Sunday, July 29, 2012

புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ


         300 ஆண்டுகளாக கிளார்க்குகளை உருவாக்கிய கல்விமுறையில் மாற்றம் எதிர்பார்த்த கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையால் மாற்றம் நிகழும் என்பது மறுக்கப்படாத உண்மை.

    மாணவனின் முழுமையான திறனை இம்மதிப்பீட்டு முறையால் வெளிக் கொணரலாம்  2009 கட்டாய இலவச கல்விச் சட்டம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் முழுமையான திறன் வெளிப்படும் வகையில் மதிப்பீடு அமைய அனைத்து ஆசிரியர்களும் மாணவனை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து பல சுற்றறிக்கைகள் மற்றும் ஜி.ஓ.க்கள் வெளியிடுவது வரவேற்க்கத்தக்கது.

     நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம் . இயல்பது கறவேல் என சொல்லி கொடுத்தார். இன்றும் அப்படித்தான். ஆனால் அதற்கான அர்த்தம் கேட்டால், அதற்கான உரையை எடுத்து படித்து , அதன் பின் அர்த்தம் சொல்லுவார்கள். நானும் அதை புரியாமலே மனப்பாடம் செய்து கற்று வந்து, அதன் பின் அதனை அனுபவ ரீதியில் அர்த்தம் பெற்றுள்ளேன். அதாவது புரியாமல் அதனை மனப்பாடம் செய்து விடுவது. அர்த்தம் பற்றி பயம் கொள்வது இல்லை. வருத்தப்படுவதில்லை. ஏனெனில் அதனை அடிப்பிறலாமல் எழுதினால் மதிப்பெண். ஆனால், பள்ளிப்படிப்பை முடித்தப்பின் தான் அதற்கான முழுமையான அர்த்தத்தைப் பெற்று , கற்றதன் பயனை அனுபவிக்க முடிந்தது.

      ஆனால், இந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் புரிந்து செயல் படுதல் மட்டுமே சாத்தியம். அனுபவ ரீதியாக ஒரு உண்மையை தெரிந்த பின் அல்லது ஒரு கருத்தினை கற்றுத்தரும்போது அதன் உண்மை தன்மை உணரும் படி கற்றுத்தந்தால் மட்டுமே அவனை முழுமையாக மதிப்பிட முடியும். அனுபவ ரீதியாக தெரிந்த பின் கற்றல் மனதில் அழுத்தமான கருத்து  உருவாகிவிடும். 300 ஆண்டுகளாக மனப்பாடம் செய்து தேர்வில் புரிதல் இன்றி கக்கும் முறை அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.

     0 முதல் 100 வரை 101 முறையில் மாணவர்களை மதிப்பெண் சார்ந்து தரம் பிரித்த முறை மாற்றப்பட்டு, 9 வகையான ஸ்கேல் கொண்டு நாம் மாணவனை வரிசைப் படுத்தப் போகிறோம். இதனால் மதிப்பெண் ரீதியில் மாணவனுக்கு அழுத்தம் இல்லை. பெற்றோர்கள் 100 க்கு 100 என்ற மன அழுத்தத்தை மாணவனிடம் ஏற்படுத்தும் சாத்தியம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் 2 ஸ்கேல் முறை மட்டுமே உள்ளதையும் அறிய வேண்டும்.     

      நமக்கல் மாவட்டதில் நடைப்பெறும் பள்ளிப் பண்ணைகளின் மவுசு இனி குறையும். மனப்பாடம் செய்து அதன் மூலம் இஞ்னியரிங்க் மற்றும் மருத்துவம் செல்லும் நிலை முற்றிலும் மாற்றப்படும். புரிதல், நன்கு அறிதல், தெரிந்த கருத்தினை பயமின்றி எடுத்துரைத்தல், எடுத்துரைப்பது மட்டுமின்றி அக்கருத்தினை நடைமுறைப்படுத்த தெரிந்திருத்தல் போன்ற பண்புகளை பெற்றவனாக மாணவன் இருக்க வாய்ப்பு இப்புதிய மதிப்பீட்டு முறையால் சாத்தியம். அதற்கு முன்பு அப்படி அல்ல.

