Friday, March 15, 2013

குற்றம் எங்கே உள்ளது ? பதிலளியுங்கள் கல்வியாளர்களே!


கடந்த வாரம் கூர் நோக்கு இல்லம் சென்று இருந்தேன்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அனைத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதில் முழு முனைப்புடன் எல்லா வழிகளிலும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் படிப்பு தொடர உதவிகள் மேற்கொள்ளப்பபடுகின்றன. 

இத்திட்டத்தின் படி, மைனர் ஜெயில் எனப்படும் கூர் நோக்கு இல்லத்தில் சிறு குற்றங்கள் புரிந்து பெயிலில் வெளி செல்ல முடியாத குழந்தைகளின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியரை நியமித்து,  அவருக்கு சம்பளம் வழங்குவதும் ,தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தும் ஆசிரியர் கூர்நோக்கு இல்ல மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கிறாரா என ஆய்வு செய்வதும் , அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாணவர்களுக்கு முறையானபடி கொடுக்கவும் அருகிலுள்ள பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு , அதன் தலைமையாசிரியர் மூலம் அனைத்து செயல்களும் நடைப்பெறுகிறது.

இம்முறை என் பள்ளி மூலம் இச்செயல் பாடு நடைப்பெறுகிறது.இது சார்பாக முதல் முறையாக  கூர்நோக்கு இல்லம் சென்ற போது தனிச்செல்லில் நன்றாக வளர்ந்த மாணவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விசாரித்தேன். கிரிக்கெட் விளையாடும் போது கோபத்தில் மட்டையை வைத்து மண்டையில் அடித்ததால் , அடிப்பட்டவன் இறந்து விட்டதால், கொலை குற்றம் சாட்டப்பட்டு அடைக்கப்பட்டவர்கள் என  அறிந்தேன். ஏன் தனி செல்? என மீண்டும் என் கேள்வியின் அர்த்தத்திற்கான விடையை , இங்கிருந்து சுவர் ஏறி குதிச்சு ஓடிப்போயிட்டேன் அதான் என்ற , அவனின் பதிலில் இருந்து அறிந்துக் கொண்டேன்.

இம் முறை என்னுடன் வந்த மேற்பார்வையாளர் நீண்ட உரைக்கு பின் ஒரு மாணவனை எழுப்பி நீ என்ன தவறுக்காக வந்தாய் என்றார். திருடி விட்டேன் என்றான். அது தவறு என உணர்ந்து விட்டாயா? ம் என தலையாட்டினான். என்ன செய்தாய்? என்றார். மெடிக்கல் சாப்பில் 3000 ரூபாய் திருடினேன். உண்மை தான ? ஆமாம். எடுத்த காச போலீசுல கொடுத்துட்டேன். தப்பு செய்ய கூடாதில்லையா? ஆமா. உங்க அப்பா என்ன செய்கிறார்? அப்பா இல்ல சார். அம்மா? இருக்காங்க.. துணி தேய்ச்சு கொடுக்கிறாங்க. பார்த்தியா , அம்மா எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார் போலீஸ் உன்னை பிடிச்சுட்டு போனப்ப. சார் இவன் வகுப்பில முதல் மாணவன் . நல்லா படிப்பான் என்று ஆதரவாய் பேசினார் கூர் நோக்கு இல்லத்தின் மூதாய்.

பெற்றோர்களின் கவனிப்பு அற்ற குழந்தைகள் கோபத்தில் தவறு செய்து மாட்டியவர்கள், குடும்ப வறுமைக்காக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதை குறித்து மேற்பார்வையாளர் ஆதங்கப் பட்டுக் கொண்டார். 

