Saturday, March 26, 2016

இரத்தமும் சதையுமானவை வகுப்பறைகள்!


வதங்தீகள் படுத்தும் பாடு!

பள்ளிக்கூடம் வெறும் சுவர்களால் உருவாக்கப்பட்ட வகுப்பறைகளாலானதன்று.  பள்ளிக்கூடங்கள் அம்மாவின் கருவறையைப் போன்றவை. குழந்தைகளின் கல்வியோடு பாதுகாப்பையும் முக்கியமாக  வழங்குபவை. குழந்தைகளின்  உண்மையான கனவுகளுக்கான கதவை திறப்பவை.


ஐந்துவிரல்கள் ஒன்றாய் இருப்பதில்லை. அது போல் தான் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒருவர் அன்பால் குழந்தைகளை கட்டி வைக்கலாம். ஒருவர் தன் பிரம்பை காட்டி குரங்குகளை கையால்வது போல் வித்தை காட்டலாம். ஒருவர் எதையும் கண்டு கொள்ளாமல் ,குழந்தைகளின் போக்கில் விட்டுவிடலாம். ஒருவர் குழந்தைகள் விரும்புவதை செய்து , குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால், அனைவரும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்றே இச்செயல்களை செய்கின்றனர் என்பது தான் உண்மை!   

குழந்தைகளை பாத்ரூம் அனுப்பாத ஆசிரியர் குறித்து விசாரித்தப்படி பள்ளி மைதானத்தில் இருந்தேன். நான்கைந்து பேர் வேகமாக வந்தனர். என்ன என்று  விசாரித்தேன். அண்ணா நகர் பகுதியில் ஒரு பள்ளியிலும் கல்லூரியிலும் வெடி குண்டு வெடித்து விட்டதாக எங்கள் பகுதியில் ஒருவர் கூறினர். மேலும், இது போன்று காமராசர் சாலையில் சில பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக டிவியில் கேட்டதாக என் உறவினர் கூறினார். ஆகவே, எங்கள் குழந்தைகளை அழைத்து போக வந்தோம் என்றனர்.

இங்கு பாருங்கள் ! குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். எல்லா குழந்தைகளும் படித்து கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கு கவலை வேண்டாம். இதெல்லாம் புரளிதான். இதே மாதிரி சில வருடங்கள் முன் எங்கள் பள்ளிக்கும் போன் வந்தது. விடுமுறை விட்டது தான் மிச்சம். எல்லாம் புரளி. கவலை விடுங்கள். உங்கள் குழந்தைகளை அழைக்கின்றேன். பார்த்து பேசி விட்டு செல்லுங்கள் என்றேன். அவர்கள் ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் அவர்களின் குழந்தைகளை அழைத்தே சென்றனர்.  

சிறிது நேரத்தில் ஈசலைப்போல் படையெடுத்து வந்தனர். முடிந்தவரை குழந்தைகளை அழைத்து செல்வதை தடுத்து பார்த்தோம். ஆசிரியர்கள் அனைவரும் பெற்றோர்களிடம் இது வெறும் புரளி என்று எடுத்துரைத்தனர். எந்த பிரயோஜனமும் இல்லை. படிப்பு போனா திரும்ப படிச்சிடலாம். உயிர் போனா திரும்பி வருமா! என்றவாரே அழைத்து சென்றனர்.

இந்த மாதிரியான வதந்தி காலம் காலமாக மக்களிடம் உயிர் பயத்தை கொடுத்துள்ளது. மேலும், மக்களிடம் எழும் இந்த பயம் எப்போதும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது 1665ம் ஆண்டில் லண்டன் மாநகரையே பிளேக் நோய் சூறையாடியது. பிளேக் நோய் லண்டன் நகரெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்தது. சேரிப்பகுதிகளிலும், மர வீடுகளிலும், தூய்மையற்ற சூழ்நிலையில் வாழும் மக்களிடையே இந்நோய் முதலில் பரவியது. குடும்பம் குடும்பமாக தெருத் தெருவாக மக்கள் மடிய ஆரம்பித்தனர். அரசனும், அரவையைச் சேர்ந்தவர்களும் சாலிஸ்பரி நகரத்துக்கு தப்பி ஓடினார்கள். நோய் அங்கும் பரவியது. பின் அரசனும், அங்கிருண்டவர்களும் ஆக்ஸ்ஃபோர்டுக்கு ஓடினார்கள். தப்ப முடியாத ஏழை எளியவர்கள் பரிதாபமாக இறந்தனர். அப்போது தவறான வதந்தி ஒன்று பரவியது.

