பவானியும் அவளின் டீச்சர் அம்மாவும்
பள்ளியில் இருந்து வேகமாக ஓடிவந்த பவானி தன் அம்மாவை தேடினாள். ஆசிரியராக பணிப்புரியும் அவளின் அம்மா அப்போது தான் பள்ளியிலிருந்து வந்திருந்தார். பவானியின் அண்ணன் ரினேஷ் எதுக்கு அம்மாவை தேடுகிறாய் ? என கேட்டான். உன்கிட்ட அவசியம் சொல்ல வேண்டுமா? என்றாள். அம்மா சமையல் அறையில் சுடு தண்ணீர் வைக்கிறார்கள் என்றான் ரினேஷ். அம்மா என சமையலறையை நோக்கி வேகமாக ஓடினாள்.
எதுக்கு அம்மா, சுடுதண்ணி வைக்கின்றார் என கேட்டாள். ரினேஷ் வரும் வழியில் கீழே விழுந்து அடிப்பட்டு வந்துள்ளான். அவனுக்கு அடிப்பட்ட இடத்தில் துடைத்து , மருந்து போட வேண்டும் என்றாள் பவனாயின் அம்மா லீலா.
அம்மா ஊருவிட்டு ஊரு போகும் போது சில நாடுகளில் விமான நிலையங்களில் அனுமதிக்க மாட்டர்களாமே! என ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ சில நாடுகளில் உயிரை பறிக்கும் தொற்று நோய்கள் அந்நாடு முழுவதும் பரவி இருக்கும். அந்நாட்டில் இருந்து வருபவர்கள் அந்நோயை வருகின்ற நாட்டில் பரப்பும் அபாயம் உள்ளதால், தீவிர பரிசோதனைக்கு பின்பே நாட்டினுள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றாள் லீலா டீச்சர்.
”அம்மா, சமீபத்தில் தேனியை சேர்ந்த ஒருவரை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின்பே அனுமதித்ததாக செய்தியில் படித்திருக்கின்றேன்” என்றான் ரினேஷ்.
”சரியா சொன்னாய். எபோலோ வைரஸ் தொற்று இருக்ககூடும் என்று அவரை சந்தேகித்தனர். தீவிர பரிசோதனைக்கு பின்பே அவரை தேனிக்கு அனுப்பி வைத்தனர்.” என்றாள் லீலா டீச்சர்.
“காங்கோ நாட்டில் இருந்து அவர் வந்ததால், அவருக்கு எபோலோ இருக்கும் என்று சந்தேகப்பட்டனர். அவருக்கு காய்ச்சல் இருந்ததால், உள்ளே அனுமதிக்க வில்லை என்று என் நண்பர்கள் சொன்னார்கள், அம்மா ” என்றான் ரினேஷ்.
“அம்மா அதற்கு எபோலோ என்று ஏன் பெயர் வைத்தார்கள் ?” என கேட்டாள் பவானி.
“மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலோ ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்நோய்க்கு ‘எபோலோ வைரஸ்’ என பெயர் வைத்தார்கள்” என்றாள் லீலா டீச்சர்.
”ஏன் அம்மா இந்த நோய் காற்றில் பரவுமா? “ என்றாள் பவானி.
“பவானி, இது காற்று, நீர் மூலமா பரவாது.. விலங்குகள் மூலமா பரவும் வைரஸ் என்கிறார்கள். குரங்கு. வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.” என்றான் ரினேஷ்.
“நல்ல பசங்களோட பழகுறதால நல்ல விசயங்களை தெரிந்து வைத்திருக்கின்றான் ரினேஷ். சபாஷ். நோய் உள்ள மனிதனின் இரத்தம் மலம் மூலம் மற்ற மனிதர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது” என்றாள் லீலா டீச்சர்.
“அம்மா, பத்து பேருக்கு நோய் பரவினால் ஒன்பதுபேர் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாம். அதனால் இந்நோய் பரவியவர்களை தனியாக வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமாம். நோயாளிகள் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வதால், அவர்களின் இரத்தம் நம் மீது படாமல் பாதுகாப்பதுடன், பட்டாலும் இந்நோய் தொற்றிக்கொள்ளாமல் தடுக்கலாம் “ என்றான் ரினேஷ்.
“அம்மா, இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?“
“ எபோலோ நோய் இருக்கிறதா என்பதை அறிய 5 முதல் 21 நாட்கள் தேவை “ என்றாள் லீலா டீச்சர்.
“காய்ச்சல் தான் முதல் அறிகுறி. சரிதானே! “ என்றான் ரினேஷ்.
“டேய் எல்லாம் தெரிஞ்சவனாட்டம் பேசாத.. எல்லாம் நோய்களையும் காட்ட்டிக்கொடுப்பது காய்ச்சல் தான். பேசாம அம்மா சொல்றத கேளு “ என்றாள் பவானி.