திருட்டு  , கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக மட்டுமே கைதாகி இங்கு உள்ளனரோ என கேட்டேன். அதிர்ச்சி தரும் தகவலை தந்தார்கள். குடும்ப பகைக்காக கற்பழிப்பு வழக்கில் ஒரு சிறுவன் வந்துள்ளான். ஒருபுறம் உண்மையிலே பாலியல் குற்றங்கள் பெருகுவதை தடுக்க குரல் கொடுத்து வரும் சூழலில், கடுமையான சட்டங்கள், இது போன்ற சம்பவங்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றமற்றவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ? அவனும் நன்றாக படிப்பவனாம் என்பது எனக்கு மேலும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

நேற்று மாலை செய்தி. தேர்வு அறையில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் மாடியில் இருந்து விழுந்து கை, கால் முறிந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உசிலம்பட்டி சிறுவன்.
ஒருபுறம் கோபத்தில் தவறு செய்து விட்டு வாடும் சிறுவர்கள். மறுபுறம் இயலாமையால் , தன்னை தானே மாய்த்துக் கொள்ள நினைக்கும் சிறுவர்கள். தேர்வு எழுதும் போதே, இப்படி என்றால் ? தேர்வு முடிவுகள் வெளிவந்தால் , இயலாமையால் தன்னை அழித்துக் கொள்ள நினைக்கும் இம்மாணவர்களை நினைத்து பயம் கொள்ள வேண்டியுள்ளது. இவர்களை என்ன செய்வது?

நானும் கணிதத்தில் ஆறாம் வகுப்பில் முட்டை வாங்கியவன் தான் என்றால் நம்ப முடியவில்லை தானே. இருப்பினும் எனக்கு மனதைரியத்தை அன்றைய கல்வி முறை வழங்கியிருந்தது என்று தான் நினைக்கிறேன். அது மட்டுமல்ல என் தந்தையும் தாயும் அதற்காக என்னை அடிக்கவும் இல்லை, திட்டவுமில்லை. கவனமாக கணக்கு செய் நீயும் பிறரைப் போல நூறு மதிப்பெண் பெறுவாய் என்றனர். இருவரும் ஆசிரியர் என்பதால் இருக்கலாம். என்னுடைய கணக்கு ஆசிரியர் மட்டும் இருகைகளிலும் பிரம்பால் அடித்ததாக நினைவு இருக்கிறது. அந்த தேர்வுக்கு பின் எனக்கு முதல் வரிசை இருக்கை அளிக்கப்பட்டு, கரும்பலகையில் நானே கணக்குகள் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டு, தவறுகள் , பிழைகள் ஏற்படும் போது, அன்பால் அவைகள் திருத்தப்பட்டு, சரி செய்யப்பட்டு , அதன் தொடர்ச்சி, +2 வில் கணித குரூப்பை தேர்வு செய்ய தூண்டியிருந்தது. என் நினைவில் அச்சம்பவத்தை தவிர ஆசிரியர்கள் யாரும் அடித்ததாக நினைவு இல்லை.

தற்போது ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்கள் குறித்து அக்கறையில்லை என்று தான் நினைக்கிறேன். சமீபத்தில் ஆசிரியப் பயிற்றுனராக இருந்து , முதுகலையாசிரியரா சென்றுள்ள என் நண்பர் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டது என்னவென்றால், மாணவர்கள் படிப்பு குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. அது போல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயந்து நடக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லை. செய்திதாள் செய்திகளை சுட்டிக்காட்டி மிரட்டும் நிலையில் மாணவர்கள் போக்கு உள்ளது. தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களை தண்டிக்கும் கண்டிக்கும் திறன் அற்றவர்களாக எந்த வம்புகளிலும் சிக்காமல் காலத்தை தள்ளவே நினைக்கிறார்கள். பட்டதாரி , முது நிலை ஆசிரியர்கள் டியூசன் அமைத்து வருமானத்தை ஈட்டுவதில் தான் ஆர்வமாக உள்ளார்கள். பெற்றோர்களும் டியூசன் அனுப்பி தன் மகனை அதிக மதிப்பெண் எடுக்க வைக்கவே நினைக்கிறார்கள். பள்ளியில் நன்றாக ஆசிரியரை கற்பிக்கச் செய்யலாமே ? அதற்காக தானே ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர்ஆசிரியர் கழகம் உள்ளது. பெஆக மூலம் தலைமையாசிரியருக்கு ஆதரவு தெரிவித்து வகுப்பறையிலே அனைத்தையும் மாணவர்களுக்கு கற்று தர செய்யலாமே என்ற மனநிலை பெற்றோரிடம் இல்லாதது இவர்களின் பலம். +1 ல் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளைக் கூட வாசிக்க தெரியாத மாணவர்கள் அதிகம். இவர்கள் எப்படி தேர்ச்சி பெற்று வந்துள்ளார்கள் என்பது கூட விந்தையாக இருக்கிறது என்று ஆதங்கப்பட்டு பேசினார்.

