Friday, November 28, 2014

விருதுநகர் மாணவர் கொலை பின்னனி? யார் குற்றவாளி?


என்ன சொல்வதென்று தெரியவில்லை ?  மாணவர்களிடம் ஏன் இப்படிப்பட்ட ஒழுக்க கேடான செயல்கள் இருக்கின்றன என தெரியவில்லை.  மாணவர்களிடம் மோதல் , கொலை, கடத்தல் என மோசமான செயல்களில் ஈடுப்படுகின்றார்கள். யாரை குறை கூறுவதென்று தெரியவில்லை.
ஆனாலும் மனம் வலிக்கின்றது. ஏன் குழந்தைகள் தங்கள் மனதில் வன்மத்தை வளர்த்து கொள்கின்றன?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக கொண்டு பாடம் நடத்துகின்றனர். சோசியல் மீடியாக்களில் ஆபாசம் மட்டுமே பெரிதாக படுகின்றது மாணவர்கள் பருவத்தில் !

மாணவர்களின் ஒழுக்க கேடான செயல்களுக்கு காரணம் என்ன? ஏன் ?

எல்லோரும் இயந்திரத்தனமாக இருக்கின்றார்கள். பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருக்கின்றார்கள். ஆசிரியர்கள் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் இயந்திரமாக இருக்கின்றார்கள். மாணவர்கள் தங்களின் குழந்தை தன்மையை இழந்து விட்டார்கள். மாணவர்கள் தங்களின் இயல்புகளை மறந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.


ஆசிரியர்களும் மதிப்பெண்கள் என்ற அசுரனால், தங்களின் மன நிம்மதியை இழக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பணிபுரியும் இடத்தில்  உள்ள பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருக்கின்றார்கள். இப்படி எல்லா இடங்களிலும் மனம் நிம்மதி இழந்து கிடக்கின்றது.

எந்த இடத்தில் இருந்து நாம் பிரச்சனைகளை ஆராய்வது ? யாரிடம் இருந்து விசாரணைகளை தொடங்குவது? நம் குழந்தைகளிடத்தில் ஒழுக்கம் சார்ந்த குறையை ஏற்படுத்தியது எது?

எல்லாவற்றையும் அவிழ்க்கும் முடிச்சாக நம் கல்வி முறை உள்ளது. குழந்தைகள் மையப்படுத்துதல் எல்லாம் சரிதான். ஆனால் நாம் கவனிக்க மறந்த ஒழுக்கம் சார்ந்த நன்னெறியை எந்த தருணத்திலாவது எதிர்பார்த்திருக்கின்றோமா? இல்லை அது சார்ந்து நாம் யோசித்து இருக்கின்றோமா? பெற்றோர்கள் தங்கள் மகனின் மதிப்பெண் தவிர்த்து பள்ளிகளில் மாணவனின் ஒழுக்கம் சார்ந்து பேசி இருக்கின்றோமா? ஆசிரியர்கள் தான் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்து புகார் அளிக்கின்றோமா?

கலாச்சார ரீதியாக நாம் பலவிசயங்களை முன்னெடுத்து பேசுகின்றோம். எது எதற்காகவோ குரல் கொடுக்கின்றோம். எது எதற்காகவோ ஆதங்கப்படுகின்றோம். அதிகாரிகளும் ஆசிரியர்களும் 30 ஆயிரங்களுக்கு மேல் சம்பளம் வாங்குகின்றார்கள் என பிரச்சனை வரும் போதெல்லாம் பேசுகின்றோம். சாதரணமாக 160 ரூபாய் அடிப்படை சம்பளம் பெற்ற போது இருந்த ஒழுக்க நெறி இல்லை என்கின்றோம்.

கொஞ்சம் நிறுத்தி இங்கு சிந்திப்போம். மாணவர்களை அடிக்க கூடாது, அடிப்பது என்பது மனித உரிமை மீறல் என சட்டம் சொல்கின்றது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது, அதே சமயம் மனரீதியாகவும் புண்படுத்தக்கூடாது என்கின்றது கட்டாய இலவசக் கல்வி சட்டம். ஆசிரியர்களும் பயந்தோ அல்லது சட்டத்திற்கு கட்டுப்பட்டோ அடிக்க தவறுகின்றார்கள். மீறி கோபம் ஏற்பட்டு அடித்தால், மாணவர்கள் அளிக்கும் புகார்களால், சட்டம் தன் கடமையை செய்வதை பல இடங்களில் செய்தியாகவும் பார்க்கின்றோம். இப்போது பெற்றோர்கள் அந்த கடமையை கையில் எடுத்து பள்ளிகளில் அடியாட்களை வைத்து ஆசிரியர்களை மிரட்டி அடிக்கவும் செய்கின்றார்கள்.


மாணவர்களுக்கு கல்வி எதற்காக போதிக்கப்படுகின்றது? இதற்கு பதிலாக பெற்றோர் மட்டும் அல்ல மாணவனும் சேர்ந்து நல்ல வேலை கை நிறைய சம்பளம் என்கின்றார்கள். ஆசிரியரும் அதற்கு தகுந்தாற்போல் அடிக்காமல் பாடத்தை புகட்டி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். இங்கு திறமைகளோ திறன்களோ பரிசோதிக்கப்படுவதில்லை.   இவர் மாணவனுக்கு மதிப்பெண் பெறச் செய்ய ப்ரவேட் டியூசன் எடுக்கின்றார். சட்டம் டியூசன் எடுக்க கூடாது என்கின்றது. ஆனால் இவர்கள் சொல்கின்றார்கள். அச்சட்டம் 1 முதல் 8ம் வகுப்பு வரை சொல்லிக்கொடுக்கும் மாணவர்களுக்கு தான். கட்டாய கல்வி சட்டம் 8 வரை உள்ள குழந்தைகளையும் ஆசிரியர்களையும் குறிக்கின்றது. ஆகவே, நாங்கள் டீயுசன் எடுப்பது தவறில்லை என்கின்றார்கள். இப்படி பெற்றோர்கள், மாணவர்கள் நல்ல சம்பளம் வேலை குறித்தும், ஆசிரியரும் நல்ல மதிப்பெண் அதற்காக காசு என்றும் இருக்கின்றனர்.