பிளேக் நோய்க்கு காரணம் நாய்கள் தான். நாய்கள் தான் பிளேக் நோயைப் பரப்புவதாக யாரோ கூற, இந்த வதந்தி நகரெங்கும் பரவ தொடங்கியது. இதை நம்பி மக்கள் ஏரளமான நாய்களைக் கொல்ல ஆரம்பித்தனர். ஆனால், உண்மையிலேயே இந்த நோயைப் பரப்பி வந்த எலிகளைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று.! லண்டன் நகரின் மக்கள் தொகையில் ஐந்தில்  ஒரு பங்கு மக்கள் இந்நோய்க்கு பலியாகி இருந்தனர். ஐந்து மாதங்களுக்குள் இந்நோய் முற்றிலும் நீங்கி விட்டது. அதற்கு பின் இன்று வரையில் லண்டனில் பிளேக் நோய் தலை காட்டவில்லை என்பது ஆச்சரியமே!

மக்கள் புரளிக்கு, வதந்திக்கு மதிப்பு கொடுத்து உடனடியாக உயிர் பயத்தில் நடவடிக்கை மேற்கொண்டாலும், இம்மாதிரியான வதந்திகளை ஏற்படுத்துவது யார்? தீவிரவாதிகளா? நிச்சயமாக இல்லை. இந்தியா மாதிரியான நாடுகளில் தீவிரவாதம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்திய சக்திகள் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வெடிக்க செய்து திசை திருப்பலாம். ஆனால், பள்ளிகளில் குண்டு வைக்கும் அளவுக்கு தீவிரவாதம் உருவாகவில்லை என்றே கருதுகின்றேன்.


பரீட்சையை நிறுத்துவதற்கும், பள்ளி விடுமுறை விட செய்வதற்கும் மாணவர்களால் செய்யப்படும் வதந்தியே ,இம்மாதிரியான வெடி குண்டு புரளிகள் உள்ளன . ஏன் மாணவன் இம்மாதிரியான புரளிகளை , வதந்திகளை பரப்ப வேண்டும். நம் கல்வி முறையில் அல்லது பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பிடிக்காத செயல் அல்லது மாணவர்கள் ஏற்று கொள்ள இயலா செயல் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. வெடி குண்டு புரளிகளை ஏற்படுத்தும்  மாணவர்களை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அல்லது யார் இப்படி போன் செய்யும் அளவுக்கு மாணவரை உருவாக்குவது ? கல்வி முறையா? ஆசிரியரா? 

மதுரை சரவணன்.

Wednesday, March 23, 2016

வு மருத்துவர்கள் நமக்கு வேண்டாமே!



