Monday, July 7, 2014

இதய நோயளிகள் படிப்பதை தவிர்க்கவும்.

கண்ணீர் வரவழைத்த உணவு சங்கிலி !
-------------------------------------------------------------------
மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்ற உண்மையை எந்த அறிவியல் விளக்கமும் இன்றி எளிதில் புரிந்து விடுகின்றோம். பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக உயிரினங்கள் ஒரு செல், இருசெல், பல செல் உயிரினங்களாக வளர்ச்சி அடைந்து , குழியுடலிகள் , மென்னுடலிகள் என ஒவ்வொரு நிலையையும் கடந்து முதுகெலும்பு அற்றவை , முதுகெலும்பு உள்ளவை என பிரிந்து, மனித தோற்றத்தை வரையறுக்கும் பரிமாணக்கொள்கையை மிக எளிதாக புரிந்து கொள்கின்றான். ஆனால் , எனக்கு மனித வளர்ச்சியில் சில பரிமாண முரண்கள் எப்போதும் உண்டு.

இன்று காலை பதினோறு மணிக்கு ஒரு வயதான பெண்மணி தன் கையில் எட்டு வயது பேரனை அழைத்து கொண்டு வந்தார். எனது அறையிலிருந்து அவர் எனது அறையை கடந்து செல்வதை கண்டேன். சென்றவர் ஒன்றாம் வகுப்பு ஆசிரியருடன் வந்தார். சார் மூன்றாம் வகுப்பு சேர்க்கணுமாம் என என்னிடம் ஒப்படைத்து விட்டு அந்த ஆசிரியர் சென்றுவிட்டார். வணக்கம் உட்காருங்க என்றேன். இல்லை இருக்கட்டும் சார் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்றேன். அனுப்பானடி என்றார். எங்கு படித்தான் என்றேன். சொன்னார். தற்போது ஏன் இங்கு வருகிறீர்கள் என்றேன். சார் வீடு மாறி சௌராஷ்டிரா ஸ்கூல் பின்னாடி வருகிறோம். என் மகன் சொன்னான் நீங்க நல்லா சொல்லி கொடுப்பீங்கன்னு என்றார். சரி .. மூன்றாம் வகுப்பு ஆசிரியரை அழைத்து வர என் வகுப்பு மாணவனை அனுப்பினேன்.

எப்ப வீடு மாறி இங்க வருவீங்க.. என கேட்டேன். இன்னும் ஒரு வாரம் ஆகும் சார் என்றார். சரி.. அதுவரை எங்கள் பள்ளி வேனில் ஏறி வர சொல்லுங்கள் என்றேன். எட்டு மணி அனுப்பானடி பஸ் ஸ்டாப் நிற்க வேண்டும். சார் டிசி வாங்கவில்லை.. அதான் அடுத்த வாரம் வரட்டுமா என மெலிந்த குரலில் கேட்டார். கட்டாய இலவச கல்வி சட்டம் குறித்து இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லையே என வருந்தினேன். டிசி கேட்டால் தர வேண்டும் என சட்டம் சொல்லுகிறது, டிசி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவனை இலவச கட்டாய கல்வி சட்டப்படி சேர்த்து கொள்கின்றேன் என்றேன். சார் டிசிக்கு எழுதி கொடுத்து விட்டேன். ஒரு வாரத்தில் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்குள் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் வந்தார். இந்த ஆசிரியர் தான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியர் என்றேன். இந்த ஆசிரியர் அனுப்பானடி பகுதியிலிருந்து மாணவர்களை வேனில் பத்திரமாக அழைத்து வருவார் என்றேன்.

சார் பையனை வெளியில் அனுப்பிடாதீங்க என்றார். தொடர்ந்து அந்த அம்மா , என்னிடம் சார் எக்காரணம் கொண்டும் அவனோட அம்மா வந்தா அனுப்பிடாதிங்க என்றார். நல்லவேளை நீங்க சொன்னீங்க குடும்ப சண்டையில பிள்ளைகளை கெடுத்துடாதீங்க ...பெரியவங்க நீங்க ... சின்ன குழந்தைகள் எதிர்காலத்தை நினைச்சு பாருங்க என்றேன்.அந்த சிறுவன் என்னை ஏக்கப்பார்வையில் பார்த்தான். அவன் முகத்தில் முதல் முறையாக மாற்றத்தினை பார்த்தேன்.

