Tuesday, August 28, 2012

கிரிக்கெட்


எத்தனை பந்துக்கள் வீசுனாலும்
அத்தனையும் விக்கெட்டுக்களாய்
வீசப்படும் அனைத்து பந்துகளும்
சிக்ஸர்களாய்
எப்படி சாத்தியமாகும்..?
என்
இரண்டு வயது குட்டிப் பிள்ளையிடம்
விளையாண்டு பாருங்கள்…!

Tuesday, August 21, 2012

அட்டகத்தி



காலை எட்டுமணி .6A பஸ். முனிச்சாலை டு அமெரிக்கன் கல்லூரி. தவறாமல் ஆஜராவதற்கு பல காரணங்கள். நண்பர்கள் . விடலை குசும்புகள். பெண்களை திரும்பி வைக்க வேண்டும் என்பதற்காக காட்டும் குசும்புகள். எபி. முத்து மறக்க முடியாத நண்பர்கள். எபி எப்போதும் பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து ஏறுவான். அதுவும் புத்தகத்தை தனக்கு புடித்த ஜன்னல் ஓரப் பெண்ணிடம் (சாரி …நல்ல பிகரிடம் ) தான் கொடுப்பான். அவன் எப்போதும் சூப்பர் பிகர்களை ஜாரி எப்படிடா இருக்கு என்பான். அவன் அப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது , “என்னோட உம் கொட்டிகிட்டு இரு…” என சொல்லிக் கொண்டு .. அப்பெண்ணின் அருகில் சென்று… ”டேய் இன்னைக்கு டிரஸ் நல்லா இருக்கு, அப்புறம் சாய்ங்காலம் முணறை(3.30) மணி பஸ் தானே.” அவள் சிரித்தால், “டேய் என்ன அப்படி பார்க்காதடா  வெட்கமா இருக்கு…” என லூட்டி அடித்து கரக்ட் செய்து விடுவான். அப்புறம் கடலை தான்.

முத்து (குண்டுக்கு) ஏற்ற ஜோடியாக லேடி டோக் கல்லூரியில் படிக்கும் அதே சைஸ் குண்டை முத்தண்ணே உன் சைட் வந்திடுச்சு… அங்க பாருங்களேன் உங்களைப் பார்த்து சிரிக்குது.. அப்புறம் படத்துக்கு கூட்டிக் கிட்டு போக வேண்டியது தானே என்று காஞ்சனாவை காதலித்ததும், காஞ்சனா இவனின் அதிமீறிய சேட்டைக்கு பயந்து இரண்டு படத்துடன் கழட்டி விட்டவுடன், வேறு ஒரு பெண்ணை பார்த்ததும் , அவள் பின்னே சுத்தி அலைந்து , அவள் ஏரியா வந்தவுடன், அவள் அவனை, “அண்ணே ஏன் அண்ணே வீடு வரை வர்றீங்க… யாரும் பார்த்த தப்பா நினைக்க போறாங்க… நீங்க செய்யுற சேட்டை பிடிக்கும்” என டபாய்க்க … எபியின் சித்து விளையாட்டு அடுத்த பெண்ணைத் தேடி செல்லும். “ மாப்பிள்ளை எப்படியாவது லவ் பண்ணி தாண்ட… மேரேஜ் பண்ணுவேன்.. நமக்குன்னு ஒருத்தி சிக்காமப் போயிடுவா…” என்பான். 