இதில் மாணவனின் மனநிலையில் ஏற்படும் அழுத்தம் ஒரு சிலரை தற்கொலைக்கு இழுத்து சொல்கின்றது.  அவர்கள் கோழைகள் என்கின்றார்கள். அதனை நான் மனசு பக்குவப்படாத பிஞ்சுக்கள் என்கின்றேன். சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க , தைரியமாக சோசியல் மீடியாவுக்குள் நுழைந்து பாதை தடுமாறி, பாழான பலவிசயங்களை தெரிந்து, தங்கள் பால்ரீதியான விசயங்களுக்கு தங்களை பலிகொடுத்து இயங்க ஆரம்பிக்கின்றார்கள். அதில் வரும் பிரச்சனை, மன உளைச்சல் தைரியம் அடிதடிக்கு வலிசெய்கின்றது. முடிவில் கொலையாகவும் முடிகின்றது!

கொஞ்சம் யோசியுங்கள். எதற்கும் நான் விடை தேட முயற்சிக்க வில்லை. பிரச்சனைகளை மட்டுமே காரணமாக முன்னிலைப்படுத்த வில்லை. ஆனாலும் இந்த புதிரை அவிழ்க்க வேண்டிய இடத்தில் கல்வியாளர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் உள்ளோம் என்பதை மட்டு ம் மிக ஆழமாக பதிய ஆசைப்படுகின்றேன்.


மதுரை சரவணன். 

Saturday, November 22, 2014

தள்ளாடும் மதுரை


சனிக்கிழமையாகி விட்டாலே பயமா இருக்கு. மாலை 5 மணிக்கு நண்பரை போனில் அழைத்தேன். இன்று மாலை சந்திப்போம் என்று கூறி இருந்தார். அதனை தொடர்ந்து பலமுறை போன் செய்தேன். அவர் எனக்கு எந்த பதிலும் தரவில்லை. வழக்கமாக எஸ்.எம். எஸ் அனுப்பிவிடுவார். வருகின்றேன். இல்லை நீங்கள் போங்கள் என்பார். ஆனால் இன்று அவரிடம் எந்த பதிலும் இல்லை. மழை துணையாக வந்து என்னோடு ஒட்டிக்கொண்டது.

போனை தொலைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. சரி அப்படியே நனைந்தவாரே என் அம்மா வீட்டிற்கு செல்வோம் என்று நினைத்தேன். அதற்கு முன் மீண்டும் ஒருமுறை போன் செய்து பார்ப்போம் என போன் செய்தேன். இப்போதும் அவர் எடுக்க வில்லை. நான் காத்திருக்கின்றேன் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு திரும்பி பார்க்கின்றேன். ஒருவன் என்னைப்பார்த்து பல் இளித்தான். புரியவில்லை. திரும்பி பார்த்தேன். என் பின்னால் எவரும் இல்லை. மீண்டும் சிரித்தான். அவன் தடுமாறி நடக்கும் போது சாராய அரக்கன் அவன் உடம்பில் இருப்பது தெரிந்தது, !

சரி இவனிடம் தப்பிக்க வேண்டும் என்பதற்காக கல்கி வாங்க அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு புகுந்தேன். அங்கே ஒருவன் கடைக்காரரிடம் சிக்ரெட் தா .. நாளைக்கு காசு தருகின்றேன் என வாதாடிக்கொண்டிருந்தான். வருகின்ற கஸ்டமரை கவனிக்க இயலாத அவர், ஒரு சிக்ரெட் மட்டும் தந்து அனுப்பினார். சாய்ங்காலம் ஆயிட்டாலே இப்படி போதைக்கிராக்கிங்க வந்து உயிர எடுக்கிறாங்க..! தெரிஞ்சவன் சார், சிக்ரெட் தராவிட்டால் இங்கேயே டோரா போட்டு விடுவான். அப்புறம் கஷ்டமர்கள் சங்கடப்படுவார்கள் என புலம்பினார் .

சிரித்துக்கொண்டே அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிக்க ஒதுங்கினேன். போன் வந்தது. அவராக தான் இருக்கும் என நினைத்து ஹாலோ என்றேன். இது ஈரோடா என்றான். இல்லை மதுரை என்றேன். அட ஈரோட்டுக்கு போன் போட்டா மதுரைக்கு போகுது.. சரி கொஞ்சம் அப்படியே போன ஈரோடுக்கு கொண்டு போய் கொடு என்றான் போனில் பேசியவன். யாரோ தெரிந்தவர்கள் தான் கலாய்க்கிறார்கள் என நினைத்து, எனக்கு ஈரோட்டில் உள்ள பிரபலம் கதிரை தான் தெரியும் என பதிலுக்கு கலாய்த்தேன். அங்கே இருந்தவன், “ மாமு இவனும் போதையில் இருக்கான் போல தெரியுது. இவன் சரிபட்டு வர மாட்டான் என கட் செய்தான்.

கஷ்ட காலம் ! காலையில் இருந்து நான் யாருக்கு போன் போட்டாலும் போனை எடுக்க மாட்டேன் என்கின்றார்கள். இவர்கள் போனை உபயோகிப்பது எதற்கு? அவசரத்திற்கு கூப்பிட்டால் என்ன செய்வார்களாம் என மனதில் திட்டியப்படி டீ ஆர்டர் கொடுத்தேன். அப்போது ஒருவன் சார் 5 கொடுங்க.. டீ சாப்பிடணும் காசு பத்தலை என்றான். நான் வேறு சிந்தனையில் இருந்ததால் , அவசர பட்டு 5 ரூபாயை கொடுத்து விட்டேன். அவன் சென்று விட்டான். டீக்கடைக்காரர் சார் இப்படி யார் கேட்டாலும் கொடுக்காதீங்க சார். அவன் கட்டிங் போட கேட்கின்றான். அங்கே பாருங்க என்றார். அங்கே இன்னொருவரிடம் நான் கொடுத்த 5 ரூபாயை காட்டி, மற்றொரு 5 ரூபாய் பெற்றான். இப்படியே 100, 200 தேத்தி, 7 மணிக்கெல்லாம் போதையை போட்டு இந்த ரோட்டில் சலம்பி , கடைசியில் மட்டையாகி ரோட்டில் கிடப்பான் என்றார்.

கடைசி வரை நான் எதிர்பார்த்த நண்பர் வரவில்லை. அவரிடம் இருந்து அழைப்பும் வரவில்லை. மழை மட்டும் என்னோடு துணைக்கு இருந்து கொண்டே இருந்தது. அதுவும் என்ன நினைத்ததோ தெரியவில்லை. என்னோடு சேர்ந்து சுத்தினால், எதாவது பிரச்சனை வந்துவிடும் என நினைத்து ஒரு மணி நேரத்தில் அதுவும் டாட்டாக்காட்டி சென்றது. (மழை நின்றது ) அப்போது தான் பார்க்கின்றேன். அந்த டீக்கடையில் மழைக்கு ஒதுங்கியவர்கள் பாதிப்பேர் போதையில் இருந்ததை!

