Wednesday, September 17, 2014

அதிகாலை காட்டில் ஒரு பயணம் - அனுபவக்கட்டுரை

காடு கதைகள் புதைத்து வைத்திருக்கும் பெரும் புத்தகம். ஒவ்வொரு பக்கங்களும் புது அனுபவத்தை தருகின்றன.

புதுமை என்னவென்றால் இரவில் புரட்டும் போது அதன் பக்கங்கள் பயத்துடன் பிரமிக்க வைக்கின்றன. அதிகாலையில் பயத்தை விட்டு ஒழித்து காடு அதன் அழகை காட்டி ரசிக்க வைக்கிறது. மதிய வேளையில் மிதமான குளிரும் அதே நேரத்தில்  சுட்டு எரித்து வெயிலையும் தந்து புது அனுபவத்தை கொடுக்கின்றது. மாலையில் காடும் அதனைச் சார்ந்த பகுதிகளும் அமைதியாகி விடுகின்றன. மேலும் காடு விலங்குகளை அதன் கரங்களின் ஓரத்தில் ஓட வைத்து ஆச்சரியப்படுத்துகின்றது.

இரவில் காட்டின் பிரமாண்டத்தை ரசித்தப்படி, அதன் குளிரில் நனைந்தப்படி வெகுநேர உரையாடலில் கொஞ்சம் தூக்கம் வரவே தூங்கச் சென்றோம். அதிகாலை காடு எப்படி இருக்கும் என்ற ஆவலும் பலவித கற்பனைகளும் கண்களுக்குள் சுழன்று வர , உறக்கத்தில் காடு விரிந்தது. விடியலும் சேர்ந்து வந்தது.

காடு விடியலில் பலவித ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தது.

கடல் மட்டத்திலிருந்து குறைந்த பட்சம் 1300 அடி உயரத்தில் இருந்தோம்.

மேகங்கள் பனியால் மறைக்கப்பட்டு இருந்தன. காரின் வைப்பர் போன்று சூரியன் தன் கரங்களால் பனிமூட்டத்தை துடைத்து ஊடுருவியது.    

எங்கும் பசுமை. பச்சைப்பசேல் என காட்சியளித்தது காடு. அப்போது தான் குளித்து தலை துவட்டாமல் வந்து நிற்கும் புதுமணப்பெண்ணைப் போன்று வசிகரித்தது. ஆம் புதுமணமகனைப்போன்று காட்டை மீண்டும் மீண்டும் வாஞ்சையுடன் ரசித்துக் கொண்டு இருந்தோம்.

காட்டில் தடம் பதித்து நடக்க ஆரம்பித்தோம்.

மண் ஈரமாக இருந்தது. மழைப்பெய்து நனைந்தது மாதிரியான ஒரு ஈரம். மண்ணில் எண்ணற்ற ஜீவராசிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. எங்கள் கால்களில் ஒட்டிக்கொண்ட அட்டையைத்தவிர வேறு எதன் பெயரும் எங்களுக்கு தெரியாது.

அருகில் குடியிருக்கும் நபரின் பெயரே தெரியாமல் வாழும் நமக்கு, சமவெளிக்கும் மலைக்கும் இடையில் வாழும் ஜீவராசிகளின் பெயர்கள் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. காட்டிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டுள்ளோம் என்பதற்கு இதுவே சாட்சி.

எறும்பு கூட வித்தியாசமாய் சிவப்பு நிறத்தில் இருந்தது. அதை மா மரங்களின் சிவப்பு கடி எறும்பை விட வித்தியாசமாய் ஒருந்தது.

காப்பி செடியில் இலைகளின் பசுமை கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டின. காப்பி செடிகளின் இலைகள் பசுமையை வெவ்வேறு அளவுகளில் செறிவுகளில் காட்டி அதிசயிக்க செய்தன. காமிரா தன் கண்களை திறந்து அதனை நகல் எடுத்துக் கொண்டிருந்தது.

