Tuesday, June 16, 2015

வகுப்பறையில் பேயை கொண்டு வந்த மாணவன்! - அதிர்ச்சி தகவல்!

தயவு செய்து வகுப்பறையில் மாணவர்களுடன் உரையாடுங்கள்!

*

மாணவர்களிடம் உரையாடும் போது, சமய நம்பிக்கைகளும் சடங்குகளும் அவர்கள் மனதில் விதைவிட்டு கிளைப்பரப்பி விரிந்துதுள்ளன என்பதை அறிய முடிகின்றது. அதேவேளையில் இந்த நச்சை எப்படி களைவது என்பதிலுள்ள சிக்கல் ஆசிரியர்களுக்கு மட்டுமே பெரிய சுமையாக உள்ளதையும் உணர முடிகின்றது.

நேற்று என் பள்ளியில் புவிவெப்பமாதல் குறித்து உரையாடலை மாணவர்கள் மத்தியில் தொடங்கினேன்.

“முன்னெல்லாம் வெளியே சென்றால், அவ்வளவாக வியர்க்காது. வெப்பமா இருக்காது. தலையெல்லாம் சுடாது. வெட்க்கையா இருக்காது. இப்ப என்னடான்னா.. வெளிய தலைக்காட்ட முடியலை.. சூடு அதிகமா இருக்கு. பூமி வெப்பமா இருக்கு. இதுக்கு எது காரணம் தெரியுமா?”

“புகை, சார்” என்றான், மணிகண்டன்.
“புகைன்னு மொட்டையா சொன்னா எப்படி ?” எதிரே இருந்த கீர்த்தனா சிரித்தாள். சிக்ரெட் புகையா?

“ சார், வாகனப்புகை, தொழிற்சாலை புகை “ என்று விளக்கமாக பதிலளித்தான்.

“அது சரி, வாகனப்புகை முன்னேயும் இருந்துச்சு.. ” என்றேன். அதற்குள் முனிஸ்ரீ , “இப்பரெம்ப அதிகமாக இருக்கு “ என்றான். ”வெரி குட், இந்த புகைக்கும் புவியின் வெப்பம் கூடுவதற்கும் என்ன சம்மதம்? ” என கேட்டேன்.

“சார், சாமி மேலே இருக்கா...” என்று இழுத்தான் ராகவன்.

“என்னது.. விளக்கமா சொல்லு...எல்லோரும் கொஞ்சம் தம்பி சொல்றதை கேளுங்கள்”

“சார், அதான் சார் கடவுள் . (ஆமாம்) அவரு மேலே இருக்காருல்ல..இந்த புகை எல்லாம் மேலே போகுதுல்ல..அப்ப அவருக்கு கண்ணு எரியும் தானே.. (ஓ அப்படியா?) அப்ப கடவுளுக்கு கோபம் வந்துச்சா.. அவரு அப்படியே பூமியோட வெப்பத்தை கூட்டிட்டாரு.சபிச்சுட்டாரு”

(சிரிப்பு வந்தது. )

“ஓ, சூப்பர். இவன் சொன்னதில் இருந்து ஒரு விசயம் தெளிவா புரியுது. புகை வானத்தில் அதிகமாக செல்வதால், புவி வெப்பமாகின்றது. சரி தானே. (ராகவன் தலையாட்டினான்) நாம எந்த வழிகளில் எல்லாம் புகையை மேலே அனுப்புறோம். வாகனம் , தொழிற்ச்சாலைன்னு மணிகண்டன் சொல்லி இருக்கான். வேறு யோசிச்சு சொல்லுங்க..”

“சார்.. பிளாஸ்டிக் குப்பையை எரிக்கின்றோம்” என்றாள் கீர்த்தனா.
அவள் அருகில் இருந்த ப்ரியா , பிளாஸ்டிக் இல்ல , நெகிழிக்குப்பைன்னு சொல்லு. சார் டையர், ரப்பர் போன்றவற்றை எரிப்பதனால் புகை உண்டாகின்றது” .

”சார், வயர் எரிப்பாங்க சார்...” என்றான் ரா. மணிகண்டன்.

“வீட்டில் இருக்கின்ற .. பிரிஜ் வெளியிடுகின்ற காற்று...சிஎப்சி என்கின்ற குளோரே புளோரே கார்பன் போன்ற வாயுக்கள் புவி வெப்பதுக்கு முக்கிய காரணமா இருக்கு ” என்றேன்.

“சார், ஏசி ரூம், ஏசி கார்...” என்றான் வீர மணிக்கண்டன்.

“சூப்பர். இப்ப கவனி. இந்த புகை எல்லாம் மேலே போய் என்ன செய்யுது?”.என கேட்டேன்.

“மேலே போய் மேகமா மாறுது ”என்றான் ராகவன்.

