இரண்டு நாட்களுக்கு
முன் குழந்தைகளை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அலுவல்
வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு வீட்டிற்கு
திரும்பிக் கொண்டிருந்தேன். ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப்பில் தெரிந்த முகம் கொண்டவர் போல
இருந்த நபர் கை காட்டி லிப்ட் கேட்கவே , அந்த அவசரத்திலும் நான் வண்டியை நிறுத்தினேன்.
அதற்குள் லிப்ட் கேட்ட நபர் ஓடி வந்தார். நான் நினைத்த மாதிரி அருகில் வந்த போது அவர்
தெரிந்த முகமாயில்லை. அருகில் வந்தவர்(மிகவும் இளைமையாக இருந்தான்) , தனக்கு உடம்புக்கு
முடியவில்லை என்றும் அடுத்த ஸ்டாப் ஆத்திக்குளம் போலீஸ் பீட் அருகில் நிறுத்தினால்
புண்ணியமாக போகும் எனவும் கெஞ்சவே , நானும்
யோசிக்க ஆரம்பித்தேன்.
அதுவரையிலும் எனக்கு
தெரியாமல் வைத்திருந்த சிக்ரெட் துண்டை என்னிடம் காட்டி , சாரி சார், என தூக்கி கீழே
போட்டான். சரி உட்காருங்கள் என பின் இருக்கையில் அமர வைத்தேன். வண்டி நகரத்தொடங்கியது.
சாராயவாடை அடிக்கவே , தண்ணி அடிச்சிருக்கியா? என்றேன். லைட்டா சார். உடம்புக்கு என்ன
செய்யுது? அப்புறம் தண்ணி அடிச்சிருக்க? தண்ணி அடிச்சதுனால தான் சார் பிரச்சனையே. ஆனாலும்
நிறுத்த முடியல. எனக்கு லிவர் வீக்கம் இருக்கு . சலம் வச்சுருக்காம் என குண்டை தூக்கி
போட்டான். உனக்கு வயசு என்ன? இருபத்து ஐந்து. லிவர் கெட்டு போச்சுன்னு சொல்லுற அப்புறம்
இப்படி குடிக்கலாமா? இல்ல சார் ரெம்ப முடியாம செத்து பொழச்சேன் போன வருசம்.நடுவில சுத்தமா குடிக்கிறத நிப்பாட்டிட்டேன். போன மாசம்
போல ஐயப்பனுக்கு மாலை போட்டேன் . உடம்பு நல்ல இருக்கிற மாதிரி தெரிஞ்சுச்சு…. அதுனால
லைட்டா தண்ணி அடிச்சேன்..அது நாலு அஞ்சு நாள தொடரவே வயிறு வலிச்சு ஆஸ்பத்திரியில சேர்ந்தேன்.
திரும்ப லிவர் கெட்டு போச்சுன்னு சொல்லி ஆஸ்பத்திரியில தங்க வச்சுட்டாங்க.. நேத்து
தான் ஆஸ்பத்திரியில இருந்து வந்தேன். நடக்க முடியல.. அதான் லிப்ட் கேட்டேன் என்றான்.
என்ன வேலை செய்ற? தச்சு வேலை. பில்டிங்குக்கு கதவு, ஜன்னல் செய்து மாட்டிற வேலை. நல்ல
வருமானத்தை சேத்து வைக்கலாமே .. ஏன் குடிக்குற? பாழா போன குடியை நிறுத்த முடியல… சார் ....இங்க தான் நிறுத்துங்க என இறங்கிக் கொண்டான்.
வீட்டிற்கு வந்தேன்.
அனைவரும் கோவில் செல்ல தயாரக இருந்தனர். லிப்ட் கேட்டவன் இளம் வயதில் சாராயம்
அடித்து கெட்டு போன கதையை சொல்லி வருத்தப்பட்டேன் . என் மனைவி இப்படி தான் ஆறாவயல் சித்தப்பா
குடித்து குடல் வெந்து போய் ஆஸ்பத்திரியில கிடக்கிறார்… அவரை போய் பார்க்க போகணும்
. அவரும் மில்லில கூலி வேலை பார்க்கிறார். கிடைக்கிற வருமானத்தை இப்படி குடிச்சே அழிக்கிறார்
என ஆதங்கப் பட்டு கொண்டார்.