காப்பி கொட்டைகள் சடை சடையாக தொங்கின. அதில் பழுத்த காப்பி கொட்டைகள் பசுமைக்கு நடுவில் வசிகரிக்க செய்தன. பழுத்த கொட்டைகள் சிவப்பாக நம்மை வசிகரித்தன.

ஒரு காப்பி கொட்டையில் ஒரு விதை மட்டுமே இருந்தால் அது குவாலிட்டியான ரகம் என்றார் திலகபாமா. ஆம், மனிதனில் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்பவன் தானே ஒழுக்கத்தில் சிறந்தவன். அவனையே மதிக்கின்றோம்.

காப்பி கொட்டையில் இரண்டு விதை( சீட் )இருந்தால் , அது நம்பர் 2 குவாலிட்டி என்றார் திலகபாமா. மேலும் அவர் கூறுகையில், கையில் கொட்டைகளை அள்ளிப்பார்ப்பார்கள். அதில் உள்ள ஒற்றை விதைகளின் அளவை வைத்து ,  விலையை நிர்ணயிப்பார்கள் என்றார்.

நாம் மனிதர்கள் ஆயிற்றே சாதி பார்ப்பதில் நம்மை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்பது எல்லாம் ஏட்டளவில் தான் என்பதை காடு சிரித்தப்படி நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

காப்பி செடிகளுக்கு நடுவில் ஆரஞ்சு பழ மரங்கள். வழியெங்கும் பழுத்த பழங்கள் பறிக்க ஆள் இன்றி விழுந்து கிடந்தன. அவை மக்கி காய்ந்து உரமாகிக் கொண்டிருந்தன.

கவிதைக்காரன் இளங்கோ பறித்து கொடுத்த ஆரஞ்சு அந்த அதிகாலைக்குளிரில் புளிப்பை ஊட்டி உடலை நடுங்கச் செய்தது. அதன் சுவையை எழுத்தால் வர்ணிக்க இயலவில்லை. ஆரஞ்சு பழத்தை சுவைக்கையில் அதன் புளிப்பு உடலில் பரவி புத்துணர்ச்சியை தந்தது. ஆரஞ்சு சுளையின் புளிப்பு  உடலில் பரவி உடலை குலுக்கியது. அது அமிர்தத்தை விட கூடுதல் சுவை என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.

எல்லோரும் அமைதியாக வாருங்கள் என்று வழிக்காட்டி திலகபாமா கூற அனைவரும் அமைதியானோம். எங்களுக்கு கொஞ்சம் அருகில் ஒரு காட்டு எருமை.

என்னத்தான் அமைதியானானலும், அதற்கு மனித வாடை தெரியாதா, என்ன? கொஞ்சம் மிரட்சியுடன் திரும்பி பார்த்தது. துள்ளி உயரே எழுந்து குதி குதித்து ஓடியது. கொஞ்சம் திரும்பி வந்திருந்தால் எங்கள் கதி அதோ கதி தான்.

திலக பாமா இரவில் காட்டு எருமையின் எடை 3000 கிலோ இருக்கும் என்றார். அமிர்தம் சூர்யா சிரித்தார். நம்பவில்லை. ஆனால் திலகா கூறியது தான் உண்மை. அவர் கூறியதை விட கூடுதலாக தான் இருக்கும். அது எகிறி குதித்து முட்டி தள்ளும் போது நடிகர் சூர்யா மாதிரி வசனம் பேசினால், “ஓங்கி மிதிச்சா..3 டன் வெயிட்டு ”என்று தான் கூறும்.

அது நின்ற இடத்தில் கொஞ்சம் பள்ளம் பறிக்கப்பட்டு இருந்தது. அதன் தடங்களை பார்த்தேன். அந்த ஈரத்தில் ஆழமாகவே பதிந்து இருந்தது.
அதன் கால்தடங்கள் காட்டு எருமை குறித்த பயத்தை தந்தது.

