Friday, August 26, 2016

குழந்தைகளின் அதிசய சக்தி..!


குழந்தைகள் மிக எளிய வழியில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொள்கின்றார்கள். குழந்தைகளின் மன முதிர்ச்சி மிகவும் ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.
பள்ளியிலும் சரி வீட்டிலும் குழந்தைகள் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றார்கள். குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சவாலான விசயமாக இருந்தாலும் , அவர்களை புரிந்து கொண்டால், குழந்தைகளை சமாளிப்பது எளிதான காரியமாகி விடும்!
குழந்தைகள் உலகம் அதிசயமானது. குழந்தைகள் தங்களுக்கென ஒரு உலகத்தை உருவாக்கி கொள்கின்றார்கள். அவர்களின் உலகில் சஞ்சரிப்பது மிகவும் எளிது. குழந்தைகளுடன் குழந்தைகளாக இருந்து பாருங்கள். அதுவே குழந்தைகளை புரிந்து கொள்வதற்கும், நமது குழந்தைமையை மீட்பதற்குமான உத்தியாகும். குழந்தைகள் உலகில் நாம் எளிதாக நுழைந்துவிட முடியும்.
மாலை சத்யா டிவியில் டோரிமான் பார்த்து கொண்டிருந்தான்.
‘பாலிங் நட்சத்திரம் (falling star) கீழே விழுகின்றது, அதை பார்த்து மூன்று முறை கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால், நாம் நினைத்தது நடக்கும்’ என வசனம் வந்ததும் ,சத்யாவை பார்த்தேன்.
“டாடி...பாலிங் ஸ்டார் என்றால் என்ன ? ”
”எரி நட்சத்திரம். மேலே இருந்து பூமியை நோக்கி நட்சத்திரம் கீழே விழும். அது காற்றில் பறந்து வரும் போதே...எரிந்து சாம்பலாகி விடும். அதனால் கீழே விழும் முன் மறைந்து விடும்.”
”ஓ !அதுவா.., எனக்கு தெரியும், டாடி.!.நான் பார்த்திருக்கேன். ஆமா டாடி கீழே விழுகிற துக்குள்ளே மறஞ்சிடுச்சு..டாடி “
”வெரி குட்... நாம் வெளியே போய் எரி நட்சத்திரம் விழுகிறதான்னு பார்ப்போமா?”
“டாடி நான் சொல்ற மாதிரி செஞ்சா நீ நினைச்சது நடக்கும்..”
”எப்படிடா..?”
”போ டாடி நீ எப்பவும் மறந்து மறந்து போயிடுற..”
“சாரி.. மன்னிச்சிடு.. தம்பி “
”டாடி.. தூங்கிறதுக்கு முன்னாடி நம்ம தலைமுடியை பிடிச்சிட்டு..நாம் மனசுகுள்ள எதையாவது நினைச்சு படுத்தா.. அது கட்டாயம் நடக்கும் டாடி..”
”ஓ ! சொன்னேயில்லே..!”
“டாடி, நான் போலீஸ் ஆபிசராகணும்.. திருடங்களை பிடிச்சு ஜெயி ல்ல போடணும்.. தப்பிக்க நினைச்சான் ஒரே சுடு டுமீல்.. அவ்வளவு தான்.. மக்கள் எல்லாம் பயமில்லாம நடக்கணும்.. வண்டியில் போகும் போது ஜெயின் அறுக்கிறவனை ஒரே போடு டுமீல் ...செத்துடுவான்...”
”போதும்சாமி...நீ வருங்கால ஐபிஎஸ் தான்! ”
“டாடி இன்னிக்கு நீ தூங்கிறதுக்கு முன்னாடி நினைச்சிட்டு படு...மறந்துடாம முடியை பிடிச்சுட்டு நினைச்சுக்க...நீ நினைச்சது நடக்கும்”
இப்ப தான் ஞாபகம் வந்தது .
இரண்டு மாதத்திற்கு முன்பு படுக்கையில் உறங்கும் முன் முடியை பிடித்துகொண்டு சிரித்தான்.
நான் பார்த்ததும் அவன் சிரித்தான். நானும் சிரித்தேன். என்ன பண்ற என கேட்டேன்.
“டாடி நான் போலீஸ் ஆபிசராகணும்ன்னு முடியை பிடிச்சு நினைச்சேன். என் ப்ரண்டு சொன்னான்”
நானும் முடியை பிடித்து கொண்டு இந்த முறை மதுரை புத்தக திருவிழாவில் நான் எழுதிய புத்தகம் வர வேண்டும் என்று நினைத்தேன்.
நினைவுக்கு வந்தது.
அப்போது நினைத்தது நடந்துவிட்டது.
குழந்தைகளாக இருப்பது வரம்.
கொஞ்சம் அவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். அதன் பின் குழந்தைகளை நம் போக்கில் வளர்ப்பது எளிதாகிவிடும்.
”சத்யா வா நாம் படிக்கலாம்..”
”வா டாடி.. தமிழ் முதலில் படிப்போம்..”
டிவியை அவனே அணைத்துவிட்டு வந்தான்.
மதுரை சரவணன்.