வண்டியை ஸ்டார் செய்தேன். வேகமாக தள்ளாடியப்படி ஒருவன் வந்தான். நிறுத்தினான். மாப்பிள்ளை இதுக்கு மேல வண்டி ஓட்ட முடியலை. எஸ்.இ.வி ஸ்கூல் முன்னாடி வண்டிய பார்க் பண்றேன். ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறேன். வீட்டுக்கு வந்து சாவி வாங்கி எடுத்துட்டு வந்துடு என்றான். தெளிவாத்தான் இருக்காங்க என நினைத்தப்படி வண்டியை எடுத்தேன். ஆட்டோ வந்தது. அவன் ஏறினான். ஆனால் ஆட்டோ தள்ளாடியப்படி சென்றது.

சனிக்கிழமை மாலை ஆகிவிட்டாலே ரோட்டில் வண்டியை ஜாக்கிரதையாக தான் ஓட்ட வேண்டி இருக்கின்றது.
மதுரை சரவணன்.

Friday, November 21, 2014

என்னமா யோசிக்கிறாங்கப்பா...!

எப்பொழுதும் ஆசிரியர்களை விட மீடியாக்கள் மிகவும் பவர் புல்லாக இருக்கின்றன. தான் சொல்லவருகின்ற அனைத்து விசயங்களும் புரிகின்றதா என்பதை உடனடியாக எந்த ஆசிரியரும் சரிப்பார்ப்பதில்லை. அவர்களின் சரிப்பார்ப்பு (மதிப்பீடுகள்) வாந்தி எடுக்கும் வித்தையை மட்டுமே சரிப்பார்க்கின்றன.
மீடியாக்கள் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக சரியான புரிதலுடம் விதைக்கின்றன. இதில் சிறுவர்களிடம் தான் பாதிப்பு அதிமாக உள்ளது.
நேற்று எப்போதும் போல் தமிழ்பாடத்தில் இருந்து பொருள் கூறுககேட்டுக்கொண்டு வந்தேன். அப்போது அம்மா என கேட்டேன். தாய் என கூறுவதற்கு பதிலாக மாணவர்களில் பாதிப்பேர் சத்தமாக மக்களின் முதல்வர் என கூறினர். சிரித்து விட்டேன். மீடியாக்கள் தங்கள் கருத்துக்களை எவ்வளவு பேண்டசியாக திணிக்கின்றன. நாம் தான் மாணவர்களை புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றோம்.
மதுரை சரவணன்.

Tuesday, November 18, 2014

தயவு செய்து என் மீது வாந்தி எடுத்து விடாதீர்கள் !


இன்று ஆசிரியர்கள் என்பவர்கள் பாடங்களைக் கற்றுத்தருபவர்களாகவும் மதிப்பெண்களை எடுக்க வைக்கும் இயந்திரங்களாகவும் செயல்படுகின்றார்கள். வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தருபவர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.

பல இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடைபெறும் கல்விமுறையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.

பெரியவர்களுக்கு கீழ்படிதல், குருபக்தி போன்றவை இல்லாமல் போய்விட்டன. பெரியவர்களையும், ஆசிரியர்களையும் பட்டப்பெயர்கள் கொண்டு அழைக்கும் மாணவர்கள் அதிகமாக பார்க்க முடிகின்றது. இது அவர்கள் குறையா? இல்லை அவர்கள் வளரும் முறையில் உள்ள குறையா? அவர்கள் வளரும்முறையை உருவாக்கும் சமூகக்குறையா?கல்விமுறையில் உள்ள குறையா? கல்வி கொடுக்கும் ஆசிரியர்களிடம் உள்ள குறையா?

இன்று மாணவர்கள் மீடியா உதவியால் தனித்திறமைகளை வெளிப்படுத்துபவர்களாக உள்ளார்கள். தனித்திறமைகள் பெற்றோரின் உதவியுடனே அரங்கேற்றப்படுகின்றன. சாதரணமாக அந்நிகழ்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்கொள்ள இயலாதவர்களாக குழந்தைகள் உள்ளார்கள். காரணம் ஆசிரியர்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை, தோல்வியை எதிர் நோக்கும் பண்பு, போட்டி மனப்பான்மை, குழுமனப்பான்மை, விளையாட்டு விதிகளை பின்பற்றுதல்,விட்டுக்கொடுத்தல், ஒருங்கிணைத்தல், ஒன்றாக செயல்படுதல் என்பது போன்ற இயல்புகள் இல்லாமல் மதிப்பெண் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக செயல்படுவது ஆகும், அதே மனநிலையில் வெற்றி மட்டுமே இலக்காக மேடைநிகழ்வுகளில் செயல்படுவதால் வரும் குறைப்பாடாகும். இக்குறைப்பாடுகளை பயன்படுத்தி மீடீயாக்கள் தங்கள் டிஆர்பி ரேட்டை ஏற்றிக்கொள்கின்றன.

அன்பு , பாசம், மனிதநேயம், மனிதாபிமானம்,சமத்துவம், சகோதரத்துவம், கீழ்படிதல், மதித்தல் போன்ற பண்புகள் மதிப்பெண் கல்வி முறையில் அடியோடு மறக்கடிக்கப்படுகின்றன. இவை எல்லாம் இல்லாத மதிப்பெண் மட்டுமே வாழ்வாக கொண்டவன், சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் போது எப்படி லஞ்சம் இல்லாமல் வாழ முடியும்? லஞ்சம் என்பதை கையூட்டு மட்டுமல்லாமல்,வாழ்வுக்கு ஒத்துவராத பண்பாகவும் பார்க்கவும்.

அப்படியானால் நம் கல்விமுறையில் மாற்றம் வராதா? யார் சொன்னது கல்வியாளர்கள் மாற்றங்கள் ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். கல்வி முறையில் ஏற்படும் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லையா ! இல்லை தயங்கும் ஆசிரியர்களிடம் உள்ள குறைப்பாடு தான் என்ன?

திட்டங்கள் கொண்டு வரும் அதிகாரிகளே அத்திட்டம் நடைமுறைப்படுத்தி வெற்றிப்பெறும் முன் , மதிப்பெண் வேண்டும் , 100 சதவீத தேர்ச்சி வேண்டும் என்று கட்டளை இடுவதும், ஆங்காங்கே மீட்டிங் போட்டு தலைமையாசிரியர்களை வறுத்து எடுப்பதும் ஆகும். செய்திதாள்கள் நாள் தோறும் 100 சதவீத தேர்ச்சி குறித்து பார்க்கும் போது அத்தனை நவீனங்களும் ,குழந்தை மையக்கல்வி முறையும் மீண்டும் மதிப்பெண் என்ற வாந்தி யெடுக்க வைக்கும் முறைக்குள் புதைக்கப்பட்டு விடுகின்றதே என்ற ஆதங்கம் ஏற்படச் செய்கின்றது!