நகரமையமாதல் , நவீன பொருளாதாரம் ஆகியவற்றின் பாதிப்பு மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. 100 ரூபாயில், ஒரு லட்சத்திற்கான (சம் அஸ்யூர்ட் ) ஆக்ஸீடென்டல் பாலிசி வழங்க பன்னாட்டு இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
இன்சுரன்ஸ்சுக்கும் மாணவர் சேர்க்கைக்கும் என்ன சம்பந்தம்!
அட ..அது எக்ஸ்ட்ரா பேக்கேஜ் ஆகிடுச்சுங்க. ! ஆங்கில பள்ளிகள் குரூப் இன்சுரனரஸ்சை கையில் எடுத்து கொண்டு , தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் 1 (அ )2 லட்சத்திற்கான பாலிசி ப்ரிமியம் பள்ளியால் வழங்கப்படும் என விளம்பரம் படுத்துகின்றன. எனக்கு தெரிந்து ஒரு பள்ளியின் ஆண்டறிக்கையில் மாணவர்களின் குடும்ப நலன் கருதி இன்சுரன்ஸ் இவ்வாண்டு நடைமுறைபடுத்தப்பட்டதாக பெருமை பட்டு கொண்டார்கள்.
இன்றைய இளய தலைமுறை புதிய தொழில் நுட்பத்தை , நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கி , நம்மை பிரமிக்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னைப் புதுப்பித்து கொள்ள வேண்டும் என்பது ஏட்டில் அல்லவா இருக்கிறது. ஆசிரியர் மாணவனை விட பின் தங்கியே இருக்கின்றனர்!
மாணவர் சேர்க்கைக்கு நம்மிடம் எந்த பேக்கேஜ் வும் இல்லை. இருக்கிற நவீன கற்றல் முறையையாவது தூக்கி பிடிக்க வேண்டாமா?!
இன்னும் நாம் பழைய கல்வி முறைகளை தூக்கிபிடிக்காமல் , மாணவர்களை மையப்படுத்தும் கல்வி முறையை கையில் எடுக்க வேண்டும் . இது காலத்தின் அவசியம். பழைய முறை வேண்டும் என்பது சீனாவின் 'வு' மருத்துவர்கள இன்று தேவை என கூறுவதை போன்றது.
அரிய மூலிகைகள் மூலம் நோய் நீக்கும் வித்தை அறிந்தவர்கள் , 'வு' மருத்துவர்கள் . ஆனால், கொள்ளை நோய் வரும் சமயத்தில் இம்மருத்துவர்கள் ஒன்று கூடி அரைநிர்வாணத்துடன் வெறி கொண்டு ஆடி, பாடி, நாக்கிலும் , உடம்பிலும் ஊசிகளைத் தைத்து, செந்நீர் சுரக்கும் நிலையில் மந்திரம் சொல்வார்கள். சிலர் , கத்தி முனை மீதோ, ஆணிகளின் மீதோ உடலைக் கடத்திக் கூக்குரல் இடுவார்கள். பேரொலியும் ஆரவாரமும் கூடிய இத்தகைய செயல்கள் மூலம் கொள்ளை நோய்க்கு காரணமான பிசாசுகளை விரட்டி, நோயிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள் .
பள்ளி விட்டு வீடு செல்ல பள்ளி வாகனத்திற்கு வரிசையில் நகர்ந்த சிறுவன் திடீரென்று கீழே விழுந்தது விட, பதறி ஓடினேன். கீழே விழுந்தவன் கை கால்கள் வெட்ட ஆரம்பித்தன. அச்சம் , பயம் தொற்ற அவன் அருகில் செய்வதறியாது , அவன் பெயரை அழைத்து ஒன்றுமில்லை என்றேன்.
என் அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவன் , " சார் பதறாதீங்க... வெட்டுறது கொஞ்சம் நேரத்தில் நின்றுவிடும். காற்று விட்டு நில்லுங்கள். அவன் பல்லுல் நாக்கு கடிபடாம இருக்க கர்சீப் கொடுங்க . தலை கல்லு மேல மோதிடாம பார்த்து கங்க...." என்றான்.
அம்மாணவன் கூறியது. போல் எதுவும் நடக்காதது போல் எழந்து நின்றான். " சாரி சார்., மதியம் மாத்திரை போட மறந்துட்டேன் " என்றான். விசாரித்த போது , மண்டையில் உள்ள இரத்தக் கட்டி நரம்பில் உருண்டு ஓடும்போது இம்மாதிரியான தலை சுற்று, வலிப்பு வருமாம்.கட்டி கரைக்க சிகிச்சை மேற்கொள்வதாக கூறினான்.
அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவனிடம் எப்படி இவனை பற்றி தெரியும் என கேட்டேன். சார் , இரண்டு வருசமா இவன் எங்க ஏரியால இருக்கான். இப்ப எங்க எரியாவில் டைல்ஸ் கல் பதிச்சுட்டாங்க . இவன் கீழே விழுந்து மண்டையை உடைச்சுக்கிறான்னு , மண் ரோடுக்கு போயிட்டாங்க, அதுனால தெரியும்., மூளையில் இரத்தம் கட்டி உருளுதாம் என்றான்.
தேன் கலந்து மருந்த சாப்பிட சொல்லுங்க , சார் என ஆலோசனையும் வழங்கினான், சித்தனை போல், அம் முன்றாம் வகுப்பு மாணவன்.
இம்மாணவரை நல்வழிப்படுத்தி ஆர்வம் ஊட.டினால் , நல்ல தமிழ் மருத்துவனாக்கலாம் . சித்த மருத்தும் தாங்க தமிழ் மருத்துவம். சித்த மருத்துவர்களில் தலையானவர் அகத்தியர் .இவர் முப்பத்தெட்டு நூல்கள் எழுதியுள்ளார். சித்த வைத்தியத்தில் தேன் முக்கிய அங்கம் வகிக்கிறது.
மூன்றாம் வகுப்பிலே அனுபவ வைத்தியனாக , ஆசிரியரை விட தெளிவாக இருக்கும் மாணவர்களிடம் மீண்டும் பழைய முறையில் தான் பாடம் நடத்துவேன் என்றால் என்னாவது.?
ஆங்கில பள்ளிகள் மாணவர்கள் மதிப்பெண்களுடன் , உடல் நலன், எதிர்காலம் , மருத்துவம் , இன்சுரன்ஸ் என சர்வ பலத்தையும் உபயோகித்து மாணவர் சேர்க்கையை எதிர் கொண்டுள்ள இந்நேரத்தில் , நாம் கற்பித்தல் முறையை குறை கூறுவதை தவிர்த்து, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு சம்பளம் பெறுகிறோம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை தக்க வைக்க முடியும்!
மதுரை சரவணன்.

Tuesday, March 22, 2016

யாரை பிடிச்சா காரியம் நடக்கும்? !




இன்று மாலை அமைதியாக அம்மா வீட்டில் அமர்ந்திருந்தேன். வாசலில் யாரோ நிற்பது போல் நிழலாடியது. யாரே வருகின்றார்கள் என நினைத்து எழுந்து வாசல் கதவை  திறந்தேன். இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள். என் மொட்டை தலையை பார்த்ததும், கொஞ்சம் அதிர்ந்து , மெதுவாக பேச துவங்கினார்கள். “சார், ஸ்கூலில் சேர்ப்பது போல் குழந்தை இருக்கின்றதா?” என ஆரம்பித்தார்கள். “ம் “ என்றேன். மதுரையில் சமீபத்தில் தொடங்கிய மெட்ரிக் பள்ளியில் இருந்து வந்திருந்தனர்.

