Thursday, July 5, 2012

தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள்


    சமூகம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாடங்களைப் பார்க்கும் போது குலை நடுங்குகிறது. சமூகம் மட்டுமே அதனை சுற்றி நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. வீட்டில் ஆரம்பிக்கும் எந்த பழக்கமும் சமூகத்தை தாக்கும் அல்லது சமூகத்தை வடிவமைக்கும் என்ற அடிப்படை நியதி இன்றைய நவீன காலத்தில் மாறு பட்டு சமூகங்கள் மட்டுமே நம் குடும்பங்களின் அமைப்பை அல்லது குடும்பத்திலுள்ள அங்கத்தினரின் குணங்களை வடிவமைக்கின்றன.

   குறிப்பாக நம் குழந்தைகள் பள்ளிகளில் கற்றுக் கொள்வதைவிட தம்மை சுற்றி நடக்கும் விசயங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் அதிகம்.

   வெட்ட வெளிக்கு குழந்தைகளை அழைத்து , நிலவையும் நட்சத்திரங்களையும் காட்டி உணவூட்டும் பழக்கம் அரிதாகி , டி.வி. நாடகங்களை போட்டுக் காட்டி , உணவை திணிக்கும் பழக்க வழக்கம் பெருகிவிட்டது. அப்பு செல்லம் ,செல்லம், செல்லம், செல்லமே அடுத்து  தொடங்கும்  குழந்தைகளின்  உறக்கம் இன்னும் விரிவடைந்து சிரிப்புலோகம் நிகழ்ச்சியையும் தாண்டினாலும் ஆச்சரியப்படலாம். குழந்தைகள் உறக்கம் குறைந்து, மனவளர்ச்சியின் அளவும் குறைந்து வளர்ந்து வருகிறார்கள். அதனால் எதையும் பார்த்தவுடன் அதன் தாக்கத்தை அறியாமல் அதை கடைப்பிடிப்பதில் குழந்தைகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.


    பள்ளி தொடங்கி ஒரு மாதமாகிய நிலையில், நேற்று ஒன்றாம் வகுப்பு 'அ' பிரிவு ஆசிரியர் என்னை வந்து பார்த்து சொன்ன விசயம் அதிர்ச்சி அடைய வைத்தது. சமூகம் எவ்வளவு பெரிய தாக்கத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தியுள்ளது !

     சிறு குழந்தைகள் வண்டி ஓட்டுவதை வேடிக்கை பார்த்ததும், தானும் அதேப் போல வண்டி ஓட்டி விளையாட முயல்வது வழக்கம்.  பேருந்து ஓட்டுவது போல கையை சுழற்றி ஆட்டிக் கொண்டு விளையாடுவதும் , கையை திருகி கொண்டு இரு சக்கர வண்டி ஓட்டுவது போல் விளையாடுவதும் இயற்கை. அந்த ஆசிரியரின்  வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒருவன் மதிய உணவு இடைவேளை மற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளான். இதுவல்ல விசயம். அவன் கையில் கைக் குட்டையை சுற்றிக் கொண்டு வட்டையை சுழற்றுவது போல பாவனை செய்து பேருந்தை பாம் பாம் பீ பீ என சத்தம் கொடுத்து  இயக்கி உள்ளான். பேருந்து இயங்கத் தொடங்கிய சிறிது நேரம் கழிந்த பின் கை குட்டையை காதில் வைத்து , “ ஹாலோ, நான் தான் ரவி பேசுறேன்.. அனுப்பானடியில இருக்கேன்.. இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவேன்.. சாவு கிராக்கி வண்டியில மோதுர மாதிரி வற்ரான் பாரு..”( கையை வட்டையை பிடித்து சுழற்றுவது போல பிடித்து கொண்டு , இப்போது கைக் குட்டை காதிற்கும் தோள்பட்டைக்கும் நடுவில் கழுத்து  சாய்த்து கைக்குட்டை கீழே விழாமல் இருக்க ) பேருந்தை இயக்குகிறான் என்று சொன்னார்கள். சமூகத்தில் செல் போன்  ஓட்டிக் கொண்டு வண்டி ஓட்டுவது பெருகி , அது நவீன காலத்தின் கலாச்சாரமாக மாறி , அப்பழக்க வழக்கம் ஆபத்தை உணராமல் குழந்தைகளுக்கும் தொற்றி வருவதைக் கண்டு ஆசிரியர் வருந்தம் தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் கவிழ்ந்த பேருந்துக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்பட்ட செய்தியை எனக்கு நினைவூட்டியது. ஆசிரியரின் உரை எனக்கு கன்னத்தில் அறைந்தது போலவும் இருந்தது. நானே பல சமயங்களில் வண்டியை நிறுத்தாமல் செல் போன் பேசிய நிகழ்வுகள் வந்து சென்றன. தருமி அய்யா அவர்கள் செல்போன் பேசிய பெண்ணுக்கு அறிவுரைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது.

