பாரதி தம்பி போன்ற கல்வி கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர்களின் உழைப்பு போற்ற தக்கதே...!
*
கொஞ்சம் யோசிக்கவே வைக்கின்றது குழந்தைகளின் கலந்துரையாடல்கள்..!
குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்க செய்ய வேண்டும்.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால்/ அளிக்க முயன்றால் போதும் , நாம்( ஆசிரியர்கள் ) சுயமாக சிந்திக்க தொடங்கி விடுவோம். இதனால் குழந்தைகள் நம்மை அழைத்து சென்றுவிடுவார்கள், சிகரத்தின் உச்சிக்கு! ஏனென்றால் குழந்தைகளின் கற்பனைத்திறன் எல்லையற்றது. அது நம்மை விட பல மடங்கு அதிக திறன் உள்ளது.
ஆசிரியர்கள் அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு , தாங்கள் கூறும் கருத்துக்களை அப்படியே உள் வாங்கி வெளியிடும் ஜெராக்ஸ் மிசின்களாக மாணவர்களை உருவாக்குவதால் எந்த பயன் ஏற்படாது என்பதை உணர வேண்டும். குழந்தை மையக்கல்வி முறையை ஆதரிக்க வேண்டும். நாம் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுக்கும் செய்தி (கல்வி) , ஒரு பிரதியாக தான் இருக்கும். அது பல சமயங்களில் மிஷினி மாட்டி கொண்டு கிழிந்துவிடும் பேப்பராக கூட மாறலாம். அசல் பிழை என்றால், பிழையான பிரதியே நமக்கு கிடைக்கும்!
தானே கற்றல் நிகழும் வகுப்பறையாக நம் வகுப்பறைகளை மாற்ற வேண்டும். தானாக கற்பதற்கு தகுந்த சூழலை உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். குழந்தைகளை வகுப்பறையில் கலந்துரையாட செய்வதன் மூலமாக, அவர்களின் சிந்தனை திறனை வெளிப்படுத்த செய்யலாம் அல்லது சிந்தனையை தூண்டலாம்.
குழந்தைகளின் கலந்துரையாடல் சுதந்திரமாக இருத்தல் அவசியம். குழந்தைகளின் கலந்துரையாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதற்கு தடை போடும் விதமாக நம் கருத்துக்களை அவர்களின் கலந்துரையாடலில் திணிக்க கூடாது.
இன்று என் வகுப்பறையில் பெண்கல்வி குறித்தும், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வராமைக்கு காரணம் , வீட்டில் தம்பி /தங்கையை கவனிக்க செய்வதால் அல்லது அம்மா/தாய் நோய்வாய்ப்பட்டதால், அவரின் பணிகளை செய்ய வேண்டி இருப்பதால் பெண் குழந்தைகள் வருவதில்லை என்று சொல்லியவுடன் , “சார் ஏன் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருக்கின்றார்கள் என்று காரணத்தை பற்றி விவாதிக்கின்றோம் ” என்று கீர்த்தனா கூறியவுடன், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து செயல்பட்டார்கள்.
“ஏன் சார் பெண் மட்டும் தான் பள்ளிக்கு வரவில்லையா? பசங்களும் பள்ளிக்கு செல்வதில்லை அவர்களை பற்றி ஏன் கவலை கொள்ள கூடாது ? அவர்களை பற்றியும் எழுதுகின்றோம் ”என ரோஹித் கூற , செந்தில் தலைமையில் மற்றொரு குழு செயல்பட ஆரம்பித்தது.
என் வகுப்பறையில் இந்த பருவத்திற்கு விளையாட்டு முறையில் பிழையின்றி எழுதுவதற்கு பயிற்சி தருகின்றேன். அதனை சோதிப்பதற்கு களமாக இந்த உரையாடலை எழுத்துவடிவில் பதிய செய்ய கேட்டு கொண்டேன். விளையாட்டு கல்வி பலன் தந்தது. முழுவாக்கியத்தை எழுத கற்று கொண்டுள்ளார்கள். பிழைகள் மிகவும் குறைவாக , நன்றாக வளர்ந்திருக்கின்றார்கள். 5 ம் வகுப்பில் நான் இப்படி முழுவாக்கியத்தை அமைத்து எழுதியது இல்லை. உங்கள் பார்வைக்கு அதனை அப்படியே கொடுத்துள்ளேன்.
