Tuesday, September 10, 2013

நாய்களும் குரைப்பதை நிறுத்தி விட்டன!

 நாய்களும் குரைப்பதை நிறுத்தி விட்டன!
இப்போதெல்லாம் வானிலை அறிக்கை பொய்ப்பதில்லை. சென்னையிலிருந்து மதுரைக்கு மதியம் புறப்பட தயாரானேன். வானம் கருத்து போயிருந்தது. பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கலானேன். சோகத்தின் உச்ச நிலை அழுகை. வானமும் அழுகத் தொடங்கியது. இந்த அழுகை யாருக்காவும் இருக்கலாம். நான் நினைப்பது போல இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இறந்ததாக கூறப்படும் 1,300 சிரிய நாட்டின் , டமாஸ்கஸ் நகரத்து மக்களுக்கானதாக இருக்கலாம். நீங்கள் நினைப்பது போல ராகுலை முன்னிலைப்படுத்தும் அரசியலுக்காகவோ அல்லது  மோடியை முன்னிலைப்படுத்தும் பஜாவுக்கானதாகவோ இருக்கலாம். பிறர் அழுகையில் நாம் பங்கு கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அவரை சமாதனப்படுத்த முடியும் என்பதற்காக அல்ல. நாளை நமக்கும் ஆறுதல் தேவைப்படலாம்!

நான் இப்போது நனைவதற்கு தயாராக இல்லை. என்னுடைய யோசனையெல்லாம் , நாளை விநாயகர் சதுர்த்திக்கு பின் பள்ளி துவங்குகிறது. என்னைப் போல பெருநகரத்து விசேசங்களில் பங்கு கொள்ள சென்ற மிகச்சிறந்த இரு ஆசிரியர்களின் இரயில் முன்பதிவு செவ்வாய் தான் கிடைத்தது, ஆகவே விடுப்பு தெரிவித்து சென்றிருந்தனர். ஏற்கனவே பள்ளிக்கு விரைந்து வருகிறேன் என்று தலையில் காயம் ஏற்பட்டு ஒருவர் மருத்துவ விடுப்பு. மற்றொருவர் மகப்பேறு விடுப்பு. இன்னொருவர் புதுமனை புகுவிழா என சொல்லி விடுப்பு. நாளை குழந்தைகளுக்கு என்ன செய்வது . வகுப்புகளை எப்படி பிரித்து தருவது. யோசனையில் மதியம் பேருந்து பிடித்து காலை எப்படியும் பள்ளியை அடைந்து விட வேண்டும் என்று மழையில் விரைந்து வந்த பேருந்தில் ஏற ஓடினேன். முடியவில்லை. வயதின் முதிர்ச்சி இப்படி சகாசங்கள் செய்யும் போது தான் தெரிகிறது. மனதில் என்றும் இளமை ஊஞ்சல் ஆடுகிறது. மனுசியபுத்திரன் சொன்னது போல இளமையில் முதியவர்களுடனும், முதுமையில் தன்னை விட இளம் வயதினருடனும் பழகுவதால் இருக்கலாம். மனுசியபுத்திரன் 30 மதுரை விழாவில் அவரின் உணர்ச்சி வசமிக்க பேச்சை கேட்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர் விரும்புவதைப் போல இளைஞர்கள் சமூக அவலங்களை மீடியாவில் பேச வர வேண்டும். மீடியாக்களும் அழைக்க வேண்டும். மனுஷியபுத்திரனைப் போல பலரும் இளம் எழுத்தாளருக்கான களத்தை கொடுக்க வேண்டும்.
பெருங்களத்தூர் ஸ்டாப் வந்ததும் இறங்கி விடுங்கள் என மச்சினன் நினைவூட்டியதை மனதில் இறுக பற்றிக்கொண்டேன். நடத்துனர் என்னை பார்க்க, நான் சிரிக்க, பெருங்களத்தூர் வந்ததும் சொல்லவும் என நினைவுப்படுத்த, அது சிறுபிள்ளைத்தனமாகவே தெரிந்தது. தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது மனது குழந்தைத்தனமாகவே மாறிவிடுவது ஆச்சரியம் தான்.  