      சமூக நிகழ்வுகள் நம் சந்ததிக்கு விட்டுச் செல்லும் எச்சங்கள் பயனுள்ளதாக அமைய நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சமீபத்திய சர்வே படி இரண்டு லட்சத்து எண்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஹெல்மட் அணியாமல் தமிழகத்தில் வண்டி ஓட்டுவதாக கூறுகிறது. வாகன்ங்கள் ஓட்டும் போது செல் போன் பேசுவோர் எண்ணிக்கை அதையும் தாண்டும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
செல் போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுவது, ஹெல்மட் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவது, சாலையில் வண்டியை கவனிக்காமல் செல் போன் பேசிக் கொண்டே சாலையை கடப்பது, டீக்கடையில் குடிக்கும் நெகிழிக் கோப்பையை ரோட்டில் தூக்கி எறிவது, நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் சிறுநீர் கழிப்பது , எச்சில் துப்புவது, பலர் முன்னிலையில் மூக்கை நோண்டுவது என  இன்னும் தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள் , அல்லது கலாச்சரமாகப் பின்பற்றப் படும் தவறுகள், தவறுகள்  என உணரா தவறுகள் தினம் தினம் குழந்தைகள் மனதில் படியும் போது அவை தன்னையறியாமல், அதன் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், அவற்றை நவீன காலத்தின் நாகரீக பழக்க வழக்கங்களில் ஒன்றாக பின்பற்றுவது வருத்தம் அளிக்கிறது.

    இவை தொடருமானல்,  குழந்தைகள் எதிர்காலம் இன்னும் மோசமானதாகவும்,  குற்றங்கள் நிரம்பியதாகவும் இருக்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.  

13 comments:

கோவை நேரம் said...

நல்ல பதிவு..நான் குழந்தைகளுடன் செல்லும் போது சிக்னலில் நின்று பச்சை எரிந்தவுடன் தான் செல்வேன்.அப்போது தான் அவர்கள் மனதில் பதியும் என்பதால்.ஒருதடவை என் மகள் சிக்னல் அதை சொன்ன போது எனக்கு ஒரு பெருமிதம்..அப்போ அவளுக்கு வயது ஐந்து....

Yaathoramani.blogspot.com said...

குழந்தைகள் நாம் செய்வதைத்தான் செய்வார்கள்
சொல்வதை யல்ல என்பதை மிக மிக அழகாகப்
பதிவு செய்துள்ளீர்கள்
மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

சமூக அக்கறையுடன் எழுதி உள்ளீர்கள் நல்ல பதிவு

துளசி கோபால் said...

அருமை. இனிய பாராட்டுகள்.

தருமி said...

கோவை நேரம் போன்ற பெற்றோரைப் பார்க்க இது வரை ஆசை. இன்னும் அப்படி யாரையும் சந்திக்கவில்லை; பள்ளிக்குக் குழந்தைகளைக் கொண்டு செல்லும் பெற்றோர் வண்டியோட்டும் ‘அழகை’க் கண்டுதான் இது வரை பழக்கம்.

நல்ல தொகுப்பு சரவணன். ஆனாலும் இதைப் பற்றிப் பேசுவோர் மட்டுமே இந்த உண்ர்வோடு இருப்பதுவும் மற்றவர் ‘தங்கள் வழியில் எப்போதும் போல்’ செல்வதும் நிரம்ப ஆச்சரியமே! படித்த ‘நாய்களுக்குக் கூட’ ஓடும் வண்டியிலிருந்து எச்சி துப்பக்கூடாது என்பது தெரியவில்லையே என்று யோசிக்கும்போது எல்லாம் இருட்டாகத் தெரிகிறது.

ஆனாலும் சரவணா, இதற்காக //செல்போன் பேசிய பெண்ணுக்கு அறிவுரைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. // என்று சொல்லி என் கதையையும் இங்கே அரங்கேற்றணுமா?!

சசிகலா said...

நம் குழந்தைகள் பள்ளிகளில் கற்றுக் கொள்வதைவிட தம்மை சுற்றி நடக்கும் விசயங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் அதிகம்.

மிகச்சரியான உண்மை திருந்தாத பலர் தம் பிள்ளைகளுக்க◌ாகவாவது திருந்தட்டும் தங்கள் வரிகளால் பகிர்வுக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .

மாதவன் said...

முதலில் இத்தவறுகளை நம்மிடம் இருந்தே திருத்தி கொள்ள வேண்டும் !!
சமூக நோக்குடன் எழுதப்பட்ட இக்கட்டுரை அருமை.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அருமையான கட்டுரை

ananthu said...

நிச்சயம் கவனிக்க வேண்டிய ஆழமான விஷயம் ... பதிவுக்கு நன்றி ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

போன் பேசிட்டே போற ஆளுங்க சில நேரம் போனை காது மாத்தி வைக்க கையை விட்டுட்டு ஒட்டுவாங்களே... அவிங்க சாகசம் இருக்கே.... அப்படி என்ன அவசரமோ? அந்த ரெண்டு நிமிசத்துல வர போகுது? அவன் பக்கத்துல போற நாம தடுமாறுவான்னு பதற, அவனோ, ஜாலியா லாவகமா வண்டி ஓட்டிட்டு போயிட்டே இருப்பான்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடுத்த மதுரை பதிவர்கள் சந்திப்பில் தருமி ஐயா பெண்ணிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை விளக்கவும்....

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் சார்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_11.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

Post a Comment