தேர்வு முடிந்தது.
சந்தோசம் உச்சி முதல் பாதம் வரை பரவ , மனது பட்டாம் பூச்சியாக சிறகு விரித்து பறக்க
வீதியெங்கும் சிறுவர் சிறுமியர் பந்தும் கையுமாக திரிவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக
இருக்கிறது. இரண்டு மாத கால தீவிரமான படிப்பு
, மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பதால் ரெம்பவே ரிலாக்ஸாக இருக்க நினைக்கிறார்கள்
. தேர்வுக்கு பின் ஜாலியாக சுற்றி திரிய ஆரம்பித்திருக்கிறார்கள். பார்க்,பீச், சினிமா
தியேட்டர் , மால் என காணும் இடமெல்லாம் நண்பர்கள் சகிதம் அரட்டை, மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள்.
பெற்றோர்கள்
தங்களின் மனம் முழுக்க கனவுகளை நிரப்பி வைத்து தங்கள் மகனின் எதிர்காலம் குறித்து சிந்திக்க
தொடங்கி இருக்கிறார்கள். மாணவர்களை மீண்டும்
ஒரு அழுத்தத்திற்கு உட்படுத்த தயாராகி கொண்டிருக்கிறார்கள். மாணவனின் கோடைவிடுமுறை
என்பது வசந்தமாகவும் நாம் எதிர்பார்க்கும் வாய்ப்புகளை கொடுப்பதாகவும் இருக்க சில யோசனைகள்!
இஞ்சினியரிங்க், மெடிக்கல் படிப்புகளுக்கு நுழைவுத்
தேர்வு எழுத பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றனர் என்பதோடு இந்த கோடை பயனுள்ளதாக அமைந்துவிடுமா!
போட்டிகள் நிரம்பிய உலகில் படிப்பு மட்டுமே சாதனைகளை கொடுத்துவிடுமா? சாதனைகள் தனிப்பட்ட
திறன்களால் சாத்தியமாகும் என்பதை நினைவில் கொண்டு , நம் மாணவர்களுக்கு பிடித்தமான விசயங்களுக்கு முன்னுரிமை தரலாமே!
விளையாட அனுமதியுங்கள்.
அதற்கான கால அளவை வரையறுத்து கொடுங்கள். மைதானத்தை பயன்படுத்தும் விளையாட்டுகளை அதிகாலை
விளையாட பழக்குங்கள் அல்லது பாரதி வழியில் மாலை முழுவதும் விளையாட அனுமதியுங்கள். கோடை
காலத்தினாலும் ,கோடைவெப்பினால் ஏற்படும் நோய்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம்.
நீர் அதிகமாக பருக சொல்லுங்கள். இளநீர் வாங்கி
தாருங்கள். கல்லூரி செல்ல இருக்கும் மாணவனை விளையாட அனுமதிப்பதா? என வினா எழுப்பாதீர்கள்.
விளையாட்டு உங்கள் குழந்தைகளின் தலைமைபண்பை வளர்க்கும். கிரிக்கெட் விளையாட செல்லும்
ஒருவன் வருங்காலத்தில் பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் திறனை வளர்த்துக் கொள்கின்றான்.
தட்டி கொடுக்கவும், பாராட்டவும், உற்சாகப்படுத்தவும், மன்னிக்கவும் விளையாட்டு நம்
குழந்தைகளுக்கு கற்று தருகிறது.அனைவருடனும் இணக்கமாக செல்லும் பண்பையும் இணைந்து செயல்படும்
திறனையும் அதிகரிக்கிறது. இப்பண்பு நம் குழந்தைகளுக்கு கல்லூரியை பயம் இன்றி சந்திக்க உதவும். கோடை விடுமுறையில் விளையாட்டில் ஏற்படும் ஆர்வம்
கல்லூரியில் அவனை அவனுக்கு பிடித்தமான விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாட உதவும். அது
மட்டுமல்ல அவனின் உடல்தகுதியையும் வளர்க்கும். கோடை வெயிலுக்கு நீச்சல் பயிற்சி மனதிற்கும்
உடலுக்கும் தெம்பை கொடுப்பதாக அமையும்.
கல்லூரியில் ராக்கிங்க்
இல்லை என்று அரசும் கல்லூரி நிர்வாகவும் உறுதியளித்தாலும், நம் குழந்தைகள் இன்னும்
தயக்கத்துடனே கல்லூரிக்கு செல்கின்றனர். இந்த தயக்கம் அவர்களை கல்லூரியில் இருந்து கூட வெளியேற்றிவிடும்.
தயக்கம் நம் குழந்தைகளுக்கு அறிவு (அதிக மதிப்பெண்கள் ) இருந்தும் கல்லூரியில் நுழைய
தடையை உருவாக்கலாம். இது பெற்றோர்களின் கனவை தகர்த்தி தேவையில்லா பிரச்சனைகளை உருவாக்கலாம்.