 மிளகு கொடிகள் உயர்ந்த இலவம் பஞ்சு மரத்தில் பற்றி ஏறி இருந்தன. அதன் இலைகள் வெற்றிலையைப் போன்று தோற்றம் தந்தன.

காப்பி பயிரிட குளிர்ச்சி அவசியம். அதற்காக தோட்டத்தின் ஓரங்களில் இலவம் பஞ்சு மரங்களை நட்டு வைத்துள்ளோம் என்றார் தோட்டக்காரர். ஓவ்வொரு மரமும் 300 அடி உயரம் இருக்கும் . அதன் அடியை பிடிக்க ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள் தேவைப்பட்டார்கள். மரங்கள் அண்ணாந்து பார்த்தப்படி நம்மை சிந்திக்க செய்தன.

காட்டுக்குள் செல்லும் முன் ரோட்டோரங்களில் வெள்ளைப்பூக்கள் புத்து குலுங்கின. அவைகள் பறிக்க முற்பட்ட போது அவைகள் விசமானவைகள் என்றார்கள். வட நாட்டில் அந்த பூவைத்தான் சிவனுக்கு படைப்பதாக சென்னார் அருகில் இருந்த சஞ்சய் பன்சால்.

காடு என்னத்தான் தன்னை மனிதர்கள் நெருங்கக்கூடாது என்பதற்காக தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மனிதன் காட்டை அழிப்பதில்  அதனை விட சிறப்பாகவே செயல்படுகின்றான். அவன் அவனையே அழித்துக் கொள்கின்றான் என்பதை உணராமல், காட்டை சூரையாடுவது தான் வருத்தமளிக்கிறது.

 மரங்களின் இடைவெளிகளில் மெல்ல நடந்தோம். மரக்கிளைகள் விலக்கி குனிந்து சென்றோம். இலவம் பஞ்சு வெடித்து சிதறி இலைகளின் பசுமையில் விநோதமாக காட்சி அளித்தன. பலவிதமான கற்பனைகளை ஏற்படுத்தி தந்தன. துரத்தில் பார்க்கும் போது ஏதோ ஒரு பறவை இலையின் மீது முட்டை இட்டுள்ளது போன்று தெரிந்தது. அருகில் சென்ற போது பூஞ்சை என எண்ணத்தோன்றியது.

இங்க பாருங்கள் காட்டுபன்றி குழிப்பறித்து சென்றுள்ளதை என்றார் திலகா. கிழங்குக்காக அவைகள் குழிப்பறித்து சென்றிருந்தன. காட்டு பன்றியின் பற்கள் கத்தியை விட கூர்மையானவை. அவை கடித்தால் விசம். மேலும் சதையை பேர்த்துக் கொண்டு போய்விடும் என கேள்விப்பட்டுள்ளேன்.

காட்டில் விலங்குகள் மனிதனைக் கண்டு பயப்படவே செய்கின்றன. மனிதனின் சிறு அசைவையும் கண்டு அச்சம் கொண்டு, அவ்விடத்தை விட்டு ஓடிவிடவே முயல்கின்றன  அல்லது மனிதனின் வாடை அடிக்காத இடத்தை தேடி செல்கின்றன. மனிதன் உறங்கிய இரவில் தான் காடுகளில் விலங்குகள் சுதந்திரமாக பயமின்றி உலாவுகின்றன.

காப்பி செடிகள் அடந்த காட்டுப்பகுதியில் , அச்செடிகளை விலக்கியும் ஒதுக்கியும் அவைகளின் கிளைகளின் ஊடாகவும் தவழ்ந்தே சென்றோம்.

குடியானவர்கள் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். காடு அக்காட்டு மனிதர்களை எவ்வளவு வெகுளியாக வைத்திருக்கிறது. மிக ஏழ்மையாக இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் அழகாக தவழ்ந்து வந்து அதிசயமாக எங்கள் கும்பலை கண்டு ரசித்தது. நாங்கள் மிருகங்களை ரசிக்க வந்துள்ளோம் என நினைத்தப்போது அக்குழந்தையின் பார்வையில் மனித மிருகங்களாகவே காட்சியளித்தோம்.