ஆசிரியர்களுக்கு நவீன கல்வி முறை குறித்த பயிற்சி முறையாக கொடுப்பது இல்லை. நவீன கல்வி முறை செயல்படுத்தப்படுகின்றதா என்கின்ற கண்காணிப்பும் இல்லை. முறைப்படுத்தாமைக்கு விளக்கமும் கேட்பதில்லை. எல்லாம் ஒரு வட்டத்திற்குள் செயல்படும் சர்க்கஸ் வித்தையாகவே உள்ளது. ஆம் ரிசல்ட் என்ற புள்ளி எல்லா ஆரம்பங்களையும் தொடக்கப்புள்ளிகளிலேயே நிறுத்தி விடுகின்றது. ஆரம்பித்த இடத்திலேயே ஓட வேண்டியதாக உள்ளதாக ஆசிரியர்கள் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.

ஆரம்ப பள்ளிகளில் செயல்படும் எளிய செயல்வழிக்கற்றல் முறை, படைப்பாற்றல் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால், நாம் எதிர்நோக்கும் குழந்தை மையக்கல்வி முறை நடைமுறைக்கு வந்துவிடும். அது ஏன் குழந்தை மையக்கல்வி முறை ? அப்போது தான் ஆசிரியர்கள் கம்பு எடுத்து தான் சொல்வதை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. இன்னும் புரியும் படி சொன்னால், குழந்தைகள் தங்கள் இயல்பு மாறாமல், ஜாலியாக வெவ்வேறு இடங்களில் சென்று, நண்பர்களுடன், சகஜமாக பேசி, தனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து, தனக்கு தெரியாதவற்றை எந்த சங்கோஜம் இல்லாமல் தெரிந்து கொண்டு, தேவைப்படும் போது ஆசிரியர் உதவியை நாடி, குழந்தை தன் இயல்பில் கற்றுக்கொள்வதாகும்.

வாந்தி எடுக்கும் முறையை ஒழிக்க திறமைக்கு உண்மையான ஆளுமைக்கு மதிப்பு அளிப்போம், மதிப்பெண்களை தவிர்த்து மதிப்பிடுவோம் மாணவனை! மதிப்பு மிக்க சமூதாயத்தினை படைப்போம்!

மதுரை சரவணன்.

Monday, November 17, 2014

இதை சொன்னா என்னை லூசுன்னு சொல்றான்...!


எல்லாக்குழந்தைகளிடமும் ஆர்வமும் ஆற்றலும் இருக்கின்றன. அவற்றை கண்டறிந்து , குழந்தைகள் விரும்பும் வண்ணம் தேவையான சரியான கல்வி கொடுக்கும் ஆசிரியர்கள் குறைப்பாடு , மாணவர்களை திறமை குறைந்த மாணவர்கள் என்று தரம் பிரிக்க சொல்கின்றது.

மொழித்திறனில் பிரச்சனை உள்ள மாணவர்களுக்கு மொழிப்பயிற்சியினை குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்து கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு மொழித்திறன் வளர்ப்பதில் ஆர்வம் உண்டாக்கலாம். அதற்கு குழந்தை மையக்கல்வியை முதன்மைப்படுத்த வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க செய்ய வேண்டும்.

அரசாங்கம் மிகத்தெளிவாக அரசாணை வெளியிட்டுள்ளது. காலை மாலை செயல்பாடுகள். அதன் படி ஆசிரியர்கள் தெளிவாக செயல்பாட்டால், வாசித்தல் எழுதுதல் தானாக வரும். அதன் பின் திறன்களை செயல்வழிக்கற்றல் முறையில் கற்றுக்கொடுத்தால் போதும். மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் தமிழ் ஆங்கிலம் சரளமாக வாசிப்பதால், பிழையின்றி எழுதுவதால்,நூலகத்திற்கு சென்று புத்தகம் வாசிப்பவனாக மாறிவிடுவான். பல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து விடுவான். தினமும் செய்திதாள்களை தானாக வாசிப்பதால் , சமுக சிந்தனை கொண்டு சமுக நலனில் அக்கறை காட்டுபவனாக மாறி விடுவான்.

"working memory is the gateway to long-term memory " என்பது அறிவியல் உண்மை. தினமும் மாணவன் மதிய உணவு இடைவேளையில் தமிழ், ஆங்கிலம், வாய்ப்பாடு சொல்லுதல், எளிய கணக்குகள் செய்தல் போன்றவற்றை தினப்பயிற்சியாக செய்து வருவதால் , அவை நீண்டகால நினைவுகளாக மாறி, பிழையின்றி எழுதவும் பேசவும், கணிதங்கள் செய்யவும் பழகிவிடுவார்கள். மேலும் மாணவனுக்கு பிடித்தப்படி செயல்வழிக்கற்றல் முறையில் பாடங்கள் நடத்தினால் அப்பாடத்திலுள்ள திறன்களை எளிதாக கற்றுக்கொள்வான்.

திறன்கள் என்பது மதிப்பெண் பெறுவதற்கானது அன்று என்று ஆசிரியர்களுக்கு எப்போது புரியுமோ !. மாணவர்களிடம் எதிர்பார்க்கும் அனைத்து திறன்களும் அவனை இச்சமுகச்சூழ்நிலையில் மகிழ்ச்சியாக வைப்பதற்கும், சமுக சூழல் மகிழ்வாக இருக்க சிந்திப்பதற்கும் தான். திறன்கள் இன்று மதிப்பெண்களால் மழுங்கச்செய்யப்படுகின்றன.

தயவு செய்து குழந்தைகளை குழந்தைகளாக நடத்துங்கள். குழந்தைகளை மதியுங்கள் . அதாவது மகிழ்வாக வைத்திருங்கள். குழந்தைகள் உரிமையை உறுதிப்படுத்துங்கள். அட ஆசிரியர்களே ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்கள் குழந்தைகள் சரியான செயல்களுக்கு கைத்தட்டி பாராட்டினால் போதும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட பலமடங்கு திறன்களைப் பெற்று திறமைசாலிகளாக மாறிவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமா கல்வி கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விதத்தில் ஆடிப்பாடி ஓடி சொல்லித்தாருங்கள். ஒரே இடத்தில் கை கட்டி வாய் பொத்தி அமர்வதை தவிர்க்கவும். குழந்தைகள் நம்மைப்பார்த்தால் மகிழ்ச்சியாக ஓடி வரவேண்டும். பத்தடி தூரம் ஓடக்கூடாது.

