Wednesday, May 14, 2014

கோடையில் வீட்டிலிருந்தப்படி விளையாடுவது எப்படி?



கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. வெளியில் செல்லவே பயப்படுகின்றனர் குட்டீஸ். கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். வெயிலில் இருந்து தப்பித்து நிழலில் விளையாடுவது எப்படி? வீட்டினுள்ளே விளையாடுவது எப்படி? வீட்டின் முன் உள்ள மர நிழலில் ஆனந்தமாக கொண்டாடுவது எப்படி? இதோ சில டிப்ஸ். உங்கள் ஏரியாவில் உள்ள குழந்தைகளை திரட்டுங்கள். தேவை ஒரு புட் பால், விசில், கோல மாவு, கலர் காகிதங்கள், அட்டைகள், செங்கல் கற்கள் . சுமார் 6 அல்லது 10க்கு மேற்பட்ட குழந்தைகள்.
1.   குழந்தைகள் வட்டமாக அமரவும். உங்களில் ஒருவரை தலைவராக கொள்ளவும். தலைவர் வட்டத்தின் மையத்தில் இருந்து காலை 6 மணி என்றால் அனைவரும் தூங்கி எழுந்திருப்பது போல கண்களை கசக்கி விழிக்க வேண்டும். காலை 8 மணி என்று சொன்னால் புத்தகப்பையை தூக்கி கொண்டு பள்ளிக்கு செல்வது போல் பாவனை செய்ய வேண்டும். 12 மணி என்றால் அனைவரும் சாப்பிடுவது போல் நடிக்க வேண்டும். மாலை 4 மணி என்றால் விளையாடுவது போலவும், மாலை 6 மணி என்றால் படிப்பது போலவும், இரவு 9 மணி என்றால் தூங்குவது போலவும் பாவனை செய்ய வேண்டும்.  ( இதே போல வேறு வேறு கான்சப்ட்டுகளை உருவாக்கி விளையாடலாம். உம்:- திருவிழா நிகழ்வுகளை வைத்து விளையாடலாம். சாமி என்று தலைவர் சொல்லும் போது அனைவரும் சாமி கும்பிடுவது போல நடிக்க வேண்டும். சவ்வு மிட்டாய் என்றால் வாய் திறந்து மிட்டாய் சாப்பிடுவது போல நடிக்க வேண்டும். விருந்து என்றால் இலைப் போட்டு சாப்பிடுவது போல பாவனை செய்ய வேண்டும். பெரியவர்கள் அல்லது விருந்தினர் என்றால் வருக வருக என வரவேற்பது போல பாவனை செய்ய வேண்டும். சித்திரை திருவிழா என்றால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போல பாவனை செய்ய வேண்டும். இப்படி விளையாட்டை தொடரலாம்.)
2.   குழந்தைகள் வட்டமாக அமரவும். அடுத்தடுத்து உள்ள இரண்டு குழந்தைகளை எதிர் எதிர் திசைகளில் ஓட வேண்டும். இருவரும் சந்திக்கும் போது குட்மார்னிங் சுரேஸ் குட்மார்னிங் கீதா என சொல்லி, மீண்டும் எதிர் திசையில் அவரவர் இடத்தில் அமர வேண்டும். ( மாலை விளையாடும் போது குட் ஈவினிங் என சொல்லலாம்) ( எதிர் சொற்கள் கூறி விளையாடலாம். இரவு என ஒருவர் கூற அடுத்தவர்  பகல் என கூற வேண்டும் )
3.   குழந்தைகள் வரிசையாக கை கோர்த்து நிற்க வேண்டும். வட்டத்தினுள் ஒருவரை நிற்க செய்ய வேண்டும். அவர் புலி ஆவார். வட்டத்தின் வெளியில் ஒருவர் நிற்க செய்ய வேண்டும். அவர் ஆடு ஆவார். புலியாக இருப்பவர் ஆட்டை சாப்பிட, ”சங்கிலி புங்கிலி கதவ திற” என சொல்ல, அனைவரும் கைகளை கோர்த்து வட்டமாக நகர்ந்தவாரே “ கதவை திறக்க மாட்டோம் “ என்று கூறவேண்டும். “பசிக்குது ஆட்டை பார்த்தீங்களா? “  என நடுவில் உள்ள புலி வினவ, “பார்த்தோமே ! பார்த்தோமே! தோட்டத்திலே பார்த்தோமே ! “ என சொல்லியவேரே அனைவரும் வட்டத்தில் நகர்வார்கள். புலி அதற்கு, “சாப்பிட வரலாமா !வரலாமா! “என கேட்க, அனைவரும் “வரக்கூடாது ! வரக்கூடாது ! “ என்பார்கள். அவர்கள் கைகளை உடைத்துக்கொண்டு இப்போது புலி வெளியில் உள்ள ஆட்டை பிடிக்க ஓடா வேண்டும். ஆடு தப்பிக்க வேறு பாதை தேட வேண்டும். பிடிபடும் வரை விளையாட்டை தொடர வேண்டும்.
4.   குழந்தைகளை இருபிரிவாக பிரிக்க வேண்டும். சற்று தொலைவில் நிறுத்தவும். இரு வரிசைக்கு எதிராக கோல மாவு கொண்டு 10 வட்டங்கள் வரையவும். வரிசையில் முதலில் இருப்பவர் 10 என சொன்னால், அருகில் உள்ள வரிசைக்காரர் 10 மடங்குகளாக சொல்லி வட்டங்களை தாவ வேண்டும். பின் அவர் 100 என்றால் அடுத்துள்ளவர் 100 ,200, 300 என சொல்லி வட்டங்களை தாவ வேண்டும். இப்படி அனைவரும் வட்டங்களை தாவி தாவி விளையாடலாம். தவறு எனில் அடுத்தவர் அதே எண்ணின் மடங்கை சொல்லி தாவ வேண்டும். ( முதல் வகுப்பு குட்டீஸ் 2, 3, 4,5 ன் மடங்குகளை சொல்லி விளையாடலாம்)
5.   பூனை எலி விளையாட்டு வித்தியாசமாய். குழந்தைகள் இரு வரிசையில் நிற்க வேண்டும். முதல் வரிசையின் ஆரம்பத்தில் சற்று தள்ளி பூனையாக ஒருவரை நிறுத்தவும். இரண்டாவது வரிசையின் முடிவில் எலியாக ஒருவரை நிறுத்தவும். மாணவர்களில் ஒருவரை தலைவராக  தேர்ந்தெடுத்து அவரிடம் விசில் ஒன்றை தரவும். நேர் வரிசையாக இருக்கும் போது நேராக ஓடி தான் பூனை எலியை பிடிக்க வேண்டும் குறுக்கே செல்ல கூடாது. இப்படி ஓடும் போது விசில் அடித்தால் எதிர் எதிராக நின்றுள்ள மாணவர்கள் தங்கள் கைகளை கோர்த்து  கொள்ள வேண்டும். இப்போது நேராக ஓட முடியாது. குறுக்காக தான் ஓட முடியும். இப்படி குறுக்காக ஓடும் போது விசில் ஊதினால், அனைவரும் நேராக நிற்க வேண்டும். இப்போது நெடுக்காக தான் ஓட முடியும். பூனை எலியை பிடித்துவிட்டால் வேறு இருவர் இந்த விளையாட்டை தொடரலாம்.
6.   குழந்தைகள் வட்டமாக அமரவும். தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்வில் காணும் அன்றாட நிகழ்வுகள் குறித்து அவர் சைகையில் செய்து காட்ட வேண்டும். வட்டத்தில் உள்ளவர்கள் அது குறிக்கும் ஓலி என்ன என்பதை கூற வேண்டும். கார் செல்வது போல காட்டினால்  பீப் பீப் என ஒலி எழுப்ப வேண்டும். உம் கைதட்டுதல் , தூங்குதல் (குறட்டை சத்தம்) , காக்கை பறப்பது ( கா, கா )
7.   வெவ்வேறு வண்ணத்தாள்கள் ஒட்டப்பட்ட அட்டைகள். பலருக்கு ஓரே நிறமாக கூட இருக்கலாம். அதே நிறங்கள் உள்ள தாள்களை குழு தலைவர் வைத்திருப்பார். இப்போது அனைவரும் ஓட வேண்டும். குழுத்தலைவர் பின்னால் திரும்பி ஒரு நிறத்தை எடுத்து காட்டுவார். அந்த நிற அட்டை வைத்திருப்பவர்கள் .அனைவரும் வட்டத்தினுள் வர வேண்டும். இப்போது குழுத்தலைவர் என்ன செய்ய சொல்கிறரோ அதை செய்து காட்ட வேண்டும். உ.ம் டான்ஸ் ஆட சொல்லலாம். நரி மாதிரி ஊளையிட சொல்லலாம். அனைவரும் மாறி மாறி தலைவராக இருந்து விளையாட்டை விளையாடலாம். கலர் காகிதம் போன்று  சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் போன்ற வடிவங்கள்  ஒட்டிய அட்டையை உருவாக்கியும் இந்த விளையாட்டை தொடரலாம்.
8.   சதுரம் , செவ்வகம், முக்கோணம்,  வட்டம் போன்ற உருவங்களை கோல மாவு கொண்டு தரையில் வரையவும். அதனை சுற்றி பெரிய வட்டம் வரையவும். குழு தலைவராக ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்ளவும். அனைவரும் வட்டத்தில் ஓடவும். விசில் ஊதியவுடன் , அவரவருக்கு பிடித்தமான வடிவங்களில் நிற்கலாம். தலைவர் பின்னால் திரும்பி தான் வைத்திருக்கும் அட்டையில் இருந்து ஒன்றை எடுத்து காட்ட எந்த வடிவம் உள்ளதோ அதில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும். பின் வட்டத்தில் ஓடா விசில் ஊத விளையாட்டு ஒருவர் மட்டும் வெற்றி பெற விளையாட்டு தொடரும்.
9.   வட்டத்தில் அனைவரும் அமர வேண்டும். ஒருவர் மட்டும் ஓட வேண்டும். ஓடுபவர் யாரை தட்டுகிறாரே அவர் எழுந்து தட்டியவரை பிடிக்க வேண்டும். அவர் இடம் வரும் வரை சுற்றி வர வேண்டும் . பிடிக்க வில்லை என்றால் அமர்ந்து கொள்ள வேண்டும். பிடித்து விட்டால், அவருக்கு கை தட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
10.  சிறிய வட்டம் கோல மாவு கொண்டு வரையவும். அதன் அடுத்து நல்ல இடைவெளிவிட்டு வெளி வட்டம் வரையவும். குழந்தைகள் வெளிவட்டத்தில் ஓடவும். குழந்தைகள் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான எண்ணிக்கையில் கற்களை உள் வட்டத்தில் வைக்கவும். ஒருவர் விசில் ஊதவும். உடனே அனைவரும் உள் வட்டத்திலுள்ள கற்களில் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும். கற்கள் எடுக்காதவர் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். ஒவ்வொரு முறை ஓடும் போதும் ஒரு கல்லை எடுத்து விடவும். ஒருவர் மட்டும் வெற்றி பெறும் வரை விளையாடவும்.
11.  குழந்தைகள் இரு பிரிவினராக பிரிந்து நிற்க செய்யவும். இப்போது எதிரே 50 மீ தள்ளி கோலமாவு கொண்டு மூன்று வட்டம் வரையவும். அதில் முதல் கட்டத்தில் மூன்று கற்களை வைக்கவும். இப்போது முதலில் நிற்பவர் விரைந்து சென்று அந்த கற்களை தனித்தனி வட்டத்தில் வைத்து விட்டு வரவேண்டும்.அதற்கு அடுத்து உள்ளவர் விரைவாக ஓடி சென்று அந்த கற்களை எடுத்து முதல் கட்டத்தில் வைக்க வேண்டும். அதற்கு அடுத்தவர் ஓடி சென்று பிரித்து வைத்து ஆட்டத்தை தொடர வேண்டும். எந்த குழு முதலில் முடிக்கிறதோ , அவர்கள் வெற்றி பெற்றவராவார்.
க. சரவணன்,
தலைமையாசிரியர்
டாக்டர் டி . திருஞானம் துவக்கப் பள்ளி,
கீழச்சந்தைப்பேட்டை, மதுரை 9

