Tuesday, September 3, 2013

தலைவா ....ஒரு கலாச்சார சீரழிவு...!

     எங்கே இருக்கிறோம் நாம் ! பல்லாயிரம் ஆண்டுகள் குடும்பங்களாக வாழ்ந்த  நம் வாழ்க்கை, வாழ்வை இயக்கிய சமயம் , அதனை தொடர்ந்து நாம் பேசிய மொழி ,  மொழி வாயிலாக நாம் பரிமாறிய மரபு , அதன் தொடர்ச்சியால் உருவான பண்பாடு என அனைத்தையும் நாம் மறந்து வாழ்கிறோம். நவீன உலக உருவாக்கத்தில் நாம் நாத்திகனாக மாறி , கடவுளை சபித்து, அல்லது அறிவியலில் பெயரால் மதத்தை மறுத்து பேசி , அடையாளத்தை மாற்றி , அழிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நான் மதவாதத்தை ஆதரிப்பவன் என்று நீங்கள் நம்பினால் , அந்த புள்ளியில் இருந்து நான் விலகி சென்று விட நேரிடும்.

    இந்த மண்ணின் வாசனையை நாம் மறந்து திரிகிறோம். நாடு கடந்து பொருள் சேர்க்கிறோம். இருப்பினும் இருப்பை விட்டு விட முடியாமல் தவிக்கிறோம். இந்த தவிப்பிற்கும் பிரிதலுக்கும் நடுவில் நம் மண்ணின் மரபுகள் இன்று புதைய தொடங்கியுள்ளன. பல ஊர் திருவிழாக்கள் நம் மரபின் வெளிப்பாடாக, பண்பாட்டின் எச்சமாக இருந்தன. அவைகள் இன்று அருகிவிட்டன். சுருங்கிய குறிகள் ,  கலவிக்கு ஏற்றதல்ல. தனிக்குடும்பங்களாய் சுருங்கி விட்ட பின் , திருவிழாக்கள் அதனைத் தொடர்ந்த கொண்டாட்டங்கள் குறைந்து விட்டன. நாம் நம் மரபுகளையும் , பண்புகளையும் மறந்து, காசுக்காக உறவுகளை துறந்து வாழ்கிறோம். நம் ஊர் தெருக்களில் திரிந்தாலும் களைப்புடன் ஒடுங்கிப்போகிறோம். இயந்திர வாழ்க்கையில் நாம் நம் அடையாளத்தை துரந்து, நம் பழமையை இழந்து , எதையோ தேடுவதாக கருதி நம்மை நாமே புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

       இன்று அகராதியில் புதிய வார்த்தைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. தமிழில் தெருக்களில் சிறார்கள் பேசும் மொழியை ஆய்வு செய்து பாருங்கள் . அத்தனையும் அபத்தங்கள். மொழிக்கான களங்கம். அதற்கான அர்த்தத்தை தேடி சென்றால் நமக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது. இதனை எந்த வகை நவீனத்தில் சேர்ப்பது. தயவு செய்து உங்கள் குடும்ப சிறுவர்கள் நூற்றில் எத்தனை பேர் நூறு வார்த்தைகளில் எத்தனையான இவ்வகை அபத்த வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று ஆய்வு செய்யுங்கள் . அப்போது தான் என் ஆதங்கம் புரிய வரும்.

      “அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுத பூஜை போடதடா” போன்ற இரட்டை அர்த்த படங்கள் நமக்கு எந்த வகையான மொழிச்சார்ந்த அறிவைத் தேடித்தரும்? கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கும்? இப்படிப்பட்ட அபத்த வசனங்கள் நிறைந்த படங்கள் வெளிவரவில்லையே என உயிரை மாய்க்கும் இளசுகளை என்ன வென்று சொல்வது!  அதை விட அதற்கு அப்படத்தின் கதா நாயகன் எதுவும் வருத்தம் தெரிவிக்க வில்லையே என குரல் கொடுக்கும் கூட்டம்  தனி. நாம் எந்த பாதையை தேர்ந்தெடுத்து வாழ்கிறோம். புரியவில்லை. ஆனால், இச்செயல் குறித்து அப்படத்தின் கதாநயகனின் மொளனம் எனக்கு பிடித்திருக்கிறது. இவ்விசயத்தில் அப்படித்தான் நடக்க வேண்டும் . அவரின் எந்த ஆதங்கமும் மற்றவனுக்கு தூண்டுகோலாக இருந்து விடக்கூடாது. சபாஷ் சொல்ல தோன்றுகிறது. படத்தில் தலைவனோ என்னவோ தெரியாது . நிஜ வாழ்வில் தலைவனாகி போனான்.