தயக்கத்தை போக்கி துணிந்து நிற்க, சீனியர் மாணவர்களுடன் இணக்கமாக போவதற்கு மாணவர்களுக்கு
ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகளுக்கு அனுப்புங்கள். ஆங்கில வழிக்கல்வி பயின்ற மாணவர்களானாலும்
அவர்களுக்கு கமினிகேட்டிவ் இங்கிலீஸ் வகுப்புகளில் பங்கெடுக்க செய்து குழந்தைகளின்
பேச்சுத்திறனை செம்மைப்படுத்தி கொள்ளலாம். கல்லூரி பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே
இருப்பதால் கோடை விடுமுறையில் ஆங்கில செய்தி தாள்களை வாசிக்க பழகுங்கள். புதிய சொற்களுக்கு
பொருள் தேடி அறிந்து, அச்சொற்களை வாக்கியத்தில் பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளை
நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேச அனுமதியுங்கள். குழந்தைகளுக்கான ஆங்கில மாத இதழ்களை
வாசிக்க பழகுங்கள். அதில் இடம் பெற்றுள்ள ஆக்டிவிட்டிகளை செய்ய உதவுங்கள். செய்தி தாள்கள்
நடப்பு விசயங்களை அறிய உதவும். போட்டி தேர்வுகளில் சர்வதேச, தேசிய நடப்பு நிகழ்வுகள்
குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உதவும்.
கோடை விடுமுறையில்
வெயிலின் கொடுமையிலிருந்து காத்துக்கொள்ள உங்கள் குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த கற்றுக்கொடுங்கள்.
தமிழ் புத்தகங்கள் தமிழ் இலக்கண நூல்கள் படிக்க செய்யுங்கள். டிஎன்பிசி குரூப் 2 தேர்வுகள் முதல் பொது தமிழ்
/ஆங்கிலம் சேர்க்கப்படுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். நூல் வாசிப்பு குழந்தைகளுக்கு வேறுவிதமான
பார்வையையும், பகுக்கும் திறனையும், அவனுள் ஒரு தேடுதலையும் கொடுக்கும். மேல் படிப்புகளுக்கு
செல்லும் போது நூல்கள் உதவிக்கொண்டு விசயங்களை அறிந்து, தாம் புத்தகம் வாயிலாக கற்றவற்றை
, தன் முன் அறிவோடு ஒப்பிட்டு , ஆய்வு மேற்கொள்ள
உதவும். அறிவை விரிவு படுத்தி கொள்ள உதவியாக
புத்தகங்கள் இருக்கின்றன. ஆகவே நம் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
இது மௌனமாக வாசிக்கும் அனுபவத்தை கொடுக்கும். வாசிக்க செய்யுங்கள் வாழ்வை நேசிக்க செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளை பன்முக திறன் கொண்டவர்களாக உருவாக்க
பழக்குங்கள். அதை விட முக்கியம் அவர்களுக்கு எதில் நாட்டம் அதிகம் என்பதை அறிந்து அதற்கு தகுந்த வண்ணம் மேற்படிப்பை
தேர்ந்தெடுக்க உதவுங்கள். உங்களின் குழந்தைகளின் விருப்பத்திற்கு உறுதுணையாக இருங்கள்.
இணையமற்ற உலகம்
காண்பது அரிது. கையடக்க செல்பேசியில் வேண்டிய விசயத்தை நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்
அறிந்து கொள்ளலாம். கல்லூரியில் பிற மாணவர்களுக்கு இணையாக கணிணியை இயக்கும் ஆற்றல்
பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மருத்துவம் என எல்லா துறைகளும் கணிணி மையமாக்கப்பட்டுள்ள
நிலையில் நாம் கணிணியை கையாள தெரியவில்லை என்றால் பின்தங்கி விட நேரிடும். அதில் இருந்து
மீள்வது கடினம். பிற மாணவர்களுக்கு இணையாக செயல்பட , கல்லூரி படிப்பு ஆர்வமுடன் சென்றிட
அவசியம் கணிணி பயிற்சி மேற்கொள்ளவும். இதுவரை கணிணியை தொட்டிருக்கவில்லை என்றாலும்
கணிணிபயிற்சி கோடை விடுமுறையில் மேற்கொள்ளலாம். கணிணி இயங்கு தளம், எம்.எஸ்.ஆப்பீஸ்,
கணிணி மொழிகள் மற்றும் போட்டோ சாப், கோரல் டிரா போன்ற கணினி படிப்புகளை கற்றிருந்தால்
சிறப்பு. இது எந்த படிப்பு படித்தாலும் கணிணியினால் ஏற்படும் தடையை நீக்கும். விரும்பிய
படிப்பை விரும்பியபடி படிக்க கணிணி அறிவு உதவும்.