“ அவன் சரியா தான் சொல்லியிருக்கான் பவானி. காய்ச்சல் மட்டுமே அறிகுறி அல்ல. காய்ச்சலை தொடர்ந்து உடல் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும். தலைவலி வரும். தொண்டையில் புண் ஏற்படும். அதனை தொடர்ந்து தசை மற்றும் மூட்டு வலி பெரும் தொந்தரவு தரும். நோய் முற்றிய நிலையில் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்” என்றாள் லீலா டீச்சர்.
“அம்மா, வாந்திக்கு பின் வயிறு தான் வலிக்கும். அப்புறம் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும். சரி தானே “ என்றாள் பவானி.
“ நீ மட்டும் யோசிச்சு சொன்னா , நாங்க ஏத்துக்கணுமா? “ என்றான் ரினேஷ்.
“ இல்லை பவானி சொல்வது உண்மை. வயிற்று போக்கை தொடர்ந்து சருமத்தில் கட்டிகளும், அரிப்புகளும் ஏற்படும். அதன் பின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும் “ என்றாள் லீலா டீச்சர்.
“ சிறுநீரகம் பாதித்தா.. நெஞ்சு வலி வர வாய்ப்பு உண்டே? “ என்றான் ரினேஷ்.
“ ஆமாம் , நெஞ்சு வலி வரலாம், மூச்சு விட சிரமம் கூட ஏற்படலாம். உடலின் உட்புறமும், வெளிப்புறங்களிலும் இரத்தம் வழிய ஆரம்பிக்கும்” என்றாள் லீலா டீச்சர்.
“அம்மா, இன்னைக்கு என் கிளாஸ்மேட் சத்யா.. ஒருபடம் கொண்டு வந்திருந்தான். அதில் கைகளில் கட்டி, உடைந்து இரத்தம் ஒழுகுகிறது. அவர்களின் கண்கள் சிவந்து காணப்பட்டன” என்றாள் பவானி.
“ஓ , அதான் வந்ததும் வராததுமா. எபோலோ பத்தி விசாரிக்கிறீய்யா? “ என்றான் ரினேஷ்.
“ஏம்மா, இந்நோய்க்கு மருந்து ஏதாவது கண்டு பிடிச்சு இருக்காங்களா? “
“இல்லை. ஆனால், எபோலோ வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருந்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொடுகப்பட்டுள்ளன. இந்நோய் மட்டுமல்ல எந்நோயும் நமக்கு வராமல் இருக்க நாம் கைகளை சோப்பால் நன்றாக கழுவிய பின்பே உணவு அருந்த வேண்டும் “ என்றாள் லீலா டீச்சர்.
பேசிக்கொண்டே ரினேஷின் புண்களை துடைத்து மருந்து போட்டு விட்டாள் லீலா டீச்சர்.
“அம்மா , பசிக்குது. சாப்பிட ஏதாவது தருகிறீய்யா?” என கேட்டாள் பவானி.
“முதல்ல கையை கழுவி விட்டு வா. அப்புறம் சாப்பிடுவது பற்றி யோசிக்கலாம்” என்றான் ரினேஷ்.
“ நான் எப்பவும் கை கழுவி தான் சாப்பிடுவேன். நீ முதல்ல கை, கால் முகம் கழுவி உட்கார்ந்து படிக்க பார் “ என்று கடிந்தாள் பவானி.
”அம்மா, இவ ரெம்ப பேசுறா. சொல்லி வைங்க. அப்புறம் நான் கோபமானா என்ன செய்வேன்னு தெரியாது” என்றான் ரினேஷ்.
“டேய் என்னடா செய்வ.. அப்படி தாண்டா பேசுவேன். எபோலோ நோய் வந்தவன் மாதிரி இவனை தனியா படிக்க வைங்க.. இந்த வைரஸ் விட மோசமானவன்..” என்றாள் பவானி.
“டேய் ..அவ கிட்ட ஏண்டா சண்டை இழுக்கிற..அவ பெரிய வாயடி அவளை ஜெயிக்க முடியாது. அவ எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து என்னையே செக் பண்றா” என்றாள் லீலா டீச்சர்.
“எப்படிம்மா.. இவ்வளவு புத்திசாலியா இருக்க. உனக்கு எபோலோ பற்றி தெரியுதான்னு செக் தான் பண்ணினேன்” என்றாள் பவானி.
அனைவரும் சிரித்தனர். பின்னர் கைகளை கழுவினர். அதன் பின் சாப்பிட தொடங்கினர்..
க.சரவணன். தலைமையாசிரியர்
9344124572
இந்த கதை மாணவர் உலகம் மாத இதழில் செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது.
4 comments:
நன்றாக இருக்கிறது. உரையாடல் வடிவில் நல்ல உபயோகமான தகவல்கள்.
வாழ்த்துகள்
நல்ல கதை...
உரையாடல் போல் இருந்தாலும் ஒரு தீவிர நோய் பற்றிய அறியத் தந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் சரவணன்.
சிறுகதை ஊடாக... எபேலா வைரஸ் தொடர்பான
தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே..
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
Post a Comment