Sunday, July 6, 2014

கல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம்!

அன்புள்ள கல்வி தந்தையர்களுக்கு ...
---------------------------------------------------------------

   கல்வி துறையில் மாற்றங்கள் வேண்டும். மாணவர்கள் கற்றலில் புதுமை வேண்டும். ஆசிரியர்கள் தங்களை மாற்றி கொள்ள வேண்டும். இவை எல்லாம் சமூக அக்கறை உள்ளவர்களிடம் மட்டும் அல்ல. எல்லா நிலையிலுள்ள மக்களும் வேண்டுவன. மாற்றங்களில் சில  முரண்பாடுகள் சிக்கல்கள் இதைவிட கொடுமையானவை உள்ளனவே!

   காலை பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் தியானம் செய்ய சொல்லி மாணவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மூன்று நிமிடம் மட்டுமே நடைப்பெறும் இச்செயல். கண்களை மூடிக்கொண்டு நெற்றிப் பொட்டில் தாய் அல்லது தந்தையை நினைத்து கொண்டு வேறு சிந்தனைகள் இன்றி மூச்சுக்காற்றை ஆழமாக மெல்ல இழுத்து விடவேண்டும். வெளி உலக விசயம் எதுவும் தெரியாத உன்னத நிலை.

     அன்று அவ்வாறே தியானம் செய்ய தொடங்கி இருந்தனர். பெற்றோர் ஒருவர் வந்தார். தம் மகன் மற்றும் மகள் சென்ற வருடம் தான் புதிதாக சேர்ந்ததாகவும்,  மகன் நான்காம் வகுப்பும் மகள் மூன்றாம் வகுப்பும் படிப்பதாகவும் சொன்னார்.  தம் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் பெறுவதற்கு பள்ளியில் படிப்பதாக சான்று வேண்டும் என்றார். அக்குழந்தைகள் பயிலும் ஆசிரியரிடம் சாதி சான்றிதழ் வேண்டும் என்று சொல்லுங்கள் என்று அனுப்பினேன். அக்குழந்தைகளின் ஆசிரியர் ரிஜிஸ்டர் கொடுத்தனுப்பினார். உடனே ரிஜிஸ்டர் உதவியுடன் அக்குழந்தைகள் வயது , சாதி , முகவரி ஆகியவற்றை கொண்டு அக்குழந்தைகள் எங்கள் பள்ளியில் பயில்கின்றனர் என்று சான்று தந்தேன்.

    ஐந்து நிமிடத்தில் சான்று பெற்ற அவர் மெதுவாக என் டேபிள் அருகில் வந்து , ”சார் எவ்வளவு பணம் தர வேண்டும்” என கேட்டார். இதற்கு எதுக்கு பணம் என ஆச்சரியமாக கேட்டேன். “ சார் பேப்பர் பேனா கொண்டு எழுதியுள்ளீர்கள்” என இழுத்தார். சிரித்தேன். மேலும் அவர் சொன்னார், “ இதுக்கு முன்னால் படித்த பள்ளியில் எது எழுதி வாங்கினாலும் பணம் தர வேண்டும் “ என்றார். எதுக் கொடுத்தாலும் பணமா , ஆச்சரியமாக இருக்கு என்றேன்.   மாணவருக்கு அப்பள்ளியில் படிக்கிறார் என்பதற்கு பணமா? எவ்வளவு கொடுமை.  அதை விட அவர் சொன்ன விசயம் இன்னும் கோபப்படுத்துகிறது!

    அரசு வழங்கும் இலவச நோட்டு, புத்தகங்களுக்கு, இலவச சீருடைகளுக்கு மாணவர்கள் பணம் கொடுக்க வேண்டுமாம். இலவச செப்பல் தரும் போது பணம் கொடுத்து தான் வாங்க வேண்டுமாம். கேட்டால் அதை கொண்டு வர அரசு என்ன பணமா வழங்குகிறது ! என எதிர் கேள்வி கேட்கிறார்களாம். மீறி பிரச்சனை செய்தால் , அடுத்த முறை சீருடை வழங்கும் போது உங்க வண்டியில் அள்ளி போட்டு பள்ளிக்கு வந்து சேர்த்து தாருங்கள் என்கின்றதாம் நிர்வாகம்!