அட மாணவர்களிடம் குழுக்கற்றல், சக மாணவர் துணையோடு கற்றல், தனித்து கற்றல் போன்ற எல்லாவகையான கற்றலையும் முறைப்படுத்துங்கள் . நான் சொல்லுவேன் அதை நீ கேட்க வேண்டும் என்பதை தவிர்த்து விடுங்கள். குழந்தைகள் இன்று நம்மை விட புத்திசாலிகளாக இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழையவும்.

கல்வி கற்றுக்கொடுத்தல்அல்லது திறன்களை மாணவர்களுக்கு கொடுத்தல் என்பது தொடர் நிகழ்வு என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.

மொத்தத்தில் குழந்தைகளை குழந்தைகளாக மதித்தால் , கற்றல் தானாக முறைப்படும். டியூசன், கூடுதல் வகுப்புகள் செய்யாத ஒன்றை செய்து தரும்.

மதுரை சரவணன்.

Friday, November 14, 2014

குழந்தைகளோடு இருப்பவன் பாக்கியவான்



வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒற்றை சொல் அன்பு. குழந்தைகள் எத்தனை ப்ரியமானவர்கள்! அவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நான் கடவுளர்களுடன் கடவுளின் சன்னிதானத்தில் இருக்கின்றேன் என்பதை நினைக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன். பெருமைப்பட்டுக் கொள்கின்றேன். நான் பாக்கியவான் என்பதில் ஐயமில்லை.

நேற்றே ஒருவள் வந்தாள், “குழந்தைகள் தினம் எப்படி கொண்டாடுவீங்க ? என கேட்டாள். எப்போதும் போல் என்றேன். நாங்க எல்லாம் டீச்சர்ஸ் டே உங்களுக்கு பிடிச்சப்படி கொண்டாடினோமே? என்றனர்,அவளுடன் இணைந்து கொண்ட என் வகுப்பு மாணவர்கள்.
(ஏன் இப்படி சொல்கின்றனர் என்பது உணராமல் எப்போதும் போல் பதிலளிக்கின்றேன்)

ஓவியம் பாட்டு, டான்ஸ், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்கள் அன்று காலை பிரார்த்த்னைக் கூட்டத்தில் பேசுவார்கள் என்றேன். அப்புறம் ...என வித்தியாசமாய் ஒருவன் கேட்டான். பரிசு பொருள்கள் வழங்குவோம் என்றேன். அவர்கள் மூஞ்சி ஒருமாதிரி போனதை பார்த்து நானே இவ்வாறு கேட்டேன்.

சரி என்ன செய்ய வேண்டும் ?
“சார் எப்பவும் போல் போர் அடிக்க வேண்டாம். பிரார்த்தனை கூட்டம் வேண்டாம். நாங்க ஜாலியா காலையில் வந்து சந்தோசமா இருக்கோம். எங்களுக்கு தெரிஞ்சதை போர்ட்டில் வரைகின்றோம். எங்க பெயரெல்லாம் எழுதி போடுவோம். நீங்க ஒண்ணும் சொல்லக்கூடாது”
இது ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது. சரி என்றேன்.

“சார், கலர் டிரஸ் ”என்றான் ஒருவன். “ஓகே .எல்லோரிடமும் நாளை கலர் டிரஸ் நானே சொல்லிட்டு வருகின்றேன் ”என என் கட்டளைக்காக காத்திராமல் ஒருவன் ஓடினான்.

இன்று காலை வந்த போது எனக்கு முன்பாகவே கரும்பலகையில் ரோஜா வரைந்து குழந்தைகள் அழகாக எழுதி இருந்தனர். கீழ்மட்ட கரும்பலகையில் தங்கள் பெயர்களை (கையெழுத்து இடுவது போல் )வரிசையாக மயில் போன்ற பறவைகள் வரைந்து எழுதி இருந்தனர். காலை செய்திதாள் வாங்கி வந்திருந்தேன். செய்திகளை குறித்தேன்.ஒருவன் என்னைப் பார்த்தான். ரகசியமாக டேய் சார், ப்ரையர் வெளியில் (காமன் பிரையர் ) வைக்க போகின்றார் என கூறினான். அதற்குள் பெண் குழந்தைகள் சார் ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே.. என கை குலுக்கி, எனக்கு ஒரு கடலை உருண்டையை தந்தனர். மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டேன்.

“சார், எங்க முன்னாடி சாப்பிடுங்க ”என்றான் ஒருவன். “ சார் சாப்பிடலைன்னா நானே ஊட்டி விட்டுவேன் ”என்றான் மற்றொருவன். “அதென்ன சோறாடா.. ஊட்டி விட.. வாங்கி வாயில திணிச்சுடுவேன்னு சொல்லு “ என்றான் மற்றுமொருவன்.அவர்கள் பேசுவதை கேட்டு, அனைவரும் ஹா ..ஹா என சிரித்தனர்.

இருந்தாலும் அத்தனை கொண்டாட்டமான பேச்சுக்களுக்கும் நடுவில் , கடிகாரத்தை பார்த்து கொண்டனர். மணி ஒன்பது பத்து ஆகியது. நான் ப்ரேயர் அழைத்துவிடுவேன் என பயந்த படி இருந்த என் வகுப்பு குழந்தைகள் , “சார் நாங்க எல்லோருக்கும் சாக்லெட் வச்சு இருக்கோம். நாங்க எல்லா டீச்சருக்கும் மிட்டாய் கொடுத்துவிட்டு வருகின்றோம்” என்று சென்றனர். சிரித்தேன். சரி என்றேன்.

ப்ரேயர் இருக்கிறதா ? தேசியக்கொடி கம்பத்தில் கட்டி வைக்கவா ?என கேட்க வந்த ஆசிரியர் குழந்தைகள் எனக்கு மிட்டாய் கொடுப்பதை பார்த்து, “சார் தான் உங்களுக்கு வாழ்த்து சொல்லி கை கொடுக்க வேண்டும் நீங்க வித்தியாசமா உங்க சாருக்கு கை கொடுத்து மிட்டாய் கொடுக்குறீங்க..?” என்றார்.

“மிஸ் அவரும் சின்ன பிள்ளை தான் மிஸ்.. பச்ச பாப்பா அவர்கிட்ட எல்லாம் நாம மிட்டாய் கேட்க கூடாது..” என்றாள் துடுக்கான மாணவி.