“சார்.. எங்க பள்ளியில் சேருவதற்கு ஒரு லட்சம் டெபாசிட் கட்டணும். அதற்கு நாங்க ஸ்கூல் அருகிலேயே ஒரு கிரவுண்டு இடம் பதிந்து தருகின்றோம். நீங்க விரும்பினா இரண்டாவது வருடம் படிக்கும் போது அங்க வீடு கட்ட நாங்களே லோன் வாங்கி தருகின்றோம். பீஸ் கட்டுற மாதிரி எங்க ஆபீஸ்லேயே நீங்க லோன் அமண்ட கட்டிக்கலாம். உங்க பையனோட கனவோட உங்க கனவும் நிறைவேறி விடும். பள்ளிக்கூடமும் வீடும் ஒண்ணா இருந்தா.. பிள்ளைகள் படிப்புக்கு பல மைல் தூரம் செல்ல வேண்டியது இல்லை” என என் வாயை அடைத்தனர்.

இன்னும் என் வாசலில் நிழல் ஆடிக் கொண்டு தான் இருக்கின்றது. அம்மா இறந்த துக்கத்தில் மன பிரமை எதுவும் பிடித்து விட்டதா? என யோசிக்க தொடங்கினேன்.

என் பள்ளி தோழன் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் வின்செண்ட் கதவை திறந்து உள்ளே வந்தான். “என்னடா… ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இன்று தான் ஆசிரியர்கள் கூறினார்கள் “ என துக்கம் விசாரித்தான். கவலைப்படாதே..! உனக்கு நண்பன் நான் இருக்கின்றேன் என்று ஆறுதல் கூறினான். மாமா , அக்கா எங்கே என விசாரித்தான். ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் வந்து ஆஸ்பத்திரியில் பார்த்திருப்பேனே என்றான். ஏண்டா அப்பலோ கிப்பலோன்னு நல்ல மருத்துவ மனையா சேர்த்திருக்கலாம் என்றான். அம்மா போக வேண்டும் என்று விதி. அம்மா இல்லாமல் தவிக்கவேண்டும் என்பது கர்ம பலன் என கூறினேன். மனச தேத்திக்க என கூறி கதவை சாத்தி சென்றான்.

அப்போலோவை பற்றி மனம் பயணித்தது. கிரேக்கர்கள் உடல் நலத்துக்கும் மருத்துவ கலைக்கும் தலைவனாக அப்போலோ எனும் கடவுளை வணங்கி வந்தார்கள். கிரேக்க புராணங்களில் அப்போலோவின் மருத்துவத் திறன்கள் குறித்து கொட்டி கிடக்கின்றன.

ஆஸ்பத்திரியில் இருந்த போது பலரின் குரலாக இதுவே இருந்தது. “ என்னப்பா.. இப்ப வைத்தியம் பார்க்கிறாங்க.. எல்லாத்துக்கும் ஒரு டெஸ்ட். அதுக்கு மேலே.. ஸ்கேன் ..ஸ்கேனுன்னு எடுத்து தள்ளி, ரிப்போர்ட்டுக்கு வெயிட் பண்ணி, பண்ணியில்ல வைத்தியம் பார்க்கிறாங்க..? அப்ப எல்லாம் நாடி பிடிச்சா போதும். இதுதான் வியாதி. இது தான் மருந்து. இந்த வியாதிக்கு இதை  உணவா எடுத்துக்கணும். இந்த உணவை தவிர்க்கணும்ன்னு டக்கு டக்குன்னு சொல்லிபுடுவாங்க… இப்ப எல்லாம் வைத்தியம் காச பிடுங்கிற வேலையா இருக்கு!”    

நோய்களை நலமாக்கும் ஒரு சிறந்த மருத்துவராக மட்டும் இல்லாமல், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றவராக மருத்துவர் இருந்தால் எப்படி இருக்கும்! கிரேக்க புராணங்களில் அப்படி ஒரு மருத்துவர் இருந்தார்.  அவர் அப்போலோவின் மாணவனான, ஏஸ்கிலிபியாஸ் ஆவார். இறப்பவர்களை உயிர்ப்பித்ததால், சிக்கல் உருவானது! கிரேக்கர்களின் தலைமைக் கடவுளான சீயஸ், ஏஸ்கிலிபியாசின் மருத்துவ பணியில் குறுக்கிட வேண்டியதாயிற்று. ஆகவே, வான் இடியை வரவழைத்து ஏஸ்கிலிபியாசை கொன்றதாக, வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. கொல்லப்பட்ட பின்பும் ஏஸ்கிலிபியாசின் புகழ் அழியவில்லை. அவரது பெயரால், கிரேக்க நாடெங்கும் ‘ மருத்துவ கோவில்கள்’ நூற்றுக்கனக்கில் தோன்ற ஆரம்பித்தன.