பெருங்களத்தூர் வந்தது. எதிர்புறம் உள்ள பேருந்து தளத்தை அடைய வேண்டும். ஒருவழியாக பெருநகரத்தின் வாகன நெருசலில் அகப்பட்டு, எதிர் திசையை கடக்க கால் மணி நேரம் பிடித்தது. திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணத்தை தொடர்தேன்.
வண்டி விழுப்புரம் அருகில் சாப்பிட நின்றது. கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணி பார்த்தேன். ஏடிஎம் வந்ததிலிருந்து பணம் பெட்டிக்குள் புதைந்து விட்டது. நான் பணத்தை தேவையில்லாமல் எடுத்து புழங்குவது குறைந்து விட்டது. ஆனால் பலர் ஏடிஎம் கார்டில் பேலண்ஸ் பார்க்கும் போது பாவமாகவும் தெரிகிறது. யாரோ பணம் போட்டு விடுகிறேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதை நம்பி  கார்டை உரசி பார்த்து 0 எனக் காட்டும் போது, அருகிலுள்ள நம்மைப் பார்த்து பல் இளித்து செல்வது நமக்கே பாவமாக தெரியும். இளம் வயதில் எனக்கே இப்படியொரு அனுபவம் ஏற்பட்டுள்ளது.  

டீ குடித்தேன்.  புஸ்கட் வாங்கினேன்.  ஒரு கும்பல் வயதான ஒருவரை சுற்றி கதை கேட்பதை பார்த்து நானும் சென்றேன். இப்படி வழியில் கேட்கும் கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் . பல சமயம் நம்மை சோகத்தில் ஆழ்த்திவிடும். நான்கு மகன்களை பெத்த தகப்பன் அனாதையாக விடப்பட்ட கதை. அருகிலுள்ள கோயிலுக்கு பெட்டி துணிமணிகளுடன் திருவிழாவிற்கு இளைய மகன் அழைத்து வந்தானாம். சாமி தரிசனம் முடிந்ததும், அவன் துணிமணிகளை எடுத்து கொண்டு, இங்கேயே இரு, நான் வந்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறான். சந்தேகப்பட்டு, அந்த பையை வைத்து விட்டு செல்ல வேண்டியது தானே என்று சொல்லியிருக்கிறார். அவன் எதையும் காது கேட்காமல் சென்று விட்டான். இன்று வரை வரவில்லை. இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிறதாம். அதை விட அவர் சொன்ன அவலம் எல்லோரையும் கண்கலங்க வைத்து விட்டது. அவன் சென்றது கூட பரவாயில்லை. ஒண்ணுக்கு வருதுன்னு அங்க போயிருந்தா, துரத்துறானுங்க.. மலம் கழிக்க ஒதுங்கினா கல் விட்டு எறியிறானுங்க… கையில காசு இல்லாம பட்டினி கூட இருந்திடலாம். ஆனா இந்த மலம் ஜலம் கழிக்க காசு தேவைப்படுதுப்பா… படாதப்பாடு பட்டுட்டேன். இந்த அழுக்கு வேட்டி சட்டையை பார்த்து நம்பி டிக்கெட் எடுத்து கையில் சோத்துக்கு காசு கொடுத்த மவ ராசங்க நீங்க நல்லா இருக்கணும் என்று அவர்களைப் பார்த்து கும்பிட்டார். அந்த ஹோட்டலில் ரோட்டோரத்தில் முத்திரம் இருக்கும் நபர்களை கம்பு எடுத்து விரட்டியதைப் பார்த்து போது இந்த கதையை கூற ஆரம்பித்துள்ளார். இயற்கை உபாதைகளை கழிக்க இடம் கிடைக்க வில்லை என்றால் நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இதனால் வரை இது பற்றி சிந்தனையில் தோன்றவில்லையே !