மிளகு கொடி வளர்வதை காட்டினார் திலகா. அவைகள் வெயில் படாமல் குளிர்ச்சியாக மூடி வைக்கப்பட்டு இருந்தன. மிளகு சாப்பிளிங்குகள் என்றார். செடிகள், கொடிகள் , மரங்கள் வளர்வதற்கு ஏற்ற சீதோசனை நிலை முக்கியம் என்றார்.

மரம், செடி, கொடி வளர்வதற்கு போதிய மண்வளம், காற்று , சூரிய ஒளி இருந்தாலும் பருவ நிலைகள் தேவைப்படுகின்றன என்றார், திலகா.

திலகபாமா அவர்களின்  உறவினர் இங்கிலாந்திற்கு இங்கிருந்து அந்திமந்தாரை பூ மற்றும் சில பூ வகைகளை கொண்டு சென்றார்களாம்.  அவைகள் அங்கு நன்கு வளர்ந்தனவாம். ஆனால் அவை பூக்கவில்லை என அவரின் உறவினர் கவலை கொண்டார்கள்  என்றார்.

திடீரென்று ஒருநாள் போன் செய்து, அவரின் வீட்டில் அப்பூச்செடிகள் பூக்கத்தொடங்கின என்றாராம். காரணம் அன்று வெயில் கொஞ்சம் கூடுதலாக அடித்ததாம். பாருங்கள் செடிகள் பூக்க சீதோசனை நிலை தேவை என்றார்.  

எங்கும் பசுமை. கண்கள் எரிச்சல் இல்லாமல், வாகனப்புகைகளில் சிக்காமல் , மிகவும் இயல்பாக குளிர்ந்து காணப்பட்டது. காற்று இதமாகவும், சுத்தமாகவும் இருந்தது. அதனால் சுவாசம் சிரமம் இன்றி சீராக அமைந்து இருந்தது. காட்டின் மேடு பள்ளங்களில் நடந்து உருண்டு சென்ற போதும் , உடலில் எந்தவித அயர்ச்சியையும் உணர முடியவில்லை.

இப்போது மண் சரிவதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட கல்பதித்த பாதையில் செடிகள் அடர்ந்திருக்க கொஞ்சம் தவறினால் பள்ளத்தில் விழ வேண்டிய மேட்டில் நடந்தோம். கிளைகள் சிரமப்பட்டு தாண்டி சென்றொம். மறக்க முடியாத அனுபவம் .

வெயில் பனிக்கூட்டத்தை பொசுக்கி இப்போது நன்றாகவே காட்டில் உலவிக் கொண்டு இருந்தது.

இலைகளில் பனித்துளிகள் பூத்து இருந்தன. பதின்மவயது பெண்ணின் முகப்பருவைப் போன்று மொட்டு  விரித்து வசிகரித்தது.

பனி இரவு முழுவதும் இலைகளுடன் விடாது பதித்த முத்தத்தில் அதன் இதழ் தடம் இலைகளில் நீர்துளிகளின் சாட்சியத்தில் அடையாளம் காணப்பட்டன.

இலைகளில் இருந்து சரிந்து ஒழுகத் தொடங்கிய நீர் காமிரா கண்களில் மிக அழகாகப் படம் பிடிக்கப்பட்டன. காடு இலைகளை விதவிதமாக காட்டி அதிசயிக்க வைத்தது. கண்கள் தவித்து விட்டன. எல்லாவற்றையும் பார்க்க ஏங்கியது. மகளீர் கல்லூரி முன் தவிக்கும் ஆணின் கண் போன்று எல்லாவற்றையும் ஒரே தடவையில் பார்த்துவிட ஏங்கியது.