இத்தகைய கோவில்களுக்கு நோயாளிகள் சென்று, உடலையும், மனத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு அருகேயுள்ள திறந்த வெளிகளில் படுத்து உறங்குவார்கள். இரவில் ஏஸ்கிலிபியாஸ் கனவின் மூலமாகவோ, நேரடியாகவோ வந்து நோயாளிகளைத் தொட்டு, நலமாக்குவதாக கிரேக்க மக்களிடையே நம்பிக்கை நிலவி வந்தது. பல பண்டைய மருத்துவக் கோவில்களின் இடிந்த பகுதிகளை கிரேக்க நாட்டில் இன்றும் பார்க்கலாம்.

பொதுவாக மருத்துவர்களை மக்கள் அனைவரும் கடவுளாகத்தான் பார்க்கின்றார்கள். கையை கூட தொட்டு பார்க்காமல் வைத்தியம் பார்க்கும் மேல்மட்ட வைத்திய முறையை நினைக்கும் போது கொஞ்சம் கவலையை வரவழைக்க தான் செய்கின்றது. ஃபேன் காற்றில் மாணவர் சேர்க்கை நோட்டீஸ் பறந்தது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது கொஞ்சம் பீதியை தான் கொடுக்கும் போல் தெரிகின்றது. யாரை என்ன செய்வது என்று தெரியவில்லை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்கவே நினைக்கின்றார்கள். என் நண்பர் காமராஜ் அவர்களின் குழந்தையை சேர்க்க நண்பர்கள் குயவர் பாளையம் ரோட்டில் முதல் நாள் இரவு ஒன்பது மணியில் இருந்தே காத்திருந்தது மனதில் வந்து சென்றது. இன்றும் மார்ச் கடைசியில் அந்த பக்கம் ரோட்டில் மக்கள் படுத்திருப்பதை காணலாம். நல்ல பள்ளி என்பதற்கு பெற்றோர்கள் எதை அளவு கோலாக வைத்துள்ளார்கள்? பணமா? மதிப்பெண்ணா? குழந்தைகளின் ஒழுக்கம் சார்ந்த செயலா? குழந்தைகளின் முழு திறன் வெளிப்படுத்த முன்னெடுக்கும் பள்ளியா? இவை புரியாத புதிரே!

என் நண்பரை பார்த்து கேட்டேன்,  “உன் பிள்ளையை உன் பள்ளியில் சேர்ப்பாயா?” ”சேர்ப்பேனே …ஏன் கேட்கின்றாய் ?” என கேட்டார்.  “உண்மையாகவா ! மன சாட்சியுடன் சொல்லு..”  என்றேன்.  “ உண்மையான்னா.. என் மகன என் பள்ளியில் ஒன்றாவது, அப்புறம் நான்காவது, ஐந்தாவது மட்டுமே சேர்ப்பேன்” என்றான்.  சிரித்தேன்.  உண்மை. அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிலமை இதுதான். ஒரு சில ஆசிரியர்களை வைத்தே பள்ளிகள் இயங்குகின்றன. இந்த உண்மை கசக்க தான் செய்யும். எந்த பள்ளியிலோ மாணவர்கள் படித்தால் சரிதான்.

20 – 03-2016 இரவு நீயா நானா வில் இளங்கோ கல்லாணையின் பேச்சு அற்புதமாக இருந்தது. கேட்கவில்லை என்றால் யூ டியூப்பில் ஆவது பார்த்து அவரின் சீற்றத்தை உள்வாங்கி கொள்ளுங்கள். பத்ரி சொல்வது போல் இங்கு பள்ளிக்கல்வி அளவிலாவது அரசே பள்ளிகளை எடுத்து நடத்த வேண்டும். தனியார் கைகளில் பள்ளிகல்வி இருப்பது தான் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம்.
பொது கல்வி முறை ஏற்படுத்த முடியுமா? தெரியவில்லை. ஆனால், பரவலாக பொது கல்வி குறித்த பேச்சை எடுத்து செல்வதன் வாயிலாக பெரும் போராட்டம் ஏற்படுத்தி, கல்வி அரசு மட்டுமே நடத்திட வேண்டும். அதையும் இலவசமாக தந்திட வேண்டும். கட்டாய இலவச கல்வி சட்டமே சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகள் கடந்தே நமக்கு கிடைத்துள்ளது. பொது கல்வி குறித்து நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் தான்?