திருச்சி பஸ் ஸ்டாண்டில் பேருந்து நுழைந்தது. அப்படி ஒரு கூட்டம். மாநாடு எதையும் உச்சிப்பிள்ளையார் நடத்தினாரோ என்று விசாரித்தால், ஆம்னி பஸ்காரர்கள் ஏமாற்றிய கதையை சொன்னார்கள்.  திருச்சி முன்னாள் டையர் பஞ்சர் பார்த்து வருகிறேன் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட காசை கொள்ளையடித்த தெருவில் விட்ட விபரம் அறிந்தேன். எப்படியெல்லாம் மக்களின் அவசர நிலையை உணர்ந்து கொள்ளையடிக்கின்றனர். மதுரை போலீஸ் துறையில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சிறப்பு எஸ்.ஐ திருட்டு , வழிப்பறி வழக்கில் கைது ஆகியிருக்கிறார். திருப்பதி லட்டு கொடுத்து, பண ஆசாமிகளை சாய்த்து கையில் இருக்கும் நகைகள் ,பையில் இருக்கும் பணம் இவற்றுடன் எஸ்கேப். நாம் சுதாரிப்பாக இருக்காவிட்டால் நம் கை விரல் மோதிரம் கூட மிஞ்சாது. தூங்கியப்படி என் கை பையை பிடிக்க தொடங்கினேன்.
இரவு மூன்று மதுரை மாட்டு தாவணி பஸ் நிலையம் . என் மனைவி இட்ட கட்டளைப்படி கோரிப்பளையம் பஸ் வர , கோரிப்பளையம் சென்றேன். இரவு நிசப்பத்தில் , தார் சாலைகள்  வாகன நெருசல் இன்றி ஓய்வு எடுத்தன. வாகனமற்ற சாலையில் வெறித்தனத்துடன் பேருந்தை இயக்கினார் ஓட்டுனர். நடத்துனர் விசில் ஊதியது கூட தெரியாமல் , வண்டி கோரிப்பளையம் சிக்னல் தாண்டி நின்றது. மெதுவாக நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்.பேருந்து நிறுத்தத்தில் நானும் மற்றொருவரும். நான்கு மணிக்கு தான் இனி பஸ் என வந்த ஆட்டோவில் அவரும் நகர்ந்து விட்டார். வாடகை நூற்றி ஐம்பது. அதில் என்னை வேறு அந்த ஆட்டோ காரன் கூப்பிட்டான். அதேபோல வாடகை கேட்டான். முடியாது என்றவுடன் பறந்தான். துரத்தில் வந்த டிரைசைக்கிள் என்னைப் பார்த்ததும் நின்றது. ஒரு சிறுவன். அவனிடம் ஏறிக் கொள்ளலாமா என கேட்டேன். ரிசர்வ் லைன் வரை செல்கிறேன் வாருங்கள் என்றான்.

பள்ளிக்கு டிமிக்கி கொடுக்க கூடாது என்ற என் மனநிலையை அறிந்தோ என்னவோ அவன் வண்டியில் வைத்திருந்த செப்டம்பர் 1ம் தேதிய பேப்பரில் என் கவனம் சென்றது. ( நான் இது நாள் வரை என் சர்வீசில் சிஎல் எடுத்தது கூட இல்லை. என் திருமணத்தை கூட கோடை விடுமுறையில் வைத்தேன். முதல் நாள் பள்ளிக்கு வந்த என்னை கேனையனாக பார்தனர். நான் சரக்கு இல்லாதவன் என்று கூட வாய்கூசாமல் என் காது பட சொன்ன ஆசிரியைகளும் உண்டு. எல்லாம் என் பிறவி பயன்.) “பஸ் இல்லை; அதிக தூரம்” என , காரணங்களை கூறி, கிராமங்களில் உள்ள தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சிலர், தாமதமாக வருகின்றனர். விடுமுறை எடுத்தாலும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. பள்ளிகளை மேற்பார்வையிடவும், வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்த, தொடக்க கல்வி இயக்கம் உத்தவிட்டுள்ளது என்பது தான் அச்செய்தி.