Tuesday, August 23, 2016

மொழி குழந்தைகளுக்கு முக்கியமானது...!

மொழி குழந்தைகளிடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் திறமையை வளர்த்தெடுப்பதில் மொழி முக்கியப்பங்கு வகிக்கின்றது. மொழி திறன் பெற்றவர்கள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் இயங்குவதை காண்கின்றேன்.
மொழித்திறன் அற்ற மாணவர்கள் தங்களின் உடல் உபாதைகளை கூட வெளிப்படுத்த சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் மொழி அவசியப்படுகின்றது. அதை விட வினைப்புரிவதற்கு மொழி முக்கியமாக உள்ளது.
இன்று காலை பால முருகன் என்ற மாணவனின் கன்னத்தில் நகக்கீறல் காணப்பட்டது. அவன் குற்றாலம் செல்வதாக கூறி சென்ற வாரம் வெள்ளி விடுமுறை எடுத்திருந்தான். ஆகவே , சென்ற இடத்தில் எதுவும் நடந்துவிட்டதோ? என பதறி கேட்டேன்.
“சார், குற்றால் போன்னேன்னா.. குளிச்சேன்னா.. ஏசுக்காரங்க வந்தாங்களா.. அப்ப குளிச்சேனா. ஏசுக்காரங்க என் பக்கத்தில் குளிச்சாங்க..” என இழுத்தான்.
“அப்புறம் என்னாச்சுடா” என பொறுமை இழந்த மாணவன் மணிகண்டன் கேட்டான்.
“சார்.. குளிச்சேனா.. குற்றால் மெயின் பால்ஸ்.. ஏசுக்காரங்க..சிலுவை போட்டு இருந்தாங்களா. நான் குனிச்சு குளிச்சேனா.. அவுங்க குனிஞ்சாங்களா..”
“டேய் காயம் எப்படி பட்டுச்சு.. குற்றாலம் போனா குளிக்க தாண்டா செய்வாங்க..” என்றாள் தர்ஷிக்கா.
“ஏசுக்காரங்க ... நிமிந்தாங்களா...அப்ப அந்த ...கிழிச்சிடுச்சு..”
“அந்த எது கிழிச்சிடுச்சுடா..?” திரும்பவும் மணிகண்டன் கேட்டான்.
“போடா.. சார்... நான் குளிச்சேனா..ஏசுக்காரங்க..”
“சார்.. எனக்கு புரிஞ்சு போச்சு..சார் இவன் குளிச்சப்பா பக்கத்தில் இருந்தவரின் சிலுவை கீறி விட்டு கன்னத்தில் காயம் உண்டாச்சு சார்....”என்றான் ஆதீஸ்வரன்.
“ஆமாம் ” என்றான் பாலமுருகன்.
தாய்மொழியில் பேசுவதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திணறுகின்றார்கள். இதற்கு போதிய பயிற்சி இன்மை காரணம் என கூறலாம். அவனை குறித்த கேஸ் ஹிஸ்ட்டரியில் அம்மாணவன் இரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவன் என அறிய வந்தேன்.
தாய்மொழி முக்கியம் . அது மட்டுமல்ல. அந்த மொழியினை திறம்பட பயன்படுத்த ஆசிரியர்கள் போதிய பயிற்சி தர வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கீரிடத்தை கழட்டி வைத்து பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்.
மாணவர்களோடு மாணவர்களாக இருக்கும் போது மொழி தங்கு தடையின்றி வெளிவரும் . பயம் போக்க வேண்டும். பயம் தாய்மொழியை கூட பேச அனுமதிப்பதில்லை. தடுமாறச்செய்து விடும்.
மொழியின் பயன்பாடு, செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் சிந்தித்தல் நலம் . அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
மதுரை சரவணன்.