Saturday, June 27, 2015

குழந்தை கொத்தடிமைத்தனம் இல்லை என்று யார் சொன்னது!




குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஒரு சரியான தகவல் நமக்கு கிடைக்க வில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2004 ன் படி 8.4 மில்லியன் என்கிறது. சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் 3000க்கு மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக செய்தி படித்தேன்.
குழந்தை பள்ளிக்கு செல்ல வில்லை என்றால் என்ன நிகழும்? உழைப்பாளியாக மாறிவிடுவார்கள். அக்குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும். குழந்தைகளுக்கு குழந்தைக்குரிய அனுபவங்கள் கிடைக்காமல் போய் விடும்.



இந்த அவலம் நிகழாமல் இருக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வரும் வகையில் கற்றல் பணி செய்ய வேண்டும். அவர்களின் பெற்றோர்களிடம் கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். மாணவர்களின் சமூக பொருளாதர நிலையை கண்டறிந்து உதவிட வேண்டும். பெற்றோர்களிடம் தொடர்ந்து பேச வேண்டும். கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
குழந்தை தொழிலாளர் முறை என்று இல்லை என்று கூறுபவர்களுக்கு சாட்சியாக ஒரூ நிகழ்வை சுட்டி காட்ட விரும்புகின்றேன். ஆதரவு நிலைப்பாடு எனும் போது எப்படி போராடுவது என்பவர்களுக்கும் ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.




எனது பள்ளிக்கு சிந்தாமணிப்பகுதியில் இருந்து மாணவர்கள் வருகின்றார்கள். சிந்தாமணி பகுதியில் அப்பளக்கம்பெனிகள் நிரம்பிய பகுதி. அங்கு வாழும் மக்கள் தினக்கூலிகளாகவோ அல்லது வார சம்பளம் பெறுபவர்களாகவோ இருப்பார்கள். நடுத்தர வர்க்கமும் மிகவும் பொருளாரத்தில் பின் தங்கியவர்களும் வாழும் பகுதி.
இரண்டு வருடங்களுக்கு முன் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தை இரண்டு நாள்கள் பள்ளிக்கு வரவில்லை. விசாரிக்க சொன்னேன். அவர்கள் தாய், தந்தை அப்பளக்கம்பெனியில் அட்வான்ஸ் பெற்று
அதை திரும்ப தர இயலவில்லை. தாய்க்கு உடம்பு சுகமில்லை. ஆகவே, கடனை அடைக்க கூலி வேலைக்கு தன் மகளை ஓனரின் கட்டாயத்தில் அனுப்பி உள்ளார் என்ற விபரம் அறிந்தேன். உடனே ஆசிரியரை அனுப்பி பெற்றோரிடம் முறையிட சொன்னேன். அவர்கள் வறுமையை சுட்டி காட்டினர். நீங்க வேணும்னா 40 ஆயிரம் தாங்க என பேசி உள்ளார். தெரிந்தநபர்கள் மூலமாக ஓனரிடம் பேச செய்தேன். அவர் இதை அறியாதவர் மாதிரி, அப்படி யாரும் தன்னிடம் வேலை பார்க்கவில்லை என்று அடம் பிடித்து பேசினார்.
கடைசியில் சைல்ட் லைனுக்கு ஆசிரியரை பேச செய்தேன். அவர்கள் விபரம் மட்டும் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம் என கூறி வைத்துவிட்டனர்.
குழந்தையை காண வீட்டிற்கு சென்றேன். அவரின் தாயிடம் குழந்தையை வேலைக்கு அனுப்புவது தவறு . சட்டப்படி குற்றம். நான் புகார் அளித்தால் அது மேலும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று மிரட்டி வந்தேன்.
அடுத்த நாள் உடனே பிள்ளையை அனுப்பி விட்டார். ஆனால்
அப்பளக்கம்பெனிக்காரர் அவர் உறவினர் மூலம் அப்பகுதியில் தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் எங்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என கூறி விட்டார்.
அடுத்தவருடம் டிசி வாங்கி அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.



குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமைக்கான ஆதரவான சூழ்நிலை,பெற்றோரிடம் விழிப்புணர்வு, நல்ல ஆசிரியர்கள் ஆகியோரால் மட்டுமே சாத்தியம். அப்போது மாணவியின் பெற்றோரை அணுகி பேசிய எங்கள் பள்ளி தங்கலீலா ஆசிரியரை நினைத்து பார்க்கின்றேன். சைல்ட் லைனில் பேசிய போது அவர் அடைந்த பதற்றம் சிரிப்பு வரவழைத்தது. பயம் . தன்னை பற்றி விசாரிப்பார்களோ என்று, நான் தைரியமாக தலைமையாசிரியர் தான் பேச சொன்னார் என்று கூறி வெற்றி கண்டோன். அப்பெண் வேறு பள்ளியில் சேர்ந்தாலும் அந்த ஆசிரியரின் தொடர் கண்காணிப்பு பாராட்டுகுரியது. அவளை வேலைக்கு அனுப்பினா நான் புகார் அளிப்பேன் என தொடர்ந்து அந்த பெற்றோரிடம் கூறிவந்தார்.
பள்ளிக்கு செல்லா எல்லா குழந்தைகளுக்காகவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் போராட வேண்டும்.


நேற்று என் குழந்தைகளுக்கு அறிவியல் இரண்டாம் பாடத்தில் மதிப்பீடு செய்ய விளையாட்டு கற்று கொடுக்கப்பட்டது. சரணாலயங்களும் அங்கு வாழும் விலங்குகள் குறித்தும் மதிப்பிடப்பட்டது.
முதுமலை என்று கூறினால்,மாணவர்கள் யானைப்போல் செய்து காட்ட வேண்டும். கிண்டி என்றால் மான் போல் குதித்து காட்ட வேண்டும். பன்னீர் கட்டா சூ என்றால் பட்டாம் பூச்சி பறப்பது போல் கை அசைக்க வேண்டும். கிர் காடு என்றால் சிங்கம் போல் கர்ஜனையுடன் செய்ய வேண்டும். முண்டந்துறை என்றால் புலி மாதிரி பாய்ந்து காட்ட வேண்டும். வேடந்தாங்கல் என்றால் பறவை போல் பறந்து காட்ட வேண்டும்.
மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். தவறான செய்கை காட்டும் மாணவர்கள் விளையாட்டில் இருந்து விலக்க படுவார்கள். பின்பு அவர்கள் விளையாட்டை நடத்தும் தலைவனாக விளையாட்டு தொடரும். தொடர்ந்து விளையாடுதல் மூலம் அப்பாடப்
பகுதியில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.
பள்ளியில் குழந்தைகள் குறித்து யோசனை செய்யும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து பேசியப்படி உங்களுடன் விளையாட்டை பகிர்கின்றேன்.
நாளை அரசு மான்யம் உபரி ஆசிரிர்கள் மூலம் எப்படி வீணாக்கப்படுகின்றது என்று கட்டுரையை வாசிப்போம்.
கல்வி குறித்து மாற்றி யோசிப்போம்.
மதுரை சரவணன்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள்...

”தளிர் சுரேஷ்” said...

கொத்தடிமை முறை இன்னும் இருப்பது வேதனையான ஒன்று! அரிசி ஆலைகள், செங்கல் சூளைகளிலும் படிக்க வேண்டிய சிறுவர்கள் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

'பரிவை' சே.குமார் said...

கொத்தடிமைத்தனம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
நல்ல பகிர்வு சரவணன்...

Post a Comment