சமீபத்தில் மதுரையில் ஆசிரியர்கள் கைது எதிரொலிக்கு பின், நடந்த பாலியல் குற்றங்கள் சார்ந்த கல்வி நிலைய தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் மாவட்ட உயர் அதிகாரி , சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்த போது, தொடக்க கல்வி துறையில் இருந்து பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களாக உள்ளது என்றும் , தொடக்க கல்வி ஆய்வு மேற்கொள்ளும் அதிர்காரிகள் , முக்கியமாக ஆண் ஆசிரியர்கள் மீது கெடிபிடியுடன் கண்காணிப்புடன் இருக்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் ,அரசாணை 121 அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி கையொப்பம் பெற்று பைல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்த  கல்வி அதிகாரி, தவறு செய்வதில் என்ன தொடக்க கல்வி , உயர்கல்வி என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.
      
இவைகள் எல்லாவற்றையும் அலசி ஆராயும் போது எங்கோ எதிலோ ஓட்டையுள்ளது தெளிவாக தெரிகிறது. அந்த ஓட்டை கல்வி முறையிலா, கற்பிப்பவர் மன நலன் பாதிப்பிலா, மாணவர்களின் அறிவு நிலைக்கு தகுந்த வாய்ப்புள்ள கல்வி இல்லாததாலா, விழுமியங்கள் குறைந்த கல்விமுறையா? நீங்கள் யோசியுங்கள் !முடிவுக்கு வாருங்கள் ! முடிந்தால் என் கமண்டு பெட்டியில் பதிவு செய்து செல்லுங்கள்.
( இனி தினம் இடுகைகள் வரும் …சூடான விவாதங்களுக்கு தயாரக இருங்கள் கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்பட இணைவோம்.)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

1. பெற்றோர்களின் சுயநல மனதில்...

2. கற்பிப்பவர் சேவையாக நினைக்க வேண்டும்... (சிலரைத்தவிர)

3. கல்வியால் கிடைப்பது - (i) வெறும் தகவல்கள் (ii) படிப்பிற்கேற்ற பணம்-இது போதும் வாழ்க்கைக்கு என்பதை, குழந்தைகளின் மனதிலிருந்து மாற்ற அனைவரும் முயல வேண்டும்...

தருமி said...

கல்வி + தேர்வுகளில் மதிப்பெண்கள் -- இந்தத் ’தத்துவம்’ ஒரு காரணமாக இருக்குமோ??

ஆதிரா said...

நம் கல்விமுறை பற்றி ஓர் இடுக்கை எழுத வீண்டும் என்று இருந்தேன்.உங்களின் இந்த இடுக்கை மனதில் இருக்கும் அத்தனையும் பிரதிபலித்து விட்டது.நிச்சயம் அந்த ஓட்டையை கண்டுபிடித்து அடைத்தாக வேண்டும்...
மாணவர்கள் பணம் கட்டி விட்ட பந்தயக் குதிரைகள் ஆகி விட்டனர்..

renesh said...

ஓட்டை கல்வி முறையிலோ கற்பித்தல் முறையிலோ இல்லைஙக சரவணன் சார்! ஒரு சில வக்கிரம் பிடிச்ச ஆசிரியர்கள் மனசில தான் இருக்கு.

renesh said...

ஓட்டை கல்வி முறையிலோ கற்பித்தல் முறையிலோ இல்லைஙக சரவணன் சார்! ஒரு சில வக்கிரம் பிடிச்ச ஆசிரியர்கள் மனசில தான் இருக்கு.

Unknown said...

உண்மைதான் கல்வி நிலையில் மாற்றம் வேண்டுமோ

Post a Comment