டிரைசைக்கிள் ஓட்டும் பையனிடம் படித்துக் கொண்டே வேலை செய்கிறாயா என்றேன். படிப்புக்கும் நமக்கும் ரெம்ப தூரம் அண்ணே என்றான். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்றேன். உனக்கு என்ன வயசு ஆகிறது என்றேன். அவன் சுதாரிப்பாக பதினெட்டு. ஒன்பதாம் வகுப்பை விட்டு இரண்டு வருடம் தான் ஆகிறது என்றான். நான் கவனிக்காதது போல எந்த பள்ளி என்று விசாரித்தேன். எனக்கு தெரிந்த ஆசிரியர்கள் பெயரை சொன்னேன். அவனா அந்த கணக்கு வாத்தியான் பொல்லாதவன் அண்ணே அவனால தான் நான் படிப்ப விட்டே ஓடி வந்தேன். சின்ன தப்பு விட்டாலும் துரத்தி துரத்தி அடிப்பான். நமக்கு சரிபட்டு வராது என வந்து விட்டேன். டேய் அந்த அறிவியல் ஆசிரியர் . அண்ணே  அவரு தமிழ் வாத்தியாருண்ணே. படிக்கிற பசங்களுக்கு உதவி செய்வார். செல்லமா வைத்துக் கொள்வார். என்ன மாதிரி கழுசடைகளை எல்லாம் வெளுத்து வாங்குவாரு அண்ணே என்றான். இந்த வாத்தியாரு டிச்சருகளை எல்லாம் பார்த்த எனக்கு எரிச்சல் எரிச்சலா வருதுண்ணே…. என்றான். மௌனமாக இருந்தேன். உங்களுக்கு என்ன தொழில் அண்ணே என்று கேட்டான். வாத்தியாருன்னு சொல்லி, பாதி தொலைவில் இறக்கி விட்டால் நான் வீடு  போகும் தொலைவு இன்னும் சிக்கலாகி விடும். தபால் தந்தி நகர் எங்கு இருக்கிறது? மல்லிகை காபி பார் எங்கு இருக்கிறது? தம்பி மேடு வருகிறது இறங்கி தள்ளி விடுகிறேன் என்று சமாளித்தேன். அட உட்காருண்ணே. சும்மா ஓங்கி மிதிச்சா தன்னால ஓடிப்போகுது என்றான்.

ஆத்திகுளம் சிக்னலில் இறக்கி விட்டான். டீக்கடை திறந்து இருந்தது. டீ குடித்தோம். தாங்ஸ் அண்ணே என்றான். இப்படியே லிப்ட் கேட்டு போன சீக்கிரம் போயிடுவீங்க.. மெயின் ரோட்டில் நடங்கள். அய்யர் பங்களா வழியாக செல்லுங்கள் என்றான். நான் இல்லைப்பா பாரதி ஸ்டோர் வழியா அப்படியே தபால்தந்தி நகர் போயிடுவேன். அங்கிருந்து பனங்காடி நேரு ஸ்கூல் பக்கம் அதான் என்று நடக்க ஆரம்பித்தேன்.
 மனிதனுக்கு  ஓய்வு முக்கியம். இந்த அமைதி , அதன் தனிமை. மர நிழல்கள் நிலா வெளிச்சத்தில் இருட்டில் பயத்தை ஏற்படுத்தியது.  எங்கிருந்தாவது நாய் ஓடி வந்து குரைத்து துரத்த ஆரம்பித்தாள் என்ன செய்வது? நாய் என்றால் அப்படியொரு பயம். இப்போது மாநகராட்சி தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பு மருந்து போடுவதாக படித்தது நினைவுக்கு வந்தது. பூனை கடித்தால் கூட ரேபீஸ் வருமாம். சமீபத்தில் அனுப்பனடியில் ஒருவரை பூனைக்கடித்து அதை சரியாக கவனிக்காமல் விட ரேபீஸ் வந்து இறந்தது நினைவுக்கு வந்தது. எங்கிருந்தோ பூனை கத்த தொடங்கியது. நான் எதிர் பார்த்த படி தெருநாய் படுத்திருந்தது. சலனம் இன்றி அமைதியாக கிடந்தது. அப்படியே நின்று விட்டேன். அடியெடுத்து வைக்க அச்சம். இருந்தாலும் ஒருவழியாக மனதில் தைரியத்தை வரவழைத்து நடக்கலாம் என்று நினைத்த போது, எதிரில் மோட்டார் வாகனம் நாயை உரசியப்படி கடந்தது. நாய் எந்த ஓசையும் எழுப்ப வில்லை. அப்படியே மலையை போல அமைதியாக சரிந்து கிடந்தது. நடந்தேன். எங்கும் குரைத்து குரலை தொடர்ந்து எழுப்பும் இந்த நாய்களுக்கு என்னவாயிற்று. வேகமாக வந்த ஆட்டோவுக்கு வழி விட ஒதுங்கிய போது , கம்பவுண்டு சுவற்றின் அருகில் இருந்து பொஸ் பொஸ் என மூச்சு வாங்கும் நாய் சத்தம் கேட்டது. அந்த இரவில் தூரத்தில் இருந்த வீட்டின் உள்ளே வாட்ச் மேன் கொசு பேட்டை வைத்துக் கொண்டு ஸ்டெபி கிராபி போல கொசுக்களை பந்தாடிக்கொண்டு இருந்தார். டுப், டிப் என சப்தம் பெட்டுல்பொட்டாசு போல காதில் விழுந்ததும். மனம் ஏங்கியது யாராவது துணைக்கு வர மாட்டார்களா?


