Wednesday, May 14, 2014

கோடையில் வீட்டிலிருந்தப்படி விளையாடுவது எப்படி?



கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. வெளியில் செல்லவே பயப்படுகின்றனர் குட்டீஸ். கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். வெயிலில் இருந்து தப்பித்து நிழலில் விளையாடுவது எப்படி? வீட்டினுள்ளே விளையாடுவது எப்படி? வீட்டின் முன் உள்ள மர நிழலில் ஆனந்தமாக கொண்டாடுவது எப்படி? இதோ சில டிப்ஸ். உங்கள் ஏரியாவில் உள்ள குழந்தைகளை திரட்டுங்கள். தேவை ஒரு புட் பால், விசில், கோல மாவு, கலர் காகிதங்கள், அட்டைகள், செங்கல் கற்கள் . சுமார் 6 அல்லது 10க்கு மேற்பட்ட குழந்தைகள்.
1.   குழந்தைகள் வட்டமாக அமரவும். உங்களில் ஒருவரை தலைவராக கொள்ளவும். தலைவர் வட்டத்தின் மையத்தில் இருந்து காலை 6 மணி என்றால் அனைவரும் தூங்கி எழுந்திருப்பது போல கண்களை கசக்கி விழிக்க வேண்டும். காலை 8 மணி என்று சொன்னால் புத்தகப்பையை தூக்கி கொண்டு பள்ளிக்கு செல்வது போல் பாவனை செய்ய வேண்டும். 12 மணி என்றால் அனைவரும் சாப்பிடுவது போல் நடிக்க வேண்டும். மாலை 4 மணி என்றால் விளையாடுவது போலவும், மாலை 6 மணி என்றால் படிப்பது போலவும், இரவு 9 மணி என்றால் தூங்குவது போலவும் பாவனை செய்ய வேண்டும்.  ( இதே போல வேறு வேறு கான்சப்ட்டுகளை உருவாக்கி விளையாடலாம். உம்:- திருவிழா நிகழ்வுகளை வைத்து விளையாடலாம். சாமி என்று தலைவர் சொல்லும் போது அனைவரும் சாமி கும்பிடுவது போல நடிக்க வேண்டும். சவ்வு மிட்டாய் என்றால் வாய் திறந்து மிட்டாய் சாப்பிடுவது போல நடிக்க வேண்டும். விருந்து என்றால் இலைப் போட்டு சாப்பிடுவது போல பாவனை செய்ய வேண்டும். பெரியவர்கள் அல்லது விருந்தினர் என்றால் வருக வருக என வரவேற்பது போல பாவனை செய்ய வேண்டும். சித்திரை திருவிழா என்றால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போல பாவனை செய்ய வேண்டும். இப்படி விளையாட்டை தொடரலாம்.)
2.   குழந்தைகள் வட்டமாக அமரவும். அடுத்தடுத்து உள்ள இரண்டு குழந்தைகளை எதிர் எதிர் திசைகளில் ஓட வேண்டும். இருவரும் சந்திக்கும் போது குட்மார்னிங் சுரேஸ் குட்மார்னிங் கீதா என சொல்லி, மீண்டும் எதிர் திசையில் அவரவர் இடத்தில் அமர வேண்டும். ( மாலை விளையாடும் போது குட் ஈவினிங் என சொல்லலாம்) ( எதிர் சொற்கள் கூறி விளையாடலாம். இரவு என ஒருவர் கூற அடுத்தவர்  பகல் என கூற வேண்டும் )
3.   குழந்தைகள் வரிசையாக கை கோர்த்து நிற்க வேண்டும். வட்டத்தினுள் ஒருவரை நிற்க செய்ய வேண்டும். அவர் புலி ஆவார். வட்டத்தின் வெளியில் ஒருவர் நிற்க செய்ய வேண்டும். அவர் ஆடு ஆவார். புலியாக இருப்பவர் ஆட்டை சாப்பிட, ”சங்கிலி புங்கிலி கதவ திற” என சொல்ல, அனைவரும் கைகளை கோர்த்து வட்டமாக நகர்ந்தவாரே “ கதவை திறக்க மாட்டோம் “ என்று கூறவேண்டும். “பசிக்குது ஆட்டை பார்த்தீங்களா? “  என நடுவில் உள்ள புலி வினவ, “பார்த்தோமே ! பார்த்தோமே! தோட்டத்திலே பார்த்தோமே ! “ என சொல்லியவேரே அனைவரும் வட்டத்தில் நகர்வார்கள். புலி அதற்கு, “சாப்பிட வரலாமா !வரலாமா! “என கேட்க, அனைவரும் “வரக்கூடாது ! வரக்கூடாது ! “ என்பார்கள். அவர்கள் கைகளை உடைத்துக்கொண்டு இப்போது புலி வெளியில் உள்ள ஆட்டை பிடிக்க ஓடா வேண்டும். ஆடு தப்பிக்க வேறு பாதை தேட வேண்டும். பிடிபடும் வரை விளையாட்டை தொடர வேண்டும்.
