Wednesday, March 11, 2015

சுதந்திரமான கற்றல் ..எல்லாம் சாத்தியமே..!


குழந்தைகள் எப்போதும் ஆச்சரியமும் அதியசமும் நிரம்ப இருப்பவர்கள். அவர்கள் இடங்களை வகுப்பறையின் பல நேரங்களில் ஆசிரியர்கள் நிரப்பி கொள்கின்றார்கள். ஆசிரியர்கள் நிரப்பா அந்த பாத்ரூம் இடைவேளையில் மட்டுமே தங்களால் ஆன விளையாட்டுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்கின்றார்கள். ஆனால் அங்கும் நாம் ஒழுங்கு என்கின்ற பெயரில் கட்டுப்பாடுகளை விதிக்கின்றோம். என்ன கொடுமை சரவணா ! இது எனது மனக்குரல் எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வதும் உண்டு.

கொஞ்சம் வீட்டிலும் பள்ளியிலும் அவர்களுக்கான சுதந்திரத்தை தாருங்கள். அவர்கள் எவ்வளவு அதிசயங்களை புதைத்து வைத்துள்ளார்கள் என்பது புரியும்.

நேற்று விலங்குகள் அல்லது பறவைகளுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுங்கள் என்றேன். அனைவரும் முழித்தார்கள். அவர்களின் திண்டாட்டதிற்கு காரணமும் உண்டு , நல்ல அனுபவமா அல்லது கெட்டதா ? என்பது தான்!

நான் முதலில் எனது அனுபவத்தை கூறினேன். சிறுவயதாக இருக்கும் போது கடவாய் கூட கழுவாமல், எழுந்தவுடன் ரோட்டு முக்கில் உள்ள புட்டுக் கடையில் புட்டு வாங்கி அப்படியே சாப்பிடுவது உண்டு. இதனால் சில நேரங்களில் என் அம்மாவிடமும், பல நேரங்களிலும் எங்கள் பக்கத்து வீட்டு மாமாவிடமும் வசவும், அடியும் வாங்கியது உண்டு. அப்படி ஒரு சமயம் நான் பிட்டு வாங்கி சாப்பிடும் போது அந்த மாமா என்னை பார்த்து விட்டார். உடனே நான் தயங்கி பதுங்கி சென்றேன். அவர் என்னை பார்த்து விட்டார். டேய் மாடு ! என்றார். நான் காது கேளாதவன் மாதிரி நடந்தேன். டேய் மாடு! திரும்பி பாருடா என்றார். நான் திரும்பி பார்க்காமல் சென்றேன். திரும்பவும் மாடு என்றார். நான் நிற்க தொடங்கினேன். அதற்குள் பின்னால் ஒரு மாடு என் முதுகை முட்டி சட்டையை கிழித்து என்னை தூக்கி எறிந்தது என்றேன். சார் நிஜாமாவே நடந்தா ? என கேட்டான் ,மணி.

வசந்த் , “இப்படி தான் சார், எங்க வீட்டுப்பக்கம் ஒரு அண்ணன் டேய் நாய் என்றார். நான் காய போட்டிருந்த நெல்லின் மீது நடப்பதால் திட்டுறார் என நினைத்து , அங்கிருந்து இறங்கி நடந்தேன். பார்த்தா ஒரு நாய் ஓடி வந்து கடிச்சு போட்டது என்றான். அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

கஜேந்திரன், “சார்,நல்லா பழகின நாய் சார், நாய்ன்னா எனக்கு ரெம்ப பிடிக்கும். நான் எல்லா நாயையும் அன்பா முதுகுல தடவுவேன். அப்படி ஒரு நாள் எங்க திண்ணையில் படுத்திருந்த நாயை தடவினேன். திரும்பி கடிச்சிருச்சு..அப்புறம் தொப்புளை சுத்தி ஊசி போட்டேன் “

அனைவரும் சிரித்தனர்.

சரி பாசிடிவ்வா சொல்லுங்க என்றேன். ஒரு சிறுமி எழுந்தாள். நான் சொன்னா சிரிக்க கூடாது என்றாள். சரி சொல்லு என்றேன். நான் சின்ன பிள்ளையா இருக்கிறப்ப.. எங்க வீட்டில ..ஜூலி என்ற பொட்ட நாய் வளர்த்தோம். அனைவரும் சிரித்தனர். சார்..பொம்பள நாய.. பொட்ட நாய்ன்னு தான்னே கூப்பிடணும் என கேட்டாள். நீ ஜூலின்னே சொல்லு எல்லோருக்கும் புரியும். மீண்டும் கதையை தொடர்ந்தாள்.

“சார், எங்கம்மா.. தரையில என்னை படுக்க வச்சிட்டு..வீதியில் காய்கறி கடை போடு இருப்பாங்க.. என் பக்கத்தில அந்த ஜூலி நாய் படுத்து, பாதுகாப்ப இருக்கும். ஒருநாள் நான் தூங்கி எந்திருச்ச வுடனே அழுது இருக்கேன். அம்மாவுக்கு கேட்கல.. நான் என்ன செஞ்சேனா.. அந்த ஜூலி கிட்ட பால் குடிச்சிட்டேன். “ என சிரித்தாள்.

நிஜமாவா என கேட்டேன்.

“ஆமா சார் “

“சார்.. இந்த புள்ள இவ்வளவு அறிவா இருக்கிறப்பவே நினைச்சேன். நாய் பால் குடிச்சா புத்திசாலியாகலாம்” என சிரித்தாள் மோனிசா.
கொஞ்சம் பேசி பாருங்கள். சுவரசியமான செய்திகள் கிடைக்கும். வகுப்பறை ரசிப்பு தன்மையுடன் பயனுள்ளதாக கழியும்.

மதுரை சரவணன்.

3 comments:

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்

திண்டுக்கல் தனபாலன் said...

பய புள்ள ரொம்ப அறிவாளி... ஹா... ஹ...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment