இவ்வுலகில் வாழ்வதற்கு பயமாக இருக்கிறது. செய்திதாள்கள் சுமந்து வரும் செய்திகள் மனத்தின் ஆழத்தில் கிடக்கும் பயத்தை உடனடியாக பிறசவிக்கின்றன. நண்பனே நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல நண்பர்களுடன் முயற்சிக்கின்றான். நம் வாழ்வின் மீதான நம்பிக்கை இச்செய்திகளால் நாம் இழக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்பின் அவசியத்தை தேட வேண்டியுள்ளது. இதை எழுதும் இத்தருவாயில் என் நினைவுக்கு வரும் நிகழ்வு பாதுகாப்பு வரி ஆலயத்தில் விதித்த பாதிரியார் குறித்த என் நண்பர் சேவியர் சொன்ன செய்தியாகும். தம் மக்களை காப்பாற்ற பாதுகாப்பு வரி விதித்த பாதிரியார் உண்மையில் தீர்க்க தரிசியாக காட்சியளிக்கிறார்.
சேவியருடன் உரையாடலில் ஊழலில் ஈடுபடும் பாதிரியார்கள் பற்றி சக பாதிரியார் எழுதிய புகார் கடிதம் குறித்து வாசகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதுவும் பொது சொத்து பாதுக்காப்பிற்காக எழுதப்பட்டது தான். அக்கடிதத்தின் வாசகம் இது தான்.
“நீங்கள் யாரும் யோக்கியர்கள் அல்ல. உங்களின் தவறுகளை நீங்களே அறிவீர்கள். உங்களைப் பற்றி சொல்லும் படியாக ஒன்றுமில்லை. இதை உணர்ந்து நீங்களே இடத்தை காலிசெய்து விடுங்கள்”
இதை எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கிறேன். அரசியலாகட்டும்,அரசு அலுவலகமாகட்டும், தனி நபர் நிறுவனமாகட்டும், தொண்டு நிறுவனமாகட்டும், அரசு சாரா நிறுவனமாகட்டும் இப்படி எல்லா இடங்களிலும் இதை பொருத்திப்பார்க்கிறேன்.
விளைவு என்னவாக இருக்கும்?
உங்களின் பதில் கட்டாயம் இப்படிதான் இருக்கும்.
இக்கடிதத்தை எழுதியவர் தண்டிக்கப்பட்டு இருப்பார்.
ஆனால் இக்கடிதம் எழுதியவர் அதன் பின் அமைதியாகி விட்டதாக அறிந்தேன். (மிரட்டப்பட்டிருப்பார்).
நம்முடைய பொருளாதரமே குடியை ஆதாரமாக கொண்டு செயல்படும் நிலையில் , சமீபத்திய குடிக்கான சர்வேயில் நாம் முதலிடம் பிடிக்கவில்லையே என ஆதங்கப்படும் சமூகவலைத்தள ஆர்வலர்களின் ஸ்டேட்டஸ் ஏகப் பட்ட லைக் வாங்கியிருந்தது. அதில் நானும் லைக்கி விட்டேன். ஏனென்றால் இந்த ஸ்டெட்டஸ் நம் மக்கள் குடியினால் கெட்டு குட்டிச்சுவராகிப் போன வாழ்வின் ஆவணமாக கருதுகிறேன். குழந்தைகளுடன் குழந்தைகளாக தெரிவதால் குடி எவ்வாறு குடியை பாதித்துள்ளது என்பதை நான் அறிவேன்.
ஆங்கில பரீட்சை நன்றாக எழுதாத நன்றாக படிக்கும் மாணவனைப் பார்த்து ஏண்டா உடம்பு எதுவும் சரியில்லையா? தேர்வு மீண்டும் வைக்கட்டுமா? நாளைக்கு எழுதிக் கொள்ளலாம் என கனிவுடன் கேட்டேன்.
“இல்ல சார் பரவாயில்லை. மனசுக்கு சரியில்லை. ( ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்)”
”என்னடா? பெரிய மனுசனாட்டம் பேசுற?”
”எங்க அத்தை நேத்து தூக்குமாட்டிகிட்டு செத்து போச்சு சார்”
”ஏண்டா? எதுவும் குடும்ப பிரச்சனையா?”
”அட இல்லைங்க சார்… எல்லாம் எங்க மாமாவால தான்..!”
”என்னடா உங்க மாமா எதுவும் திட்டி விட்டாரா?”
