என் பெயர் தாஜ்மஹால். அப்படித்தான் அழைக்கின்றார்கள். நான் பிறந்த போது சிவப்பாக இருந்தேன். அந்த பனி இரவில் நடுங்கியப்படி இருக்கின்றேன்.
என்னருகில் போர்டியாக்ஸ், அவலாஞ்சி, பீட்ச் அவலாஞ்சி, ரெட்கார்விட்டி,ரயல் சர்க்கஸ் இருக்கின்றனர். ஆம் அவர்கள் பெயர் அது தான். ஒவ்வொரு முறையும் யாராவது வரும் போது அப்படி தான் பெயர் சொல்லி அழைத்து சென்றார்கள்.
என் நண்பர்கள் பேசிக்கொண்டதை கேட்டு கொண்டிருந்தேன். வேலண்டைன் பாதிரியார் பற்றி பேசி கொண்டு இருந்தனர். ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது நான் இன்னும் ஒரிரு தினங்கள் தான் உயிரோடு இருப்பேன்!
காதல் காதல் என்று அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. காதல் போகின் சாதல் நன்று ! என்றார்கள். காற்றில் பறந்து வந்த செய்திதாளில் இளவரசன் இரயிலில் மோதி கிடக்கும் படம் ஒன்று கண்டேன். அந்த செய்தியையும் படித்துள்ளேன்.
காதல் என்றால் என்ன? என்று கேட்க நினைத்தேன். என் மனக்குரல் எப்படியோ அவலாஞ்சி காதில் விழுந்து விட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதல் என்றது. ஏன் முட்டாள் மாதிரி உளறு கிறாய் என்றேன். யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு பார் ! காதலுக்கு அர்த்தம் இப்படி தான் கூறுவார்கள் என்று என்னை கடிந்து கொண்டது.
சென்ற முறை உன் சகோதரி பீட்ச் அவலாஞ்சி யை பொக்கேவாக செய்து சென்றவனை கவனித்தாயா? என்றேன்.
பார்த்தேன். தான் காதலிக்கும் பெண்ணுக்கு , காதல் பரிசாக பொக்கே வாங்கி சென்றான் என்றது.
பார்த்தேன். தான் காதலிக்கும் பெண்ணுக்கு , காதல் பரிசாக பொக்கே வாங்கி சென்றான் என்றது.
அங்கு தான் ஒன்றை மறந்து விட்டாய். அவன் போனில் பேசிய பெண்ணின் பெயரும் , அந்த பொக்கையில் இருந்த பெண்ணின் பெயரும் ஒன்றாக இல்லை. ஒருவன் போனில் ஒருவரையும், நேரில் ஒருவரையும், காதலிப்பது தான் காதல் என்றேன். உன் கண்ணில் தான் இந்த மாதிரி விசயங்கள் படுகின்றது என சிரித்தது போர்டியாக்ஸ்.
உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. உலகம் வேகமாக சுழன்று கொண்டு இருக்கின்றது. தகவல் புரட்சியில் இன்று வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர், வாய்ஸ் சார்ட் என பல உருவாகி விட்டன. ஒவ்வொன்றிலும் பல பெண்களை ஆண்களும், ஆண்களை பல பெண்களும் லவ் பண்ண தொடங்கி விட்டனர். லவ் என்பது நுகர்பொருளாகி விட்டது என்றது ராயல் சர்க்கஸ்.
பாவம் அந்த பாதரியார். அவர் பெயரை சொல்லி அன்பை கொச்சைப்படுத்துவது தெரிந்தால் நொந்து போய் இருப்பார் என்றேன்.
காதல் என்பது அன்பை உள்ளத்தால் மீட்டு எடுப்பது என்பதை தாண்டி உடலால் தீண்டி பெறுவது என்றாகி விட்டது. அதற்கு இந்த காதலர் தினம் உதவி செய்யும் கருவி என்றது ரெட்கார்விட்டி.
உண்மையான காதலர்கள் இருக்கின்றார்களே! அவர்கள் பாவம் தானே. இந்த மாதிரி இழிவானவர்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றார்களே! அதனால் தான் காதலர்கள் கூடும் இடத்தில் சிலர் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள் என்றேன்.
நீ உண்மையான காதலை பற்றி பேசுவதால் தான் உனக்கு தாஜ்மஹால் என பெயர் வைத்துள்ளனர் என்றது ராயல் சர்க்கஸ்.
நான் குளிரில் நடுங்கி கொண்டிருப்பதற்கு காரணம் உங்களுக்கு புரிந்து இருக்கும். எனக்கு கவலையாக இருக்கின்றது. இன்னும் ஓரிரு தினங்களில் என்னை பறித்து விடுவார்கள். நான் உண்மையான காதலுக்கு பரிசாக அமைய வேண்டும். இந்த மாதிரி மொல்லமாரி காதலுக்கு உபகரணமாக இருந்து விடக்கூடாது !
உங்களில் யாராவது உண்மையான காதலர்களாக இருக்கின்றீர்களா? தயவு செய்து இதை படிப்பீர்களானால், ஓசூரில் இருக்கின்றேன். வந்து பறித்து செல்லுங்கள். உங்கள் உள்ளங்களில் என்றும் உயிரோடு இருப்பேன். காதலின் நினைவு பரிசாக இருப்பேன். உண்மையான காதல் காதலர்கள் கொடுக்கும் முதல் பரிசை மறப்பதில்லை !
உண்மையான காதலுக்காக காத்திருக்கின்றேன்.
மதுரை சரவணன்.
1 comment:
உதவி செய்யும் கருவி என்று என்றோ ஆகி விட்டது... காலக்கொடுமை...
Post a Comment