Monday, October 15, 2012

தடுப்பதற்கில்லை….!



பனையோலை வேய்ந்த
கூரை வீடு எரிச்சலூட்டுகிறது
நாலாபக்கமும் உயர்ந்த கட்டிடங்களில்
செயற்க்கை செடிகளை அழகுக்காகவும்
பறவைகளின் ஒலிகளை
அழைப்பு மணியோசையாகவும்
வைத்திருப்பவர்களுக்கு
அறியாமலா
உயர்ந்து வளர்ந்த
பல மரங்களை சரிந்திருப்பார்கள்
பூத்துக்குலுங்கிய மஞ்சணத்தி மரங்களை
மாய்ந்திருப்பார்கள்
குருவிகள் இல்லை
கூவும் குயில்கள் இல்லை
காடையும் காணவில்லை
அட மனிதர்கள்கூட
எப்போதாவது தான் புலப்படுகிறார்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தரும் நிழலில்
அமர்ந்துக் கொண்டிருக்கிறேன்
டிரங் பெட்டியிலிருந்து எடுத்த
பழைய புத்தகத்தின் பக்கங்களில்
பொதிந்திருந்த
மயிலிறகை அதிசியமாகப் பார்க்கிறாள்
எந்தப் பறவையின் இறகையும்
பார்த்திராத என் பேத்தி
உயிர் வலிக்க கேட்கிறேன்
விலைப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்
கூரை வீட்டையும்
என் மகனிடம்...!




Thursday, October 4, 2012

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு



   மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் பொருட்டும் மன அழுத்தம் , மன உளைச்சல் மற்றும் தேர்வு பற்றிய பயம் ஆகியவைகளை போக்கும் விதமாக, தமிழக அரசு , இலவசக் கட்டாயக் கல்வியை அமுல்படுத்தி, இந்தியாவிலேயே முதல் முறையாக ,பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாக , ஆர்.டி.ஈ. சட்டம் 2009 இயற்றப்பட்டு,அது தொடர்பாக பல அரசு ஆணைகளைத் தொடர்ந்து பிறப்பித்து,   முப்பருவ முறையையும் , முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையையும் அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகவும், முழுமையான மாணவர் வருகை சதவீதம் அமையும் விதமும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.


    சி.சி.இ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்பது , கல்வி மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவன் காட்டும் ஈடுபாடு , ஆர்வம் , முயற்சி , ஒழுங்கு முறை , செயல் திறன் , ஆளுமை வளர்ச்சி என உடல், மனம் , சமுகம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடலாகும்.


    மதிப்பிடல் கற்போரை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுதலாகும். மேலும் மதிப்பீடு என்பது , கற்போரின் நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் அளந்தரிதல் ஆகும்.
   

    தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடானது, கல்விசார்(Scholastic Asssessment) மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகள்(co-scholastic Assessment) வாயிலாக மதிப்பிடுதலாகும்.


    கல்விசார் செயல்பாடுகள் என்பது கற்போரின் அறிதல், புரிதல், பகுத்தாய்தல் மற்றும் பாடப் பொருளைப்பயன்படுத்தும் நிலைகளுக்கு ஏற்ப (அதாவது கருத்தை செயல்படுத்தும் விதமாக)பல்வேறு மதிப்பீட்டு உத்திகளையும் , நுட்பங்களையும் கொண்டு கலைத்திட்டத்திலுள்ள கல்விசார் பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறன்களைப் பருவம் முழுவதும், பாடப் பொருளைச் சிறு சிறு பகுதிகளாகக் கற்பித்துக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர்களின் அடைவுத் திறன்கள் வளரறி மற்றும் தொகுத்தறி  மதிப்பீடுகள் வாயிலாக மதிப்பீடுச்  செய்யப் படுதல் ஆகும். இதனால்,  மாணவர்களிடையே உள்ள தேர்வு அச்சமும் , மன அழுத்தமும் குறைகிறது. இதில் உடற்கல்வியும் மதிப்பீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    வாழ்க்கைத்திறன் ( உ.ம்., மதித்தல் மரியாதை தருதல், சூழலுக்கேற்பவும் நேர்மறையாகவும் முடிவெடுத்தல்,சுய முடிவெடுத்தல் தெரிவித்தல், தீச்செயல், தீய நோக்குடன் தொடுதலை எதிர்த்தல், ஒத்த வயதுடையோருடன் உறுதியாகவும் இணக்கத்துடனும் இருத்தல் , போன்ற பண்புகள்) , மனப்பான்மைகளும் மதிப்புகளும் ( தேசிய மற்றும் மாநில அரசு சார்பான சின்னங்களுக்கு மரியாதை செலுத்துதல், பாராட்டத்தக்க பண்புடைமை (அதாவது சொல்லிலும், செயலிலும் அனைவருக்கும் மதிப்பளித்தல், நண்பருக்கு உதவும் பண்பு, கோப நிலையிலும் பண்பு நிலை மாறாமல் இருத்தல்) , பள்ளி மற்றும் சமுகத்திலுள்ள பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் மதிப்புகள்),நன்னலம் மற்றும் யோகா/ ஒருங்கிணைந்த உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள் ( வாழ்க்கை கல்வி மற்றும் கலைக் கல்வி) ஆகியவற்றை ஆசிரியர் குழந்தைகளை வகுப்பறையிலும் , பள்ளியிலும் , பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் உற்று நோக்கி , குறிப்பிட்டுள்ள வாழ்க்கைத் திறன்களில் அவர்களுடைய நடத்தைக் கூறுகளைத் தெரிந்துக் கொண்டு ஐந்து குறியீட்டுத் தரநிலை அளவுகளில் மதிப்பீடு செய்து , தரநிலையைப் பதிவு செய்ய வேண்டும். இது கல்வி இணைச்செயல்பாடுகளை மதிப்பிடலாகும்.      


       இதனால் மாணவன் தேவையான அளவில் பாடங்களில் கற்றலடைவைப் பெறுவதுடன் ,ஆர்வமாக கற்கும் நிலை உருவாக்கி, தாம் கற்றவற்றை தானாக பகுப்பாய்வு செய்யவும் , அதனை வெவ்வேறு சூழலில் பயன்படுத்தும் திறன் பெற்றவனாகவும் , தானாகவும் , பிறருடன் ஒருங்கிணைந்தும், இசைந்தும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்யப் பழகிக் கொள்வான்.   சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல் திட்டங்களில் பங்கேற்கவும், சிக்கல்களை அறிந்து , தீர்வு காணும் ஆற்றலைப் பெற்றவனாக உருவாக்கப்படுவான்.


       இத்தனை சிறப்பு மிக்க இந்த மதிப்பீடு முறை வெற்றி பெற பெற்றோர்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் செயல் திட்டங்களுக்கு உதவியாக இருந்து, குழந்தைகளே உருவாக்க உதவிட வேண்டும். ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்களுக்கு செயல் திட்டங்களை உருவாக்கி, ஆனந்தமான கற்றல் சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். பெற்றோர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், அரசு கல்வித் துறை என  அனைவரும் ஒருங்கிணைந்து செயல் பட்டால், தமிழக மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.