“டேய், மேகமாவா மாறுது...?” என்றேன்.

“சார், மழை வந்தா கண் எரிதுல..அந்த காத்து தானே மழையா வருது..அந்த மழை தோலில் பட்டால் வெந்து போகும் “ என்றான் முகிலன்.

“மேலே காத்து கடவுள் வீட்டுக்கு போகுது சார்...”என்றான், முனிஸ்ரீ.

”கடவுள் வீடு எல்லாம் வேணாம். மேலே என்ன இருக்கு சொல்லுங்க..”
“மேகம்.. “ “சார் சூரியன்”
அப்புறம் ...

“வானம்.. “ அப்புறம்.
”சார் விண்வெளி “ என பல குரல்கள் ஒலித்தன.

“வானத்தில் , விண்வெளியில் சூரியன் இருக்கு. அது தான் நமக்கு வெப்பத்தை தருது. சரிதானே..”

”சார்.. சூரியன் தான் சார்... ஓவரா வெயில் அடிக்கிறதால.. நமக்கு பூமி வெப்பமா இருக்கு “ என்றான் சமயவேல்.

“இதுக்கு முன்ன இதே சூரியன் தானே இருந்துச்சு.. அப்ப எல்லாம் இல்லாத வெப்பம் தீடீர்ன்னு எப்படி கூடுச்சு...”

“சார் கடவுள் மேலே இருக்காரா.. அவரு கண் எரியுதா.. சூரியனை வச்சு..நம்ம எல்லாம் வாட்டுறாரு சார்..அதான் ஒரே வெப்பமா இருக்கு” என்று மீண்டும் ஆரம்பித்தான் ராகவன். அவனோடு பலரும் ஆமாம் சார் என தலை அசைத்தனர்.

“ தம்பி சூரியன் தீடீர்ன்னு வெப்பத்தை எப்படி கூட்ட முடியும். நீ சொல்ற மாதிரி கடவுள் சொல்லிட்டார்.. எப்படி இது சாத்தியம். ”
அனைவரும் சிரித்தார்கள்.

“யோசி, சூரியனின் வெப்பம் அதிகமாகிருக்கு. நாம் புகையை மேலே நிறைய அனுப்புறோம். அந்த புகைக்கும் இந்த சூரியனுக்கும் நடுவில் வானத்தில் என்னமோ நடந்து இருக்கு..யோசி..”

”சார்.. அதுவந்து சார்... மேலே..” என இழுத்தாள் கீர்த்தனா.

“இப்ப நாம் குளிருதுன்னா..வச்சுக்க உடனே கம்பளி போர்த்தி குளிரில் இருந்து பாதுகாத்து கொள்கின்றோம். அதே மாதிரி சுடுதுன்னு வச்சுக்க.. பாத்திரத்தை கையில் சூடுபடாம தொட துணி வச்சுக்குவோம்.. அது மாதிரி.சூரியன் வெப்பம் நேரடியா விழாம இருக்க...”

“சார்.. சாமி தப்பு செய்தா.. தண்டனை தரும். புகையை மேலே கடவுள் வீட்டுக்கு அனுப்புறோமில்லே அதான் கோபிச்சு.. நம்ம வசிக்கிற பூமியை சூடாக்கிட்டார் ” என்றான் சமயவேலும் ராகவனுடன் இணைந்து.

“யோசி.. சாமியை மறந்து யோசி...புகையை மேலே அனுப்புறோம். இதுக்கு முன்பும் புகையை அனுப்பி இருக்கோம். ஆனா இப்ப மட்டும் பூமியில் வெப்பம் அதிகம்..அப்ப வானத்தில் என்னமோ நிகழ்ந்து இருக்கு..யோசி” என்றேன்.

”கீர்த்தனா.. வானத்தில் சூரியன் வெப்பத்தை தடுக்க ஒரு போர்வை இருக்கு சார்.. அதுல ஓட்டை விழிந்திருச்சு...4வதுல .. படிச்சு இருக்கேன்,சார்..,அது வந்து ...”

“வெரி குட்..... நம்ம சூரியனின் அக,புற ஊதாகதிர்களில் இருந்து பாதுகாக்க ஓசேன் படலம் வானத்தில் உள்ளது. அதில் நாம் அனுப்பும் இந்த வாயுக்கள் ஓட்டையை உருவாக்கி இருக்கு.. அதனால் நேரடியாக சூரியன் பூமியின் மீது படுவதால்..வெப்பம் கூடியிருக்கு..”

“ஆமாம் சார்.. ஓசோன் படலம் ஓட்டையாகிடுச்சு..” என அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.