இரவு வீட்டிற்கு சென்றேன். என் மனைவி காத்திருந்தாள். ”என்னங்க.. கல்வி புரட்சி அது இதுன்னு பேசி பொழுதை ஒப்பேத்திட்டீங்களே..! அரசு பள்ளியில் தான் சேர்க்கணும். அப்படி இப்படி சொல்லி. செண்ட்ரல் ஸ்கூலில் அப்பளிகேசன் போட்டீங்களே? ரிசல்ட் 18 தேதி போட்டுட்டான் பார்த்தீங்களா? “ விழி பிதுங்கி நின்றேன். “பேச்சு தான் வாய் கிழிய இருக்கு. உங்க பிள்ளையை சேர்க்க வழி பாருங்க.. சத்யா நம்பர் வரலைய்யாம்..யாரையாவது சிபாரிசு பிடிச்சு.. சேர்க்கிற வழிய பாருங்க.. இல்லை எங்க இஷ்டத்துக்கு ஒரு பள்ளியில் சேர்த்திடுவோம்..!”
“அட நாம் இப்ப அட்மிசனுக்கு யாரை பிடிக்கிறது? அட யப்பா சாமிகளா? செண்ட்ரல் ஸ்கூலில் சேர்க்க யாரை பிடிக்கணும் சொல்லுங்கப்பா?”


மதுரை சரவணன்.    

Friday, March 11, 2016

வாழ்க்கையில் கடன் மட்டும் வாங்க கூடாதுங்க.. நம்ம என்ன விஜய் மல்லைய்யாவா?

கடன் வாழ்க்கையில் வாங்க கூடாது இல்லைன்னா..?!
*
அந்த படிக்கட்டுகளை மிதித்து ஏறும் போது மனம் பதை பதைக்கின்றது. ;

எத்தனையோ முறை இந்த படிக்கட்டுகளில் ஏறி இருக்கின்றேன். பல ஆயிரம் ரூபாய் கட்டுகளை எண்ணி பையில் வைத்து கொண்டு எந்த வித பயமும் இன்றி என்னுடைய மோபட்டில் இந்த படிகளில் ஏறி இறங்கி வந்திருகின்றேன். இன்று ஏறுவதற்கு கால்கள் பின்னுகின்றன. தயக்கம் காட்டுகின்றன.

என்னை பார்த்தவுடன் சார் குட்மார்னிங் என்று அழைத்து உட்காருங்க சார் என ப்யூன் காட்டும் ஆர்வம் அப்போது என்னை பரவசப்படுத்தும். இப்போது அந்த ப்யூன் என்ன சொல்வானோ என்றப்படி பயந்து செத்து படிக்கட்டுகளில் ஏற வேண்டி இருகின்றது. பல லட்சங்களை சுமந்து ஏறிய போது எந்த பயமும் இல்லை. இன்று எந்த லட்சமும்...,அட போங்க எந்த பைசாவும் இல்லை இருந்தாலும் பயந்து சாக வேண்டி வருகின்றது.

முகத்தில் வியர்வை கொட்டியது. அப்படி ஒன்றும் வெயில் இல்லை. வெளியில் அப்போது தான் மழை பெய்து குளுமையாக இருந்தது. உள்ளுக்குள் அவ்வளவு நடமாட்டம் இல்லை. அந்த அறை குளிரூட்டப்பட்டு தான் இருந்தது. கர்சீப்பை எடுத்து துடைத்து கொண்டேன். தெரிந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா என துடைப்பது போல் பார்த்து கொண்டேன்.

தூரத்தில் ஒருவர் என்னை போலவே மிகவும் பயந்து அமர்ந்து இருப்பதாக உணர்ந்தேன். அப்படி நினைக்க ஒரு காரணம் இருக்கின்றது. அவரின் முகபாவனைகள் நான் செய்வது போல் இருப்பதாக உணர்கின்றேன். அப்படி அவர் இருந்தால் ஆறுதல் தான்! அவரிடம் என்ன சொல்வார்கள், அவரை எப்படி நடத்துவார்கள் என்பது தெரிந்துவிடும்!

நான் அமர்ந்திருக்கும் இந்த வங்கியின் மேனேஜர் அறையில் இதற்கு முன் கொடுத்த மரியாதையை நினைத்து பார்க்கின்றேன். அது பொற்காலம். அப்போது எனது தொழில் பிரகாசமாக இருந்தது. கிடைத்த லாபத்தை எல்லாம் இங்கு தான் சேமித்து வைத்தேன். என்னுடைய அனைத்து பரிவர்த்தனைகளையும் இந்த வங்கியின் மூலமே நடத்தினேன்.

நான் நினைத்த அளவு எனது தொழிற்சாலை பெரியதாக இல்லை என்றாலும், எனக்கு அதுவே பெரிய தொழிற்சாலையாகவும், போதிய வருமானம் கொடுப்பதாகவும் இருந்தது. என்னை சார்ந்து 20 பேர் எனது தொழிற்சாலையில் வேலை பார்த்தனர். யாருக்கும் எந்த குறையும் வைக்காமல் கூடுதல் கூலியுடன் நேர்மையான முறையில் தொழில் நடத்தினேன். எனக்கென்று ஒரு சேமிப்பும் , ஒரளவு வசதியுடன் குடும்பத்தை கடன் இல்லாமல் நடத்தி வந்தேன்.

இந்த வங்கியின் மேனேஜர் என்னை பார்க்க தொழிற்சாலைக்கு வருவதாக கூறினார். நான் அவரை வாங்க என அழைத்திருக்க கூடாது!

