Thursday, September 18, 2014

அப்படியே செத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது !


குழந்தைகளின் பாசம், ப்ரியம் அலாதியானது. அவர்களை புரிந்து கொள்ள பல ஜன்மம் எடுக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ,ஆனால் அவர்கள் காட்டும் பாசம் நேசம் ஒவ்வொன்றும் ஒரே விதம்.
குழந்தைகளின் பிரியங்களை அளக்க எந்த அளவு கோலும் இல்லை. மழைமானி மாதிரி கொட்டும் போதொல்லாம் அளந்து விட முடியாது. ஆனால் குழந்தைகள் தங்களின் ப்ரியங்களை தொடர்ந்து கொட்டிக்கொண்டே தான் இருக்கின்றார்கள்.
நீங்கள் அவர்களின் மனதில் பதிந்து விட்டீர்களானால், அவர்களின் வாழ்வில் நீங்காத இடத்தை பிடித்து விடுவீர்கள். எந்த அழிப்பானும் அவர்கள் மனதில் இருந்து உங்களை அழித்து விட வாய்ப்பு இல்லை.
பாசங்களை போல் உங்கள் மீதுள்ள கோபத்தையும் பாசாங்கு செய்து மறைத்து கொள்வதில்லை. அவர்கள் உடனடியாக கோபம் கொள்கின்றார்கள். அதேவேளையில் உடனடியாக மறந்தும் போய்விடுகிறார்கள். எல்லாம் மாயமாகத்தான் இருக்கும், நடக்கும். குழந்தைகள் உலகம் மந்திரங்கள் நிறைந்தது.
நாம் இல்லாத பொழுதுகளில் நம்மை அவர்களின் விளையாட்டுகளில் இணைத்து விளையாடுவதை காணும் போது பூரித்துப்போவோம். அவ்வேளைகளில் ஏதோவொரு பொம்மையை காட்டி இது தான் நம்ம சார் எனும் போதோ அல்லது நான் தான் நம்ம சார் என்று சொல்லும் போது, நமக்கு அப்படியே செத்துவிடலாம் என்று தோன்றும்.
குழந்தைகளை ரசிப்பதற்கு பூர்வஜென்மத்தில் தவம் இருந்திருக்க வேண்டும். எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்துவிடுவதில்லை. குழந்தைகள் நம் சுவாசமாகி விடும் போது, நம் இதயம் மகிழ்ச்சியில் பலப்படுகிறது.
என்ன குழந்தைகள் புராணம் ! என ஆச்சரியப்படலாம்.
சொந்த அலுவல் காரணமாக விடுப்பு எடுத்து, மறுநாள் பள்ளிக்கு திரும்பிய எனக்கு குழந்தைகளை பார்க்காத குறை இருந்தாலும், அவர்கள் நான் வந்துவிடுவேன் என தேடி அலைந்ததை விசாரித்த போது எனக்கு கண்களில் நீர் பூத்தது.
காலை பள்ளிக்கு வந்தேன். என் வாசலில் கொஞ்சம் மனநலம் குன்றிய ஒன்றாம் வகுப்பு குழந்தை நின்றபடி, சைகையில் நேற்று ஏன் வரவில்லை என்று கேட்டது. அதன் பின் கைகளை நீட்டி டூ விட்டு சென்றது. சாரி சொன்னேன். இதயத்தில் இருந்து வந்த வார்த்தை என்றதும், உடனே பழம் என்று விரல்களை ப வடிவில் வைத்து சிரித்து சென்றான் அக்குழந்தை.
சிறிது நேரத்தில் மூன்றாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவன் வந்தான். அவனும் என் வகுப்பு வாசலில் நின்று சிரித்தான். பின் குட்மார்னிங் என்றான். எல்லாம் வாசலில் தான் கோபமாம். கண்களில் நீர் பூக்க நேன்று ஏன் வரவில்லை என்றான். என்ன சொல்வதென்று முழித்தேன். பின் அவனாகவே தன் கழுத்தில் கைகளை வைத்து காய்ச்சலா என்று கேட்டான். அய்யோ அப்படியே செத்து விழுந்து விட வேண்டும் என்று தோன்றியது. இல்லையடா என் செல்லமே. என்னை பெற்று எடுத்தவள் கூட இவ்வளவுஅக்கறையுடன் கேட்டிருப்பாளா? என்று தெரியவில்லை. சும்மா ஊர் சுற்ற சென்றேன் என்று கைகளைக்காட்டி சொன்னேன். இருந்தாலும் என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. இத்தனை நல்ல குழந்தைகளை எப்படி மறந்து போனேன்!
