Thursday, March 20, 2014

தயவு செய்து குடிகாரர்கள் படிக்க வேண்டாம்...!

         மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இன்னும் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது. கோபம் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கின்றேன். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளக் கூடாது. நியாயமான விசயங்களுக்கு , நேர்மறையான எண்ணங்களுடன் கோபம் கொள்ள வேண்டும் என்றும் கற்று தந்துள்ளேன். நம்முடைய கோபம் தப்பு செய்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாகவும், தவற்றை செய்யாமல் தடுப்பதாகவும், தவறு செய்யும் எண்ணத்தை போக்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளேன். கோபத்தை அடக்க வேண்டாம் என்றும் கற்பித்தவன் என்ற விதத்தில் , சில புரிதல்கள் எனக்கு தேவைப்படுகிறது. அநியாயங்களுக்கு சீறுவதில் தப்பில்லை தான். அதற்காக இப்படியா?
      இந்த மாதிரியான கோபத்தை என்னவென்று சொல்வது? நிச்சயம் புரிதல் தேவை என்பதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
      நேற்று, மிகவும் சோர்வாகவும், சோகமாக காணப்பட்ட வகுப்பு மாணவனை விசாரித்தேன். அவன் சொன்ன விசயம் தூக்கி வாரி போட்டது. எதைய்ம் சட்டை செய்யாமல் எதார்த்தமாக அவன் சொன்ன பதில் வியக்க செய்கிறது!
     “நேத்து நைட் தூங்கலை சார் அதான் டையர்டா இருக்கு” என்றவனிடம் ”ஏன்?” என தொடர்ந்தேன். ”எங்கப்பா தண்ணி அடிச்சு கலாட்டா பண்ணீனாரு...” என அமைதியாக சலனமின்றி பதில் அளித்தவனிடம் , “ நம்ம செய்யும் யோகா செய்ய சொன்னியா ?” என கேட்க, மிக விரைவாக , ” அட போங்க சார்... சும்மா யோகா அது இதுன்னு ...அதெல்லாம் சரி பட்டு வராது.. ” என கோபமாக சொன்னான். ” சரி.... ஏன் சோகமா இருக்க... அப்ப கொஞ்சம் கொஞ்சமா குடியை நிறுத்துவாரு ... “ என சாந்த படுத்த முயற்சித்தேன். “ சார்... இனிமேல் குடிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் “ என்றான் .
“வெரி குட் இந்த நம்பிக்கை தான் நமக்கு தேவை.. இந்த நம்பிக்கையே உங்க அப்பாவை குடிக்காம பார்த்துகொள்ளும்” என்று எல்லோரும் கை தட்டுங்க என்றேன். அனைவரும் கை தட்டி முடிந்ததும் மெதுவாக நிதானமாக கூலாக பதில் சொன்னான். என்னை தூக்கி வாரி போட்டது. ஆகவே, நிதானமாக, கூலாக , அதிர்ச்சி அடையாமல் அவன் சொன்ன விசயத்தை படிக்கவும்.
     “குடிச்சு பிட்டு .. எங்க அம்மாவை தகாத வார்த்தை பேசினார்.. குடிச்சா தானே இப்படி பேசுறன்னு.. பக்கத்தில இருக்கிற அம்மிக்கல்ல தூக்கி அவரு கால்ல போட்டுட்டேன்.. இனிமே குடிக்க மாட்டேன்ன்னு என் கால்ல விழுந்து கும்பிட்டு சத்தியம் செய்து கொடுத்துட்டார்.... அப்புறம் டாக்டர்ட்டா கூட்டி போய் ... கட்டு போட்டு ஆய்ண்மெட் வாங்கி கொடுத்தேன்..”
      வகுப்பறை நிசப்தமானது. எல்லா மாணவர்களும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர். வகுப்பிலுள்ள ஒரு மாணவி “அப்பதாண்ட குடிக்க கடையை தேடி போக மாட்டாங்க “ என்றாள். அதிர்ச்சியில் மேலும் உறைந்து போனேன்.
“டேய்.... கல்ல தூக்கி போடுறது கொலை குத்தமில்லையா...? போலீஸ் கேசாகிடாதா? டாக்டர் எப்படிடா டீரீட் மெண்டு எடுத்தார் ?“ என்றேன்.
“ டாக்டர் எப்படி வீங்கிச்சுன்னு கேட்டார்...நான் தான் கல்ல தூக்கி போட்டேன்... குடிச்சு அசிங்கப்படுத்துரார்ன்னு சொன்னேன்... அவரு ஒண்ணும் சொல்லாம கட்டு போட்டு விட்டுட்டார்..அப்புறம் தனியா கூப்பிட்டு இனி இப்படி செய்யகூடாதுன்னு சொன்னார்... இனி உங்க அப்பன் குடி பக்கம் தலைய வச்சு கூட படுக்க மாட்டார்ன்னு சொன்னார் ...அது தான் எனக்கு சந்தோசமா இருந்தது “ என்றான்.
“அது சரி உங்கப்பா வேலைக்கு போக மாட்டார்.. சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க... இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. இனி இப்படி செய்ய கூடாது “
“சார்... அம்மா வேலைக்கு போறாங்க.. சாய்ங்காலம் நானும் அண்ணனும் அப்பளக் கம்பெனிக்குபோவோம் இரவு பதினோரு மணிக்கு தான் வருவோம்.. அந்த வருமானம் போதும் . அப்பா சம்பதிக்கிறது குடிக்கவே பத்தாது... அவரு பாக்கெட்டில் இருந்து திருடினா தான் உண்டு....அது தான் அவரு கொடுக்கிற சம்பளம் ”
“ டேய்... அதான் நீ எப்பவும் தூங்குவது போல் உள்ளாயா?” என அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்களிடம் இன்னும் புரிதல் தேவைப்படுகிறது. அவர்களுடன் இன்னும் இறங்கி பழக வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்களுள் ஒருவனாக தோழனாக மட்டும் இல்லாமல், நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்கின்றேன்.
காந்தி சுயசரிதை நோத்து தானே படித்து காட்டினேன். தவறுக்காக மனம் வருந்தினார். சிக்ரெட் குடித்தது, தன் அண்ணணிடம் தங்க காப்பு அறுத்து எடுத்தது.. போன்ற விசயங்களுக்கு மனம் வருந்தினார் இல்லையா.. தந்தையிடம் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டார் இல்லையா...? நீயும் மன்னிப்பு கேட்க வேண்டும் ”என்றேன்.
தலையை ஆட்டினான். ”குடிக்கலைன்னா அவரு ரெம்ப நல்லவரு.. அவர எனக்கு ரெம்ப பிடிக்கும்” என்ற அவனின் பாசம்.. என்னை திக்குமுக்காட செய்தது. கண்களில் நீர் வடிய காட்டிக் கொள்ளாதவனாக ”இனி யாரும் இந்தமாதிரி கோபம் படக்கூடாது “ என்றேன்.
“ சார்... அவன் கல்லை அப்பா கால்ல போட்டது தப்பு தான்.. சாரயம் விக்கிற அரசாங்கத்து மேலே போடணும்...” என்றான்.
“எப்படி டா... அரசு மேல கல்ல போட்டுறது? “ என்ற சக தோழிக்கு..அவன் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது. (அவன் நான் கண்ட மாணவர்களில் (20வருட அனுபவத்தில்) மிகவும் வித்தியாசமானவன். அவனைப் பற்றி சுட்டி விகடனில் பேச இருக்கிறேன். அடுத்துஅவனைப்பற்றி தான் எழுத போகிறேன். நீங்களே அவனை பார்க்க வருவீர்கள். )
“ எலக்சன் வருதுல்லா... நம்ம ஓட்ட கல்லா போட்டா போச்சு.. துண்ட காணாம் துணிய காணாம்ன்னு ஓடப்போறாங்க...ஒவ்வொருத்தனும் உங்க அம்மா அப்பா அண்ணன் கிட்ட சொல்லி சாராயத்த ஒழிக்கிற கட்சிக்கு ஓட்டு போட சொல்லுங்க.. தானா சாராயத்தை ஒழிச்சிடலாம் “ என்றான். அதிர்ச்சி உறைந்து போனேன். என்ன முதிர்ச்சி. அவன் கூறிய பதில்கள் நாம்மையே சிந்திக்க செய்கின்றன. இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பதில் பெருமை படுகின்றேன். அதிர்ச்சி தொடரும்.....