9344124572

Tuesday, May 13, 2014

இரண்டு உயிர்தானே என்றில்லை...அரசே கவனம் கொள்ள வேண்டும்.

விருத்தாசலம் அருகே உயர்கல்வி பயில குடும்ப சூழல் இடம் தாராததால் இரண்டு சகோதரிகள் உயிர்களை மாய்த்து கொண்டனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இருவரும் முறையே பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்கள். அரசே! தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் அரசே! இது போன்ற தவறுகளுக்கு நம் அணுகுமுறையிலும், கல்வி முறையிலும் ஏதோ குறை இருக்கிறது என்பதை எப்போது ஒத்துக்கொள்வீர்கள்.
இரண்டு உயிர்கள். இரண்டு தானே என்பதில்லை. வருடம் முழுவதும் இது போன்று எத்தனையோ உயிர்கள்! தேர்ச்சி சதவீதம் அதிகரிக்காத தலைமையாசிரியர்களையும் , பாட ஆசிரியர்களையும் தண்டிக்கும் அரசு. இனி இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் தடுக்கலாமே..!
உயர்கல்வி என்பது மருத்துவமும், இன்ஞினியரிங் படிப்பும் என்று மாணவர்களுக்கு கற்று தரும் போதனை ஒழிக்கப்பட வேண்டும். பிஏ தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் எத்தனைப்பேர் முன்னேறியுள்ளார்கள். பத்தாம் வகுப்பில் நான்கு அட்டை வைத்து , பின்பு தேறி, ஆசிரியர்களாக வேலைப் பெற்று, சிறந்த ஆசிரியர்களாக திகழ்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் கற்று தர வேண்டும். ஏன் ஆசிரியர்கள் கற்று தர தவறினார்கள். கதை சொல்லியே பல நாட்கள் ஆகிறது. பின்பு எப்படி மாணவர்களிடம் இது போன்று உரையாட முடியும்!
அரசு தேர்ச்சி சதவீதம் எனும் சாட்டையெடுத்து சுழற்றும் போது அதற்கு தகுந்து மாதிரி ஆடிவிட நேரிடுகிறது. அந்த அழுத்தம் தலைமையாசிரியரையும் , அவர் மூலம் பிற பாட ஆசிரியர்களையும் தொற்றி கொள்ள , மாணவர்களும் மதிப்பெண் நோக்கி முன் நிறுத்தி அழுத்தப்படுகிறார்கள். பன்முக திறன் பயிற்சிக்கு நேரம் கிடைப்பதில்லை. மாணவர்களுடன் எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருக்கும் மாணவன். தேர்வு ரிசல்ட் வெளியிடும் போதும் இறுக்கமான தோல்வி மனநிலை கொள்கின்றான். தேர்ச்சிக்கு பின் படிக்க இயலாது அதுவும் உயர்கல்வி என நினைக்கு இஞ்னியரிங், மருத்துவம் கிடைக்காது எனும் போது தனது உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
அரசு இந்நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு பன்முக திறன் வளர்ப்பு பயிற்சியினை மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்க வேண்டும். நம் எதிர்கால பயிர்கள் வாடுவதையும் தன்னைத்தானே மாய்த்து கொள்வதையும் தடுக்க வேண்டும். தேர்ச்சியில் கொடுக்கும் அதே அளவு அழுத்தத்தை பன்முகதிறன் வளர்க்க அரசு கொடுக்கும் என்று எதிர்ப்பார்ப்போம்!
Like ·  · 