என் அருகில் உள்ள வகுப்பில் இருந்து ஒரு மாணவன் வெளிப்பட்டான். மெதுவாக வந்தான். உங்களுடன் டூ .. என்னை மறந்துட்டீங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அதன் பின் ஒளிந்து ஒளிந்து ஒருவன் வந்தாள். எங்க போனே என்று கேட்டாள் அந்த தேவதை!
அய்யோ இப்படி ஒரு சொர்க்கத்தை எப்படி மறந்தேன்.
இப்படி நிறைய கதைகள் உள்ளன. ஒன்றரை நாள் விடுப்பு கொஞ்சம் கூடுதல் தான் போலும்! மதிய உணவு வேளையில் என் காட்டு கதைகளை சாரி கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு சமாதானப்படுத்தினேன்.
இப்படி பிற வகுப்பு குழந்தைகளின் விசாரிப்பு என்றால், என் வகுப்பு குழந்தைகளை கேட்கவா வேண்டும். அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. குழந்தைகளுடன் பழகி பாருங்கள் . அப்புறம் அந்த மாய உலகத்தை விட்டு வெளியில் வர இயலாது.
என் தந்தை என்னை கோபக்காரன் என்பார். ஆனால் நான் பிரைமரி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் விதத்தை பார்த்து வியந்து ,என் தாயாரிடம் உன் மவன் பாடம் எடுக்கிறத பார்த்தா எனக்கே அவன் கிளாசில் போய் உட்காரணும் என்று தோன்றும் என்று சொல்வாராம். (என் தந்தையும் நானும் ஒரே பள்ளியில் பணியாற்றினோம்) கோபக்காரனை கூட குழந்தைகள் வசிகரித்து கொண்டு அன்பானவனாக மாற்றிவிடுவார்கள். குழந்தைகளாக மாறிவிடுவீர்கள், அப்புறம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
குழந்தை மையக்கல்வி முறையை நேசிப்போம். குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்போம். குழந்தைகள் விளையாடுவதை ரசிப்போம். குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள் என்பதை எப்போதும் மறக்காமல் இருப்போம். குழந்தைகள் நம்மை விட அறிவு பூர்வமான கேள்விகளை கேட்கின்றன என்பதால், நாம் நம்மை எப்போதும் புதுப்பித்து கொண்டே இருப்போம்.
மதுரை சரவணன்.

4 comments:

மகேந்திரன் said...

வழிமொழிகிறேன் நண்பரே...

துளசி கோபால் said...

மனசு அப்படியே நெகிழ்ந்து போயிருக்கு , சரவணன்.

நல்லா இருங்க.

தருமி said...

எனது நல்ல மாண்வன் ஒருவனை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.

வளர்க .........

Yarlpavanan said...

"குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்போம். குழந்தைகள் விளையாடுவதை ரசிப்போம். குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள் என்பதை எப்போதும் மறக்காமல் இருப்போம். குழந்தைகள் நம்மை விட அறிவு பூர்வமான கேள்விகளை கேட்கின்றன என்பதால், நாம் நம்மை எப்போதும் புதுப்பித்து கொண்டே இருப்போம்." என்ற செய்தி ஒன்றே போதும், இன்றைய பெற்றோர்-குழந்தை நலன் பேணுவதற்கு...

Post a Comment