ஆம்! நான் உள்ளே நுழைந்தாலே , சார் என ப்யூன் முதல் எல்லோரும் அழைப்பார்கள். கிளார்க் டீ குடித்தால் கூட ஓடி வந்து சார் டீ குடிங்க என்பார். மேனேஜர் அவரது அறையில் இருந்து எழுந்து வந்து எனது பெயர் சொல்லி அழைத்து உள்ளே வாருங்கள் என மரியாதையுடன் பேசி, எனது வேலையை உடனே முடித்து தருவார். இன்றும் எனது பெயரை உச்சரிக்கின்றார் ஆனால், வித்தியாசம் இருக்கின்றது.

அன்று வந்த வங்கியின் மேலாளர் தொழிற்சாலையை சுத்தி பார்த்தார். சொந்த இடமா? என்றார். இல்லை என்றேன். ஒத்திக்கு இருக்கின்றேன் என்றேன். வேறு சொத்து இருக்கின்றதா என கேட்டார். பத்து செண்டு சிட்டியில் இருக்கு என்றேன். உற்பத்தி அதிகரிக்கலாமே? என்றார். அதிகரிக்க வேண்டும் அதற்கு புதிய மிஷினரி வாங்க வேண்டும். கொஞ்சம் சேத்து வைக்கணும் . அதன் பின் தான் தொடங்கணும் . எப்படியும் இரண்டு வருடம் ஆகிடும் என ரெம்ப ஏமாளியாக கூறினேன். உடனே எந்த வித சலனமும் இல்லாமல், நீங்க ஏன் புதிசா மிஷின் இப்பவே வாங்க கூடாது? நீங்க ஓகேன்னு சொன்னா நீங்க எதிர்பார்க்கின்ற பணத்தை லோனா த்ர்றேன் என்றார். அவர் வலை விரிக்கின்றது புரியாமல், மிகவும் சந்தோசமாக சார் நிஜமாவா சொல்றீங்க ! நீங்க என் தெய்வம் என்றேன். தெய்வம் நின்னு கொல்லும் என்று சொல்வாங்க.. இப்ப என்னை மூணுமணிநேரமா நிக்க வைச்சு கொல்லுறான் ! அந்த மேனேஜர்.

சார் என்ற அந்த புயூன் இதோ வந்துவிட்டான்! அவன் எனக்கு இப்போது அளிக்கும் மரியாதையை பாருங்கள். என்னப்பா சேகர் ! ஏதாவது பணம் கொண்டு வந்தீய்யா..! மேனேஜர் வர்ற நேரம் கொஞ்சம் ஓரமா நில்லு.. இல்லைன்னா என்னை ஏன் உட்கார வச்சன்னு கேட்பார். வாங்கின கடனை கட்டுறதுக்கு துப்பில்ல.. உட்கார சீட் கோட்குதான்னு கேட்பார்..எதையாவது அடகு வச்சு கட்டிருப்பா..சேகர் நீ வை வாங்கிறத பார்த்தா எனக்கே கஷ்டமா இருக்கு. சரி சரி.. நான் பேசினா கூட அதுக்கும் சேர்த்து உன்னை தான் திட்டுவார்.. “

என்னிடம் இருந்த 10 செண்ட் இடத்தை அடகு வச்சு தானே பணம் தந்தீர்கள். இனி தருவதற்கோ இல்லை விற்பதற்கோ எப்படி முடியும். அந்த பத்து செண்டு இடம் வித்தா இப்ப 60 லட்சம் போகும். ஆனா , பேங்க் கடன்ல்ல அடகு வச்சிருக்குன்னு சொன்னா.. 40க்கும் குறைவா கேட்குறாங்க.. அதை வித்தாவது கட்டலாம்ன்னு நினைச்சா... நீங்க தான் ஏலம் விடுவேன்னு சொல்லுறீங்க.. ஏலம் விட்டு அதை விட குறைச்சு போச்சுன்னா.. மீதி பணத்துக்கு நான் என் கழுத்தை வித்தாலும் அடைக்க முடியாது. நானா பேங்குல லோன் வேண்டும்ன்னு கேட்டேன்! என மனதினுள்ளே புலம்பி கொண்டேன். வெளியில் பேசினால் நாண்டு சாகும்படி பேசுவார்கள்.

என்னப்பா சேகர். கொஞ்சமாவது சோத்தில் உப்பு போட்டு திங்கிறிய்யா.. சும்மா சும்மா வந்து பல்ல காட்டி வெக்கமில்லாமா திட்டு வாங்கிட்டு போற.. அடுத்து கூண்டில் ஏத்தி விசாரிக்க வைக்க போறங்க.. பேசாம சொத்த ஏலம் விட சொல்லி எழுதி கொடுய்யா..என கிளார்க் சண்முகம் திட்டி சென்றான்.