     கொஞ்சம் இங்கு நிறுத்தி ஒரு தன்னிலை விளக்கம் தந்து இக்கட்டுரையை முடிக்கலாம் . எங்கள் பள்ளி கமிட்டி நிர்வாகத்தால் இயங்க கூடியது. மாணவர்களிடம் சேர்க்கை கட்டணம் கூட வாங்குவது இல்லை. எங்கள் பள்ளி இன்று வரை மாணவர் சேர்க்கைக்கு மட்டுமின்றி, அது இது என எதையும் காரணம் சொல்லி கட்டணம் பெறுவதில்லை.

     தங்கள் பெயருக்கு முன் கல்வி தந்தை, கல்வி கடவுள் என பெயர் போடும் முன் இம்மாதிரி இலவசங்களுக்கு பணம் வாங்கும் பள்ளிகளின் தந்தைகள் தங்களின் தந்தை பட்டத்தை இழக்க தயாரா? தயவு செய்து அரசு தரும் இலவசங்களுக்கு பணம் வாங்குவது என்பது ஏழை குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம் என்பேன் என்று நினைத்திருந்தால் தவறு ! அது அவர்களின் மலங்களை விற்று காசு சம்பாதிப்பதற்கு சமம்!

    பணம் சம்பாதிப்பதற்கு வேறு எத்தனையோ வழிகள் இருகின்றன. நவீனமயமாக்கலில் அரசு   ( மத்திய அரசு- சிபிஎஸ்சி புதிய பள்ளிகள் திறக்க வழி வகுத்துள்ளது) அனுமதி வழங்கியுள்ளப்படி சிபிஎஸ்சி பள்ளியாகவோ அல்லது மெட்ரிக் பள்ளியாகவோ மாற்றி , காசு வாங்கும் பள்ளியாகவே மாற்றிக் கொள்ளலாம்! கல்வி தந்தையர்கள் சிந்திப்பார்களா!

மதுரை சரவணன்.   

6 comments:

'பரிவை' சே.குமார் said...

நிறையப் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் போல் தான் இயங்குகின்றன சகோதரரே... என் மகள் படிக்கும் பள்ளியில் எந்த விழா என்றாலும் குழந்தைகளிடம் தலைக்கு 100 ரூபாய் வாங்கி சிறப்பு விருந்தினர் முன்பு மதியம் சாப்பாடு போட்டும் விழா மேடையை அலங்கரித்தும் அவர்கள் பேர் வாங்கிக் கொள்கிறார்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

சில பள்ளிகளில் இவ்வாறுதான் நடைபெறுகிறது
மாற்றம்வேண்டும்
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

மாற்றம் வருமா...?

வரும்... ஆனா வராது...!

வர வேண்டும்...!

Unknown said...

உலகமயமாக்கல் கொள்கையால் கல்வியும் வணிக மயமாகி விட்டதே !
த ம 4

G.M Balasubramaniam said...

பணம் ஏதும் வாங்காத பள்ளியின் பொறுப்பில் இருப்பவர் நீங்கள் என்று பெருமைப் படுகிறேன் வாழ்த்துக்கள்.

S said...

ஐயா ஜி எம் பாலசுப்பிரமணியம் கூறியது போல்
நீங்கள் எல்ல பெருமைகளுக்கும் உறியவர்.
உங்கள் வளர்ப்பில் பிள்ளைகள்
வருங்கால சமுதயத்தின் உறுதி தூண்களாய்
இறுப்பார்கள் உறுதி.

Post a Comment