காட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் போது இயற்கை நம்மை அச்சுறுத்த தவறுவதில்லை. தவறிப்பெய்யும் பருவமழையும், பூமியின் ஆழத்தில் போய் கொண்டிருக்கு நிலத்தடி நீருமே இயற்கையின் அச்சுறுத்தலுக்கு சாட்சி. இருந்தாலும் மனிதன் மனசாட்சி மறந்து முற்றிலும் முரனாகவே செல்கின்றான்.

காடு , அதுவும் காப்பி தோட்டம், அதன் ஊடே ஒரு பிரயாணம் எனும் போது,  தேயிலை தோட்டம் நினைவுக்கு வராமல் இல்லை. எரியும் பனிக்காடு நினைவுக்கு வராமலா போகும் ! பேசிக்கொண்டோம் , மக்களின் கஷ்டங்களை..! எங்களுடனே தமிழ்மகன் இருந்ததால், வனசாட்சிக்கு நாங்கள் அலையவில்லை. மனிதன் மட்டும் மனசாட்சியை கழட்டி வைத்து அலைவதுதான் பிரச்சனை.


எப்போதும் கேள்விகளை அடுக்கி கொண்டு வரும் டிராக்டர், சளைக்காமல் பதில் சொல்லிவரும் கவிஞர் திலகபாமா, ஆச்சரியங்களுடனும் பரப்பரப்புகளுடனும் வந்த கவிஞர்கள் அமிர்தம் சூரியா, கவிதைக்காரன் இளங்கோ, காமிராவுடன் கவிதைகளை வடித்து கொண்டு வந்த அருணாச்சலம், செல்வம்ராமசாமி மற்றும் தன் மனதில் காட்டின் சாட்சியை உறையவைத்துள்ள எழுத்தாளர் தமிழ்மகன் மற்றும் பல சிறந்த நண்பர்களுடன் இப்பயணத்தை தொடர்ந்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது.

எல்லா சிறப்புகளும் எங்கள் எல்லோரையும் அழைத்து அற்புதமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்த கவிஞர் எழுத்தாளர் திலகபாமா அவர்களையே சாரும். அவர் இயற்கையை நேசிக்கிறார், ஆகவே கவிதை அவரை நேசிக்கிறது. இல்லை அவரிடம் கவிதை வசிக்கிறது.  எப்போதும் இயற்கையை ரசிக்க செய்யும் அருணாச்சலத்திற்கும் நன்றிகள்.

மதுரை சரவணன்.

4 comments:

மகேந்திரன் said...

உரைக்கப்பட்ட சூழல்கள் நெஞ்சம் நிறைக்கிறது...

கோமதி அரசு said...

காட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் போது இயற்கை நம்மை அச்சுறுத்த தவறுவதில்லை. தவறிப்பெய்யும் பருவமழையும், பூமியின் ஆழத்தில் போய் கொண்டிருக்கு நிலத்தடி நீருமே இயற்கையின் அச்சுறுத்தலுக்கு சாட்சி. //

நன்றாக சொன்னீர்கள் , இதை மக்கள் புரிந்து கொண்டு மிச்ச மீதி இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்.
இடை இடையே நகைச்சுவையாக விஷயங்களை சொல்லி யிருக்கிறீர்கள்.
கவிஞர், எழுத்தாளர், இயற்கையை நேசிப்பவர் எல்லோர்கூடவும் சென்றதால் கவிதையாக, இயற்கையை ரசித்து அழகாய் பதிவு தந்து இருக்கிறீர்கள்.

சீனு said...

அழகானவிவரணை.. ஆனால் எந்தப் பகுதி காடு என்று குறிப்பிட்டு இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்..

சமீபத்தில் மூணாறு காடுகளில் பயணித்தோம் கட்டு மாடுகளின் தரிசனம் கிடைத்தது.. பார்பதற்கே மிரட்சியாய் இருந்தது.. வெறும் மாடுக்கே இந்த நிலை என்றாள் நாம் எல்லாம் புலியை எதிர்கொள்ள நேரிட்டால் !!!

'பரிவை' சே.குமார் said...

சிறந்த பகிர்வு சரவணன்...
காடு... அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

Post a Comment