“சாரை இப்படி எல்லாம் பேசக்கூடாது. வாய் உங்களுக்கு ஜாஸ்தி. சார் உங்க பசங்கள கண்டிச்சு வைங்க.. உங்க குழந்தைகளுக்கு ரெம்ப தைரியம். இதே மாதிரி தான் எல்லா டீச்சர் கிட்டையும் பேசுதுங்க.. உங்களுக்கும் பயப்படுறதில்லை. அதனால எங்களையும் எதிர்த்து பேசுதுங்க “ என்றார்.

“நாங்க ஏன் பயப்படணும் ? தப்பு செஞ்சா தான் பயப்படணும். “ என்றான் என் வகுப்பு புத்திசாலி மாணவன்.

“அதானே, தப்பு செய்கின்றவன் தான் பயப்படணும்” என்றேன்.

அந்த ஆசிரியர் எரிச்சலுடன் “ நல்ல பிள்ளைங்க.. நல்ல ஹைச்சம்.. ” என காது பட ஏசி விட்டு சென்றார்.

“நல்லவிசயம் யாருக்கு தான் பிடிக்கும் “ என்றேன் நான்.

“சார் ரெம்ப பீல் பண்ணி உடம்ப கெடுத்துகிடாதீங்க ” என்றான் சுமாராக படிக்கும் மாணவன். எல்லோரும் சிரித்தனர்.

பின்பு ஓடி சென்று தங்கள் இஷ்டம் போல் எல்லா ஆசிரியர்களுடனும் கை குலுக்கி, மகிழ்ந்து தாங்கள் அணிந்து வந்திருந்த உடைகளை பிறருடன் காட்டி மகிழ்ந்து கொண்டனர்.

மணி 9. 40 ஆகி விட்டது. அனைவரும் நான் அழைக்காமலே வந்தமர்ந்து, பாரதிதாசனின் பெண்கல்வி குறித்த பாடலான “தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்று சொன்னால் உன் அன்னை” என்று கோரஸாக பாடத் தொடங்கினர்.

எப்போதும் போல் பழைய மாணவர்கள் எங்களை (ஆசிரியர்களை ) பார்க்க வந்தனர். என்னிடம் ஆசிர் வாதம் பெற்று சென்றனர். “சார் எப்பவும் இப்படி தான் பிள்ளைகள் இஷ்டம் போல் ஜாலியா இருக்க விடுவார். டெயிலி விளையாடுகின்றது போலத்தான் தெரியும், ஆனா நிறைய சொல்லி கொடுத்திருக்கார்ன்னு வெளியே போன பின்னாடி தான் புரியுது.. சார் நம்ம பிள்ளைகள் தான் எங்க போனாலும் பஸ்ட். எந்த கேள்விக்கும் பயப்படாம பதில் சொல்லுதுங்க.. நாங்க உங்க பெயரைத்தான் சொல்லுறோம் “ என்றார்கள்.

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களில் ஒருவர் தன் வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் , தன் வகுப்புக்கு வாழ்த்து சொல்ல வந்த அனைத்து குழந்தைகளுக்கும் சாக்லெட் வாங்கி கொடுத்தார். மதியம் அவர்கள் வகுப்பு முன் இருந்த எல்லா குழந்தைகளுக்கும் சாக்லெட் வழங்கினார்.

என் குழந்தைகளிடம் “என்ன உங்க சார் கொடுத்தார் ?” என அந்த ஆசிரியர் கேட்டு உள்ளார். ”அட போங்க டீச்சர், நேத்து நம்ம மோகன் சார் கிட்ட , நாங்க டீச்சர் டேயை கொண்டாடினோமே , நீங்க என்ன சார் செய்ய போறீங்கன்னு கேட்டான்”

“அதுக்கு அவரு நான் வேணும்ன்னா ஒரு டான்ஸ் ஆடி காட்டுறேன்னு சொல்லி ஆடிக்காட்டுறாரு மிஸ்..” “செம ஜாலி மிஸ்” கோரசாக.
“டான்ஸ்.. தான் ஆடி காட்டினாரா.. ஒண்ணும் தரலீய்யா..” என உசுப்பு ஏத்தி கேட்டுள்ளார்.
“ அதெல்லாம் தானா வரணும் மிஸ்.. உங்க கிளாசில் இருந்திருந்தா ..இந்நேரம் சாக்லெட் கிடைச்சிருக்கும்..” என ஒரு மாணவி ஏக்கத்துடன் கூறி மீண்டும் ஒரு சாக்லெட் பெற்று உள்ளனர்.

” ஆமா உங்க சார், இன்னைக்கு ப்ரேயாரே வைக்கல.. இதுல உங்களுக்கு
பெரிசா வாங்கி கொடுத்திட போறார்...” என அவர் அவர்களிடம் வேண்டுமென்றே வாயை கிளற..
“மிஸ் நாங்க தான் ஜாலியா இருப்போம். இன்னைக்கு ப்ரேயர் வேண்டாம் என சொன்னோம்.” என கத்தியுள்ளனர்.

“ ஆனா மிஸ் ..வகுப்பில ப்ரேயர் வச்சுட்டார் மிஸ்...நாங்க தலைவாரிப்பூச்சூடி ன்னு பாட்டு படிச்சா.. அப்புறம் படிப்போம் வகுப்பு ப்ரேயர் நில்லுன்னுட்டு .. ஆரம்பிச்சுட்டார்“ என்றனர்.

”நீங்க தான் காரணமா.. அதான் நேத்தே எல்லா ஆசிரியர்களும் வகுப்பில் ப்ரேயர் வைச்சு குழந்தைகள் தினத்தை வகுப்பறையில் குழந்தைகள் இஷ்டப்படி நடத்த வேண்டும் என சொல்லிவிட்டாரா “ என
சஸ்பென்ஸ் உடைத்த அதிர்ச்சியில் ஆசிரியர் ஆச்சரியப்பட்டுள்ளார்.

காலையில எல்லா பிள்ளைகள் வகுப்புக்கும் சென்று கை குலுக்கி , ஆடி பாடி ஓடி விளையாண்டதே ரெம்ப சந்தோசம் டீச்சர் என்று விடைப்பெற்றவாரே மதிய வாய்ப்பாடு, சொல்லுவதை எழுதுதல், போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கினர்.

மதியம் ஒன்றாம் வகுப்பு ஆசிரியருடன் நடந்த நிகழ்வை மாலை இடைவேளையில் சொல்லிவிட்டு சிரித்தனர்.
அதில் ஒருவன் “சார் எல்லோரும் மூக்கில விரலை வைக்கிற மாதிரி பொருள் வாங்கி கொடுங்க “ என்றான்.