இதோ அலுவலகம் பொறுக்கும் ஆயா வருகின்றாள். எத்தனை முறை அவள் மகள் படிப்பிற்கு பணம் கொடுத்திருப்பேன். அவள் இப்போது எப்படி அழைப்பாள் பாருங்கள். என்னப்பா சேகர்..உன்னை நினைச்சாலே கஷ்டமா தெரியுதுப்பா.. என் மகளுக்கு உதவி செய்த இப்ப என்னன்னா நொடிச்சு போயிட்டா.. ஏதோ பத்து அம்பதுன்னா நான் கூட கொடுத்து உதவிடுவேன். நீ பாட்டுக்கு மேனேஜர் தர்றார்ன்னதும் ஒரு கோடி வாங்கிட்ட... சரியான ஆளுய்யா.. ஒண்ணு சொல்றேன் பொண்டாட்டி வீட்டில் எதையாவது வித்து கட்ட சொல்லு.. அவன் அவன் பொண்டாட்டியையயே வித்து லோன்னை அடைக்கிறான். நீ என்னடான்னா கவலை பட்டுகிட்டு இருக்க.. பிள்ளையை படிக்க வைக்கின்றேன்னு மேலும் கடன் ஆக்கி கிடாத.. பேசாம வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லு கடனை அடை..”

நான் சொல்றது நிஜம்ங்க.. ஆனா நம்ப மாட்டீங்க..! இதை விட மேனேஜர் மட்டமா பேசுவார்ங்க..! அதை கேட்டா கொஞ்சம் பால்டால் வாங்கி சாக தோணும். செத்த பின்னாடி பிள்ளைகளையும் பொண்டாட்டியையும் கொடுமை படுத்துவாங்கண்ணு நினைச்சு பயமா இருக்கு. கடன் வாங்கிறவன் ஏன் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிறான்னு இப்ப தாங்க தெரியுது. தயவு செய்து பேங்க் காரன் மரியாதையா சார் அப்படி இப்படி பேசி நமக்கு லோன் தர்றான்னா வாங்கிடாதீங்க..!

ஒரு கோடி லோன். ஒரு வருசத்துல ஐம்பது லட்சம் அடச்சுட்டேன். மொத்தம் 60 தவணை. ஏன் கெட்ட நேரம் சரக்கு டெலிவரி பண்ணி, சரக்க எடுத்தவன் கொடுத்த செக் திரும்பிடுச்சு. ஒரு கோடி சரக்கு. ஏமாந்தது தான் மிச்சம். இப்ப நான் கடன் காரனா நிக்கிறேன். முன்ன எல்லாம் சிறியதா பண்ணிய போது காசு கொடுத்தா சரக்கு என்று இருந்தேன். அகல கால் வச்சதும் எல்லாம் கடன் ஆகி போச்சு.. நானும் கடன் ஆகிட்டேன். என் சொத்தும் அடமான மா இருக்கு. இப்ப சிறுசா நடத்தலாம். ஆனா என்னை நம்பி எவனும் வர மாட்டேன்னு சொல்றான்.. என்ன செய்ய ? “

என்னங்க பார்க்கிறீங்க நான் ஏன் சிரிக்கின்றேன் என்றா? இல்லீங்க மேனேஜர் அறையில் ஒட்டியிருந்த வாசகம் சிரிக்க வைத்தது. கஷ்டமர் இஸ் கிங் இன் அவர் சர்வீஸ் என்று இருந்தது. அதோ டிவியில் பாருங்க. கிங் பிஷர் நிறுவனர் மல்லைய்யா தப்பி ஓட்டம்ன்னு ஸ்க்ரோலிங் வருது..!
நான் என் பொண்டாட்டி வீட்டுக்கு போய் கடன் வாங்க போனேன். அங்கேயும் மோப்பம் பிடிச்சு வந்து இந்த மேனேஜர்.. மானக்கேட வஞ்சுட்டானுங்க்..!
இப்ப கூட கையில் இரண்டு லட்சம் கடன் வாங்கி கொடுக்க தான் வந்திருக்கேன். ஐம்பது லட்சம் தான் பாக்கி தரணும். ஆனா இவனுங்க வட்டி மேல வட்டி போட்டு இந்த மூணு வருசத்தில் எண்பது லட்சம் தரணும்ன்னு சொல்றான்.. கோட்டில் கேசு போட்டு பேசிக்க.. இல்லை...என மானக்கேட திட்டுறான்..!

வாழ்க்கையில் கடன் மட்டும் வாங்க கூடாதுங்க.!

வாழ்க்கையில் கட்னே கூடாதுங்க. இல்லீங்க நான் தப்பா சொல்றேன். கடன் வாங்க தெரிஞ்சிருந்தா.. வெக்கம் ரோசம் பார்க்காம 7000 கோடி 5000 கோடின்னு சுருட்டீட்டு வெளிநாட்டில் ஏமாத்தி வாழ தெரிஞ்சு இருக்கணும்ங்க..!
இதோ மேனேஜர் வந்துட்டார்.. காதை பொத்தீக்கங்க..!
மதுரை சரவணன்.