Thursday, September 1, 2016

தாய் மொழி அறிவு அவசியம்


மொழி குழந்தைகளிடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் திறமையை வளர்த்தெடுப்பதில் மொழி முக்கியப்பங்கு வகிக்கின்றது. மொழி திறன் பெற்றவர்கள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் இயங்குவதை காண்கின்றேன்.
மொழித்திறன் அற்ற மாணவர்கள் தங்களின் உடல் உபாதைகளை கூட வெளிப்படுத்த சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் மொழி அவசியப்படுகின்றது. அதை விட வினைப்புரிவதற்கு மொழி முக்கியமாக உள்ளது.
இன்று காலை பால முருகன் என்ற மாணவனின் கன்னத்தில் நகக்கீறல் காணப்பட்டது. அவன் குற்றாலம் செல்வதாக கூறி சென்ற வாரம் வெள்ளி விடுமுறை எடுத்திருந்தான். ஆகவே , சென்ற இடத்தில் எதுவும் நடந்துவிட்டதோ? என பதறி கேட்டேன்.
“சார், குற்றால் போன்னேன்னா.. குளிச்சேன்னா.. ஏசுக்காரங்க வந்தாங்களா.. அப்ப குளிச்சேனா. ஏசுக்காரங்க என் பக்கத்தில் குளிச்சாங்க..” என இழுத்தான்.
“அப்புறம் என்னாச்சுடா” என பொறுமை இழந்த மாணவன் மணிகண்டன் கேட்டான்.
“சார்.. குளிச்சேனா.. குற்றால் மெயின் பால்ஸ்.. ஏசுக்காரங்க..சிலுவை போட்டு இருந்தாங்களா. நான் குனிச்சு குளிச்சேனா.. அவுங்க குனிஞ்சாங்களா..”
“டேய் காயம் எப்படி பட்டுச்சு.. குற்றாலம் போனா குளிக்க தாண்டா செய்வாங்க..” என்றாள் தர்ஷிக்கா.
“ஏசுக்காரங்க ... நிமிந்தாங்களா...அப்ப அந்த ...கிழிச்சிடுச்சு..”
“அந்த எது கிழிச்சிடுச்சுடா..?” திரும்பவும் மணிகண்டன் கேட்டான்.
“போடா.. சார்... நான் குளிச்சேனா..ஏசுக்காரங்க..”
“சார்.. எனக்கு புரிஞ்சு போச்சு..சார் இவன் குளிச்சப்பா பக்கத்தில் இருந்தவரின் சிலுவை கீறி விட்டு கன்னத்தில் காயம் உண்டாச்சு சார்....”என்றான் ஆதீஸ்வரன்.
“ஆமாம் ” என்றான் பாலமுருகன்.
தாய்மொழியில் பேசுவதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திணறுகின்றார்கள். இதற்கு போதிய பயிற்சி இன்மை காரணம் என கூறலாம். அவனை குறித்த கேஸ் ஹிஸ்ட்டரியில் அம்மாணவன் இரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவன் என அறிய வந்தேன்.
தாய்மொழி முக்கியம் . அது மட்டுமல்ல. அந்த மொழியினை திறம்பட பயன்படுத்த ஆசிரியர்கள் போதிய பயிற்சி தர வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கீரிடத்தை கழட்டி வைத்து பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்.
மாணவர்களோடு மாணவர்களாக இருக்கும் போது மொழி தங்கு தடையின்றி வெளிவரும் . பயம் போக்க வேண்டும். பயம் தாய்மொழியை கூட பேச அனுமதிப்பதில்லை. தடுமாறச்செய்து விடும்.
மொழியின் பயன்பாடு, செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் சிந்தித்தல் நலம் . அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
மதுரை சரவணன்.

2 comments:

G.M Balasubramaniam said...

கம்யூனிகேஷனுக்கு மொழி மட்டும்போதாது இதை பல நேர்காணல்களில் பார்த்திருக்கிறேன்

Kandumany Veluppillai Rudra said...

அதிகமாக வாசிப்பதற்கு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்

Post a Comment