4.   குழந்தைகளை இருபிரிவாக பிரிக்க வேண்டும். சற்று தொலைவில் நிறுத்தவும். இரு வரிசைக்கு எதிராக கோல மாவு கொண்டு 10 வட்டங்கள் வரையவும். வரிசையில் முதலில் இருப்பவர் 10 என சொன்னால், அருகில் உள்ள வரிசைக்காரர் 10 மடங்குகளாக சொல்லி வட்டங்களை தாவ வேண்டும். பின் அவர் 100 என்றால் அடுத்துள்ளவர் 100 ,200, 300 என சொல்லி வட்டங்களை தாவ வேண்டும். இப்படி அனைவரும் வட்டங்களை தாவி தாவி விளையாடலாம். தவறு எனில் அடுத்தவர் அதே எண்ணின் மடங்கை சொல்லி தாவ வேண்டும். ( முதல் வகுப்பு குட்டீஸ் 2, 3, 4,5 ன் மடங்குகளை சொல்லி விளையாடலாம்)
5.   பூனை எலி விளையாட்டு வித்தியாசமாய். குழந்தைகள் இரு வரிசையில் நிற்க வேண்டும். முதல் வரிசையின் ஆரம்பத்தில் சற்று தள்ளி பூனையாக ஒருவரை நிறுத்தவும். இரண்டாவது வரிசையின் முடிவில் எலியாக ஒருவரை நிறுத்தவும். மாணவர்களில் ஒருவரை தலைவராக  தேர்ந்தெடுத்து அவரிடம் விசில் ஒன்றை தரவும். நேர் வரிசையாக இருக்கும் போது நேராக ஓடி தான் பூனை எலியை பிடிக்க வேண்டும் குறுக்கே செல்ல கூடாது. இப்படி ஓடும் போது விசில் அடித்தால் எதிர் எதிராக நின்றுள்ள மாணவர்கள் தங்கள் கைகளை கோர்த்து  கொள்ள வேண்டும். இப்போது நேராக ஓட முடியாது. குறுக்காக தான் ஓட முடியும். இப்படி குறுக்காக ஓடும் போது விசில் ஊதினால், அனைவரும் நேராக நிற்க வேண்டும். இப்போது நெடுக்காக தான் ஓட முடியும். பூனை எலியை பிடித்துவிட்டால் வேறு இருவர் இந்த விளையாட்டை தொடரலாம்.
6.   குழந்தைகள் வட்டமாக அமரவும். தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்வில் காணும் அன்றாட நிகழ்வுகள் குறித்து அவர் சைகையில் செய்து காட்ட வேண்டும். வட்டத்தில் உள்ளவர்கள் அது குறிக்கும் ஓலி என்ன என்பதை கூற வேண்டும். கார் செல்வது போல காட்டினால்  பீப் பீப் என ஒலி எழுப்ப வேண்டும். உம் கைதட்டுதல் , தூங்குதல் (குறட்டை சத்தம்) , காக்கை பறப்பது ( கா, கா )
7.   வெவ்வேறு வண்ணத்தாள்கள் ஒட்டப்பட்ட அட்டைகள். பலருக்கு ஓரே நிறமாக கூட இருக்கலாம். அதே நிறங்கள் உள்ள தாள்களை குழு தலைவர் வைத்திருப்பார். இப்போது அனைவரும் ஓட வேண்டும். குழுத்தலைவர் பின்னால் திரும்பி ஒரு நிறத்தை எடுத்து காட்டுவார். அந்த நிற அட்டை வைத்திருப்பவர்கள் .அனைவரும் வட்டத்தினுள் வர வேண்டும். இப்போது குழுத்தலைவர் என்ன செய்ய சொல்கிறரோ அதை செய்து காட்ட வேண்டும். உ.ம் டான்ஸ் ஆட சொல்லலாம். நரி மாதிரி ஊளையிட சொல்லலாம். அனைவரும் மாறி மாறி தலைவராக இருந்து விளையாட்டை விளையாடலாம். கலர் காகிதம் போன்று  சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் போன்ற வடிவங்கள்  ஒட்டிய அட்டையை உருவாக்கியும் இந்த விளையாட்டை தொடரலாம்.