”இல்லை சார்.. தினமும் குடிச்சுட்டு வந்திருக்கு… காசு கேட்ட கொடுக்கல…குழுவில வாங்கின கடனை கூட அடைக்க முடியல… வீட்டுக்கு எதுவும் தரதில்லை..டெய்லி தண்ணிப் போட்டு சலம்பியிருக்கு…. அதான் தூக்கு போட்டுகிட்டாங்க…”
”என்னடா கோழையாட்டம் …. உங்க அம்மா அப்பா கண்டிக்கலையா….?”
”எங்க மாமாவா எதுவும் கேக்காது சார்… எங்க அத்தை மவன்கள் தான் பாவம் சார் ஒருத்தன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயதாகிறது.”
”யாருடா பார்த்துக்கிற… எங்க அம்மா தான் சார் …. அது என்னையும் ஊருக்கு (வரிச்சியூர்) கூட்டிகிட்டு போயிடுச்சா… அதான் ரிவிசன் விடாம வந்துட்டேன்… யோசிச்சு யோசிச்சு எழுத வேண்டியதாய் இருக்கு…”
அதற்குள் பக்கத்திலிருந்த மற்றொரு மாணவி,
“சார்..இப்படிதான் சார்… எங்க அம்மா ஒருதடவ தூக்கு மாட்டிக்க போனாங்க.. நானும் எங்க அண்ணணும் ஒரே அழுகை …அப்புறம் சேலையை அவுத்துகிட்டு அழுதுச்சு….இந்நேரம் நாங்களும் அனாதையாகி இருப்போம்.. ஆனா இன்னும் எங்க அப்பா திருந்தல சார்…”
”எனக்காக குடிக்காத அப்பா.. ன்னு சொல்லு..”
”அட போங்க சார்…. சொன்னா என்ன அடிக்க வரும்.. .
அருகிலிருந்த மாணவன்,
”எங்க அம்மா… வாங்கி வந்த வார சம்பள காச… தூக்கிட்டுப் போயிட்டாரு சார்…எங்க அப்பா குடிக்க…. எங்க அம்மா ஒரே சண்டை … நாங்க ஞாயிற்று கிழமை மூழுவதும் பட்டினியா கிடந்தோம்… ”
வீடுகளில் குடியினால் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டுவருவதை யாரும் உணர வாய்ப்பில்லை. குழந்தைகளின் உள்மன வலியின் கொடூரம் சமூகத்தில் எப்படி வெளிப்படும் என்பதை கண்டு பயப்படுகிறேன். குடியினால் இவர்கள் மரணத்தை தேடிக்கொள்வதுடன் , குடும்பங்களிலும் மரணத்தை விதைப்பதை உணர்வதில்லை. இதனை உணர்த்துவதற்கான சந்தர்பங்களையும் அரசு ஏற்படுத்தி தரவில்லை. குடி குடியைக்கெடுக்கும் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள வாசகங்கள் போதையேறி வீழ்ந்து கிடக்கின்றன. போதை தலைக்கு ஏறி , குமட்டி, பித்து களைந்து , அவர்கள் எடுக்கும் வாந்திகளில் உருண்டு , சித்தம் கலங்கி, வேதனையின் சீல்கள் அப்பிய கண்களுடன் வரும் குழுந்தையின் அழுகுரல்களை கேளுங்கள் ஆட்சியாளர்களே , ஒருவேளை நீங்கள் மதுகடைகளை முடுவதற்கான சாத்தியங்கள் நிகழக்கூடும்.
கடந்த வாரம் நடந்த விநாயகர் திருவிழா ஊர்வலங்களினால் மதுரை மாநகராட்சியில் 500 டன் குப்பைகள் அள்ளமுடியாமல் தேங்கியுள்ளன. 1600 டன் குப்பைகள் விழாவை ஒட்டி அள்ளப்பட்டிருக்கிறது. தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த கமிஷனர் 90டிப்பர் லாரிகள் ,11 டம்பர் பிளேசர்கள்,5 காம்பேக்டர்கள்,37 டிராக்டர்கள், 37 ஆட்டோக்க்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நம் மனக்குப்பைகளையும் அள்ள இப்படிப்பட்ட வாய்ப்பு இருக்குமானால் எவ்வளவு சிறப்பானதாக வாழ்வு அமைந்திருக்கும். நான் இப்படி கிறுக்கி என் மனக்குப்பைகளை அகற்றுவதுண்டு. யோகா, தியானம் தராத ஒரு மன அமைதி ஏற்படுகிறது. நீங்களும் முயற்சியுங்களேன்.
மதுரை சரவணன்.
9344124572