Friday, September 13, 2013

வைகை ஆற்றை விற்கிறார்கள்...ஜாக்கிரதை...!

என் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு வைகை ஆற்றின் சீர்கேட்டை ஆராய்வதற்கு நேற்று காலை 11 மணி அளவில் கள பயணம் மேற்கொண்டோம். மாணவர்கள் உற்சாகத்துடன் களத்தில் இறங்கினர். 

 களப்பயணம் உற்று நோக்கலில் தொடங்கியது. வைகை ஆற்றை அதன் கரையோரம் நின்று ஆய்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து, ஆறு எவ்வாறு மாசுப்பட்டுள்ளது என்பதை உற்று நோக்கி, தங்கள் நோட்டுகளில் பதிய செய்ய , அறிவுரைகள் வழங்கப்பட்டது.

     ஆய்வை குருவிக்காரன் சாலையின் தொடக்கத்தில் ஆரம்பித்தோம். அருகிலுள்ள குடியிருப்புகள் , அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் குழாய் மூலம் ஆற்றில் கலப்பதை பார்த்த மாணவர்கள் நிச்சயம் நம் ஆங்கிலப்பாடத்தில் கடவுள் பூமிக்கு வருகைபுரிந்து ஆற்றின் அழுகையை விசாரிப்பது போல விசாரித்தால், அய்யோ நம் நெஞ்சு தாங்காது என்று சொல்லி ஆதங்கப்பட்டார்கள் மாணவர்கள்.

  “சார் ... ஒரே நாத்தமா இருக்கு சார்... ” என்று ஐயப்பன் சொல்ல, “அடே இந்த நாத்தமெடுத்த தண்ணியிலும் எருமைமாடு எப்படி படுத்து புரளுது... பாரு” என்றாள் திவ்யா. 
“சார்...கீழே பார்த்து நடங்க சார்.. ஆத்துக்குள்ளேயும் ஆயி.. ஆத்து ஓரத்திலு ஆய்..” என்றாள் த்ரிக்‌ஷா ப்ரியதர்ஷினி. “அங்க பாருங்க சார் ஒரு நாய்.. ஆய் பேலுது..” என்று கார்த்திக் சுட்டிக்காட்டிய இடத்தில் மனித நாயும் அச்செயலை செய்தது. அனைவரும் சிரித்தனர். 

“ஆறு எல்லாம் ஒரே குப்பை  சார்... இந்த ஏரியா மக்கள் ஆத்தில தான் குப்பையை எறியுறாங்க போல “என்றான் சஞ்சய். 
“அட போங்க சார்...வண்டியூர் பக்கம் வாங்க... எங்க ஏரியாவுல...பூ , மாலை அப்புறம் வாழை மட்டை என எல்லாத்தையும் ஆத்தில கரைக்கிறேன்னு போட்டு ஒரே வீச்சம்... இப்ப சாமி கும்பிட்டாங்க....சொல்ல வேண்டியதில்லை...எல்லா குப்பையும் ஆத்துக்குள்ள தான் சார்...” என்று ஆதங்கப் பட்டுக் கொண்டனர் கார்த்திக்கும், மணிப்பாண்டியும்.   “சார் ... ஆத்தோரத்தில மரம் நட்டாங்கல்ல.. ஒரு மரம் கூட வளர காணாம்... அடுத்து நாம ஆத்தோரம் மரம் வளர்க்க...மரம் நடுவோம் சார்...” என்று ஆலோசனைகள் வழங்கினாள் பாண்டி மீனா. எங்க வீடு பக்கம் தான், நான் தண்ணீர் ஊற்றுகிறேன் என்று உறுதியளித்தான் உதயக்குமார்.


 சிறுது தூரம் நகர்ந்திருப்போம்.அனைவ்ரும் ஒத்தக் கூரலில் , “சார், அங்க பாருங்க...ஆத்துக்குள்ள... சாயம் போடுறாங்க... என சாயம் ஏற்றி காய வைத்துள்ள சேலைகளையும், அதன் அருகில் புகையை கக்கிக் கொண்டு எரியும் அடுப்பையும் காட்டினார்கள். நானும் சுட்டிக்காட்டி , ஆதங்கப்பட்டேன்.

எங்கு பார்த்தாலும் குப்பை ,இருநூறு அடிக்கொரு சாக்கடை தண்ணீரை ஆத்துக்குள்ள ஓட விடுகிற குழாய், காலைக்கடன் முடித்த தடம்,விலங்குகளின் கழிவுகள், ஆற்றுக்குள் முளைத்துள்ள தொழுவங்கள், ஆற்றின் கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரச்சாமான்கள் , குப்பை தொட்டிகள் இருக்க அதன் அருகிலே ஆற்றில் வீசியெறியப்பட்ட பலத்தரப்பட்ட கழிவுப் பொருடகள், நெகிழி பொருட்கள் என தாம் பார்த்தை பதிவு செய்தார்கள்.  