“சார் அது இல்ல.. நான் இல்லைன்னா அவன் அப்பா வந்தானா மட்டும் அனுப்பனும்” என்றார். அது சரி.. அவுங்க அம்மா வந்து என் மவனை பார்க்கணும் என்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினேன். அவர் முழித்தார். மகனை பார்க்க அனுமதிப்பேன்..ஆனால் பையனை நீங்கள் சேர்த்ததால் அனுப்பி வைக்க மாட்டேன். பெற்றோர்கள் இருவரும் வந்தால் மட்டுமே அனுப்புவேன் என்றேன். சற்று பதட்டமடைந்தார். யார் வந்தாலும் அனுப்பாதீங்க.. நானே வந்து அழைத்து செல்கின்றேன் என்றார்.

நான் என்னிடம் பேச மறுக்கிறார் என புரிந்து, மூன்றாம் வகுப்பு ஆசிரியரை ஒன்றாம் வகுப்பு ஆசிரியரிடம் அழைத்து செல்லுங்கள் என்றேன் அம்மா கூச்சப்படும் சில விசயங்களை தாராளமா , டீச்சர் கிட்ட சொல்லுங்க.. அவுங்க சொல்ற படி கேட்டு நடங்க குழந்தை எதிர்காலத்துக்கு நல்லது என கூறி அனுப்பி வைத்தேன். அந்த பையன் பாட்டியுடன் செல்ல முயன்றான். பையனை நான் பார்த்து கொள்கின்றேன் என்றேன்.

நீ வீட்டில ஒரே பையனா என்று கேட்டேன். இல்லை சார் தங்கச்சி இருக்கு என்றான். தங்கச்சி எங்கடா படிக்குது என்றேன். தங்கச்சி அம்மாவோட இருக்கு என்றான். நீ தங்கச்சியை பார்க்க போவிய்யா என்றேன். தங்கச்சியை பார்க்கணும் போல இருக்கு என்று கம்மிய குரலில் சொன்னான்.

தங்கச்சி பிடிக்குமா என்றேன். ரெம்ப பிடிக்கும் என்றான். அப்பாவை சண்டை போடாம இருப்பான்னு சொல்ல வேண்டியது தானே என்றேன். அப்பாவுக்கு கோபம் வரும் என்னை அடிப்பார் என்றான். அம்மாவை பார்க்கணும் போல இருக்கா என்றேன். சார் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு என கண்ணீர் தழும்பும் கண்களுடன் சொன்னான். என் கண்கள் கலங்க ஆரம்பித்து இருந்தது. அம்மா அப்பாவோட சண்டை போட்டு வீட்டுக்கு போயிடுச்சா..என்றேன்.

அவன் கண்கள் குளமாகி நின்றது. இன்னும் கண்ணீர் கண்களில் இருந்து கீழே விழவில்லை. அவனை அணைத்து கொண்டு மிகவும் அன்போடு கேட்டேன். ஆம்பளை பையன் என்பதால் உன்னை அப்பா வச்சுகிட்டாறா.. பொம்பளை பிள்ளைன்றதால அம்மா கூட்டிகிட்டு போயிடுச்சாடா? என கேட்டேன். இல்லை அம்மா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து தான் கூட்டிகிட்டு போச்சு என்றான். அம்மாவுக்கு உன் மேல அவ்வளவு பாசமா.. அப்ப பாட்டிக்கிட்ட சொல்லி அம்மாவை கூட்டிகிட்டு வர சொல்ல வேண்டியது தானே என்றேன். பாட்டிக்கு அம்மாவை பிடிக்காது. அம்மா பேச்சு எடுத்தா அடிக்க வருவா என்றான். புரியாமல் முழித்தேன். அப்படி என்ன தாண்டா உங்க அம்மா மேல கோபம் என்றேன்.