“ குழந்தைகள் எப்போதும் தங்கள் விருப்பங்களை கூட, பெரியவர்கள் ஆச்சரியப்படும் விதமாக வேண்டுவார்கள் . ஆண்டவனின் சன்னிதானத்தில் ஒலிக்கப்படும் அத்தனையும் வேதங்களே/மந்திரங்களே எனில் குழந்தைகளின் மொழிகள் அத்தனையும் வேதங்களே/ மந்திரங்களே! ”

என் வகுப்பு குழந்தைகளுக்கு திங்கள் அன்று ஏதாவது வாங்கி செல்ல வேண்டும். என்ன தருவது யோசிக்க தொடங்கிவிட்டேன்.

இனி எழுதுவதை தொடர முடியாது.

மதுரை சரவணன்.

Monday, November 10, 2014

பொங்கல் கடையில் கற்றுக்கொண்ட மொழிப் பற்று


மொழி அழிவதை யாராலும் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.
இந்த உண்மையை ரோட்டில் பொங்கல் கடை வைத்திருப்பவர் எனக்கு புரியவைத்து விட்டார்.

இணையத்தில் எப்பொழுதும் மொழி குறித்து விவாதம் நடந்து வருகின்றது. தமிழ் மொழியின் மீது பற்று இருந்தாலும், இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருதம் திணிப்பு என சர்ச்சைகள் வரும் போதெல்லாம், பிற மொழியை கற்பதால் நம் தமிழ் ஏன் அழியும் என யோசிப்பேன். அதன்காரணமாக மொழி சர்ச்சைகள் உள்ள பதிவை மேலோட்டமாகவே படித்து கடந்து இருக்கின்றேன்.

பல மொழி கற்க வேண்டும் அதன் பயனாக நாம் பிறமொழியின் கலாச்சாரம் , தொன்மை, வரலாற்றை அறிய முடியும் என்பதோடு அல்லாமல் , நம் மொழியின் தொன்மையை, பழமையை, புதுமையை, வரலாற்றை, நம் கலாச்சாரத்தை அங்கு எடுத்து சொல்ல முடியும் என்று நினைப்பதாலும் பிற மொழியினை படிக்க கூடாது என்ற கருத்தியலை தவிர்த்து வந்தேன். பிற மொழியினைப் படிப்பது என்பது திணிப்பு என்று திரிப்பதாகவே நினைத்து வந்தேன்.

என் எண்ணம் ,என் சிந்தனை தவறானது என்பதை , ரோட்டில் பொங்கல் கடை வைத்துள்ள நபர் தவிடு பொடி ஆக்கிவிட்டார். வழக்கம் போல் ஏ.ஆர்.ஹாஸ்பிட்டல்(தபால்தந்தி நகர்) அருகில் உள்ள சந்தில் பொங்கல் கடையில் இட்டலி சாப்பிட அமர்ந்தேன். எனக்கான உணவினை சொல்லி, காத்திருந்தேன். எனக்கு எதிர்புறம் இருக்கையில் எல்.கே.ஜி படிக்கும் மாணவனை அவனின் தாயார் அமரச் செய்து , அவனுக்கும் இட்டலி ஆர்டர் செய்தார்.

கடை வைத்திருப்பவர் சௌராஷ்டிரா மொழி பேசுபவர். என் எதிரில் அமர்ந்த பெண் மணியும் அதே மொழியினை சேர்ந்தவர். ஆனால் அவர் தமிழில் தான் பேசினார். ஆனால், கடைக்காரர் மனைவி சௌராஷ்டிரா மொழியில் அவரிடம் பேசினார். நான் எப்போது சென்றாலும் அங்கு தமிழிலேயே பேசுவேன் . அவர்களும் என்னிடம் தமிழில் பேசிவந்தனர்.
இங்கு ஒன்றை முக்கியமாக சொல்லியாக வேண்டும் எனக்கு சரளமாக சௌராஷ்டிரா பேசத் தெரியும்.

அப்பெண்மணி என்னைப்பார்த்தார். பின் மகனிடம் சௌராஷ்டிரா மொழியில் பேசினார்.

தம்பி மழை வருகின்றது. வேகமாக சாப்பிடு. இல்லை என்றால் எதிர் வீட்டில் உள்ள கிழவி நம்மை பிடித்து கொள்ளும் என்றார். ( ரோட்டின் அந்தபுறம் எதிரில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள் இருந்தன) .சிறிதளவு பிய்த்த இட்டலியை சாப்பிட வெகு நேரம் ஆக்கினான்.

அவன் சாப்பிட்டு கொண்டே என்னைப்பார்த்தான். அருகில் இருந்த டம்பளர் நீர் கொட்ட போனது. நான் பதறி அவனிடம் பனி லுச்சன் சாரஸ் என்றேன். (தண்ணீர் கொட்டப்போகிறது) அவன் சிரித்து கொண்டே கைகளை தள்ளி வைத்தான். இப்போது அவனின் அம்மா தம்பி தண்ணியை தள்ளி வை என்றார். அவன் அவனது அம்மாவை பார்த்தான்.

நான் அவனிடம் சௌராஷ்டிரா மொழியில் மழை வருகின்றது (திறந்த வெளி ரோட்டுக்கடை ) வேகமாக சாப்பிடு நனைந்துவிடுவாய் என்றேன். இப்படியாக அவன் மொழியில் அவனிடம் பேசினேன்.

கடைக்கார பெண்மணி அப்போது, “யார் சௌராஷ்டிரா என தெரியவில்லை. யாரிடமும் பேசினாலும் தப்பாகி விடுமோ என பேசுவதில்லை “ என என்னிடம் தெரிவித்தார். (தமிழில் )

எதிரில் உள்ள பெண்மணி இப்போது சௌராஷ்டிராவில் பேசினார்.
“நம்(சௌராஷ்டிரா மக்கள் ) மத்தியில் தமிழ் மொழி பேசுபவர்கள் இருக்கும் போது நம் மொழியை பேசினால், ஏதோ அவர்களுக்கு தெரியாமல் ரகசியம் பேசுவதாக நினைக்கின்றார்கள். மேலும் புரோக்கர்( இடம், பொண், பொருள் ) தொழில் செய்வதால் நாம் அவர்களுக்கு தெரியாமல் , கமிசன் வைக்க பார்க்கின்றோம் என நினைக்கின்றார்கள் என்றார்.