நான் கலந்துரையாடலை முறைப்படுத்துவபவனாகவும், திசை மாறி சென்று விடாமல் கண்காணிப்பவனாகவும் தான் எப்போதும் செயல்படுவேன். ஆகவே, நான் வெளியில் இருந்து கவனிக்க தொடங்கினேன். அனைத்து மாணவர்களின் பங்கெடுப்பும் இருக்க செய்தேன். குழுத்தலைவரை எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்து விவாதிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்க உதவினேன்.
டிராப்பவுட் இல்லை என கணக்கு கொடுக்கும் அதிகாரிகளே தயவு செய்து இதனை கணக்கில் கொண்டால் பள்ளி செல்லா குழந்தைகளை பற்றிய விபரம் அதிகம் தான் என்பதை அறியலாம். இது அவர்களின் கற்பனை அல்ல. தங்கள் குடியிருப்பு பகுதியில் , தாங்கள் கண்ட, கேட்ட, உடன் இருக்கும் அண்ணன் , தம்பி, தங்கை, அக்காக்களின் கதையாக இருக்கின்றது.
நாம் முன்னேற வேண்டிய தூரம் வெகுதூரம் இல்லை என்பதையும் நாம் போலியான புள்ளி விபரங்களை சுமந்து கொண்டும், எல்லோருக்கும் (அனைவருக்கும் )கல்வி என்பதை நம்பி கொண்டும் உள்ளோம்.
நம் பள்ளிக்கூடங்கள் மதிப்பெண் அடிப்படையில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி செயல்படுவதை, குழந்தைகளின் வார்த்தைகளில் இருந்து காணலாம்.
பாரதி தம்பி போன்ற பத்திரிக்கையாளர்கள் கல்வி கட்டுரைகள் எழுதும் எழுத்தில் கற்பனை இல்லை என்பதும் , அவர்கள் கல்விக்காக மெனக்கெடும் உழைப்பும் எவ்வளவு உன்னதமானது என்பதும் புரியும். இது ஒரு வகுப்பறையில் உருவாகி உள்ள புள்ளி விபரம் என்றால், இப்படி எல்லா வகுப்பறையிலும், எல்லா பள்ளிகளிலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதன் காரணத்தையும் , அதனால் இன்றும் பள்ளி செல்லாமல் வேலைக்கோ , ஊர் சுற்றி திரியும் குழந்தைகளின் விபரங்களை சேகரித்தால், 10 , 12 வகுப்புகளில் பள்ளியின் தேர்ச்சிக்காக, பள்ளியை விட்டே துரத்தப்படும் குழந்தைகளின் புள்ளி விபரம் அதிர்ச்சி ஊட்டக்கூடும்..!
குழந்தைகளை கலந்துரையாட செய்வோம். குழந்தைகளிடம் இருந்தே நம் கல்வி முறையில் சீர்திருத்தத்தை கொண்டு செல்வோம்.
கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எப்.ஏ . ஏ வுக்கு 10 மதிப்பெண் வழங்கினேன். மனநிறைவோடு...ஆசிரிய பணியில் வாழ்கின்றேன்.
மதுரை சரவணன்.
4 comments:
பிள்ளைகளை கேள்வி கேட்க விட்டாலே அதுங்க தன்னால வளர்ந்துடும். நம் காலத்தைவிட இப்ப இருக்கும் பிள்ளைகளுக்கு கேள்வி கேட்கும் உரிமை கொஞ்சம் இருக்கு.
அருமையான கல்வி முறை! வாழ்த்துக்கள்!
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
சிறப்பான முறையில் கல்வி புகட்டும் உங்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் சரவணன்.
Post a Comment