மீண்டும் நாய். தெருவில் கிராஸ் செய்தது. நான் நடையை தளர்த்தினேன். ஏஆர் மருத்துவமனை. இந்த நாயும் என்னை பார்க்காதது போல கடந்து சென்றது. எங்காவது நாய் குரைக்கும் சத்தம் கேட்காதா என மனம் ஏங்க ஆரம்பித்தது. தூரத்தில் மெதுவாக் ஜீப் வந்தது. அட இந்த இரவிலும் நிதானமாக ஜீப் ஓட்டுகிறார்களே என்று நினைக்க தோன்றியது. அருகில் வந்த போது தான் அது காவல் வாகனம் என்பதை அறிந்து என் மடமையை நினைத்து நெந்து கொண்டேன். பால் வண்டி கடந்து சென்றது. எம்.ஐடியில் காய்கறிகளை வைத்து கடந்து சென்றது. வேகமாக நடக்க தொடங்கினேன். தெருவில் நாய்கள் அங்காங்கே… ஆனால் எந்த ஓசையும் எழுப்ப வில்லை. என்னை கடிக்கவும் வரவில்லை. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின. கடலில் மீன்கள் துள்ளிவிடுவது போல காட்சி அளித்தது. கடல் என்றவுடன் கச்சத்தீவு நினைவுக்கு வருகிறது. கச்சத்தீவுக்கு செல்ல வழங்கப்பட்ட உரிமை யை, மீன்பிடிக்க வழங்கப்பட்ட உரிமையாக கருதக்கூடாது என்ற மத்திய அரசின் அறிக்கை நினைவுக்கு வந்து , இருப்பினும் இருளை கடந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சேவல் கூவும் சத்தம் கேட்டது. சரி நாம் நகரை விட்டு கிராமத்திற்கு வந்து விட்டோம். இப்போதாவது நாய் குரைக்குமா? என உன்னிப்பாக கேட்டேன். நாய்கள் மனிதருடன் பழகி பழகி குரைப்பதை நிறுத்தி விட்டன. எந்த நாயும் கடிக்கவும் இல்லை. குரைக்கவும் கூட இல்லை. வீட்டை அடைந்தேன். 10 கிலோ மீட்டர் நடந்த நடையில் என் செருப்பு காலை கடித்திருந்தது. வலிக்க ஆரம்பித்தது. 

9 comments:

bandhu said...

சரளமான நடை.. உங்கள் கூடவே நடந்து வந்ததில் எனக்கும் கால் வலி!

கார்த்திக் சரவணன் said...

ஒரு நீண்ட பயணத்தை எங்களுக்கும் காட்டிவிட்டீர்கள்... சுவாரஸ்யமான எழுத்து நடை....

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ ஒரு கடி...!

Unknown said...

நானும் மீனாம்பாள்புரம் கஸ்டம்ஸ் காலனியில் இருப்பதால் ...நீங்கள் நடந்து இருக்கும் தூரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது ,,,ஆனால் நாய்கள் ஏன் குரைப்பதை நிறுத்திக் கொண்டன என்றுதான் புரியவில்லை !

Unknown said...

த.ம.4

Unknown said...

நீண்ட பதிவு என்றாலும் சுவை குன்றவில்லை!

ஸ்ரீராம். said...

சென்னைக்குச் சிறு பயணம்தான் என்ற பட்சத்தில் குறைந்தபட்சம் ஒரு சைக்கிளையாவது பெரியாரிலோ, மாட்டுத்தாவணியிலோ நிறுத்தி வந்திருந்தால் எளிதில் வீட்டை அடைந்திருக்கலாமே... நான் அப்படிச் செய்ததுண்டு ரேஸ் கோர்ஸ் காலனியிலும் மற்றும் நாராயணபுரத்திலும் இருந்த காலத்தில்.

தருமி said...

இப்படி நடந்துமா தொப்பை இப்படி இருக்குது !!!!

Unknown said...

தினசரி நடந்தால் தருமி அய்யா சொன்னமாதிரி தொப்பை குறைய வாய்ப்புண்டு !

Post a Comment