8 comments:

Yaathoramani.blogspot.com said...

கொஞ்சம் மோசமாகப் போனவைகளைச் சரி செய்ய
கொஞ்சம் வன்முறையும் தேவை போலத்தான் படுகிறது
மருந்துக்கு அடங்காததற்கு அறுவை சிகிச்சைப் போல...
மனத்தைப் பதித்த பதிவு
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

கொக்கோ கோலா குடிப்பதும் சரி மது பானங்களைக் குடிப்பதும் சரி உடலுக்குக் கெடுதி உயிருக்கு ஆபத்து என்று சொல்லித் திரிவதை விட இவைகளைத் தடை செய்யும் வழிமுறைகளைக் கையாளுதலே சாலச் சிறந்தது .சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான அந்த மாணவனை காண ஆவலுடன் உள்ளேன்... அவருக்கு வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

அம் மாணவன் பாராட்டப் பட வேண்டியவர்.
சிறுவயதில் குடும்பத்தின் சுமையை, தன் நிலையை உணர்ந்த அம்மாணவன், எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு நிச்சயம் வருவார்.
வழிகாட்டத்தான் நீங்கள் இருக்கிறீர்களே
வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.6

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கல்லைத் தலையிலும் போட்டிருக்கலாம், ஆனால் காலில் போட்டது..திருத்த வேண்டுமெனும் ஆசை.
குடியால் கெடும் குடிகளுக்கு உதாரணம்; எந்தக் கட்சியும் முடிவுக்குக் கொண்டுவரும் போலில்லையே!
விழிப்பின்மை எங்கும் பரவியுள்ளதே! குறிப்பாக உழைக்கும் மக்களில்

bandhu said...

எப்போது குடிப்பது கொண்டாடுவதன் அடையாளமாக இருக்காதோ.. எப்போது குடிப்பவர்களுக்கு குற்ற உணர்ச்சி வருகிறதோ.. அதுவரை ஒன்றும் செய்ய முடியாது! ஒரு இருவது வருடம் முன் வரை அப்படித்தான் இருந்தது. இப்போது நினைத்தால் எல்லாம் கனவு போல் இருக்கிறது!

கண்டிப்பாக இதை மாற்ற முடியும். அரசு முழு அளவு முயற்சி எடுத்தால் முடியும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Post a Comment