       பள்ளிப்பண்ணைகளால் ஒரு +1 மாணவனை இருதய அறுவை சிகிச்சை எப்படி செய்ய வேண்டும் என்பதை எந்த வித திக்கு திணறல் இன்றி பிழையும் இன்றி மனப்பாடம் செய்து அதனை எழுத சொல்லிக் கொடுக்க முடியும். இருதய அறுவை சிகிச்சைக்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் எப்படி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மனப்பாடம் செய்த ஒருவனிடம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? யாரும் முன் வருவீர்களா? முடியாது . இனி இப்படிப்பட்ட மொட்ட மனப்பாடம் சாத்தியம் இல்லை.

     அரசு நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை அமுல் படுத்த ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மனம் வைத்தால் தான் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். பெற்றோர்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து , அனைத்து பள்ளிகளிலும் இந்த புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ நடைபெற முயற்சி எடுப்பதுடன் அதனை 100 சதவீதம் வெற்றியடைய செய்ய வேண்டும்.    

Thursday, July 5, 2012

தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள்


    சமூகம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாடங்களைப் பார்க்கும் போது குலை நடுங்குகிறது. சமூகம் மட்டுமே அதனை சுற்றி நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. வீட்டில் ஆரம்பிக்கும் எந்த பழக்கமும் சமூகத்தை தாக்கும் அல்லது சமூகத்தை வடிவமைக்கும் என்ற அடிப்படை நியதி இன்றைய நவீன காலத்தில் மாறு பட்டு சமூகங்கள் மட்டுமே நம் குடும்பங்களின் அமைப்பை அல்லது குடும்பத்திலுள்ள அங்கத்தினரின் குணங்களை வடிவமைக்கின்றன.

   குறிப்பாக நம் குழந்தைகள் பள்ளிகளில் கற்றுக் கொள்வதைவிட தம்மை சுற்றி நடக்கும் விசயங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் அதிகம்.

   வெட்ட வெளிக்கு குழந்தைகளை அழைத்து , நிலவையும் நட்சத்திரங்களையும் காட்டி உணவூட்டும் பழக்கம் அரிதாகி , டி.வி. நாடகங்களை போட்டுக் காட்டி , உணவை திணிக்கும் பழக்க வழக்கம் பெருகிவிட்டது. அப்பு செல்லம் ,செல்லம், செல்லம், செல்லமே அடுத்து  தொடங்கும்  குழந்தைகளின்  உறக்கம் இன்னும் விரிவடைந்து சிரிப்புலோகம் நிகழ்ச்சியையும் தாண்டினாலும் ஆச்சரியப்படலாம். குழந்தைகள் உறக்கம் குறைந்து, மனவளர்ச்சியின் அளவும் குறைந்து வளர்ந்து வருகிறார்கள். அதனால் எதையும் பார்த்தவுடன் அதன் தாக்கத்தை அறியாமல் அதை கடைப்பிடிப்பதில் குழந்தைகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.


    பள்ளி தொடங்கி ஒரு மாதமாகிய நிலையில், நேற்று ஒன்றாம் வகுப்பு 'அ' பிரிவு ஆசிரியர் என்னை வந்து பார்த்து சொன்ன விசயம் அதிர்ச்சி அடைய வைத்தது. சமூகம் எவ்வளவு பெரிய தாக்கத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தியுள்ளது !

