Tuesday, September 16, 2014

அனுபவக்கட்டுரை - இரவில் காடு

காடு அழகானது. அதிலும் இரவில் காடு மணப்பெண்ணிற்கான அலங்காரத்துடன் கூடுதல் அழகாகவே தென்படுகிறது. காடு இரவில் தனது இரகசியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இரவில் காடு அற்புதமான அனுபவத்தை தருகிறது. காட்டின் பிரமிப்பு சங்கரின் சினிமாவை விட மிக பெரிய பிரமிப்பை கொடுக்கிறது. அது நம் மனக்கண்களில் இருந்து எளிதில் அகல்வது இல்லை.

இரவு காட்டின் நினைவுகள் நிரந்தரமாக நம் எண்ணங்களில் தங்கிவிடுகின்றன. கணினியின் ஹாட் டிஸ்கில் உள்ள நிரந்தர நினைவுகளாக(பெர்மநன்ட் மெமரி ) நம் வாழ்வில் சேகரித்து வைக்கப்படுகின்றன. முதல் இரவு போன்று காட்டின் முதல் இரவு நம் வாழ்வில் நீங்காத இடத்தைபிடித்து விடுகிறது. இருளில் காடு நமக்கு நிறையவே அனுபவத்தை தருகின்றன.

தாண்டிக்குடிக்கு 7கிமீ முன்னால் பெரியபாறைக்கு கொஞ்சம் தாண்டி உள்ள காபி எஸ்டேட்டில் 15.9.2014 இரவு கவிஞர் திலகபாமா அவர்களின் ஏற்பாட்டில் தங்கினோம்.

இரவு ஏழு மணிக்கு குளிர் லேசாக தன் கரங்களை நீட்டி வரவேற்க தொடங்கியது. தூரத்தில் இருந்து இருளில் காட்டின் அழகை பார்ப்பது கொஞ்சம் அஞ்சம் தருவதாக இருக்கிறது. இருந்தாலும் அந்த உயர்ந்த மரங்களை நட்சத்திர பின்னனியுடன் பார்க்கும் போது அச்சத்தை மீறி ஒரு ஈர்ப்பை உண்டாக்கி , காட்டை நோக்கி நம்மை நகர்த்துகின்றன.

இருட்டை விட மனித மனங்களிலிருந்து வெளிப்படும் இருளுக்குள் புதைந்துள்ள காட்டைப்பற்றிய ரகசியங்கள் பயங்கரமான அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. எதாவது ஒரு ஒலியை கேட்டவுடன் , அது குறித்து பலவிதமான புனைவுகள் வடிக்கப்படும் போது கொஞ்சத்துக்கும் அதிகமாகவே பயத்தை உருவாக்குகிறது.

புலி , சிங்கம், சிறுத்தை, காட்டெருமை, யானை என வரிசையாக மிருகங்கள் மனிதர்களின் மன இருளில் இருந்து வெளிப்படும் போது நிஜத்தை விட மிக கொடுரமாக உருவெடுத்துவிடுகின்றன.  அதன் உண்மையான இயல்பை மீறி சத்தம் எழுப்புகின்றன. பாவம் அவைகள்.

நெட்வொர்க் இல்லாமல் எல்லா தொடர்புகளும் அறுந்து விடப்பட்ட மனங்களில் காடு ,நெட்வொர்க் இல்லாமல் இருந்தலின்  பயங்கரத்தை விட கூதலான அச்சத்தை ஏற்படுத்த இயலவில்லை. காடு, அதன் இயல்பில் துள்ளியளவு கூட மாறாமல் இருளில் கம்பீரமாக இருந்தது.

பசுமை சூழ்ந்த காட்டின் தாய்மை குளிரினை தன் தூய காற்றின் வழியாக அனுப்பி உடலுக்கு குளிர்ச்சியை தந்தது. அதன் பேரமைதி நம்மிடம் பல சங்கதிகளை கூறிக்கொண்டிருந்தன ஒரு தாலட்டைப்போல்.

குளிர்ச்சி கொஞ்சம் சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்ற நினைப்பை கொடுத்தது. அப்போது டீ யின் நினைப்பு வந்தது. டீயை வரவழைத்து அருந்தினோம்.

வெளிச்சத்திற்கும் அப்பால் இருந்த இருள் காட்டை அழகுப்படுத்தி, வா வா என அழைத்தது. பலவிதமான குரல்கள் காட்டின் இருளை மீறி காதிகளில் வந்து விழுந்தது. சிறு குழந்தைகளாக மாறி அவற்றை பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகளுடன் பொருத்தி மகிழ்ந்தோம். தோற்றும் போனோம்.

டீ அருந்தும் போது வந்து விழுந்த ஒரு அழுகுரல் பன்றி, காட்டெருமை என ஆள் ஆளுக்கு யுகங்களை ஏற்படுத்த , அருகில் இருந்த அந்த மண்ணின் மைந்தனை கேட்டோம். அவன் சிரித்துக்கொண்டே, மரம் அறுக்கிறார்கள். அந்த ரம்பத்தின் இழுப்பில் வரும் குரல் தான் அது என்றான். மரங்களும் தன்னை அறுக்கும் போது அழுவதை அந்த இரவில் காட்டின் அமைதியில் கேட்க முடிந்தது. கொஞ்சம் துடித்து தான் போனேன்.


காட்டிற்குள் நடக்க தீர்மானித்தோம். வேனில் ஒரு கிலோ மீட்டர் பயணித்தோம். இரவில் வாகனங்கள் பேரொலி ஏற்படுத்தி , காட்டையே பீதி கொள்ள செய்து, தங்கள் பயணத்தை தொடர்ந்தன.