உடனே கடைக்காரர், “ ஏன் நாம் நம் மொழியினை பேசுவதை தவிர்க்க வேண்டும். இப்படியே நீங்கள் பேசுவதை தவிர்ப்பதால் நம் மொழி அழிந்து வருகின்றது. நாம் நம் தாய்மொழியை பிறருக்காக பேசாமல் இருந்தால் நாளை நம் சந்ததியினர் சௌராஷ்டிரா என்ற மொழி இருந்ததா என கேட்க நேரிடும். பேசினால் தான் ஒரு மொழி வளரும். தமிழ் பேசினால் தமிழ் தான் வளரும். “ என சௌராஷ்டிரா மொழியில் அவரிடம் பேசினார்.

அதற்கு அப்பெண்மணி, “ இவன் படிக்கும் பள்ளியில் உள்ள மிஸ், இவனிடம் தமிழில் பேசுங்கள். அப்பதான் அவன் என்ன சொல்றான் என்பது எங்களுக்கு புரியும். அவன் சொல்வது எங்களுக்கு புரிய மாட்டேன் கிறது என்கிறார்கள் . அதனாலே இவனிடம் வீட்டில் கூட பல சமயங்களில் தமிழ் பேசுகின்றேன். என்ன செய்ய ? ” என அவரிடம் சௌராஷ்டிரா மொழியில் பேசினார்.

“இப்படியே நீங்கள் கல்விக்காக, தொழிலுக்காக , என ஒவ்வொன்றிற்காக பேசுவதை தவிர்த்தால், நம் மொழி நாளடைவில் இல்லாமல் ஆகிவிடும். யார் சௌராஷ்டிரா என அறியாமல் செய்து விடப்போகின்றீகள். அதனால் எப்பவும் நம் ஜனங்கள் இருக்கும் போது நம் தாய் மொழியிலேயே பேசுங்கள். அது நம் மொழி அழிவதை தவிர்க்கும் “ என்றார். (சௌராஷ்டிரா மொழியில்)

“இப்ப பாருங்க. இவர் சௌராஷ்டிரா என்பது இவர் பேசும்போது தான் தெரிகிறது. (இதனை அப்பெண்மணி சொல்லும் போது 6ம் வகுப்பில் வெளிநாடு கடற்பயணம் செய்த கணவன் நாகர் இனத்தவரிடம் இருந்து தப்பி வந்த கதை தான் நினைவில் வந்தது. ஏனெனில் நான் கேட்காமலே சாம்பர் சட்டி கூடுதலாக வைத்துக்கொண்டே பேசினார்). அன்று அப்படி தான் நான் கருப்பாக ஒருவர் வந்தார். அவரிடம் நான் தமிழில் பேசினேன். என்னை எல்லாம் பார்த்தால் சௌராஷ்டிரா மாதிரி தெரியலைய்யா என கோபப்பட்டார். இப்படி நம் மொழி மீது பற்று கொண்டவர்கள் அதிகம் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் இல்லை என்றால் சௌராஷ்டிரா மொழி அழிந்து தான் போகும். ஆகவே பள்ளியில் சொல்கிறார்கள் என தமிழில் பேசினால் உங்கள் மகன் நம் மொழியினை மறந்துவிடுவான் “ என்றார். (சௌராஷ்டிராவில் பேசினார்)

“என்ன செய்ய, நாம் தமிழை நம் பிள்ளைகளுக்கு கற்று தரவேண்டும் . அவர்களும் படித்து நான்கு எழுத்து தெரியவேண்டும் அல்லவா” என்றார் அப்பையனின் தாயார். (சௌராஷ்டிராவில்)

“ இப்படிவேறு மொழி படிக்கின்றேன் என நம் மொழியினை மறந்து போகின்றீர்கள். இப்பொழுத்தெல்லாம் சௌராஷ்டிரா பேசுவதை தவிர்க்கின்றீர்கள் . தமிழில் பேசுகிறீர்கள் இது தமிழ் மொழி திணிப்பு மாதிரி படுகிறது “ என்றார்.

“நாம் பிற மொழி பேசுவது அதனை படிப்பது எப்படி அம்மொழியின் திணிப்பாக முடியும் ? “ என கேள்வி எழுப்பினேன். (சௌராஷ்டிராவில்)

“ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாம் இந்த பத்து நிமிடத்தில் தமிழில் மட்டும் பேசினால், நமக்கு சௌராஷ்டிரா மொழி குறித்த சிந்தனை அறிவு மறைந்து போகும். நாம் வார்த்தைகளை பேசுவதற்கு தமிழில் தான் தேடுவோம். அப்போது நம் மொழிகுறித்த அறிவு இங்கு பயன்படாது. ஆரம்பத்தில் சமமான வார்த்தைகளை நம் தாய்மொழியில் தேடுவோம். நாளடைவில் அதற்கு அவசியம் ஏற்பாடாது. நம் தாய்மொழி சிந்தனை அறவே மற்ந்து போகும். இது ஒருவிதத்தில் மறைமுகமான திணிப்பு தான்” என்றார். (சௌராஷ்டிராவில்)

“ஆமாம். என் மகன் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசுவதால்,வீட்டிலும் சில பொருட்களை தமிழிலேயே கேட்கின்றான். இது நம் மொழி அழிவுக்கு காரணமாகவும் படுகின்றது. திணிப்புமாகி விடுகின்றது ” என்றார் அப்பையனின் பெண்மணி.

“அதற்காக தமிழ் படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. எப்போதும் நம் ஆட்கள் மத்தியில் வீட்டில் தாய்மொழியிலேயே பேசவேண்டும் “ என்றார். (சௌராஷ்டிராவில்)
அதற்குள் மழை வலுத்துவிட்டது. நான் சாப்பிட்டதற்கான தொகையை கொடுத்து வேகமாக வண்டியை எடுத்தேன்.

ஒருமொழியினை படிக்க சொல்வது. அதனை குறித்து பேசுவதை பிற மொழியினை மறக்க செய்யும் என்பது இப்போது உண்மை என புரிய வருகின்றது. ஆகவே நாம் எந்த இடத்தில் இருந்தாலும், நம் தாய்மொழி தமிழில் பேசுவோம். பிற மொழி கற்றுக்கொண்டாலும் பேசுவதை எழுதுவதை விட்டுவிட வேண்டாம்.

நம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது. நமக்கு கற்றுக் கொடுக்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதில் சிறியவர் பெரியவர், பெட்டிக்கடைக்காரர், தள்ளுவண்டி காரர், விற்பன்னர், மருத்துவர் , ஆசிரியர், பேராசிரியர் என பேதம் இல்லை.

கடைசியில் அந்த சிறுவனிடம், “ மழை வருகின்றது ,வீட்டிற்கு வேகமாக செல் . நனைந்துவிடாதே “ என தமிழில் கூறி வந்தேன்.

மதுரை சரவணன்.