இவனின் விளையாட்டின் ஊடே பேருந்தில் கூட்ட நெருசலில் கர்ச்சிப் வைத்து கையை மறைத்து பெண்ணின் மார்பு, பின்பகுதிகளை தடவும் மூத்த கல்லூரி மாணவர்களையும், பல பெரிசுகளையும் பார்த்து இருக்கிறேன். ஒரு சமயம் எபி இது போல செயலில் ஈடுப்பட்டு , தன் அக்காவிடம் மாட்டிக் கொண்டான். அன்றிலிருந்து அவன் பஸ்சை மறந்து டிவிஎஸ் வண்டியில் சுற்ற ஆரம்பித்தான். பின் அவ்வண்டியில் பல பெண்கள் பயணித்து , அடுத்த வீட்டு பெண்ணை ஒருநாள் ஏற்றிச் செல்லும் போது மாட்டிக் கொண்டு, மீண்டும் பஸ்… பின்பு அவளும் எபியின் உறவுக்காரப் பையனை திருமணம் செய்ய விசாரித்த போது, “டேய்..அவள் என் அண்ணணுக்கு ரூட் விடத்தாண்ட என்னுடன் பழகியிருக்கா.. கடைசியில் என்ன கவுத்திட்டாட மாப்பிள்ளை” என்ற போது சிரிப்பை அடக்க முடியவில்லை.  கடைசியில் அவன் முத்துவுக்கு பார்த்த குண்டு பெண் போல ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக அறிந்தேன்.

அட போங்க … அட்டக்கத்தி பட விமர்சனம் எழுத வந்து, என் கல்லூரி
வாழ்வில் பேருந்தில் பயணம் செய்த போது நடந்த சம்பவத்தை எழுதிட்டேன்.
என் கதையில் எபி எப்படியோ அப்படித்தான் படத்தின் கதாநாயகன் தினாவும்.
பள்ளி வயதில் நந்திதா, கல்லூரி பருவ நந்திதா , கல்லூரி நிறுத்தும் போது
காதலுக்காக உருகும் நந்திதா என எதார்த்த நடிப்பில் நம்கல்லூரிக்காதலியை,அயல்வீட்டில் குடியிருக்கும் அத்தைப் பெண்னை  நினைவுப்படுத்த தவறவில்லை. அதனால் நந்திதாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு அதிகம் .




தினாவுக்கு பள்ளி வயது நந்திதாவுடன் ஏற்பட்ட காதல், அதன் பின் துண்டிப்பு, அதன் தொடர்ச்சியாக கல்லூரியில் சந்திப்பு, நந்திதாவே வழிய வந்து தினா தினா என உருகும் காதல் , கனிந்ததா … இல்லையா? என்பது தான் கதை..

தினா அருமையான நடிப்பு ,நம்மை ஈர்க்கிறது. தினாவின் அப்பா கனகட்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியுள்ளார். அவர் அம்மாவாக நடித்தவர் , தன் கணவர் போதையில் சாப்பிடாமல் இருக்கும் போது உணவு ஊட்டும் காட்சியில்  (மதுரையின் சேரிகளும் இப்படித்தான் உள்ளன) வட சென்னையின் நடுத்தர குடும்பங்களின் அன்றாடக் காட்சியை வெளிப்படுத்தி நம்மிடம் பாராட்டுப்பெறுகிறார் .


பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு வட சென்னையை மட்டும் அல்ல.. பேருந்து காட்சிகளை மிக துல்லியமாக ஒளிப்பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பலம் . “ஆசை ஒரு புல்வெளி” , “ஆடிப் போனா ஆவணி…” பாடல்கள் படத்திற்கு ஹிட் கொடுத்துள்ளது பிளஸ். படத்தின் காட்சி அமைப்பு பேருந்தை மையமாக வைத்து இருந்தாலும் , கதையை போர் அடிக்காமல் நகர்த்தி சென்றவிதம் அருமை என்பதால் டைரக்டர் நம்மை கவர்ந்து இழுக்கிறார்.

அட்டகத்தி கல்லூரி வாழ்வை மையமாக வைத்து எடுத்தாலும், வெகுஜனப்படங்களின் வரிசையில் வெற்றி கத்தி . அட்டக்கத்தி கழுத்தை பதம் பார்க்காது என்பதால் தைரியமாக படம்பார்க்கச் செல்லலாம்.