“சார் ,ஆத்துக்குள்ள மாட குளிப்பாட்டுறாங்க சார் ..” என்ற தேவதர்ஷினிக்கு, “ அட போப்பா...அந்த தண்ணியிலே கெமிக்கல் சாக்க அலசுறாங்க... அந்த தண்ணியிலேயே .. துணிய தோய்ச்சு போடுறாங்க...”என அலறி பேசினாள் செல்வ ராணி.

“சார்... ஆத்த மாடுமில்ல.. நம்ம காத்தையும் இவனுங்க.. பாழ் படுத்துறாங்க... இவனுகளையெல்லாம் கட்டிப்போட்டு உதைக்கணும் சார்...” என்றான் விக்னேஷ்வரன்.
அதற்குள் இப்ராகிம் “சார்... யாரும் இத கண்டுக்காம இருக்காங்களே.. அப்புறம் எப்படி சார் ... தண்ணீர் மதுரைக்கு கிடைக்கும்.. ” என்றான்.

“சார்... காய்கறி கழுவுகள் .. ஆத்துக்குள்ள தொழுவம் கட்டி கொடுக்குறானுங்க... ” என்றான் தினேஷ். “கார்ப்ரேசன் இதுக்கு வரி போட்டு கடை வாடகை வாங்குற மாதிரி எதாவது வசூல் பண்ணும்டா...” என்றான் தங்கமணி. “சார் ஆட்டு இறைச்சி , கோழி இறக்கை இன்னும் பல கழிவுகள் இந்த ஓப்புளப்படி பாலத்தை தாண்டினா இருக்கும் சார்...எனக்கு குடலை புரட்டும் நாம திரும்புவோம் ”என்று கூறி தேவதர்ஷினி எங்களின் ஆய்வுக்கு முற்றுப்புள்ளைவைத்தாள்.


யுவராஜ், “சார்...போற வண்டிகளை  பாருங்க.. எவ்வளவு புகையை  கக்குது.. நுரையீரல் அப்படியே அவுஞ்சு போக போகுது சார்...” என்றான்.கள ஆய்வுகளை வகுப்பறையில் விவாதித்தனர். நல்லதொரு ஆய்வு கட்டுரை தயார் செய்து வருகிறோம் . திங்கள்  தருவதாக உறுதியளித்தார்கள். நான் அவர்களிடம் வைத்துள்ள கோரிக்கை...நம் ஆற்றை காக்க .. நம் வைகையை காக்க என்ன செயல்திட்டம் உருவாக்க வேண்டும் “ என்பதை யோசிக்க சொன்னேன்.

இவ்வளவு தூரம் பயணப்பட்ட நீங்களூம் யோசனைகளை அள்ளித்தரலாம். உங்கள் ஆலோசனைகளையும் கமண்டாக போடவும். காப்போம் மதுரையின் வைகையை..!  

14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வைகையை பாதுக்காக்க தவறி விட்டோம்....

மாணவர்களின் இந்த ஆராய்ச்சி மூலம் ஏதாவது நன்மை நடக்குமா?

மதுரை சரவணன் said...

அவர்களால் இயன்ற விழிப்புணர்வை பிறருக்கு ஏற்படுத்தினால் இன்னும் பாழாவதை தடுக்கலாம். இதன் மூலம் எதாவது புதிய முயற்சிகளில் பாழ்படுவதை தடுக்க வழியை கண்டுபிடிக்க யோசிக்க வைப்பதே வெற்றிதான். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர வைப்பதே ... இன்னும் சுற்றுச்சூழல் கெடாமல் தடுப்பதன் வழி.

கரந்தை ஜெயக்குமார் said...

இளம் சிறார்களுக்கான முக்கியமான களப் பணியினை அவர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். மனம் கனிந்த பாராட்டுக்கள் ஐயா.
இயற்கையை பாழ்படுத்துவதைத்தடுக்க புதிய முயற்சிகளைக் கண்டு பிடிக்காவிட்டாலும்,
மாணவர்கள் இனி பாழ்படுத்த மாட்டார்கள் அல்லவா?
அதுவே பெரிய வெற்றிதான். வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான முக்கியமான களப் பணி... எவை எவை செய்யக் கூடாது என்று மாணவ மாணவியர்களுக்கு புரிந்திருக்கும்...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

களப்பணிகள் , கள ஆய்வுகள் ... பயனுள்ள முயற்சிகள்..

இளைய தலைமுறைகள் புதுரத்தம் பாய்ச்சட்டும் தேசமுன்னேற்றத்திற்கு..!

Aurosiksha - Eye Care Training Online said...

எதிர்கால சந்ததிகளுக்கு இது நல்ல துவக்கம்...உங்களின் நல்ல முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு..இது ஒவ்வொரு தனி மனிதனின் ஆசையாய் இருந்தால் ஒழிய இதை அரசு எந்திரத்தால் ஒன்றும் செய்ய இயலாது..அந்தஆற்றங்கரையில் உள்ள ஒவ்வொரு வீடும் இது என் வீட்டு முன்னாடி இருக்கிறது என்று நினைத்து சுத்த படுத்தினால் ஒழிய இதுக்கான நாம் எடுக்கு ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் தான் முடியும்

Kousalya Raj said...