“இப்ப சொல்லு .. பூமி வெப்பத்துக்கும் கடவுளுக்கும் சம்மதம் உண்டா..?”
அனைவரும் சிரித்தனர்.
“சரி புகையை குறைக்க என்ன செய்யலாம்?”
“எல்லோரும் நடந்து போவோம் சார். வண்டி ஓட்டக்கூடாது சார்.”
“சார்..எங்க வீட்டில் சைக்கிள் மட்டும் தான் சார்.. எங்கப்பா வண்டியை வித்துட்டார்.. “ என்றான் பா. மணிகண்டன்.
“வெரிகுட்..”
“அப்புறம் ஏசி போடக்கூடாது. ப்ரிஜ் யூஸ்பண்ணக்கூடாது..”
”சார், மரம் வெட்டக்கூடாது. மரம் வளர்க்கணும்”
”சூப்பர் ...ஏன்? “
“ மழை தரும்...”
“ வேற..ஏன் மரம் வளர்க்கணும்.. இந்த புகைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இருக்கான்னு யோசி.”
“சார்.. மரம் காத்த உறிஞ்சுக்கிடும்...” என்றாள் ப்ரியா.
”இப்படி தான் அறிவியல் பூர்வமாக சிந்திக்கணும். ஒரு கதை சொல்றேன். கதைக்கு முடிவை அறிவியல் பூர்வமா சொல்லணும்.”

ஒரு ஊரில் ஒரு அம்மாவும் மகனும் வசித்து வந்தாங்க. ஒரே மகன். அவன் படிச்சு முடிச்சுடுறான். பக்கத்து டவுனில் வேலை கிடைச்சு போச்சு. மகன் அம்மாவை விட்டு டவுனில் வேலைக்கு சேர ஆசை படுகிறான். அம்மாவுக்கு மகனை அனுப்ப விருப்பம் இல்லை. ஒத்த மகனாச்சே. ஒரு யோசனை செய்கிறா? அவன் கிட்ட ஒரு சத்தியம் வாங்குறாங்க. அந்த காலத்தில் டவுனுக்கு போகணும்ன்னா.. மாட்டு வண்டியிலோ இல்லை நடந்தோ தான் போக வேண்டும். அதுனால வழி நெடுக பயணப்படும் போது சாப்பிட லெமன் பொட்டலம் தயார் செய்து தருகின்றாள். மகனே நீ போகும் போது புளிய மரத்தில் ஓய்வெடுத்து உறங்கு.. நகரத்தில் வேலை சேர்ந்து ஒருவேளை பிடிக்க வில்லை என்றால் வரும் போது வேப்ப மரத்தடியில் படுத்து உறங்கி வா என்று சொல்லி அனுப்புகிறாள். அவன் போன வேகத்தில் வேலையில் சேராமல் அம்மாவை தேடி ஓடி வந்துவிட்டான். எப்படி? என கேட்டேன்.

நம்ம ராகவன். ஒரே வரியில் விடை சொன்னான். சார் புளிய மரத்தில் பேய் இருக்குமா. அவன் நைட் தூங்கும் போது அவனை பயமுறுத்தி அவனை பிடிச்சு கிறும்..அவன் பயந்து .வேலைக்கு போகல.. வரும் போது வேப்ப மரத்தில் மாரியாத்தா.. இருக்குமா.. அந்த சாமி பேயை ஓட்டிடும். அதுனால சந்தோசமாக, அவுங்க அம்மாகிட்ட மகிழ்ச்சியா திரும்பி வந்துட்டான்”

“உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது” என்று விவேக் மாடுலேசனில் சொல்லி விட்டு.. சாமி பூதம் ன்னு போலியான விசயமா சிந்திக்காம , அறிவியல் பூர்வமா யோசி.. உங்க அம்மா அப்பாகிட்ட இந்த கதையை சொல்லி விடை தெரிஞ்சுகிட்டு வா என பாடத்தை முடித்தேன்.
(இந்த உரையாடல் நிகழும் போது கலகல வகுப்பறை சிவா என் வகுப்பில் அமர்ந்து மாணவர்களின் பேச்சை கவனித்து கொண்டிருந்தார்)

மதுரை சரவணன்.

4 comments:

Unknown said...

எவ்வளவு பெரிய சீரியசான விஷயத்தை ... இவ்வளவு எளிதாக நாசூக்காக சொல்லிவிட்டீர்கள். மிகவும் ரசித்து படித்தேன், அதுமட்டும் அல்லாமல் இவ்வாறாக நாமும் எழுத வேண்டும் என்ற உற்சாகமும் பெற்றேன். தொடர்ந்து எழதுங்கள், வாழ்த்துக்கள் !

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கிய விதம் ரொம்பவே அருமை...

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையாக வகுப்பெடுத்துள்ளீர்கள்! உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

தருமி said...

நல்ல வாத்தியார்.
பெருமையாக இருக்கு,
வளர்க...வளர்க்க ....

Post a Comment