8.   சதுரம் , செவ்வகம், முக்கோணம்,  வட்டம் போன்ற உருவங்களை கோல மாவு கொண்டு தரையில் வரையவும். அதனை சுற்றி பெரிய வட்டம் வரையவும். குழு தலைவராக ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்ளவும். அனைவரும் வட்டத்தில் ஓடவும். விசில் ஊதியவுடன் , அவரவருக்கு பிடித்தமான வடிவங்களில் நிற்கலாம். தலைவர் பின்னால் திரும்பி தான் வைத்திருக்கும் அட்டையில் இருந்து ஒன்றை எடுத்து காட்ட எந்த வடிவம் உள்ளதோ அதில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும். பின் வட்டத்தில் ஓடா விசில் ஊத விளையாட்டு ஒருவர் மட்டும் வெற்றி பெற விளையாட்டு தொடரும்.
9.   வட்டத்தில் அனைவரும் அமர வேண்டும். ஒருவர் மட்டும் ஓட வேண்டும். ஓடுபவர் யாரை தட்டுகிறாரே அவர் எழுந்து தட்டியவரை பிடிக்க வேண்டும். அவர் இடம் வரும் வரை சுற்றி வர வேண்டும் . பிடிக்க வில்லை என்றால் அமர்ந்து கொள்ள வேண்டும். பிடித்து விட்டால், அவருக்கு கை தட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
10.  சிறிய வட்டம் கோல மாவு கொண்டு வரையவும். அதன் அடுத்து நல்ல இடைவெளிவிட்டு வெளி வட்டம் வரையவும். குழந்தைகள் வெளிவட்டத்தில் ஓடவும். குழந்தைகள் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான எண்ணிக்கையில் கற்களை உள் வட்டத்தில் வைக்கவும். ஒருவர் விசில் ஊதவும். உடனே அனைவரும் உள் வட்டத்திலுள்ள கற்களில் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும். கற்கள் எடுக்காதவர் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். ஒவ்வொரு முறை ஓடும் போதும் ஒரு கல்லை எடுத்து விடவும். ஒருவர் மட்டும் வெற்றி பெறும் வரை விளையாடவும்.
11.  குழந்தைகள் இரு பிரிவினராக பிரிந்து நிற்க செய்யவும். இப்போது எதிரே 50 மீ தள்ளி கோலமாவு கொண்டு மூன்று வட்டம் வரையவும். அதில் முதல் கட்டத்தில் மூன்று கற்களை வைக்கவும். இப்போது முதலில் நிற்பவர் விரைந்து சென்று அந்த கற்களை தனித்தனி வட்டத்தில் வைத்து விட்டு வரவேண்டும்.அதற்கு அடுத்து உள்ளவர் விரைவாக ஓடி சென்று அந்த கற்களை எடுத்து முதல் கட்டத்தில் வைக்க வேண்டும். அதற்கு அடுத்தவர் ஓடி சென்று பிரித்து வைத்து ஆட்டத்தை தொடர வேண்டும். எந்த குழு முதலில் முடிக்கிறதோ , அவர்கள் வெற்றி பெற்றவராவார்.
க. சரவணன்,
தலைமையாசிரியர்
டாக்டர் டி . திருஞானம் துவக்கப் பள்ளி,
கீழச்சந்தைப்பேட்டை, மதுரை 9

9344124572

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பரே தலைமையாசிரியர் ஆக பதவி உயர்வு பெற்றுவிட்டீர்களா
வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

நான் 2006 ல் இருந்தே தலைமையாசிரியர் தான் அய்யா கரந்தை ஜெயக்குமார் அவர்களே..!

Unknown said...

தலைப்பில் குழந்தைகள் என்பதை சுட்டிக் காட்டி இருக்க வேண்டாமா ?படித்துப் பார்த்து பல்பு வாங்கி விட்டேன் ))))
த ம 3

Post a Comment