மாணவர்களின் பாசிடிவ்
எண்ணங்கள் வளர்வதற்கு தன்னம்பிக்கை கொடுங்கள் . ஆதரவாக பேசுங்கள். உங்கள் குழந்தைகள்
விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். மனதை புத்துணர்வோடு வைத்திருக்க நடன வகுப்பிலோ இல்லை இசை வகுப்பிலோ சேர்த்துவிடுங்கள்.
அது அவனை சாந்தப்படுத்தும். அவனின் மூளைக்கு ஏற்பட்டிருக்கும் சோர்வை போக்கும்.
நாள் முழுவதும்
பயிற்சி பயிற்சி என்றிருந்தால் அயற்சி ஏற்படுமே ! ஐந்து நாட்கள் அல்லது ஒருவாரம் மாறுதலாக
மனதிற்கு உற்சாக மூட்டும் வண்ணமாக கோடை வாழ் தலங்கள் அல்லது பிடித்த இடங்களுக்கு வசதிக்கு
ஏற்ப அழைத்து செல்லுங்கள். இவர்கள் புதிய சூழலில் நிறைய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு
ஏற்படுகிறது. புதிய நபர்களுடன் எளிதில் பேசுவது எப்படி என்பதை வளர்க்கிறது. புதிய சூழலில்
தன்னை பொருத்தி கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்கின்றான். ஒருவாரம் வீட்டை மறந்து
இருத்தல் என்பது மேல்படிப்பிற்கு செல்லும் மாணவனை புதிய சூழலுடன் தன்னை பொருத்திக்
கொள்வது எப்படி என்பதை கற்றுக் கொள்கின்றான். களப்பயணம் அனுபவ அறிவை ஏற்படுத்தி, கல்லூரியில்
நுழையும் போது புதிய நண்பர்களுடன் தன்னை பொருத்தி கொள்ள உதவுகிறது.
குழந்தைகளுடன்
தினமும் ஒருமணி நேரமாவது பேசுங்கள். அவனுக்கு பிடித்த விசயங்களை பேசுங்கள். அதன் வாயிலாக
அவனுக்குபிடித்தமான விசயங்களை அறிந்து கொள்ளலாம். எந்த படிப்பின் மீது நாட்டம் உள்ளது
என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றாற்போல் படிப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
மருத்துவம், பொறியியல் மட்டுமே மேல் படிப்பு அல்ல என்பதை அறிய வாய்ப்பு கொடுங்கள்.
நீங்களும் அதை உணர்ந்து செயல்படுங்கள்.
உணவு பழக்க முறையில்
குழந்தைகளின் மீது அக்கறை ஏற்படுத்தி கொள்ளுங்கள். மா, கொய்யா , வாழைப்பழங்களை தினமும்
கொடுக்கவும். காய்கறிகள் மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை ஒதுக்குவதை
அனுமதிக்காமல், அவன் உண்ணும் காய்களை கொடுத்து, மெல்ல எல்லா காய்கறிகளையும் உண்பதற்கு
பழக்கி கொடுங்கள். உங்கள் குழந்தை ஹாஸ்டலில் தங்கி படித்தாலும் காய்கறிகளை ஒதுக்கி
உண்ணாமல் பாதுகாத்து கொள்ளும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை
உணர்த்துங்கள்.
குறைந்த பட்சம்
எட்டு மணி நேரம் உறங்குவதற்கு அல்லது கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை நேரம் ஒதுக்கி
கொடுங்கள். மனதை ஓய்வாக வைத்திருக்க வாய்ப்பு தாருங்கள். அதிகாலை எழுந்திருக்கும் பழக்கத்தையும்,
விரைவில் உறங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி தாருங்கள்.
மேற்கண்டு சொல்லப்பட்டுள்ள
விசயங்கள் கல்லூரி செல்ல இருப்பவர்களுக்கு மட்டுமல்ல விடுமுறையில் உள்ள எல்லா வகுப்பு
மாணவர்களுக்கும் பொருந்தும். விடுமுறையை பயனுள்ளதாகவும் சந்தோசமாகவும் கழிக்க உதவும்.
1 comment:
மனதை ஓய்வாக வைத்திருக்க வாய்ப்பு தாருங்கள். அதிகாலை எழுந்திருக்கும் பழக்கத்தையும், விரைவில் உறங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி தாருங்கள்.
>>
நிஜம்தான். இந்த ரெண்டு மாசத்தையும் ஸ்பெஷல் கோச்சிங் கிளாசுக்கு அனுப்பி படுத்த வேணாம். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்க.
Post a Comment