அதற்குள் என் மாமனார்
தபால் தந்தி நகரில் ஆட்சி வீட்டிற்கு அருகில் உள்ள இளைஞன் தண்ணி அடித்து இறந்து விட்டான்
அவன் மனைவி ரெம்ப கொஞ்ச வயசு என தன் தரப்புக்கு புலம்பி கொட்டினார்.
அரசு அதிகப்படியான
வருவாயை டாஸ்மார்க் வருமானம் மூலம் ஈட்டி, அதனைக் கொண்டு நல்ல திட்டங்களை உருவாக்குகிறது
என்பது கேட்பதற்கு நல்ல விசயமாக இருந்தாலும், இந்த நல்ல நலத்திட்டங்களை அனுபவிக்க
ஆட்கள் வேண்டுமே..! திட்டங்களின் பலனை அடையாமலே அல்லது அனுபவிக்கும் முன்னரே தண்ணி
அடித்து அடித்து அல்பாய்சில் போய் விடுவார்கள் போலத் தெரிகிறதே..!
வைகோ போன்றோர்
டாஸ்மார்க் எதிராக குரல் கொடுப்பது மனசுக்கு ஆறுதல் அளித்தாலும், மதுவிலக்கு என்பது
சாத்தியமா? என சிந்திக்க தூண்டுகிறது. கடந்த பத்து வருடங்களாக நல்ல பச்சை லைட்டை போட்டு
ஆட்களை கவர்ந்து, சாராயத்திற்கு அடிமை படுத்திய பின் , மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு
தொண்டன் எப்படி வருவான், வந்தாலும் எப்படி இருப்பான்? சிந்திக்க வேண்டியது.
என் நண்பர் பெரியர்
பேருந்து நிலையத்தில் நின்று இருந்தார். அப்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நோட்டீஸ்
விநியோகித்த ஒரு கட்சியின் தொண்டன், நோட்டீஸ் கொடுத்து முடித்த பின் , டேய் வேலை முடிஞ்சுச்சு
.. ஒரு கட்டிங்க போட்டுட்டு வீடு போய் சேர வேண்டியது தான் என்றானாம் என்று கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மது நாட்டுக்கும்
வீட்டிற்கும் கேடு என்பதை நாம் உணர வேண்டும். அது நம் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதையும்
அறிய வேண்டும்.
சமீபத்தில் இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பின் தர மதிப்பீட்டு பட்டியலில்
கையொப்பம் பெற என் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை அழைத்து வர சொல்லியிருந்தேன். அனைத்து மாணவர்களும்
தன் தந்தையை அழைத்து வந்து கையொப்பமிட போவதாக பேசிக் கொண்டனர். அப்போது ஒரு மாணவன் என்னிடம்
வந்து சார் இதுல கையெழுத்துப் போட அப்பாவ தான் கூட்டிகிட்டு வரணுமா சார்? என கேட்டான்.
ஏண்டா அப்படி கேட்கிற…?இல்ல சார் எனக்கு அப்பாவ பிடிக்காது ? ஏன்டா அப்படி சொல்லுற?அப்படி
யெல்லாம் சொல்லக்கூடாது? இல்ல சார்.. என் அப்பா சாய்ங்காலம் ஆச்சுன்னா.. தண்ணியபோட்டுகிட்டு
சண்டை போடும்… ஊடால நான் சிக்கினேன் வச்சுக்கங்க.. என்ன தூக்கி போட்டு மிதிச்சுடும்..
எங்க அம்மா தான் பாவம் நித்தம் அடிவாங்கிட்டு கிடக்குது. அதுனால எனக்கு பிடிக்காது
சார்.. அம்மாவை கூட்டிகிட்டு வர்றேன் என்றான்.
இதுமாதிரி எத்தனை
எத்தனை மாணவர்கள் மனதால் புழுங்கி சாகின்றனரோ…? எத்தனை மனைவிமார்கள் போதைஏறிய கணவனின்
கொடுமைகளை தாங்கி தன் மகனுக்காக, குடும்பத்திற்காக உயிர்த்தெழுகின்றனரோ? அரசு இதற்கு
நல்ல முடிவு எடுத்து மதுவிலக்கு அமுல் படுத்த வேண்டும்.