கோடை விடுமுறையை சந்தோசமாக வழிமுறைகள்

தேர்வு முடிந்தது. சந்தோசம் உச்சி முதல் பாதம் வரை பரவ , மனது பட்டாம் பூச்சியாக சிறகு விரித்து பறக்க வீதியெங்கும் சிறுவர் சிறுமியர் பந்தும் கையுமாக திரிவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு மாத கால தீவிரமான  படிப்பு , மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பதால் ரெம்பவே ரிலாக்ஸாக இருக்க நினைக்கிறார்கள் . தேர்வுக்கு பின் ஜாலியாக சுற்றி திரிய ஆரம்பித்திருக்கிறார்கள். பார்க்,பீச், சினிமா தியேட்டர் , மால் என காணும் இடமெல்லாம் நண்பர்கள் சகிதம் அரட்டை, மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள்.
   பெற்றோர்கள் தங்களின் மனம் முழுக்க கனவுகளை நிரப்பி வைத்து தங்கள் மகனின் எதிர்காலம் குறித்து சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.  மாணவர்களை மீண்டும் ஒரு அழுத்தத்திற்கு உட்படுத்த தயாராகி கொண்டிருக்கிறார்கள். மாணவனின் கோடைவிடுமுறை என்பது வசந்தமாகவும் நாம் எதிர்பார்க்கும் வாய்ப்புகளை கொடுப்பதாகவும் இருக்க சில யோசனைகள்!  
      இஞ்சினியரிங்க், மெடிக்கல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுத பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றனர் என்பதோடு இந்த கோடை பயனுள்ளதாக அமைந்துவிடுமா! போட்டிகள் நிரம்பிய உலகில் படிப்பு மட்டுமே சாதனைகளை கொடுத்துவிடுமா? சாதனைகள் தனிப்பட்ட திறன்களால் சாத்தியமாகும் என்பதை நினைவில் கொண்டு , நம் மாணவர்களுக்கு பிடித்தமான  விசயங்களுக்கு முன்னுரிமை தரலாமே!
விளையாட அனுமதியுங்கள். அதற்கான கால அளவை வரையறுத்து கொடுங்கள். மைதானத்தை பயன்படுத்தும் விளையாட்டுகளை அதிகாலை விளையாட பழக்குங்கள் அல்லது பாரதி வழியில் மாலை முழுவதும் விளையாட அனுமதியுங்கள். கோடை காலத்தினாலும் ,கோடைவெப்பினால் ஏற்படும் நோய்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம்.  நீர் அதிகமாக பருக சொல்லுங்கள். இளநீர் வாங்கி தாருங்கள். கல்லூரி செல்ல இருக்கும் மாணவனை விளையாட அனுமதிப்பதா? என வினா எழுப்பாதீர்கள். விளையாட்டு உங்கள் குழந்தைகளின் தலைமைபண்பை வளர்க்கும். கிரிக்கெட் விளையாட செல்லும் ஒருவன் வருங்காலத்தில் பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் திறனை வளர்த்துக் கொள்கின்றான். தட்டி கொடுக்கவும், பாராட்டவும், உற்சாகப்படுத்தவும், மன்னிக்கவும் விளையாட்டு நம் குழந்தைகளுக்கு கற்று தருகிறது.அனைவருடனும் இணக்கமாக செல்லும் பண்பையும் இணைந்து செயல்படும் திறனையும் அதிகரிக்கிறது. இப்பண்பு நம் குழந்தைகளுக்கு  கல்லூரியை பயம் இன்றி சந்திக்க உதவும்.  கோடை விடுமுறையில் விளையாட்டில் ஏற்படும் ஆர்வம் கல்லூரியில் அவனை அவனுக்கு பிடித்தமான விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாட உதவும். அது மட்டுமல்ல அவனின் உடல்தகுதியையும் வளர்க்கும். கோடை வெயிலுக்கு நீச்சல் பயிற்சி மனதிற்கும் உடலுக்கும் தெம்பை கொடுப்பதாக அமையும்.