     கூட்டுக்குடும்ப வாழ்வை நாம் இழந்த நாளிலே , நம் மரபும் நம் தொப்புள் கொடிப்போல அறுந்து விட்டது. நாம் நம் பெற்றோர்களை முதியோர் இல்லங்களை தேடிப்பிடித்து அமர செய்த அன்றே,  பால் குடியை நிறுத்தியது போல நம் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி, சத்து இழந்த சமூக அமைப்பை உருவாக்கி விட்டோம். இதன் தொடர்ச்சி கலவரம், வன்முறை,  கொலை, கொள்ளை, கற்பழிப்பு என  நீள்கிறது.
(தோ.ப வுடன் நான்... பண்பாட்டு அசைவுகள் நூலுக்கு சொந்தக்காரர்)

     இன்று இரவு 9.30 வாக்கில் அய்யர் பங்களா சந்திப்பில் ஒரு எஸ்.ஐயை இருவர்  போதையில் போட்டு துவைத்து விட்டனர். பின் அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடி வந்து அதனை தடுத்து நிறுத்தினர். எதுவுமே செய்யாமல், அவர்களுடன் வந்த ஒரு மாணவனை பொது மக்கள் மடக்கி பிடிக்க, அவனை போலீஸ் (வந்து) மனிதாபிமானம் இன்றி நடுரோட்டில் பொது மக்கள் மத்தியில் துவைக்க தொடங்கினர். என்ன அபத்தம் ! அவன் சாட்சி மட்டுமே. அவனை வைத்து பிறரை பிடிக்கலாம். அதற்காக பிறருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக எல்லோரும் வந்து வதைப்பது எந்த நாகரீகமான செயல் புரிய வில்லை. பொது மக்களில் ஒருவர் என்ன பிரச்சனை என மாட்டியவனிடம் கேட்க , போலீஸ் காரர் சாதிய சொல்லி வஞ்சான் அதனால் சண்டை ஏற்பட்டதாம்.

      அட என்னத்த சொல்ல.. மனம் நொருங்கி வெளியேறினேன். இருப்பினும் என்னால் பிறரைப்போல இயங்க முடியவில்லை. யாரைச்சாடுவது. எதைச்சாடுவது. பண்புகளும் பாசங்களும் இன்றி தவிக்கும் தமிழ் சமூகத்தில் சாராய ஆறு ஓடி , சீரழிக்கிறது. எதையாவது மறக்க நாமும் சாக்கடையில் மூழ்குவோம் என்றால் , அந்த கன்றாவி குடி பழக்கமும் கிடையாது.

       வேலியே பயிரை மேய்கிறது. அதே நேரத்தில் பயிர்கள் சாதியப் பெயரால் வேலிகளையே தின்று வளர துடிப்பதையும் என்னால் சகிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் நம்மிடம் பெரியவர்கள் இல்லாமல் இருப்பது மட்டுமே காரணமாக தெரிகிறது.  நகர வாழ்வின் நெருக்கடியில் என்னை இழந்து கரைந்து வீடு அடைந்த போது தூக்கமின்றி , சமூகத்தின் அவலைத்தை சிந்தித்து நித்தம் மடிகிறேன் தூக்கம் இழந்து !இந்த புலம்பல் மூலம் பாரத்தை இறக்கி வைத்த பெரு அமைதியில் கண்களை மூடி சாகிறேன். விடியல் நல்லதை தரட்டும். நல்ல பண்பாட்டை உருவாக்கட்டும்.     

6 comments:

Yaathoramani.blogspot.com said...

அவலைத்தை சிந்தித்து நித்தம் மடிகிறேன் தூக்கம் இழந்து !இந்த புலம்பல் மூலம் பாரத்தை இறக்கி வைத்த பெரு அமைதியில் கண்களை மூடி சாகிறேன். விடியல் நல்லதை தரட்டும். நல்ல பண்பாட்டை உருவாக்கட்டும். //

சிந்திக்கத் துவங்கிவிட்டாலே
நாம் அதைச் சந்திக்கவும் தயாராகிவிட்டோம்
எனத் தானே பொருள்
உங்கள் பாரம் இப்போது என்னுள்ளும்...
மனம் தொட்ட பயனுள்ள பகிர்வுக்கும்
தொடரவும் நல் வாழ்த்துக்கள்


Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

ஸ்ரீராம். said...

எல்லோருக்குமே இருக்கும் ஏக்கம். யாராலும் இதை எளிதில் மாற்ற முடியாது என்பது துக்கம்.

திண்டுக்கல் தனபாலன் said...

பெரியவர்களாக நாம் ஏன் மாறக் கூடாது...?

கார்த்திக் சரவணன் said...

மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது....

kanam sankarapillai said...

எல்லோருக்குள்ளும் இந்த துக்கம் இருக்கத்தான் செய்கிறது ......

Post a Comment