மிக அப்பாவிதனமாக வெள்ளந்தியாக சொன்னான். “எங்க அம்மா , பாப்பாவையும் என்னையும் கூட்டிகிட்டு பக்கத்து வீட்டுட்டில இருக்கிற ஒருத்தரோட ஓடிப்போயிட்டோம். எங்க அப்பா எங்களை கண்டு பிடிச்சு.. என்னை மட்டும் கூட்டிகிட்டு வந்துடுச்சு.. என் பாப்பா அந்த ஆளோட மூணு பிள்ளைக... அங்கேயே அம்மாவோட இருக்காங்க..அம்மா நல்லவ .. பார்க்கணும் ” . என் கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் முட்டி வெளியேறியது. அவனை இறுக அணைத்து கொண்டேன். அறிவியல் பாடம் எழுதி கொண்டிருந்த அபிநயா சார் அழுகிறார் பாரு என அருகில் இருந்த பெண்ணிடம் சொன்னாள். என்னை மறைத்து கொண்டு, டேபிளில் இருந்த சாக்லெட்டை எடுத்து அவனிடம் கொடுத்தேன். சாப்பிடு என்றேன். அவன் பிரித்து உண்ண ஆரம்பித்தான்.

நான் அவனையே பார்த்து கொண்டிருந்தேன். மிக அழகாக இருந்தான். இன்னும் பால்மணம் மாறவில்லை. பாட்டியும் பேசி முடித்து வந்திருந்தார். சாக்லெட் உண்பதை பார்த்ததும் மகிழ்ந்து , சார் நல்லா படிப்பான்.. நீங்க கொஞ்சம் அரவணைச்சு பார்த்துக்கங்க..நானே வந்து கூட்டிகிட்டு போறேன் என்றார். சரி என்றேன். நாளையே சேர்க்க சொன்னேன். சரி என சென்றார். நிச்சயம் ..அந்த பெரியம்மாவிற்கு அந்த ஆசிரியர் ஆறுதல் சொல்லி இருப்பார். அவர் இப்போது தெளிவாக இருந்தார்.

சார்.. நீரை குடித்து புல் வளருகிறது. அந்த புல்லை தின்று மான் வாழ்கிறது.. அந்த மானை அடித்து புலி வாழ்கிறது.. அந்த புலியை மனிதன் வேட்டையாடுகின்றான் என உணவு சங்கிலியை சொல்லிக்கொண்டிருந்தான் வசந்த் என்னிடம். சில சிக்கலான சங்கிலி பிணைப்பை அறுக்கமுடியாதவனய் அறிவியல் பாடம் நடத்த தொடங்கினேன்.

11 comments:

'பரிவை' சே.குமார் said...

கண்கள் குளமாகிவிட்டன சகோதரா...
இதுபோல் எத்தனையோ தாய்மார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
என்ன செய்வது?

துளசி கோபால் said...

ஓடிப்போகும் அளவுக்கு இங்கே நடந்த கொடுமைகள் என்னவோ? அதையும் தெரிஞ்சுக்கிட்டாத்தான் உண்மைகள் புரியும்.

இந்த கலாட்டாவில் பிள்ளைகள்தான் கஷ்டப்படுகின்றனர்:(

ப.கந்தசாமி said...

பரிதாபம், மனது நோகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

இது போல் மிருகங்களுக்கு குழந்தைகள் தேவையா...?

S said...

பிள்ளைகளின் மனது
தொல்லைகளில்லாதக இருக்க வேண்டும்.
குற்றம் யாரிடம் என்பதை விட
பிள்ளையின் பால்யத்தை
சுணங்காமல் நேர் வழியில் செல்ல
இறைவா அருள்வாய்.

சரவணகுமார்

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
படித்த போது மனம் கலங்கியது... இப்படியானவர்கள் தேவையா...பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மாதேவி said...

சிக்கலானசங்கிலிதான் பிள்ளைகள் :(

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனக்கிறது நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம +1

துரை செல்வராஜூ said...

கண்கள் கசிகின்றன.. ஐயா..

Post a Comment