மிக நல்லதொரு ஆரம்பம்...அருகில் சென்று கவனிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் மாணவர்களின் மனதில் இது என்றும் நினைவில் இருக்கும். இதை சரி செய்ய என்ன செய்யலாம் என்றே அனைவரின் மனதிலும் சிந்தனை ஓடும்...இன்று இல்லாவிட்டாலும் வெகு விரைவில் இவர்கள் களம் இறங்குவார்கள், காப்பார்கள் நம் ஆறுகளை !!!!!

இத்தகைய வழிகாட்டுதலை பிற ஆசிரியர்களும் செய்யவேண்டும். சரவணன் உங்களின் இந்த செயலுக்கு மனதார பாராட்டுகிறேன். தொடரட்டும் உங்களின் சீரிய பணி. என்னாலான ஒத்துழைப்பை எப்போதும் தர தயாராக இருக்கிறேன். தவறாமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்த்துகள் !!!!

தருமி said...

மிக மிக நல்ல முயற்சி. தொடர்ந்து வளர, வளர்க்க வாழ்த்து.

ராஜி said...

நல்ல முயற்சிதான். என்னதான் சட்டங்களை இயற்றினாலும், நமக்கா புரியனும், பிளாஸ்டிக் கவர்களை அதிகம் பயன்படுத்தாம இருக்கனும், அப்படியே பயன்படுத்தினாலும் அதை முறையா எப்படி அழிக்குறதுன்னும் தெரிஞ்சு வச்சிருக்கனும்! இதுக்கு, அரசாங்கம் உதவனும், கழிவு நீரை முறையை வெளியேத்தனும், தன் வீட்டு பக்கம் இருக்கும் காலை இடங்கள், கால்வாயை சுத்தமா வச்சிருக்கனும்,

வீட்டு குப்பைகளை குப்பைதொட்டிக்குள் போடனும், அப்படி தொட்டி இல்லாட்டி ஒரு இடத்துல குவிச்சு வச்சு கொளுத்திடனும்.

பிளாஸ்டிக், ஊசி, மருந்து பாட்டில்லாம் கூட முறையா எப்படி எங்க கொட்டனும்ன்னு ஊர் தலைவர், கவுன்சிலர் கிட்ட ஆலோசனை கேட்டு, அதுக்குண்டான வழிமுறைகளை செய்யுங்கன்னு போராடனும்!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அரியதொரு பணி - நற்செயல் - சிறுவர் சிறுமிகளை வைகை ஆற்றிற்கே அழைத்துச் சென்று களப்பணி ஆற்ற வைத்தது நன்று - பணியின் இறுதியில் ஆய்வுக் கட்டுரை தயார் செய்ய வைத்ததும் அரூமை. மாணவச் செல்வங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் இக்களப் பணி.

தொடர்க இச்செயல்களை சரவணன்.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Balakumar Vijayaraman said...

சிறப்பான களப்பணி. மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துகள்

வலிப்போக்கன் said...

வைகை ஆற்றை ஏற்கனவே பட்டா போட்டுட்டாங்களே! இன்னுமா இருக்கு?

வவ்வால் said...

சரவணன்,

ஒரு பொறுப்புள்ள ஆசிரியராக,சூற்று சூழல் ஆர்வலராக நீங்கள் செய்திருப்பது சரி தான், ஆனால் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் எனில் , இப்படிலாம் செய்வதை பற்றி புகார் செய்யப்பட்டால் CEO/DEO போன்றோர் உங்கள் மீது தான் பாய்வார்கள், எனவே கவனம் தேவை.

எந்த ஒரு இயற்கை அமைப்பையும் அரசு எந்திரம் பாழாக்குவதை விட தனி மனிதர்கள் தான் அதிகம் பாழாக்குகிறார்கள், நகராட்சி சாக்கடையை ஆற்றில் திறந்து விடுவதை ஆற்றோர மக்கள் கண்டுக்க மாட்டங்க ,அதே போல மக்கள் ஆற்றில் ஆக்ரமிப்பு செய்வது, குப்பை கொட்டுவதை ,நகராட்சி அலுவலர்கள் கண்டுக்க மாட்டாங்க, எல்லாம் ஒரு கூட்டணி :-))

சென்னையில் கூவத்தினை குடிசை வாழ் மக்கள் மட்டும் ஆக்ரமிச்சு இருப்பது போல தெரியும் ஆனால் பல பெரியக்கட்டிடங்களே கூவத்தினை ஆக்ரமிச்சு தான் கட்டப்பட்டிருக்கு, எனவே குடிசையை அகற்றினால் மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பெயரில் பெரிய ஆக்ரமிப்புகள் செய்வதை மாநகராட்சிக்கண்டுக்காது, எல்லாம் கையூட்டு தான், கூடவே சாக்கடை,குப்பை என கொட்டி ஒரு திறந்த வெளி சாக்கடையாக கூவம் ஆகிடுச்சு.

ஊருக்கு ஊரு ஒரு கூவம் :-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

யோசிக்க வேண்டிய பயனுள்ள பதிவு.

Post a Comment