கல்லூரியில் ராக்கிங்க் இல்லை என்று அரசும் கல்லூரி நிர்வாகவும் உறுதியளித்தாலும், நம் குழந்தைகள் இன்னும் தயக்கத்துடனே கல்லூரிக்கு செல்கின்றனர். இந்த  தயக்கம் அவர்களை கல்லூரியில் இருந்து கூட வெளியேற்றிவிடும். தயக்கம் நம் குழந்தைகளுக்கு அறிவு (அதிக மதிப்பெண்கள் ) இருந்தும் கல்லூரியில் நுழைய தடையை உருவாக்கலாம். இது பெற்றோர்களின் கனவை தகர்த்தி தேவையில்லா பிரச்சனைகளை உருவாக்கலாம். தயக்கத்தை போக்கி துணிந்து நிற்க, சீனியர் மாணவர்களுடன் இணக்கமாக போவதற்கு மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகளுக்கு அனுப்புங்கள். ஆங்கில வழிக்கல்வி பயின்ற மாணவர்களானாலும் அவர்களுக்கு கமினிகேட்டிவ் இங்கிலீஸ் வகுப்புகளில் பங்கெடுக்க செய்து குழந்தைகளின் பேச்சுத்திறனை செம்மைப்படுத்தி கொள்ளலாம். கல்லூரி பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் கோடை விடுமுறையில் ஆங்கில செய்தி தாள்களை வாசிக்க பழகுங்கள். புதிய சொற்களுக்கு பொருள் தேடி அறிந்து, அச்சொற்களை வாக்கியத்தில் பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளை நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேச அனுமதியுங்கள். குழந்தைகளுக்கான ஆங்கில மாத இதழ்களை வாசிக்க பழகுங்கள். அதில் இடம் பெற்றுள்ள ஆக்டிவிட்டிகளை செய்ய உதவுங்கள். செய்தி தாள்கள் நடப்பு விசயங்களை அறிய உதவும். போட்டி தேர்வுகளில் சர்வதேச, தேசிய நடப்பு நிகழ்வுகள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உதவும்.

கோடை விடுமுறையில் வெயிலின் கொடுமையிலிருந்து காத்துக்கொள்ள உங்கள் குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த கற்றுக்கொடுங்கள். தமிழ் புத்தகங்கள் தமிழ் இலக்கண நூல்கள் படிக்க செய்யுங்கள்.  டிஎன்பிசி குரூப் 2 தேர்வுகள் முதல் பொது தமிழ் /ஆங்கிலம் சேர்க்கப்படுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். நூல் வாசிப்பு குழந்தைகளுக்கு வேறுவிதமான பார்வையையும், பகுக்கும் திறனையும், அவனுள் ஒரு தேடுதலையும் கொடுக்கும். மேல் படிப்புகளுக்கு செல்லும் போது நூல்கள் உதவிக்கொண்டு விசயங்களை அறிந்து, தாம் புத்தகம் வாயிலாக கற்றவற்றை , தன் முன் அறிவோடு ஒப்பிட்டு , ஆய்வு  மேற்கொள்ள உதவும்.  அறிவை விரிவு படுத்தி கொள்ள உதவியாக புத்தகங்கள் இருக்கின்றன. ஆகவே நம் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இது மௌனமாக வாசிக்கும் அனுபவத்தை கொடுக்கும்.  வாசிக்க செய்யுங்கள் வாழ்வை நேசிக்க செய்யுங்கள்.
  உங்கள் குழந்தைகளை பன்முக திறன் கொண்டவர்களாக உருவாக்க பழக்குங்கள். அதை விட முக்கியம் அவர்களுக்கு எதில் நாட்டம் அதிகம்  என்பதை அறிந்து அதற்கு தகுந்த வண்ணம் மேற்படிப்பை தேர்ந்தெடுக்க உதவுங்கள். உங்களின் குழந்தைகளின் விருப்பத்திற்கு உறுதுணையாக இருங்கள்.

இணையமற்ற உலகம் காண்பது அரிது. கையடக்க செல்பேசியில் வேண்டிய விசயத்தை நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அறிந்து கொள்ளலாம். கல்லூரியில் பிற மாணவர்களுக்கு இணையாக கணிணியை இயக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மருத்துவம் என எல்லா துறைகளும் கணிணி மையமாக்கப்பட்டுள்ள நிலையில் நாம் கணிணியை கையாள தெரியவில்லை என்றால் பின்தங்கி விட நேரிடும். அதில் இருந்து மீள்வது கடினம். பிற மாணவர்களுக்கு இணையாக செயல்பட , கல்லூரி படிப்பு ஆர்வமுடன் சென்றிட அவசியம் கணிணி பயிற்சி மேற்கொள்ளவும். இதுவரை கணிணியை தொட்டிருக்கவில்லை என்றாலும் கணிணிபயிற்சி கோடை விடுமுறையில் மேற்கொள்ளலாம். கணிணி இயங்கு தளம், எம்.எஸ்.ஆப்பீஸ், கணிணி மொழிகள் மற்றும் போட்டோ சாப், கோரல் டிரா போன்ற கணினி படிப்புகளை கற்றிருந்தால் சிறப்பு. இது எந்த படிப்பு படித்தாலும் கணிணியினால் ஏற்படும் தடையை நீக்கும். விரும்பிய படிப்பை விரும்பியபடி  படிக்க கணிணி அறிவு உதவும்.  