     சிறு குழந்தைகள் வண்டி ஓட்டுவதை வேடிக்கை பார்த்ததும், தானும் அதேப் போல வண்டி ஓட்டி விளையாட முயல்வது வழக்கம்.  பேருந்து ஓட்டுவது போல கையை சுழற்றி ஆட்டிக் கொண்டு விளையாடுவதும் , கையை திருகி கொண்டு இரு சக்கர வண்டி ஓட்டுவது போல் விளையாடுவதும் இயற்கை. அந்த ஆசிரியரின்  வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒருவன் மதிய உணவு இடைவேளை மற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளான். இதுவல்ல விசயம். அவன் கையில் கைக் குட்டையை சுற்றிக் கொண்டு வட்டையை சுழற்றுவது போல பாவனை செய்து பேருந்தை பாம் பாம் பீ பீ என சத்தம் கொடுத்து  இயக்கி உள்ளான். பேருந்து இயங்கத் தொடங்கிய சிறிது நேரம் கழிந்த பின் கை குட்டையை காதில் வைத்து , “ ஹாலோ, நான் தான் ரவி பேசுறேன்.. அனுப்பானடியில இருக்கேன்.. இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவேன்.. சாவு கிராக்கி வண்டியில மோதுர மாதிரி வற்ரான் பாரு..”( கையை வட்டையை பிடித்து சுழற்றுவது போல பிடித்து கொண்டு , இப்போது கைக் குட்டை காதிற்கும் தோள்பட்டைக்கும் நடுவில் கழுத்து  சாய்த்து கைக்குட்டை கீழே விழாமல் இருக்க ) பேருந்தை இயக்குகிறான் என்று சொன்னார்கள். சமூகத்தில் செல் போன்  ஓட்டிக் கொண்டு வண்டி ஓட்டுவது பெருகி , அது நவீன காலத்தின் கலாச்சாரமாக மாறி , அப்பழக்க வழக்கம் ஆபத்தை உணராமல் குழந்தைகளுக்கும் தொற்றி வருவதைக் கண்டு ஆசிரியர் வருந்தம் தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் கவிழ்ந்த பேருந்துக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்பட்ட செய்தியை எனக்கு நினைவூட்டியது. ஆசிரியரின் உரை எனக்கு கன்னத்தில் அறைந்தது போலவும் இருந்தது. நானே பல சமயங்களில் வண்டியை நிறுத்தாமல் செல் போன் பேசிய நிகழ்வுகள் வந்து சென்றன. தருமி அய்யா அவர்கள் செல்போன் பேசிய பெண்ணுக்கு அறிவுரைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது.

      சமூக நிகழ்வுகள் நம் சந்ததிக்கு விட்டுச் செல்லும் எச்சங்கள் பயனுள்ளதாக அமைய நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சமீபத்திய சர்வே படி இரண்டு லட்சத்து எண்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஹெல்மட் அணியாமல் தமிழகத்தில் வண்டி ஓட்டுவதாக கூறுகிறது. வாகன்ங்கள் ஓட்டும் போது செல் போன் பேசுவோர் எண்ணிக்கை அதையும் தாண்டும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
செல் போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுவது, ஹெல்மட் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவது, சாலையில் வண்டியை கவனிக்காமல் செல் போன் பேசிக் கொண்டே சாலையை கடப்பது, டீக்கடையில் குடிக்கும் நெகிழிக் கோப்பையை ரோட்டில் தூக்கி எறிவது, நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் சிறுநீர் கழிப்பது , எச்சில் துப்புவது, பலர் முன்னிலையில் மூக்கை நோண்டுவது என  இன்னும் தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள் , அல்லது கலாச்சரமாகப் பின்பற்றப் படும் தவறுகள், தவறுகள்  என உணரா தவறுகள் தினம் தினம் குழந்தைகள் மனதில் படியும் போது அவை தன்னையறியாமல், அதன் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், அவற்றை நவீன காலத்தின் நாகரீக பழக்க வழக்கங்களில் ஒன்றாக பின்பற்றுவது வருத்தம் அளிக்கிறது.

    இவை தொடருமானல்,  குழந்தைகள் எதிர்காலம் இன்னும் மோசமானதாகவும்,  குற்றங்கள் நிரம்பியதாகவும் இருக்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.