோன் வேண்டும்ன்னு கேட்டேன்! என மனதினுள்ளே புலம்பி கொண்டேன். வெளியில் பேசினால் நாண்டு சாகும்படி பேசுவார்கள்.
என்னப்பா சேகர். கொஞ்சமாவது சோத்தில் உப்பு போட்டு திங்கிறிய்யா.. சும்மா சும்மா வந்து பல்ல காட்டி வெக்கமில்லாமா திட்டு வாங்கிட்டு போற.. அடுத்து கூண்டில் ஏத்தி விசாரிக்க வைக்க போறங்க.. பேசாம சொத்த ஏலம் விட சொல்லி எழுதி கொடுய்யா..என கிளார்க் சண்முகம் திட்டி சென்றான்.
இதோ அலுவலகம் பொறுக்கும் ஆயா வருகின்றாள். எத்தனை முறை அவள் மகள் படிப்பிற்கு பணம் கொடுத்திருப்பேன். அவள் இப்போது எப்படி அழைப்பாள் பாருங்கள். என்னப்பா சேகர்..உன்னை நினைச்சாலே கஷ்டமா தெரியுதுப்பா.. என் மகளுக்கு உதவி செய்த இப்ப என்னன்னா நொடிச்சு போயிட்டா.. ஏதோ பத்து அம்பதுன்னா நான் கூட கொடுத்து உதவிடுவேன். நீ பாட்டுக்கு மேனேஜர் தர்றார்ன்னதும் ஒரு கோடி வாங்கிட்ட... சரியான ஆளுய்யா.. ஒண்ணு சொல்றேன் பொண்டாட்டி வீட்டில் எதையாவது வித்து கட்ட சொல்லு.. அவன் அவன் பொண்டாட்டியையயே வித்து லோன்னை அடைக்கிறான். நீ என்னடான்னா கவலை பட்டுகிட்டு இருக்க.. பிள்ளையை படிக்க வைக்கின்றேன்னு மேலும் கடன் ஆக்கி கிடாத.. பேசாம வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லு கடனை அடை..”
நான் சொல்றது நிஜம்ங்க.. ஆனா நம்ப மாட்டீங்க..! இதை விட மேனேஜர் மட்டமா பேசுவார்ங்க..! அதை கேட்டா கொஞ்சம் பால்டால் வாங்கி சாக தோணும். செத்த பின்னாடி பிள்ளைகளையும் பொண்டாட்டியையும் கொடுமை படுத்துவாங்கண்ணு நினைச்சு பயமா இருக்கு. கடன் வாங்கிறவன் ஏன் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிறான்னு இப்ப தாங்க தெரியுது. தயவு செய்து பேங்க் காரன் மரியாதையா சார் அப்படி இப்படி பேசி நமக்கு லோன் தர்றான்னா வாங்கிடாதீங்க..!
ஒரு கோடி லோன். ஒரு வருசத்துல ஐம்பது லட்சம் அடச்சுட்டேன். மொத்தம் 60 தவணை. ஏன் கெட்ட நேரம் சரக்கு டெலிவரி பண்ணி, சரக்க எடுத்தவன் கொடுத்த செக் திரும்பிடுச்சு. ஒரு கோடி சரக்கு. ஏமாந்தது தான் மிச்சம். இப்ப நான் கடன் காரனா நிக்கிறேன். முன்ன எல்லாம் சிறியதா பண்ணிய போது காசு கொடுத்தா சரக்கு என்று இருந்தேன். அகல கால் வச்சதும் எல்லாம் கடன் ஆகி போச்சு.. நானும் கடன் ஆகிட்டேன். என் சொத்தும் அடமான மா இருக்கு. இப்ப சிறுசா நடத்தலாம். ஆனா என்னை நம்பி எவனும் வர மாட்டேன்னு சொல்றான்.. என்ன செய்ய ? “
என்னங்க பார்க்கிறீங்க நான் ஏன் சிரிக்கின்றேன் என்றா? இல்லீங்க மேனேஜர் அறையில் ஒட்டியிருந்த வாசகம் சிரிக்க வைத்தது. கஷ்டமர் இஸ் கிங் இன் அவர் சர்வீஸ் என்று இருந்தது. அதோ டிவியில் பாருங்க. கிங் பிஷர் நிறுவனர் மல்லைய்யா தப்பி ஓட்டம்ன்னு ஸ்க்ரோலிங் வருது..!
நான் என் பொண்டாட்டி வீட்டுக்கு போய் கடன் வாங்க போனேன். அங்கேயும் மோப்பம் பிடிச்சு வந்து இந்த மேனேஜர்.. மானக்கேட வஞ்சுட்டானுங்க்..!
இப்ப கூட கையில் இரண்டு லட்சம் கடன் வாங்கி கொடுக்க தான் வந்திருக்கேன். ஐம்பது லட்சம் தான் பாக்கி தரணும். ஆனா இவனுங்க வட்டி மேல வட்டி போட்டு இந்த மூணு வருசத்தில் எண்பது லட்சம் தரணும்ன்னு சொல்றான்.. கோட்டில் கேசு போட்டு பேசிக்க.. இல்லை...என மானக்கேட திட்டுறான்..!
வாழ்க்கையில் கடன் மட்டும் வாங்க கூடாதுங்க.!
வாழ்க்கையில் கட்னே கூடாதுங்க. இல்லீங்க நான் தப்பா சொல்றேன். கடன் வாங்க தெரிஞ்சிருந்தா.. வெக்கம் ரோசம் பார்க்காம 7000 கோடி 5000 கோடின்னு சுருட்டீட்டு வெளிநாட்டில் ஏமாத்தி வாழ தெரிஞ்சு இருக்கணும்ங்க..!
இதோ மேனேஜர் வந்துட்டார்.. காதை பொத்தீக்கங்க..!
மதுரை சரவணன்.
2 comments:
வணக்கம்
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் 700 கோடி சுருட்ட மனம் வரதே... மக்கள் சொத்து அல்லவா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாம்... அருமையாச் சொல்லியிருக்கீங்க சரவணன்,
Post a Comment