மாணவர்களின் பாசிடிவ் எண்ணங்கள் வளர்வதற்கு தன்னம்பிக்கை கொடுங்கள் . ஆதரவாக பேசுங்கள். உங்கள் குழந்தைகள் விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். மனதை புத்துணர்வோடு வைத்திருக்க  நடன வகுப்பிலோ இல்லை இசை வகுப்பிலோ சேர்த்துவிடுங்கள். அது அவனை சாந்தப்படுத்தும். அவனின் மூளைக்கு ஏற்பட்டிருக்கும் சோர்வை போக்கும்.
நாள் முழுவதும் பயிற்சி பயிற்சி என்றிருந்தால் அயற்சி ஏற்படுமே ! ஐந்து நாட்கள் அல்லது ஒருவாரம் மாறுதலாக மனதிற்கு உற்சாக மூட்டும் வண்ணமாக கோடை வாழ் தலங்கள் அல்லது பிடித்த இடங்களுக்கு வசதிக்கு ஏற்ப அழைத்து செல்லுங்கள். இவர்கள் புதிய சூழலில் நிறைய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. புதிய நபர்களுடன் எளிதில் பேசுவது எப்படி என்பதை வளர்க்கிறது. புதிய சூழலில் தன்னை பொருத்தி கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்கின்றான். ஒருவாரம் வீட்டை மறந்து இருத்தல் என்பது மேல்படிப்பிற்கு செல்லும் மாணவனை புதிய சூழலுடன் தன்னை பொருத்திக் கொள்வது எப்படி என்பதை கற்றுக் கொள்கின்றான். களப்பயணம் அனுபவ அறிவை ஏற்படுத்தி, கல்லூரியில் நுழையும் போது புதிய நண்பர்களுடன் தன்னை பொருத்தி கொள்ள உதவுகிறது.

குழந்தைகளுடன் தினமும் ஒருமணி நேரமாவது பேசுங்கள். அவனுக்கு பிடித்த விசயங்களை பேசுங்கள். அதன் வாயிலாக அவனுக்குபிடித்தமான விசயங்களை அறிந்து கொள்ளலாம். எந்த படிப்பின் மீது நாட்டம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றாற்போல் படிப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மருத்துவம், பொறியியல் மட்டுமே மேல் படிப்பு அல்ல என்பதை அறிய வாய்ப்பு கொடுங்கள். நீங்களும் அதை உணர்ந்து செயல்படுங்கள்.  

உணவு பழக்க முறையில் குழந்தைகளின் மீது அக்கறை ஏற்படுத்தி கொள்ளுங்கள். மா, கொய்யா , வாழைப்பழங்களை தினமும் கொடுக்கவும். காய்கறிகள் மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை ஒதுக்குவதை அனுமதிக்காமல், அவன் உண்ணும் காய்களை கொடுத்து, மெல்ல எல்லா காய்கறிகளையும் உண்பதற்கு பழக்கி கொடுங்கள். உங்கள் குழந்தை ஹாஸ்டலில் தங்கி படித்தாலும் காய்கறிகளை ஒதுக்கி உண்ணாமல் பாதுகாத்து கொள்ளும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை உணர்த்துங்கள்.  

குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் உறங்குவதற்கு அல்லது கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை நேரம் ஒதுக்கி கொடுங்கள். மனதை ஓய்வாக வைத்திருக்க வாய்ப்பு தாருங்கள். அதிகாலை எழுந்திருக்கும் பழக்கத்தையும், விரைவில் உறங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி தாருங்கள்.

மேற்கண்டு சொல்லப்பட்டுள்ள விசயங்கள் கல்லூரி செல்ல இருப்பவர்களுக்கு மட்டுமல்ல விடுமுறையில் உள்ள எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்தும். விடுமுறையை பயனுள்ளதாகவும் சந்தோசமாகவும் கழிக்க உதவும்.