ஆற்றுப்பாலத்தின் ஓரத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அதிலிருந்து காட்டை பார்த்தோம். நிச்சயமாக அந்த இருளில் எங்கள் முன் யார் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. இருள் கருமையை போர்த்தி தன்னை புதைத்து இருந்தது . இல்லை வெளிச்சத்தில் இருந்து மறைந்து இருந்தது. காடு அந்த இருளில் மிகவும் அமைதியாக எங்களை வரவேற்கிறது.

மின்மினிப்பூச்சிகள் காட்டின் கண்களோ என்று எண்ணத்தை ஏற்படுத்தி பறந்தன. அங்காங்கே மின்மினிப்பூச்சிகள் மினுக்குவது, காடு தன் கண்கள் திறந்து பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்தியது. சிறியவர் பெரியவர் என்றில்லாமல், மின்மினிப்பூச்சிகளை கைகளில் பிடித்து ரசிக்க தொடங்கினோம். அவை கைகளிலிருந்து விடுப்படும் போது ஏற்படும் ஒளி , பரவசம் கொள்ள செய்கிறது.

இருளில் கொஞ்சம் நடக்க தொடங்கியதும், கண்கள் பழகி விட்டன. விண்ணில் நட்சத்திரங்கள் காட்டின் பேரமைதியில் ,எப்போதும் இல்லாத அழகையையும் ஒளியையும் வீசிக்கொண்டிருந்தன. மேலிருந்து நட்சத்திரங்கள் காட்டில் எங்களுக்கு பாதையை ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டிருந்தன. இருளில் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என எடுத்து தள்ளினோம். உண்மையில் இருளை பேக் ட்ராப்பாக கொண்ட புகைப்படங்கள் முகங்களில் கூடுதல் வனப்பை ஏற்படுத்தி கொடுத்தன.

இருளில் காடு மனிதர்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒருவருக்கொருவர் நீ இருக்கிறாயா, அவர் இருக்கிறாரா என்ற விசாரிப்புகளுடன் பயணத்தை தொடரச் செய்தது. காற்றும் குளிரும் எங்களை காட்டின் உள் இழுத்து சென்றன. மனிதர்களின் புனைவுகளின் வழியாக மிருகங்கள் வந்து சென்று கொண்டிருந்தன.

மனிதனுக்கு காட்டின் உள் செல்ல செல்ல ஒருவித பயம் தொற்றிக் கொள்கிறது. அதேப்போல் காட்டிற்குள் மனிதன் உள் ஏறி வர வர காடும் அச்சம் கொள்ளவே செய்கின்றது. மனித நடமாட்டம் தென்பட தென்பட காட்டின் புதர்களில் இருந்து சலசலப்பு ஏற்படவே செய்கின்றது.

இருளில் உயர்ந்த மரங்களில் கம்பீரத்தில் தொங்கும் கொடிகள் விக்ரமாதித்தனின் வேதாளத்தை நினைவுப்படுத்தியே பயம் கொள்ள செய்கின்றன . விடைத்தேட முடியாத கதைகள் காடுகளில் புதைந்திருக்க, காட்டின் பூதத்தை புனைந்தே முதுகில் சுமந்து, விக்ரமாதித்தனைப் போன்று புத்திச்சாலித்தனமாக காட்டை நோக்கி நகர்கின்றோம். ஏதோ ஒரு இடத்தில் பெரும் ஒலி கேட்கவே, திரும்பும் முடிவுக்கு வருகின்றோம். காடு இருளில் அழகானது தான் என்பதற்கு அந்த சிறுது தூர நடை சாட்சியாக அமைந்தது.

காப்பி எஸ்டேட்டுக்கு திரும்பிய பின்பும் காட்டின் இருள் மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது. அந்த இரவில் காட்டின் அமைதியுடன், எப்போதாவது எழும் ஓசையில் இது யாருடையது, யாருக்கானது என்ற விசாரிப்புகளுடன் பேசப்படும் பேச்சுக்கள் கூடுதல் சுகமளிப்பதாக இருந்தன.

குளிர் குபீரென்று உடலை தழுவிக் கொள்கின்றது. கண்கள் அசர மறுக்க இரசித்தப்படி ஆன்மீகம், சினிமா, கவிதை என உரையாடல்கள் தொடர்ந்தபடி இருக்க , காடு மெல்ல விழிக்கிறது. நம் கண்கள் மெல்ல தூங்க ஆரம்பிக்கின்றன.

இந்த பயணத்தில் எழுத்தாளர் தமிழ்மகன், கவிஞர்கள் திலகபாமா, கவிதைக்காரன் (இளங்கோ),அமிர்தம் சூர்யா, புகைப்பட க(வி)லைஞர்கள் அருணாச்சலம், செல்வம் ராமசாமி, மற்றும் பல்துறை வித்துவான் டிராக்டர் முருகன், மற்றும் பலர் பங்கேற்றனர்.

மதுரை சரவணன்.
(விடியலில் காட்டின் அனுபவத்தை நாளை காண்போம்.) 

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! நன்றி!

கோமதி அரசு said...

இருளில் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என எடுத்து தள்ளினோம். //

சிலவற்றை இங்கு பகிர்ந்து இருக்கலாம்.
நாங்களும் இருளில் காட்டின் அழகை ரசித்து இருப்போம்.
மரம் அழும் ஓசை கவலை அளிக்கிறது.

Geetha said...

ஆஹா அருமையான காடு...

Post a Comment